Thursday, September 22, 2011

காகிதப்பூக்களின் நிறமெழுதும் வாசம்…[1]

நாம் பேசிக்கொள்ள இன்னமும் நிறைய மிச்சம் இருக்கிறது.

பேசி பேசித் தீர்த்த பொழுதுகளின் வாசம் மெல்ல காற்றில் கரைந்துகொண்டிருக்கிறது. அதை தக்க வைக்க என்னாலான‌தை முயன்று தோற்றுக்கொண்டிருக்கிறேன். என்னைச் சுற்றிலும் ஒரு மெளனச்சுவர் மெல்ல எழும்புகிறது. என்னை மீறி இடமற்ற, யாரும் உள்நுழைய முடியாத கூடாய் அது உருவாகிறது. மகிழ்ச்சியாய் அதனுள் சிறைப்பட எத்தனித்து கொண்டிருக்கிறேன். மெளனமும் இருளும் தனிமையும் கொண்டு அதனை நிரப்புகிறேன். மெளனம் அனைத்திற்கும் தீர்வாக இருக்கும் என நம்புகிறேன். அதுவும் தவறு தான் என உடைத்துப் போகிறாய்.

வார்த்தைகளற்ற பெருவெளி ஏதோ ஒன்றில் அறியாமல் நாம் சிக்கிக்கொண்டிருக்கவேண்டும். உன்னை நோக்கி குவிந்த வார்த்தைகள் எங்கேயோ விரைந்து மறைகின்றன. ஆடம்பரமாக்க பட்ட வார்த்தைப்பெருவெளிகளில் பஞ்சத்தில் அடிபட்ட ஏழ்மையின் குடியாக மாறிக்கொண்டிருக்கிறோம். உறியில் மிச்சம் இருக்கும் ஒன்றிரண்டு அரிய சொற்களும் பரிதாபமாக கொள்ளையடிக்கப்பட்டுக்கொண்டு இருக்கிறது. உணர்வுகளையும் வருத்தங்களையும் கோபங்களையும் ஓரிரு சத்தங்களில் வெளிக்காட்டுவதோடு நம் பரிமாற்றங்கள் முடிவடைந்துக்கொண்டிருக்கின்றன.

புன்னகைகளும் உற்சாகங்களும் ஊற்றெனப் பெருக்கெடுத்து ஓடிய காலங்கள் நினைவிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்துகொண்டிருக்கிறது. மெல்ல மெல்ல உயிர்த்தெழுந்த செல்கள் மீண்டும் மரணிக்கத் தொடங்கிவிடுவதைப் போல கூக்குரல் இடுகின்றன. உயிர்ச்சூடளித்து என்னை அடைகாத்த அடர்ந்த கருஞ்சிறகுகளின் இறகுகள் மெல்ல உதிர்ந்துவிடுவதைப் போல ஊசலாடிக்கொண்டிருக்கின்றன. பின்னிப் பிணைந்த பாம்புகளைப் போல் கிடந்த நம் பாதச்சுவடுகளின் பாதை தண்டவாளங்களைப் போல் தனித்தனியாய் நீண்டுகொண்டிருக்கிறது. காதலாய் நிகழும் சந்திப்புகள் சலிப்பிற்குரிய கடமைகளாய் மாறத்தொடங்குகிறது. சிரிப்புக்களை இடம் மாற்றிவிட்டு சலிப்புக்களும் வெறுப்புகளும் கோபங்களும் குடிகொள்ளத் தொடங்கிவிட்டன.

கட்டி எழுப்பப்பட்ட எனது கனவு தேசங்கள் அனைத்தும் கேள்விக்குறிகளாய் மாறுகின்றன. அதன் கூரிய வளைவுகளில் என் கழுத்தைச் சுற்றி கருணையே இல்லாமல் என்னை இழுத்துப் போகின்றன. மிகுந்த அலறல்களின் இடையில் என்னை பள்ளாத்தாக்கின் மேலிருந்து விடுவிக்கின்றன. விழுந்து கொண்டே இருக்கையில் விழிக்கிறேன். விழித்து விழித்து பின் மீண்டும் வீழ்கிறேன்.

தேவதைக்கதைகளில் வரும் ஏழுகடல்கள் ஏழுமலைகள் தாண்டி இருக்கும் அரக்கனின் காவலில் உள்ள கிளியின் உயிரை போன்றதாகிவிட்டது நம் பிரியங்கள். அரியது போல, மிக மிக வேண்டப்பட்டது போல, பல போர்களை தூண்டும் வேட்கை போல, மனிதத்தின் ஆழத்தில் ஒளிந்திருக்கும் மெல்லிய வன்மங்களைப் போல, இடம் மாறினாலும் நிறம் மாறினாலும் அடையாளம் மாறாத அதே பிரியங்கள். எங்கேனும் யாரேனும் பரிசளிக்கும் ஒரு மந்திர வாளோ பறக்கும் மந்திர கம்பளமோ கிடைத்துவிடாதா சிறைப்பட்டிருக்கும் என் பிரியத்துக்குரிய நேசங்களை மீட்க என்ற ஏக்கத்துடன் கூடிய மெல்லிய நம்பிக்கையின் ரேகை ஒன்று ஆயுள் ரேகையை தாண்டிச் செல்கிறது என் உயிர்த்திருத்தலின் நோக்கங்களை எடுத்துக்கூறியபடி.

வேறு வேறு கூடுகள். வேறு வேறு எல்லைகள். தொடுவானங்கள் அவரவர் திசைகளிலும் வெவ்வேறு தூரங்களிலும். எனினும் ஒரே உலகத்தில் தானே சஞ்சரித்துக்கொண்டிருக்கிறது நம் உடல்களும் உயிரும். அதுவும் நமக்கு மட்டுமேயான உலகமாய் மாறிவிடும் என்ற கனவுகளுடன் இப்போது கலைந்து போகிறேன்.

நாம் பேசிக்கொள்ள இன்னமும் நிறைய மிச்சம் இருக்கிறது…

Related Posts with Thumbnails