Thursday, November 25, 2010

பெண்களுக்கு இழைக்கப்படும் வன்முறை ஒழிப்பிற்கான நாள் - என் பார்வையில்!

Nov 25 - சர்வதேச அளவிலான, பெண்களுக்கு இழைக்கப்படும் வன்முறை ஒழிப்பிற்கான நாள் இன்று.

இது நிச்சயமாக பெண்ணியம் பேசும் பதிவு அல்ல. மனிதம் பேசும், பெண்ணை சக மனுஷியாய் மதிக்க, உலக அளவில் பெண்களுக்கு இழைக்கப்படும் வன்முறை ஒழிப்பிற்கான நாள் குறித்த எனது கருத்துக்களையும் பதிய விரும்புகிறேன். அவ்வளவே.


எதற்காக இப்படி ஒரு நாள் தேவைபட்டது, அதுவும் உலகம் முழுதான ஒரு பொதுப்பிரச்சனையாக இது காணப்பட்டதன் காரணங்கள் என்ன ? இந்த நாட்டைப் பார் என எங்கேயும் உதாரணம் காட்டமுடியாத நிலை ஏன்?

உலகெங்கும் நான்கில் ஒரு பெண் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறாள் என்கிறது புள்ளிவிவரம். இது குறித்தான உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையும் UNICEF’ன் அறிக்கையும் அவ்வளவு சீக்கிரம் படித்து முடிக்க முடியாது. அப்படி என்ன தான் வன்முறை இழைக்கப்படுகிறது என்று பார்த்தால் நம்ம ஊரில் பஸ்ஸில் இடிப்பதிலிருந்து காதலிக்கமறுத்ததால் ஆசிட் ஊற்றுவது வரையான ஈவ் டீஸிங் நடவடிக்கைகள் மட்டுமல்ல. ஒரு பெண்ணின் வாழ்க்கை முழுவதுமே வன்முறையின் மெல்லிய சுவடுகளாவது படர்ந்திருக்கிறது என திட்டவட்டமாக, பல நாடுகளில் மேற்கொண்ட ஆராய்ச்சிகளின் முடிவாக சொல்லப்படுகிறது.

பொதுவாக இத்தகைய வன்முறைகளை நான்கு வகையாக பிரிக்கலாம்.

1. உடலியல் வன்முறை 2. பாலியல் வன்முறை 2. உளவியல் வன்முறை 4. பொருளாதார ரீதியிலான வன்முறை

எவ்வகையிலான வன்முறைகளை எந்தெந்த பருவங்களில் அவள் சந்திக்க நேரிடுகிறது என்று நான் பதிவை நீளமாக்க விரும்பவில்லை. விரும்பவர்கள் கூகிளில் தேடவும் அல்லது தனிமடல் இடவும், விரிவான அந்த அறிக்கைகளை பகிர்ந்து கொள்கிறேன்.

எனக்குள் எழுந்த சில கேள்விகளுடன் இந்த பதிவை முடித்துக் கொள்கிறேன். பெரும்பாலும் எளிய மற்றும் மத்திய வர்க்க குடும்பங்களுக்காகவே எழுப்பப்பட்டது போலிருக்கிறது, எனினும் -

1. எத்தனை கிராமங்களில் இன்னமும் பெண் சிசுக் கருக்கலைப்பு/பெண் சிசுக்கொலை நடைபெறுகிறது? குப்பைத் தொட்டிகளில் கிடைக்கப்பெறும் குழந்தைகளில் பெரும்பாலும் பெண் குழந்தைகளாகவே இருப்பதன் காரணம் என்ன ?

2. எத்தனை குடும்பங்களில் பெண்களை அடிப்பதை சாதாரணமாக எடுத்துக்கொள்கிறோம்? எத்தனை ஆண்கள் கோபத்தில் அவள் அத்தனை முயற்சி எடுத்து சமைத்த உணவுத்தட்டுகளை எறிகின்றனர்? பின் அதை சுத்தம் செய்ய முனைகின்றனர் ?

3. இன்னமும் பல மிடில் கிளாஸ் மற்றும் அதற்கு கீழான குடும்பங்களில் ‘பெண்’ என்ற ஒரு காரணத்திற்காகவே பல விஷயங்கள் மறுக்கப்படுவது உண்மையா?

4. மிகப்பிரச்சனையான மணவாழ்க்கையில் இருந்துகொண்டு அதிலிருந்து வெளியே வரத்துடிக்கும் பெண்ணிற்கு, அவளின் உடல்/மன உளைச்சல்கள், பிரச்சனை என்னவென ஆராயாமலே ’கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்’ என்பதையே கொஞ்சம் மாற்றி ‘கொஞ்சம் விட்டுக்கொடுத்துப் போம்மா’ என்பதையே அறிவுரையாக சொல்லும் சமூகம், சமூக அந்தஸ்து இன்னமும் இருக்கிறதா ?

5. எத்தனை ஆண்கள் மனைவியின் விருப்பம் இருப்பின் மட்டுமே கலவுகின்றனர் ?

6. எத்தனை பெண் குழந்தைகள் பாலியல் ரீதியாக தொல்லைக்கு உள்ளாக்கப்படுகின்றனர்? அதில் எவ்வளவு நமக்கு தெரிய வருகிறது ?

7. விதவைகளையும் விவாகரத்து ஆனவர்களையும் என்ன மாதிரியான மரியாதையில்/தரத்தில் இந்த சமூகத்தில் வைத்திருக்கிறோம்?

8. பெண்களையும் சக மனுசியாய் நினைக்க ஆண்களுக்கு குழந்தையிலிருந்தே கற்பிக்கிறோமா ?

9. அவள் 'Weaker Sex'ஆக இருக்கும் ஒரே காரணத்தினால் அவளை துன்புறுத்த தைரியம் வருகிறதா ? வீட்டுக்குள் தன் மனைவியை அடிக்கும், தங்கையை அடக்கும் ஒரு ஆண், ஒரு லோக்கல் தாதாவிடமோ அல்லது ஏதேனும் அநியாயத்தைத் தட்டிக் கேட்கத் துணிவார்களா ?

10. எத்தனை ஆண்கள் போலீசாகவும் IAS, IPS போன்ற அதிகாரம் நிறைந்த பெண்கள் தங்கள் மனைவியாக வேண்டும் என்று விரும்புகிறார்கள் ? தங்களை விட அறிவிலும் அழகிலும் அந்தஸ்த்திலும் அதிகாரத்திலும் மேம்பட்ட ஒரு பெண்ணை மனைவியாக ஏற்றுக்கொண்டு எந்தவித தாழ்வுமனப்பான்மையோ ஈகோ’வோ இல்லாமல் வாழமுடிந்திருக்கிறதா ?

11. என்ன வேண்டுமானலும் செய்துவிட்டு, கோபத்தில் செய்துவிட்டேன் எனவோ, அவளும் அப்படி செய்திருக்கக்கூடாது எனவோ தங்கள் செயலுக்கு வருந்தாமலோ உணராமலோ நியாயம் கற்பிப்போர் எத்தனைப் பேர் ?

12. இதையெல்லாம் பற்றி பேசினாலே உண்மையில் அதற்குள்ளிருக்கும் வலிகளையும் வேதனைகளையும் அறியாமல்/ அறியும் விருப்பமும் இல்லாமல்/ அறிந்தும் அறியாதது போலவும் ‘வேற வேலையே இல்ல இவங்களுக்கு’ என்று அலுத்துக்கொண்டு போகிறவர் எத்தனைப் பேர்?

நாங்கள் வளர்ந்துவிட்டோம், இதெல்லாம் அந்த காலம் என்று சொல்கிறீர்களா? உங்களை மதிக்கிறேன். ஆனாலும், IT முன்னேற்றம், கல்பனா சாவ்லா, கிரண் பேடி இவர்கள் எல்லாம் காட்டும் உலகத்தினை விடவும், நமக்கென வீட்டுக்குள் ஒரு தனி உலகம் இருக்கிறது. தனி சமுகம் இருக்கிறது. இன்னமும் IT'யோ கல்பனா சாவ்லா’வோ தெரியாத கிராமங்கள் இருக்கின்றன. நான் பெரும்பான்மை’யை முன்வைத்துப் பேசுகிறேன். சிறுபான்மையாக’வாவது இவை எல்லாம் நடப்பதில் மகிழ்ச்சியடைய வேண்டுமா எனவும் புரியவில்லை. தீர்வுக்கான கருத்துக்கள் இருந்தால் பகிருங்கள்.

டிஸ்கி : இதுக்கு மேலயும், என்னது பெண்களாவது வன்முறையாவது! எந்த காலத்துல இருக்கீங்க நீங்க. IT எவ்வளவோ டெவலப் ஆகியிருக்கு, பெண்கள் என்ன வேலையெல்லாம் செய்ய ஆரம்பிச்சிட்டாங்க. ஆட்டோ ஒட்டுறது’ல இருந்து விண்கலம் வரைக்கும், 33% சதவிகிதம் இட ஒதுக்கீடு கொடுத்திருக்கோம். இன்னும் என்ன சும்மா பெண்ணியம் பேசிக்கிட்டு’ அப்படி’ன்னு நீங்க கேட்கலாம். தப்பில்லை. அப்படி கேட்டீங்க’ன்னா ஒண்ணு பாவம் உங்களுக்கு விவரம் பத்தலையா இருக்கும், அப்பாவியா இருப்பீங்க. இல்லை’ன்னா நான் புடிச்ச முயலுக்கு மூணு கால்’ன்னு விதண்டாவாதம் பேசுற கோஷ்டி. அதுவும் இல்லையா முளச்சு மூனு இல விடல, நீ எல்லாம் என்ன பேச வந்திட்ட, பழம் தின்னு கொட்ட போட்ட நாங்க சொல்றத கேட்டுக்க, புரியுதா’ன்னு ரொம்ப பழக்கமான பாரம்பரிய அடக்குமுறை. அட அதுவும் இல்லையா பரவலா பேச(சாட)ப்படுற ஆணாதிக்க சாயல் இருக்கக்கூடிய சாத்தியக்கூறுகளும் இருக்கு’னு சொன்னா கோபப்படுவீங்க. அப்படியெல்லாம் இல்ல இதுவரைக்கும் எந்த பொண்ணையும் நான் தரக்குறைவா பாத்ததில்ல நடத்தினதில்லை, பொண்டாட்டியா இருந்தாலும் கைநீட்டி அடிச்சதில்லை. அவ விருப்பமில்லாம தொட்டதில்லை’னு சொல்லுங்க. தெய்வம் நீங்க. இது கண்டிப்பா உங்களுக்கு இல்லை .
Sunday, November 21, 2010

ஆப்பி பர்த்டே !!!

இன்றும் ஒரு நெருங்கிய நண்பரின் பிறந்தநாளை மறந்துவிட்டேன். வழக்கமானது தான். நாட்களை நினைவில் வைத்துக்கொள்வதில் மிக பலவீனமாகத் தான் இருந்துகொண்டிருக்கிறேன். ஒன்றும் சொல்வதற்கு இல்லை. பிறந்த நாள் வாழ்த்துக்கள் அனுப்பியோ சொல்லியோ நான் ஆச்சரியப்படுத்தியிருக்கலாம். இப்படி மறந்துவிட்டு அசடு வழிகிறேனே என்று என் மேலேயே கோபமாக வந்தது. என் பிறந்த நாள் அன்று கண்டிப்பாய் வாழ்த்து சொல்வார்களென்று நினைத்திருந்த சிலர் இதே போல் அடியோடு மறந்த போது எழுந்த லேசான ஏமாற்றமும் நினைவுக்கு வந்தது.


ஒரு காலத்தில் பிறந்த நாள் வருவதற்காய் வருடம் முழுதும் காத்திருந்த நினைவுகள் மெல்ல விரிந்தது. தீபாவளிக்கு ஒன்றும் பிறந்த நாளுக்கு ஒன்றுமாய் இரண்டு புதுத்துணிகள் கிடைக்கும் வருடத்திற்கு. மிக முக்கியமான நாட்களில் ஒன்று. அது இல்லாமல் புதுத்துணிக்கேற்ப பாசிகளும் வளையல்களும் கூட, எப்போதாவது செருப்பு போன்ற விஷயங்களும் சேர்ந்துகொள்ளும். பத்து பதினைந்து நாட்களுக்கு முன்பே பரபரப்பு தொற்றிக்கொள்ளும். கிடைக்கும் எல்லாவற்றையும் வாங்கியாக வேண்டுமே. என்ன வாங்குவது எப்படி வாங்குவது என்ற சிந்தனையிலேயே தூக்கம் கூட சரியாக வராது. எப்படியும் எல்லாம் நான் தேர்ந்தெடுப்பதும் கிடையாது, சமயத்தில் அப்பாவே வாங்கி வந்து விடுவார். அதற்கே இந்த நிலை!

மார்கழி மாதத்தில் வரும் பிறந்தநாள். நினைத்தாலே அதிகாலை குளிரும் தெருக்கோடியில் ஒலிக்கும் கோயில் பாடல்களும் மெல்ல வருடிச்செல்லும். இருள் விலகாத அதிகாலையில் அம்மா எழுப்பும் போதே வாழ்த்துடன் ஆரம்பிக்கும். இதமான வெந்நீரில் தலைக்குக் குளித்து, புதுத்துணியின் வாசம் நெஞ்சம் நிறைய உள்ளிழுத்து அணிந்து, மற்ற புதுசுகளையும் சூடி ஈரப்பின்னல் போட்டு அப்பாவைப் போய் எழுப்பி ‘ஹேப்பி பர்த்டே’ சொல்ல வேண்டும். ஆமாம். அப்பாவுக்கும் எனக்கும் ஒரே நாளில் தான் பிறந்தநாள். அவரிடமிருந்து பதில் வாழ்த்தும் முத்தமும் பெற்ற பின் பெருமிதமும் உற்சாகமும் பீறிட்டு கிளம்ப பள்ளி செல்ல வேண்டியது தான். வகுப்பாசிரியர் வரும் வரை காத்திருக்கமுடியாமல் காத்திருந்து. வந்தவுடன் எழுந்து ஒடி, கையோடு எடுத்து சென்றிருக்கும் சாக்லேட் டப்பாவினை நீட்டி அவரிடமும் வாழ்த்துகள் வாங்கிய பின் முக்கியமான தருணத்துக்குள் அடியெடுத்து வைக்க வேண்டியிருக்கும்.

எல்லாருக்கும் முன் நிற்க வைத்து ‘ஹேப்பி பர்த்டே டு யூ’ பாடுவார்கள். கூச்சமும் சிரிப்பும் சந்தோஷமுமாய் முதல் வரிசையில் தொடங்கி அனைவருக்குமாய் சாக்லேட் விநியோகம் ஆரம்பிக்கும். சிலர் கைகொடுப்பார்கள். சிலர் வாய் வார்த்தையில். சிலர் நன்றியுடன் முடித்து கொள்வர். வெகு சிலர் அதுவும் இல்லாமல் தன் பங்கை மட்டும் எடுத்துகொள்வதும் நடக்கும். இந்த சாக்லேட் விஷயமும் ஒன்றும் சாதரணமானதில்லை. அது தான் அன்று நம் அந்தஸ்த்தின் அடையாளம்! காட்பரீஸ்’இல் இருந்து புளிப்பு மிட்டாய் வரையிலான ரேஞ்சில் நாம் எங்கே இருக்கிறோம் என்பதும் முன்பே தீர்மானிக்க படவேண்டிய ஒன்று. ஒரு மாதிரி நியூட்ரின்‘ஆசை’ யில் வந்து முடியும் நம் தீர்மானம்.(புளிப்பு மிட்டாய்க்கு கொஞ்சம் மேல் :)) அதை சாப்பிட்டபின் சுற்றியிருக்கும் காகிதத்தை ரப்பர் போல இரண்டு பேர் இழுத்து விளையாடலாம். அதையும் ஒரு காரணமாகக் கொண்டு அதையே முடிவு செய்ய மனதை தேற்றிக்கொண்டிருக்கிறேன்.

மாலையில், அப்பா ஏதாவது கேக் வாங்கி வந்திருப்பார். எங்களுக்கே எங்களுக்காய் ஒரு எக்ஸ்க்ளூசிவ் ஆனால் மிக எளிய ஒரு கொண்டாட்டம். பின்னர் அக்கம்பக்கத்தினர், உறவினர் என்று ஒரு சுற்று நடக்கும். பெரியவர்கள் இருந்தால் காலில் விழுவதில் நம் பணிவுக்கு அளவே இல்லாமல் இருக்கும். கிடைத்ததை வசூல்(!) செய்துகொண்டு கொஞ்ச நாள் குஷியாக ஓடும். இவை இல்லாமல், அன்று பள்ளியிலும் வீட்டிலும் தனி சலுகை கிடைக்கும். எதற்கும் திட்டோ அடியோ விழாது. ஏன் வருடத்திற்கு ஒரு முறை தான் வருகிறது என வருத்தமும் அடுத்த பிறந்தநாளிற்கான காத்திருப்புமாய் தான் அன்றைய நாள் முடியும்.

எனது ஐந்தாவது பிறந்தநாளுக்கு ஒரு வாரம் முன் அமைந்தது, அப்பாவின் முதல் சிங்கப்பூர் பயணம். மனதே இல்லாமல் கிளம்பிய அப்பா அங்கே இறங்கியவுடன் அம்மாவுக்கு எழுதிய கடிதம் இன்னமும் இருக்கிறது. புதுத்துணி, சாக்லேட் பற்றி கூட அதில் எழுதியிருப்பார்.! அப்பா அன்று இல்லாத குறை எனக்கு தெரியக்கூடாது என்பதற்காய் நண்பர்கள் சிலர் வந்து கேக் வெட்ட சொல்லி கொண்டாடியது இன்னமும் நினைவு கூரும் நிகழ்வு.. இன்று அவர் இல்லாமல் எத்தனையோ பிறந்தநாட்கள் கழிந்துவிட்டன. எப்படியும் என்னை வந்தடையும் ஒவ்வொரு வாழ்த்திலும் அப்பாவின் புன்னகை நினைவில் நிழலாடுவதை நினைத்துப் பார்க்கிறேன்.

அந்த வயதில் தன் பிறந்தநாளே தெரியாது என சொன்ன சிலரை ஆச்சரியத்தோடு பார்த்திருக்கிறேன். அதெப்படி பிறந்தநாளே தெரியாமல், பிறகெப்படி கொண்டாடுவீர்கள் என்ற எனது கேள்விக்கு நமக்கென்ன கொண்டாடவேண்டியிருக்கு என அவர்களின் அந்த சலிப்பு புரிவதற்கு பல வருடங்கள் வேண்டியிருக்கிறது. வர வர பிறந்தநாள் வந்தாலே ஒரு வயது ஏறிவிடுகிறது ,இன்னும் என்னவெல்லாம் பண்ணவேண்டியிருக்கிறது என்றெல்லாம் தான் யோசிக்கத் தோன்றுகிறது. எனக்கு இன்னிக்கு ’ஆப்பி பர்த்டே’ என்று வாயெல்லாம் பல்லுடன், புதுத்துணியும் வரும் பொடிசுகளைப் பார்த்தால் பொறாமையாக இருக்கிறது.

இந்த பிறந்தநாளை மறந்த விஷயத்திற்கு வருவோம். எத்தனைப் பேரின் பிறந்தநாளை நினைவு வைத்திருக்கிறேன் என கணக்கெடுத்தால் என் டெபாசிட் காலி. இன்னமும் என் பிறந்தநாளன்று தவறாமல் வாழ்த்தும் மிக நெருங்கிய சிலரின் பிறந்தநாளே தெரியாமல் இருக்கிறேன் என்பது அதைவிடவும் வெட்கக்கேடு. இந்த அவமானத்தோடே இது வரை நான் வாழ்த்தாமல் போன அத்தனை பேருக்கும் என் வாழ்த்துக்களையும் நேசங்களையும் பரிமாறிக்கொள்கிறேன். என்னை திருத்திகொள்ள முழுமுயற்சி எடுப்பேன் என்றும் இதன் மூலம் உறுதியளிக்கிறேன்!!! :) :) :)

Thursday, October 14, 2010

சயாம் மரண ரயில் - மறக்கப்பட்ட தமிழர்களின் ஒர் வரலாறு!

எத்தனைப் பேருக்கு தெரிந்திருக்கும் இந்த தமிழர்களை ? இவர்களுக்காக ஏன் ஒரு நினைவுக்குறிப்பு கூட இல்லை ? ஏன் இவர்களின் வரலாறு மறக்கப்பட்டது ? இவர்களைப் பற்றி எழுத ஏன் இவ்வளவு காலம் ஒருவருக்கு கூட மனம் வரவில்லை ? முன்னுரை மற்றும் ஆசிரியரின் உரையைப் படிக்கும் போதே தோன்றிய கேள்விகள் தான் இவை.

இரண்டாம் உலகப்போர் சமயத்தில் ஜப்பான், அப்போதைய நிலைமையை சாதகமாக்கி தன் எல்லைகளை விரிவாக்கும் முயற்சியில் இறங்கியது. மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, மற்றும் பர்மாவும் அதன் பிடியில் விழுந்தது. அப்போது தான் நேதாஜி காங்கிரஸை விட்டு விலகி இங்கிலாந்துக்கு எதிரான நாடுகளின் உதவியை நாடினார். அவரது இந்திய தேசிய இராணுவம் சிங்கப்பூரில் இருந்து இயங்கிக் கொண்டிருந்தது. அதில் பணியாற்றிவர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள் என்று கூறப்படுகிறது. அப்போது ஜப்பானுடன் உறவு வைத்துக் கொண்டார் நேதாஜி. இந்தக் காரணத்தை முன்னிட்டு இந்தியாவைக் கைப்பற்றும் திட்டத்தில் இறங்கியது ஜப்பான்.

இந்தியாவை கைப்பற்ற பெரும் எண்ணிக்கையிலான படைகள் தேவை. அவற்றை ஜப்பானிலிருந்து கடல் வழியாக கப்பல் மூலமாக கொண்டு வருவது சிரமம் என்பதால் தரைவழி பாதையை தேர்ந்தெடுத்து, சயாம் (தாய்லாந்து) முதல் பர்மா வரை ஒரு ரயில் பாதை ஒன்றை இட முடிவு செய்தது. அதன் ஐந்தாவது படை அணி மேற்பார்வையிட, 16 மாதங்களுக்குள் அந்த இரயில் பாதையை நிர்மாணித்து முடிக்க வேண்டுமென கட்டளையிட்டது.

அதற்கு ஏராளமான ஆள்பலம் தேவைப்பட்டது. தொழில் நுட்ப வேலைகளுக்கு, தங்களிடம் போர்க்கைதிகளாய் இருந்த ஆங்கிலேய மற்றும் ஆஸ்திரேலிய படைவீரர்களை பயன்படுத்திக் கொண்டனர். சுரங்கம் வெட்டுதல், மண் அள்ளுதல் போன்ற வேலைகளுக்கு அடிமட்டத் தொழிலாளிகள் நிறைய பேர் தேவைப்பட்டனர். இதற்காக பெருமளவில் ஆசியதொழிலாளர்கள் கொண்டு செல்லப்பட்டனர். சயாமியர், மலாய் இனத்தவர்கள் தவிர, ஒரு இலட்சத்திற்கும் மேலான தமிழர்களும் அவர்களிடம் சிக்கினர் என மதிப்பிடப்படுகிறது. ரப்பர் தோட்டத்தில் வேலை செய்த, தனியார் நிறுவனங்களில் பணி புரிந்த, தோட்டங்களையும் வயல்களையும் கவனித்துக்கொண்டிருந்த, ஏன் சாலைகளில் சென்று கொண்டிருந்தவர்களைக்கூட விடவில்லை ஜப்பானின் கங்காணியர்கள். ஏமாற்றி, வலியுறுத்தி என எப்படி பணியவைக்க வேண்டுமோ அப்படி.
போரினால் கடும் பஞ்சம் வேறு. உணவுக்காக தவித்த, உயிருக்கு பயந்த, குடும்பத்தைக் காப்பாற்ற, தன் பிள்ளைகளை அழைத்துச்செல்லாமல் தடுக்க என ஒவ்வொருவருக்கும் அடிபணிந்து போக ஒவ்வொரு காரணம். ஒரு இலட்சம் தமிழர்களில் போர் முடிந்தவுடன் திரும்பியவர்கள் பத்தாயிரத்தை கூட தாண்ட மாட்டார்கள் என குத்துமதிப்பான புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இதில் பணியாற்றிய ஆஸ்திரேலிய படைவீரர்கள் சிலர் தங்கள் அனுபவங்களை நூல்களாகக் கொண்டு வந்துள்ளனர். ஆங்கிலேயர்களோ “The Bridge on the River Kwai" என்ற திரைப்படத்தின் மூலம் தங்கள் அனுபவத்தை நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே உலகத்திற்கு சொல்லி விட்டனர். அவர்களின் வலிகள் ஆவணப்படுத்தப்பட்டுவிட்டன. நம் பாடு தான் திண்டாட்டம். வெகு சில நூல்களே அதைப் பதிவு செய்திருந்தன. எப்போதோ நடந்த நிகழ்வுகளைப் பதிவு செய்ய எண்ணி 1993’ஆம் ஆண்டு சண்முகம் எழுதியது தான் ”சயாம் மரண ரயில் - சொல்லப்படாத மெளன மொழிகளின் கண்ணீர்”. இதை தமிழோசை பதிப்பகம் 2007 ஆம் ஆண்டு மறுவெளியீடு செய்திருக்கிறது. இந்த புத்தகத்தைப் படித்துவிட்டு தான் இதைப் பதிவு செய்ய வேண்டுமென ஒர் உந்துதல் ஏற்பட்டது. உண்மையைச் சொன்னால் இதற்கு முன், இதில் குறிபிடப்பட்டுள்ள ஒரு விவரமும் நான் கேள்விப்பட்டதுகூட கிடையாது.

ஜப்பானிடம் சிக்கிய இந்த தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமை, யூதர்களுக்கு நாஜி இழைத்த கொடுமைகளுக்கு இணையானது என இந்நூலின் பதிப்புரையில் சொல்லப்பட்டிருக்கிறது, படிக்க படிக்க அது எவ்வளவு உண்மை என உணரமுடிகிறது. அந்த களத்தில் பஞ்சத்தினால் தன் குடும்பத்திற்கு பாரமாக இருக்க விரும்பாமலும், தன் தந்தையை கண்டுபிடித்துவிடலாம் எனற நோக்கத்திலும் தானே சென்று இணையும் மாயா என்ற ஒரு இளைஞன் சுற்றியே கதையை சுழல விட்டு, தான் சொல்ல வந்த உண்மைகளை கதையெங்கும் தெளித்திருக்கிறார் ஆசிரியர். அதனூடே ஒரு மெல்லிய காதல் கதையையும் சேர்த்து ஒரு சுவாரஸ்யம் சேர்க்க முனைந்திருக்கிறார் ( நமக்கு தான் எல்லாவற்றிலும் தேவைப்படுமே!!)..

மரவள்ளிகிழங்கும், கருவாடும், சூப்பும் ஆகியவையே பெரும்பாலும் அவர்களின் உணவு. உடம்பு முடியாவிட்டாலோ, விஷப்பூச்சிகளோ பாம்போ கடித்துவிட்டாலோ, அவர்களுக்காக யாரும் நிற்பதில்லை. ஆங்காங்கே விழுந்து அப்படியே இறக்க வேண்டியது தான். முகாம்களில் சீக்கானால், மருத்துவமனை அழைத்து செல்கிறோம் என்ற பெயரில், ஒதுக்குபுறமான ஒரு கொட்டகையில் போய் விட்டுவிடுவார்கள். கும்பல் கும்பலாய் வயிற்றுபோக்கும் காய்ச்சலுமாய் இறப்பை நோக்கி செல்ல வேண்டியது தான். அழுகி நாறி இருந்தாலும், தங்களுக்கு வசதிப்பட்ட என்றாவது ஒரு நாளில் மொத்தமாய் குப்பை அள்ளுவது போல தள்ளுவண்டியில் ஏற்றி வந்து ஒரே பெரிய குழியாய் வெட்டி மொத்தமாய் போட்டு புதைத்துவிடுவார்களாம். எண்ணிக்கை மிக அதிகமாக இருந்தால் அந்த கொட்டகையோடு கொளுத்திவிடவும் செய்வார்கள் போல. குற்றுயிரும்
குலையுயிருமாய் கிடப்பவர்களுக்கும் மொத்தமாய் மோட்சம். மறுபடியும் ஒர் கொட்டகை முளைக்கும். இதில் எல்லாம் தவறி பிழைத்தவர்கள் அவ்வப்போது போர்விமானங்கள் போட்ட குண்டுகளில் மடிந்தார்கள். எந்தப் பக்கம் திரும்பினாலும் அவர்களுக்கு மரணம் காத்திருந்தது.

ஆங்காங்கே ஒவ்வொரு பாத்திரத்தின் உணர்வுகள், குடும்பத்தை பற்றிய கவலைகள், தாங்களும் உயிரோடு அங்கிருந்து பிழைப்போமா என கேள்விகள்,, மாயாவின் காதல் கதை, அவனுடன், உடன் பிறந்தவனைபோல உறவாடும் வேலுவின் நட்பு, முடிவை ஒட்டி அவன் மரணம் என உணர்வுப்பூர்வமாய் பயணிக்கிறது கதை. இரண்டு பெரிய குன்றுகளை வெட்டி சாய்த்து, இரும்புப் பாதை அமைக்க உதவிய நம் மக்கள், ஆற்றுப் பாலத்திற்கும் மலைக்கும் நடுவில், தூண்கள் கட்ட முடியாமல், ராட்சத சங்கிலிகளால் பிணைக்கப்பட்ட தொங்கும் பாலத்திலும் தண்டவாளத்தில் உயிரைப் பிடித்துக் கொண்டு பயணிப்பதைப் படிக்கும் போது, லேசாய் பயம் பற்றிக் கொள்கிறது. அங்கேயும் சந்தடி சாக்கில்
சின்ன சின்ன பலசரக்குகளை வாங்கி முகாம்களின் உள்ளேயே வியாபாரம் பண்ணிய நமது மக்களின் திறமையை நினைத்து பெருமைப்படுவதா வேதனைப்படுவதா எனப் புரியவில்லை.

இத்தனை வேதனைகளிலிருந்தும் மீண்டு வீடு திரும்பியவர்களில் சிலர், தங்கள் குடும்பம் சிதைந்ததைக் கண்டு, மறுபடியும் சயாமுக்கே சென்றிருக்கின்றனர் என்பதும் மிகுந்த வேதனைக்குரியது. சான்றுகளுக்கும் மேல்விவரங்களுக்கும் கூகிள் செய்ததில், சமீபமாக இன்னொரு புத்தகமும், அதன் வரலாறை அப்படியே சொல்ல வந்திருப்பது தெரிய வந்தது. அதற்கான தகவல்களும் சுட்டிகளும் முடிவில்.

இந்த பதிவின் மூலமாக உலகத்தமிழர்கள் அத்தனை பேரின் சார்பாகவும், இந்த களத்தில் உயிர்துறந்த அப்பாவித் தமிழர்களுக்கும் பிற நாட்டவர்க்கும் அஞ்சலி செலுத்த விரும்புகிறேன். மேலும் புலம் பெயர்ந்து தங்கள் முகம் தொலைத்து முகவரி இழந்து தவிக்கும் அத்தனை தமிழருக்கும் இப்பதிவினை அர்ப்பணிக்கிறேன்.

இப்புத்தகத்தின் விவரம் :
சயாம் மரண ரயில் - சொல்லப்படாத மெளன மொழிகளின் கண்ணீர்
ஆசிரியர் : சண்முகம்
தமி​ழோசை பதிப்​ப​கம்,​​
21/8,​ கிருஷ்ணா நகர்,​​ மணி​ய​கா​ரம்​பா​ளை​யம் சாலை,​​ கண​பதி,​​ கோய​முத்​தூர்-​641 012.​ ​
தொலை பேசி - 9486586388, விலை ரூ 150.

இதே பதிப்பகத்தின் சமீபத்திய இன்னுமொரு நூல் -
சயாம்-​பர்மா மரண ரயில்​பாதை மறக்​கப்​பட்ட வர​லாற்​றின் உயிர்ப்பு -​ சீ.அருண்;​ பக்.224; ரூ.130

மேல்விவர சுட்டிகள் :

http://en.wikipedia.org/wiki/Burma_Railway
http://www.far-eastern-heroes.org.uk/Reg_Rainer_Returns/html/death_railway.htm
http://www.cofepow.org.uk/pages/asia_thailand1.html

Thursday, September 2, 2010

ஆறு வார்த்தைக் கதைகள்

நண்பரின் வலைப்பதிவில் பார்க்க நேரிட்ட அவரின் வலைப்பதிவும்(angumingum.wordpress.com), கொடுத்திருந்த இன்னொரு வலைப்பக்கமும் ஆர்வத்தை தூண்டியது. சும்மா முயற்சி செய்து பார்க்கலாமே என்று தான். முயற்சிகள் கீழே.


-0-

இன்றே தேட ஆரம்பிக்கிறேன், நாளை தொலையும் அவளை

-0-

இங்கு தான் இருக்கவேண்டும் அது. இல்லாமலும் இருக்கலாம்.

-0-

எல்லாக் கடனையும் அடைச்சிடலாம்‘னு போனவன் திரும்பியே வரல.

-0-

“பிடிச்சிருக்கா?முடிச்சிரலாமா?

அதுக்கு முன்னாடி ஒண்ணு சொல்லணும்.


-0-

பேச‌லான்னு தான் போனேன். ஆனா அப்ப‌டி ஆயிடுச்சு.

-0-

திடீரென‌ விற்ப‌னை அதிக‌மான‌து. க‌ல‌வ‌ரம் மூண்ட‌தில் சோடாபாட்டில்க‌ள்.

-0-

“என்ன‌ ந‌டக்குது‘னு பாத்திட‌லாம்“. லேசாய் கால்க‌ள் உத‌றிய‌ப‌டி.

-0-

புதைய‌ல் சிக்கிய‌து. திற‌ப்ப‌தில் போட்டி. புதைந்த‌ன‌ உட‌ல்க‌ள்.

-0-

உன்னைப் புடிக்கும். ஆனா வேணாம். ந‌ண்ப‌ர்க‌ளாவே இருக்கலாமே..

-0-

ம‌ழையில் ந‌னைந்து ஒதுங்கிய‌ ஆளில்லா கொட்ட‌கையில் பின்ன‌ர்…

-0-

இன்று இர‌வு செய்தி கிடைக்கும். அதுவ‌ரை காத்திரு.

-0-

ப‌சியில் அழும் குழ‌ந்தை. வ‌றுமையில் தாய் த‌ற்கொலை.

-0-

ஆங்கிலத்தைப் போல் அல்லாமல் இரு வார்த்தைகள் சேர்த்து எழுதியும் ஒரு வார்தையாக கொடுக்கலாமா தெரியவில்லை. முடிந்தவரை அவற்றையும் தவிர்த்திருக்கிறேன்.

கருத்துக்களையும் உங்க கதைகளையும் சொல்லுங்க!

Monday, May 31, 2010

இன்று World’s No-tobacco day!!!!


இதனால் ‍‍‍-----

இதென்ன பெரிய பழக்கமா, நான் எப்ப நினைச்சாலும் விட்டுருவேனாக்கும் என சவடால் பேசித்திரியும் நண்பர்களுக்கும்

விட்டுரணும் ‍என்ன பண்ற‌து முடியலயே என வருத்தப்பட்டுக்கொண்டிருக்கும் ஃபீலிங்வியாதிகளுக்கும்

இதோ அடுத்த‌ மாச‌த்தோட நான் நிறுத்த‌றேன் என‌ வ‌ர‌வே வ‌ராத‌ அடுத்த‌ மாச‌த்திற்காய் காத்திருக்கும் ‘எதையுமே ப்ளான் பண்ணி பண்ணுற’ ப்ளானர்களுக்கும்

நான் ரொம்ப‌’லாம் அடிக்கிற‌தில்ல.. ரெண்டே ரெண்டு தான் (பாக்கெட்டா, சிங்கிளா??)என‌ த‌ன‌க்கு தானே ச‌மாதான‌ம் சொல்லிக்கொள்ளும் ம‌க்க‌ளுக்கும்

மென்த்தால் ஃப்ளேவ‌ர் அடிச்சா எஃபெக்ட்டு கொஞ்ச‌ம் க‌ம்மியாமே என‌ ம‌ன‌தைத் தேத்திக் கொள்ளும் அரைமண்டைகளுக்கும்

அந்த‌ மெல்லிசா ஒண்ணு வ‌ந்திருக்கே அது அடிச்சா பாதி அடிச்ச‌ மாதிரி தானாமே என‌ ச‌ந்தோஷ‌‌ப்ப‌ட்டுகொள்ளும் அறிவுஜீவிகளுக்கும்

செல‌வ‌ழிக்கிற‌த‌யும் புகையையும் பாதியா க‌ம்மி ப‌ண்றேன்னு ப‌ய‌ங்க‌ர‌மா யோசிச்சு எப்ப‌வுமே எச்சி புகையே அடிக்கிற‌ கூட்ட‌ங்களுக்கும்

இந்த‌ மாதிரியெல்லாம் இல்ல‌னா நான் அடிக்க‌வே மாட்டேன் தெரியுமா’னு ஒரேடியா ஃபீலிங்ஸ் உடுற‌ பார்ட்டிகளுக்கும்

ஆமா நாங்க‌ புகைக்கிற‌தால‌ தான் ம‌த்த‌வ‌ங்க‌ளும் பாதிக்க‌ப்ப‌டுறாங்க‌ளா’னு வியாக்கியான‌ம் பேசுற‌ த‌லைங்க‌ளுக்கும்

எல்லா விளைவுக‌ள் ப‌த்தியும் தெரிஞ்சிருந்தும் தெரியாத மாதிரியே ந‌ட‌ந்துக்கிற‌ அத்த‌னை பேருக்கும்

இன்னிக்கோ சீக்கிர‌மோ உண்மையாவே ம‌ண்டையில‌ உரைக்க

தானும் ஆரோக்கியமா இருந்து தன் குடும்பத்தையும் மத்தவங்களையும் ஆரோக்கியமா இருக்க வைக்க

ம‌க‌மாயி அருள் செய்ய‌ணும் தாயே!!!


Saturday, May 29, 2010

பிரிவாற்றாமை குறள் - ஒரு மொழிபெயர்ப்பு முயற்சி :)

ஒரே ஒரு குறளை மொழிபெயர்க்க முயற்சி செய்து விட்டு இந்த தலைப்பு கொஞ்சம் அதிகம் தான் :)

அந்த குறள் -

துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை
இறைஇறவா நின்ற வளை.

- என்னை விட்டுத் தலைவன் பிரிந்து சென்றுள்ள செய்தியை என் முன்கை மூட்டிலிருந்து கழன்று விழும் வளையல் ஊரறியத் தூற்றித் தெரிவித்து விடுமே!

இதன் சாராம்சத்தை மட்டும் எடுத்துக்கொண்டு, தமிழ் அறியாத நண்பர்களும் படித்து புரிந்துகொள்ள கீழ்க்காணும் ஆங்கில ஆக்கம் கொடுக்கப்பட்டது :)

Awaiting Originally uploaded by Karthick Makka

Not wanting to show my world
the bewildering grief
the loneliness of my soul
the deterioration of my Mind and body -
Yet my bangle drops away
Spreading out your absence..
The never ending wait taunts
Awaiting for you..


யதேச்சையாக ஒரு நாள் ‘miss you'வில் வரும் மிஸ் என்ற வார்த்தைக்கு இணையான ஒரு தமிழ்ச்சொல் என்னவாக இருக்கும் என்று பேச்சு வந்தது...
‘பிரிவாற்றாமை’ சரியாக இருக்குமோ என யோசித்துவிட்டு கூகுளிட்டு பார்க்கும் போது திருக்குறளின் ‘பிரிவாற்றாமை’ அதிகாரத்தைக் கடந்து வர நேரிட்டது.. எப்போதோ படித்த நினைவுகள் மங்கலாக.. இருந்தும் இப்போது படித்த போது மயக்குவதாய் இருந்தது...

சொல்லிவைத்தது போல, நண்பர் ஒருவர் இக்குறளை தன் புகைப்படத்திற்கான வரிகளாய் சில நாட்களுக்கு முன் வலையில் ஏற்றியிருந்தார். அருமையான புகைப்படமும் அதற்கேற்ற வரிகளுமாய் அமைந்திருந்தது அது.. அதைப்பார்த்த மற்ற தமிழ் தெரியாத நண்பர்கள் சிலர் அவ்வரிகளைப் பற்றி கேட்க, ஆங்கிலத்தில் அதன் சாராம்சத்தை கொடுக்கலாமே என எண்ணி முயற்சி செய்தது தான் இது!

பி.கு : ஏதேனும் தவறுகள் இருந்தால் மன்னிக்கவும்/சுட்டிகாட்டவும் :)

Friday, April 2, 2010

எனக்கேயான அப்பா!!

அப்பா...

பொதுவாகவே பெண்குழந்தைகளுக்கு அப்பா என்றாலே அலாதிப் பிரியம் தான். அதுவும் என் போன்ற ஓற்றையாய் பிறந்த
பெண் குழந்தைகளுக்கு கேட்க வேண்டுமா - அப்பா காட்டும் வழிந்தோடும் பிரியமும் கொடுக்கும் செல்லமுமே போதுமே - கொஞ்சம் கூடுதலாய் பிரியம் செலுத்த...

அப்பா -

ஆறடிக்கும் சிறிது அதிகமான உயரமும் ஒல்லியான தேகமும் முன்புறம் லேசான வழுக்கையும், சுருள் முடியும் அடுக்கி வைக்கப்பட்ட பல்வரிசையும் நல்ல நிறமும் கொண்ட அழகர். அவர் பளீரென்ற வெள்ளை கதர் வேட்டி சட்டையில் ஒரு கையில் வேட்டியின் நுனியை பிடித்துக் கொண்டு இறங்கி நடந்தாரென்றால் எதிரில் வருபவர் ஒரு நிமிடமாவது பார்க்காமல் போக முடியாது..இன்றும் அப்பா தெருவில் போகும் அழகினைப் பார்த்து கொண்டே இருக்கலாம் என்று சொல்லும் அதே தெருவில் வசிக்கும் சினேகிதிகளின் அம்மாக்களாவது(?!!) அப்பாக்களாவது சில நேரம் சொல்லும் போது மிகப் பெருமையாய் இருக்கும் எனக்கு..

அப்பா -


நான் பிறந்த நிமிடத்தில் என்னை ஏந்திய போது, தன் தாயே மறுபடி பிறந்திருப்பதாய் நினைத்து மகிழ்ந்த அப்பா...

சில மாதங்களில் அம்மை நோய் கண்டு கண்களெல்லாம் சொருகிப்போய் கவலைக்கிடமான நிலைமையில் மருத்துவமனையில் சேர்த்து, அவசரத்தில் எதுவும் எடுத்து வராததில், குழந்தையைக்(என்னை) கிடத்த தன் வேட்டியில்
பாதியைக் கிழித்து கொடுத்துச் சென்ற அப்பா...

உயிருடன் ஒரு நாலு நாள் தான் தாக்குப்பிடிப்பேன் என்று மருத்துவர்கள் கையை விரித்துவிட்ட நிலையில், எதையோ எடுப்பதற்காக வீட்டுக்குச் சென்று வெறுமையாய் இருந்த தொட்டிலைப் பார்த்து, பக்கத்து வீட்டுக்காரர்கள் வந்து சமாதானப்படுத்தும் அளவிற்கு, வெடித்து கேவிய அப்பா...

பின்னாளில் ஏதும் துடுக்காக நான் எதிர்த்து பேசும் போதெல்லாம் - ”நாய்க்குட்டி, பேச மாட்ட, உன்னையெல்லாம் பொழக்க வச்சி இப்டி வளத்துக் கொண்டுவந்திருக்கம்ல” என்று சிரித்துக் கொள்ளும் அப்பா..

பல்கெட்டுப் போய்விடும் என்று அம்மா சாக்லேட் மட்டும் வாங்கித்தராததினால், சாக்லேட் தவிர வேறு எதுவும் வாங்கித்தராதது மட்டுமில்லாமல், பெரிய சாக்லேட் பாரினை வாங்கிக்கொடுத்து விட்டு“அம்மா வரதுக்குள்ள சீக்கிரமா சாப்டுரு” என்று அவசரப்படுத்தும் அப்பா.....

பள்ளித் தேர்வு முடிவுகள் வருட விடுமுறையில் வீட்டுக்கு வரும் போது, அப்பா வரும் வரை காத்திருந்து அந்த கவரை நீட்டும் போது, கவரைப் பிரித்துக் கூட பார்க்காமல், புன்னகையுடன் கன்னம் கிள்ளி முத்தமிடும் அப்பா...

எனக்கு ஒரு ஏழு வயது இருக்கும் போது, கருத்தரங்கம் ஒன்றிற்காய் தான் வெளியூர் செல்ல நேரிட்ட போது அங்கிருந்து என்ன வேண்டும் என்று என்னைக் கேட்ட போது, அப்போது தான் :பேரி டேல்ஸ் படிக்க ஆரம்பித்திருந்த கிறக்கத்தில் “ஏதாவது புக்ஸ் வாங்கிட்டு வாங்கப்பா” என்று நான் முதல்முறையாய் கேட்டதை எதிர்பாராமல், முகம் கொள்ளா மகிழ்ச்சியுடன் அம்மாவைப் பார்த்து “பார்த்தியா, எம் புள்ள என்ன மாதிரியே” என்று சிலாகித்த அப்பா...

தான் கல்லுரி நாட்களில் மாவட்ட அளவில் பரிசுகள் பெற்றதை எனக்கு அடிக்கடி ஞாபகபடுத்திக் கொண்டு, எனக்கு செஸ் விளையாட்டு சொல்லி கொடுத்து, சில நாட்களில் அடிக்கடி நாங்கள் விளையாட ஆரம்பிக்க, அவரை நான் தோற்கடித்த முதல் விளையாட்டில், தான் தோற்றுவிட்டோம் என்று தெரிந்த அந்த நிமிடத்தில் கண்களில் பெருமிதம் பொங்க, கட்டியணைத்த
அப்பா...


எப்போதும் பள்ளிக்குச் செல்லும் போது நன்றாகத் தூங்கிக் கொண்டிருப்பவரை லேசாய் தட்டி எழுப்பி சொல்லிவிட்டு கிளம்பும் போதெல்லாம் பாதி கண்கள் திறந்து கன்னம் தடவி முத்தமிட்டு வழியனுப்பும் அப்பா...

அப்படிதான் ஒரு நாள் ஏதோ அவசரத்தில் சொல்லாமல் நான் கிளம்பிவிட, திடும்மென இடைவேளையில் பள்ளிக்கு வந்து நின்று, “அப்பாகிட்ட சொல்லாமயே வந்திட்டல” என்ற அப்பா... சும்மா வராமல் வகுப்பில் உள்ள அனைவருக்கும் கொடுக்கும் படியாய் ஒரு சாக்லேட் கவருடன்..அனைவருடனும் அதை பகிர்ந்து கொள்ளும் போது திடீரென எதுக்கு சாக்லேட் என எழுந்த கேள்விகளுக்கு சும்மா தான் என சொன்னாலும் அதன் பின் இருந்த ஒரு பத்து வயது சிறுமிக்கான அந்த
மகிழ்ச்சியையும், பெருமிதத்தையும் வார்த்தைகளில் உணர்த்த முடியுமா எனத் தெரியவில்லை...

ஏம்ப்பா நான் குள்ளமாவே இருக்கேன், உங்கள மாதிரி வந்திருக்கலாம்ல என வருத்தப்படும் போதெல்லாம், அப்பா திடீர்னு தான் வளந்தேன்டா பதினஞ்சு வயசுக்கு மேல, நீயும் அதே மாதிரி வளந்திடுவ பாரு’ன்னு ஆறுதலுக்காய் சொல்லும் அப்பா..

ஒரு காலகட்டங்களில், தோழர்களைப் போல் உட்கார்ந்து அரட்டை அடிக்கும் பொழுதுகளில் நண்பர்களுடனான தன் சாகசங்களையும் தன் காதல் கதைகளையும் சிலாகித்து விவரிக்கும் அப்பா... நான் செத்தா இவங்க எல்லார்க்கும் சொல்லியனுப்பனும்’ன என்று அடிக்கடி ஞாபகப்படுத்திக் கொண்டேயிருக்கும் அப்பா...

‘மெய்பொருள் காண்பது’ எவ்வளவு முக்கியமென உணர்த்திக்கொண்டே இருக்கும் அப்பா.. எனது எவ்வளவோ மூடப்பழக்கங்களைத் தகர்த்தெறிந்த அப்பா...

பெரிதாக வருமானங்களோ, வசதிகளோ இல்லாத நிலையிலும் மன்னரைப் போல, பாரதியைப் போல கனவுகளில் பெரிதாய் வாழ்ந்த அப்பா...
பக்கவாதம் வந்து அவரை மொத்தமாய் உருக்குலைத்து கட்டிப்போட்ட போதும் மனதளவில் நிமிர்ந்து நின்ற அப்பா..தன் தன்னம்பிக்கையையோ, தன்மானத்தையோ ஒரு போதும் தளரவிட்டதில்லை அவர்...

திடீரென உடல் நிலை சிறிது மோசமாகி பக்கத்தில் இருந்த ஒரு சின்ன நர்சிங் ஹோம்’ல் சேர்க்க, அன்றிரவு முழுதும் வைத்திருந்து அடுத்த நாள் காலை ஜீ.எச்’க்கு கொண்டு போக சொல்லிவிட, என்னை பார்க்க வேண்டுமென்று அழைத்து, கையைப் பிடித்துக் கொண்டு ‘நல்லா படிக்கணும்’ன, அம்மாவ ரொம்ப தொந்தரவு செய்யக்கூடாது’ என எனக்கான கடைசி வாக்கியம் பேசிய அப்பா....

ஜீ.எச்’சில் சேர்த்த அன்றிரவு தன் உயிர் போகும் முன், அருகில் இருந்த சித்தப்பாவிடம், ‘புள்ளயப் பாத்துக்கடா’ என்பதையே அனைவருக்குமான கடைசி வாக்கியமாய் விட்டுச் சென்ற அப்பா...

இன்று நானிருக்கும் மனுஷியாய் என்னை செதுக்கிய அப்பா...இப்படி நான் இருப்பதை பார்க்காமலே சென்று விட்ட அப்பா...

அப்பா...அப்பா..அப்பா.....இன்னமும் எழுத எழுத வந்து கொண்டேயிருக்கும் நினைவுகளைத் தந்து சென்ற அப்பா...

எந்நேரத்திலும் எனக்குள் இருந்த அவருக்கான பிரியத்தை - அது அவரால் உணர்ந்துக் கொள்ளப்பட்டது தான் என்றாலும், பெரிதாக வெளிக்காட்ட முடியாமலே தான் போயிருக்கிறது இன்று வரை.....இங்கு நான் நினைவு கூர்ந்த விஷயங்கள் அனைத்தும், பிரியமான அப்பாவைக் கொண்ட அனைவராலும் உணரப்பட்ட, அறியப்பட்ட விஷயங்களாக இருந்திருக்கக்கூடும். எனினும் அப்பாவுக்கான எனது அன்பின் ஒரு வெளிக்காட்டலாகவும் அவரிடம் இருந்து நான் பெற்றுக்கொண்ட அனைத்திற்கும் நெகிழ்ச்சியான ஒரு நன்றியாகவும் அவரின் இந்த 14’ஆம் வருட நினைவு நாளில், இந்த பதிவை சமர்ப்பிக்கிறேன்.
Related Posts with Thumbnails