Friday, April 1, 2011

யுவன் சந்திரசேகரின் ’வெளியேற்றம்’ நாவல்

அந்த ஒரு கணத்தை எல்லாரும் கட்டாயம் கடந்து வந்திருப்போம். எல்லாத்தையும் விட்டுவிட்டுப் போய்விடலாம், எதுவுமே தேவையில்லை என யோசிக்கும் ஒரு கணம். என்ன வாழ்க்கை இது என யோசிக்கும் ஒரு கணம். தனியே பிரயாணித்துக் கொண்டிருக்கையில் இறங்குமிடமே வராமல் அப்படியே பயணம் தொடர்ந்து கொண்டே இருக்காதா என ஏங்கும் ஒரு கணம். பறவையைப் போல எந்தக் கட்டுப்பாடுகளும் கடமையும் இல்லாமல் பறந்து திரிய நினைக்கும் ஒரு கணம். எல்லாவற்றில் இருந்தும் வெளியேறி வெறுமையாய்த் திரிய வேண்டும் என விரும்பும் ஒரு கணம்.

"வெளியேறுதலும் வெளியேற்றப்படுதலுமே மனித அனுபவத்தின் சாரமாக இருக்கின்றன. குடும்பம், நம்பிக்கைகள் மற்றும் தம்மைப் பிடித்திருக்கும் ஏதெனும் ஒன்றிலிருந்து மனிதர்கள் தொடர்ந்து வெளியேற்றப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் சார்ந்திருக்கும் அமைப்புகள்தாம் அந்த வெளியேற்றத்தை நிகழ்த்துகின்றன. அவை சில சமயம் தண்டனையாகவும் சில சமயம் விடுதலையாகவும் உருக்கொள்கின்றன." என்ற பின்னட்டையின் வாசகமும் இப்புத்தகத்தை வாசிக்க வேண்டும் என ஈர்த்ததில் தன் பங்கைச் செய்தது.

மேற்சொன்ன வெளியேற்றங்களுக்கு அப்பாலும் வெளியேறிச்செல்லும் ஒருவரின் கதை இது. அதை, அவரைச்சுற்றிப் படிந்திருக்கும் பல பேரின் கதைகளைக் கொண்டே கட்டமைக்கப்பட்டிருக்கிறது. முதல் பாதி முழுக்க தனித்தனி இழையாக ஒவ்வொருவரின் கதைகள் ஒவ்வொரு அத்தியாயமாக வருகின்றன. பின்பாதியில் அத்தனைக்கும் குறுக்கில் இழைகளைக் கோர்த்து அவை பின்னிப் படரும் புள்ளிகளைப் பார்வைக்கிடுகிறார் யுவன். மெல்ல கட்டவிழ்கிறது ஒரு பெரும் மனிதரின் கதை. அவரைச் சுற்றி அவரைப் பற்றி அறிந்த அவரால் ‘வெளியேற்றப்பட்ட’, அவரின் அற்புதங்களைச் சந்தித்த மனிதர்களின் கதைகளால் நெய்யப்பட்டிருக்கிறது.

பயணங்களில் சந்திக்கும் சுவாரஸ்யமான பக்கத்து இருக்கைக்காரரின் பேச்சு போல மிக இயல்பாய் பயணிக்கிறது ஒவ்வொருவரின் கதையும். தொடர்ந்து வந்த நிறைய கதாபாத்திரங்களினால் எனக்கு ஒரு சில இடங்களில் யாரின் கதை என்னது என பிற்பாதியில் நினைவு கொள்வதற்குத்தான் கொஞ்சம் சிரமமாக இருந்தது. இன்னும் பயிற்சி தேவைப்படுகிறது போலும்.

40வயதைக் கடந்த ஒருவர் ஒரு கல்யாணத்திற்காய் தனியாய் பயணம் செய்கையில் சந்திக்கும் ஒரு நபரின் கதை அவரிடம் ஒரு மாற்றத்தைக் கொண்டுவருகிறது. மிகச் சராசரியாய் ஒரு எல்.ஐ.சி. முகவராய் இருந்து, திருமணம், இரண்டு குழந்தைகள், நாற்பது வயதில் ஒரு சொந்த வீடு என பெரும்பாலான வாழ்க்கையைக் கழித்த அவருக்கு தான் சந்தித்த நபரின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் மிக அதியசமாகவும் ஈர்க்கும்படியாகவும் இருக்கின்றன. அதன் பின்புலத்தில் இருப்பவர்களையும் அவர்களின் அனுபவங்களையும் அத்தனைப்பேரையும் இன்று சேர்க்கும் புள்ளியையும் தேடிச்செல்கிறார். இதுவே நமக்கு இரண்டாவது பாதியில் தான் புலப்படுகிறது.

ஒவ்வொரு கதைகளும் ஒவ்வொரு விதம். எத்தனை வட்டார வழக்குகள், பழக்கங்கள், மொழிகள், இடங்கள்! அவர் கேட்கும் கதையை நாமும் பக்கத்தில் இருந்து கேட்பது போன்ற உணர்வு. பக்கத்து வீட்டு மனிதர்களைப் போன்ற எளிமை, ஒவ்வொரு கதாபாத்திரத்தினிடமும். ஒவ்வொருவருக்கும் அவரவர்க்கான அனுபவங்கள் வேதமூர்த்தி என்ற பெரியவருடனானதே. அவர் இவர்களின் வாழ்வில் ஏற்படுத்திய தெளிவு, காட்டிய வழி, நிகழ்த்திய அற்புதம் என ஒவ்வொன்றும் ஒரு வகை.

ஒரு கதையில் தனக்குப் பெண்சீக்கு வந்ததாய்க் கூறி ஒரு வைத்தியரிடமிருந்து திரும்பி வருகிறான் ஒருவன். இனி வாழ்க்கையே அவ்வளவு தான் என நினைக்கிறான். வரும் பாதையில் தண்டவாளங்களைத் தாண்ட நேருகையில் ரயிலில் பாய்ந்து உயிர் விட்டுவிடலாம் என யோசிக்கிறான். எல்லாவற்றில் இருந்தும் இந்த உடம்புக்கு விடுதலை, உடம்புக்குத் தானே எல்லாம், உயிருக்கு ஏது எனக் கூறும் அந்த சில வரிகளில் மரணத்தின் ஒருவித வசீகரத்தை உணர்வது உண்மை.

மரணத்தின் பின், பிறப்பிற்கு முன்னான உலகம், ஜென்மங்கள், ஜீவசமாதி, பல தத்துவங்கள், அவர் நிகழ்த்தும் அற்புதங்கள் என இவற்றைப் போன்ற விஷயங்களில் பெரிதான நம்பிக்கை இல்லாத என்னைப் போன்ற ஒருவரையும் இயல்பாக சுவாரஸ்யமாகப் படிக்க வைத்ததே இந்நாவலின் வெற்றி எனக்கூறலாம். முக்கியமாக, முன்னுரை இல்லாத இந்த நாவலின் பின்னுரை கூறுவது, கூறப்பட்ட அத்தனை மாயநிகழ்வுகளும் உண்மை என்பதே!!

வெளியேற்ற‌ம் - யுவன் சந்திரசேகர்
உயிர்மை பதிப்பகம்
ஆன்லைனில் வாங்க‌:
http://www.uyirmmai.com/Publications/bookDetails.aspx?bid=256

இந்த பதிவை வெளியிட்ட
உயிர்மை - உயிரோசை'க்கு நன்றி.
Related Posts with Thumbnails