Tuesday, January 10, 2012

தனுஷ்கோடி சொல்லும் பாடம் என்ன?



கடந்த சில ஆண்டுகளாகவே புதுவருடம் எப்போதும் வீட்டில், தூங்கத் தயாரான நிலையில், சன் டிவியில் பட்டாசு வெடிப்பதைப் பார்த்துத் தான் ஆரம்பித்துக் கொண்டிருந்தது! இவ்வருடம் HBO’வில் Inception படம் பார்த்து! ஆனால் இடம் தான் கொஞ்சம் வித்தியாசம். நண்பர்களுடன் முதல் முறையாக இராமேஸ்வரம். இராமேஸ்வரத்தை விட தனுஷ்கோடி ஆர்வம் தான் இப்பயணத்தில் இணைவதில் என்னை செலுத்தியிருக்கக்கூடும்.



தனுஷ்கோடி பார்க்கவேண்டுமென்பது உண்மையிலேயே வெகுநாள் திட்டமாக இருந்தது. வருடத்தின் ஆரம்பத்தில் தேசாந்திரி படித்துக்கொண்டிருந்த போது, அதில் வரும் ஒவ்வொரு இடங்களையுமே ஒரு முறையாவது பார்த்துவிட வேண்டுமென்ற ஒரு வேகம் வந்தது. அதில் முக்கியமானது தனுஷ்கோடி. காரணம், அடிக்கடி சென்று வரும் எங்கள் ஊரிலிருந்து சில மணி நேர தொலைவில் தான் இருந்தது அது. அவ்வளவு அருகில் இருந்துகொண்டும் இவ்வளவு நாட்களாக பார்க்கமுடியாமல் போய்விட்டதே என்ற வருத்தம் மேலோங்க, அடுத்த தடவை ஊருக்கு செல்லும்போது கண்டிப்பாக சென்றுவிட வேண்டும் என நினைத்துக்கொண்டிருந்தேன். ஒரு முறை அம்மாவிடம் அது பற்றி பேசிக்கொண்டிருக்கையில் அவர் சிறுவயதில் ஊருக்கு வந்து தனுஷ்கோடி நிகழ்வைப் பற்றி பாடுவார்கள் எனவும் அது அவ்வளவு சோகம் நிறைந்ததாக இருக்கும் எனவும் குறிப்பிட்டார். அந்த காலத்தில் ஏற்பட்ட பேரழிவுகளில் மிகப்பிரதானமாக இருந்ததும் வாய்மொழியாகவே மக்கள் இது பற்றி அறிந்ததும் பற்றி சொல்லி மேலும் ஆர்வத்தை கிளப்பிவிட்டார். ஏப்ரல் மாதத்தில் ஒரு வார விடுமுறையில் ஊருக்கு போய்விட்டு அப்படியே அங்கே செல்லலாமெனவிருந்ததை வெயில் கருதி கொடைக்கானல் மாற்றவேண்டியதாயிற்று. இந்த தடவையும் இப்படி அப்படி என்று கடைசி நிமிடம் வரை அலைமோதி தான் பயணத்தில் சேரும்படி ஆனது. இராமேஸ்வரத்தில் முந்தைய இரவு இறங்கியதுமே இனம் புரியாத ஒரு உணர்வு தொற்றிகொண்டது. தனுஷ்கோடி என்னை அழைத்திருப்பது இப்போது தான் என நினைத்துக்கொண்டேன்.


தனுஷ்கோடி கடலில் இந்த ஆண்டின் முதல் சூரிய உதயத்தைப் பார்த்துவிடலாம் என அதிகாலையிலேயே சென்றுவிட்டோம். முகுந்தன்சத்திரம் என்ற அந்த ஒரு இடம் வரை தான் வாகனங்கள் செல்ல முடிகிறது. அதன் பின் நீளமான ஒரு மணல் திட்டு தான். இருபுறமும் கடலைப் பார்த்தபடியே நடக்கும் அந்த அனுபவம், ஒரு புறம் மட்டுமே கடல் பார்த்து நடந்த நம் கிழக்கு கடற்கரைச் சாலை அனுபவங்களை முற்றிலும் கேள்விக்குறியாக்கிவிட்டு, விசித்திரமானதொரு காட்சிப்பிழை போல தோற்றம் தருகிறது. அந்த அதிகாலையில் சூரியன் உதிப்பதற்கு முன்பு இருக்கும் ஒரு மெல்லிய சிவப்பு படர்ந்த ஒரு வசீகர ஒளியில் கடல் மின்னுவது அதற்கு இன்னமும் வலு சேர்க்கிறது.

அலைமோதும் கரை ஒருபுறம். அலைகளற்ற தேங்கி நிற்கும் நீர் கடலோடு இணையும் ஆரவாரமற்ற மற்றொரு புறம். நடுவில் கிழக்கில் எங்கள் கவனத்தை செலுத்தியபடியே மெல்ல கால்புதைய நடந்துகொண்டிருக்கும் நாங்கள், இந்த இடம் தான் உள்ளே நிஜமான தனுஷ்கோடி வரை செல்ல வாகனங்கள் கிடைக்கும் இடம். எங்களைத் தாண்டி அப்போதே ஒன்றிரண்டு ஜீப்புகள் சென்றன. தேங்கி நிற்கும் கரையோரமே நீரைக் கிழித்துக் கொண்டு அவ்வாகனங்கள் சென்றதை பார்க்கும் போது உண்மையாகவே வியந்து தான் போனேன். இப்படி ஒரு பயணம் அதற்குள்ளாக இருக்குமென நினைத்துக்கூட பார்த்திருக்கவில்லை. ஆச்சரியம் தீர்வதற்குள்ளாகவே சூரியனும் லேசாக எட்டிப்பார்க்க ஆரம்பித்துவிட்டதால் எல்லோரும் அதைப் படம்பிடிப்பதில் ஆர்வமானோம். குறிப்பிட்ட தூரம் வரை சூரியன் ஏறும் வரையில் அங்கேயே இருந்த பின், வண்டிகள் இருந்த இடத்திற்கு திரும்பினோம். புது வருடத்தில் இராமேஸ்வரம் தீர்த்தமாடவும் இராமலிங்கத்தை தரிசிக்கவும் சில நண்பர்கள் கிளம்ப ஆயத்தமானார்கள். இராமலிங்கர் மன்னிக்க, நாங்கள் மட்டும் தனுஷ்கோடி உள்செல்வதாய் தீர்மானித்தோம். ஜீப்புகள் எல்லாம் அந்நேரத்தில் கிளம்பிவிட்டிருந்தன. எங்களுக்காக ஒரு டெம்போ வேன் காத்திருந்தது. இரு புறமும் பெஞ்ச் செட் செய்து ஒரு பெரிய ஸ்கூல் ரிக்‌ஷா போல காட்சியளித்தது.

காலையில் பார்த்து வியந்திருந்த அதே பாதையில் பயணித்தோம். ஷோர்வாக் கேள்விப்பட்டிருக்கிறேன். இது என்ன ஷோர்டிரைவ்?! ஒரு 5-6 கி.மீ அப்படியே பயணித்து ஒரு காலத்தில் தனுஷ்கோடியின் பிரதான இடத்திற்கு வந்து சேர்ந்தோம். செல்லும் வழியிலேயே முட் செடிகளும், அவை மூடிய வீடுகளும், அரித்துப்போன அந்த சுவர்களும் கடல் பறவைகளும், கழுகுகளும் ஒரு வினோத உலகத்தில் நாம் சென்றுகொண்டிருக்கும் உணர்வைத் தருகின்றன. இறக்கிவிட்ட இடத்தில் நின்ற மூன்று பெரிய தூண்கள் நம்மை வரவேற்கின்றன. அலையோசை ஓயாமல் கேட்டுக்கொண்டே இருக்கிறது. எங்கும் இருப்பதை விட அவை அங்கே இன்னும் சோகமாக, வேகமாக இருப்பதைப் போல் ஒலிக்கின்றன. அந்த காலத்திலேயே அவ்வளவு பெரிய பள்ளிக்கூடம், வங்கி, தபால் நிலையம் ஆகியவற்றைக் கொண்டு விளங்கிய ஒரு பெரிய கட்டிடம் எலும்புக்கூடுகளைப் போல் நிற்கிறது. மூழ்கிப்போன தண்டவாளங்களையும் கூரைக்கான தூண்களையும் கொண்டு ஒரு இரயில் நிலையம் இருக்கிறது. மொத்தத்தையும் விழுங்கிவிட்டு அதே போல் சத்தமிட்டுக்கொண்டிருக்கும் அக்கடலும் எத்தனைப் பேரை தன்னுள் புதைத்துக்கொண்டு அமைதியாய் இருக்கும் கரைமணலும் நமக்கு என்ன சொல்ல காத்திருக்கின்றன? நிலைகொள்ளாத கேள்விகளுடன் மேலும் நடக்க, அந்த தேவாலயம் வருகிறது.

அழிவிலும் அதற்கு ஒரு அழகு இருக்கிறது. அதன் வாசலில் நின்று பார்க்கிறேன். எத்தனை ஆராதனைகளைக் கண்டிருக்கும் இந்த மேடை? எத்தனை மக்களை, எவ்வளவு பிரார்த்தனைகளை, பாவமன்னிப்புகளை பார்த்திருக்கும் ? புயல் வெள்ளத்தின் போது எத்தனை பேர் இங்கே வந்து அடைக்கலம் புகுந்திருப்பார்கள் ? அந்த பிரார்தனைகளும் மணியோசைகளும் அந்த காற்றில் தானே கரைந்திருக்கும் ? இயேசுவோ இராமரோ இயற்கையில் இருந்து ஏன் இந்த மக்களைக் காப்பாற்றவில்லை ? இறுகிய மனதுடன் சிறிது நேரம் அங்கேயே சுற்றிக் கொண்டிருக்கிறோம். இன்னமும் அங்கே சில குடும்பங்கள் வாழ்கின்றன. அங்கேயே கடை வைத்து சுற்றுலாப்பயணிகளை நம்பி வாழும் சிலரும் மீன்பிடிக்கும் சிலரும். அவ்வளவு பெரிய ஒரு அழிவிற்கு பின்னும் எது அவர்களை அங்கேயே இருக்க வைக்கிறது?


ஒரு வருடத்தை இந்த சிதிலங்களிலிருந்து ஆரம்பித்திருக்கிறேன். என்னை செலுத்தியது என்ன ? தனுஷ்கோடி எனக்கு சொல்லவிரும்பும் பாடம் என்ன? கேள்விகளுடன் கிளம்புகிறேன். திரும்பிவரும் வழியில், தண்ணீர் வேண்டுமென அழுத ஒரு குழந்தை ‘அங்க பாத்திய்யா எவ்ளோ தண்ணி’ என தாய் கடலைக் காட்டி சமாதானப்படுத்தியதும் வேடிக்கைப்பார்த்து புன்னகைக்க தொடங்கிய நொடியில் கிடைத்தது விடை. வாழ்க்கை என்பது அந்த நிமிட வரம். வருத்தங்களையோ வெறுப்புகளையோ சுமந்தலைய மிகுந்த பிரயத்தனப்படும் நேரங்களில் தூரத்தில் நமக்கான சில சந்தோஷ நிமிடங்கள் மெல்ல மூழ்கிக்கொண்டிருக்கிறது. வாழும் வரை போராடு என்பதை விட வாழும் வரை கொண்டாடு என்பதே சரி என நினைக்கிறேன். நினைத்ததை, பிடித்ததை செய். நீயாய் இரு. நிறைவாய் இற. With No Regrets!

4 comments:

Thekkikattan|தெகா said...

புகைப்படங்க அனைத்தும் அருமையா இருக்கு. குறிப்பாக என்னுடைய தேர்வு இங்கே வரிசைக் கிரமமாக 1, 2, 5 மற்றும் 6 செமயா இருக்கு.

பயணக் கட்டுரையும் உள்வாங்கி எழுதப்பட்டிருக்கு. கீப் த ஸ்பிரிட் அப் :)

Anonymous said...

‎"இயேசுவோ இராமரோ இயற்கையில் இருந்து ஏன் இந்த மக்களைக் காப்பாற்றவில்லை ???"
என்ற உங்கள் கேள்விக்கு விடை இந்த கேள்வியாக இருக்குமோ

"இயற்கையை கட்டுபடுத்தும் சக்தியும் உண்டோ ?"

ரிஷபன் said...

தண்ணீர் வேண்டுமென அழுத ஒரு குழந்தை ‘அங்க பாத்திய்யா எவ்ளோ தண்ணி’ என தாய் கடலைக் காட்டி சமாதானப்படுத்தியதும் வேடிக்கைப்பார்த்து புன்னகைக்க தொடங்கிய நொடியில் கிடைத்தது விடை. வாழ்க்கை என்பது அந்த நிமிட வரம்

ம்ம்..

Ranjani Narayanan said...

பிரமாதம்!
உங்கள் நடை இயல்பாக, பக்கத்தில் கூடவே கதை சொல்லிக்கொண்டு வருவதைப் போல இருக்கிறது.
'வாழ்க்கை என்பது அந்த நிமிட வரம்'- அக்ஷர லட்சம்!
பாராட்டுக்கள்!

ranjaninarayanan.wordpress.com

Post a Comment

Related Posts with Thumbnails