Monday, October 29, 2012

The PITSTOP... [2]


 [1] [2]

பயணங்கள் பற்றிய பழைய நினைவுகளை எல்லாம் ஒட்டிப் பார்த்ததில் முக்கால்வாசிக்கும் மேலாக வாய்ப்பு மறுக்கப்பட்டு ஒரு மூலையில் உம்மணாம்மூஞ்சியோடு ஒரமாக உட்கார்ந்திருப்பதே படத்தின் இன்டர்வெல் வரை ஓடியது. அதற்கு மேல் எனக்கே தாங்காமல் இன்னும் கொஞ்சம் ரீவைண்ட் செய்ததில் ஒரு 5-6 வயது இருக்கும் போது நடந்த ஒன்று நினைவுக்கு வந்தது. அதற்கான அர்த்தங்களை நான் இதுவரை புரிந்து கொள்ள விழைந்ததே இல்லை. இப்போது நினைக்கும் போது நிஜமாகவே விசித்திரமாக இருந்தது. அப்போது என் பள்ளிக்கு மிக அருகில் ஒரு பெரிய பழைய கால தேவாலயம் ஒன்று இருந்தது. அது எங்கள் பள்ளியை விட பெரிதாகவும் செடி கொடிகளுடன் மண் சாலைகளுடன் அங்கங்கே தனித்தனி பிரார்த்தனை கூடங்களும் பாதிரியார்கள் தங்கும் விடுதிகளும் கொண்ட விசாலமான வளாகம். பள்ளியும் வீடும் மிக அருகில் தான். 5 நிமிட நடை. என்னை பள்ளியிலிருந்து அழைத்து செல்ல என்னைப் பார்த்துக்கொள்ளவும் வீட்டு வேலைகளில் உதவவும் வைத்திருந்த சிவகாமி அக்கா தான் வருவார். எப்போதாவது விடுமுறையிலோ பெர்மிஷனிலோ இருக்கும் போது அம்மாவும் உடன் வருவார். அப்போதெல்லாம் நாங்கள் அந்த வளாகத்திற்கு சென்று வருவோம். அது தான் எனக்கு தெரிந்த முதல் அவுட்டிங் ஸ்பாட். வழியும் தெரிந்த என்று சொல்வது தான் இன்னும் பொருத்தம்.

ஒரு நாளில் பள்ளி விட்டு வீட்டுக்கு செல்லும் போது எனக்கு அந்த எண்ணம் உதித்தது. அந்த வளாகத்திற்குத் தனியாக செல்ல வேண்டுமென. பள்ளியில் இருந்து செல்வது தான் எளிது. எனினும் அக்கா தயாராக நிற்பார். என்றாவது பார்த்துக்கொள்ளலாமென தள்ளி வைக்கவெல்லாம் தோன்றவே இல்லை. ஒன்றே செய் பாணியில் அன்றே அதை செயல்படுத்தியாக வேண்டுமென ஒரு வேகம். வீட்டிற்குச் சென்று உடை மாற்றிவிட்டு எப்போதும் போல பக்கத்துவீட்டில் சென்று விளையாடப்போகிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பினேன்.  மிஞ்சிப்போனால் இரண்டடி உயரம். அதற்கு ஒரு பாவாடைச் சட்டை. ஒரு குடுமி. இந்த உருவத்தை வைத்துக் கொண்டு வெறுங்கையுடன் தெருவில் இறங்கி நடந்தேன். வேகவேகமாக நடந்தும் வழி நீண்டு கொண்டேயிருந்தது. ஏதோ ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி, கொஞ்சம் பயம், கொஞ்சம் ஆர்வம் என கலவையான உணர்வு. ஒரு வழியாக இன்னும் சிறிது தூரம் தான் என்னுமிடத்தில் ஏதோ ஒரு உள்ளுணர்வு உறுத்த திரும்பி பார்த்தேன். புன்னகைத்துக் கொண்டே அக்கா என் பின்னேயே வந்து கொண்டிருக்கிறார்.

பின்னே, எங்கப்பன் குதிருக்குள் இல்லை என நான் அங்கே தான் விளையாடிக்கொண்டிருப்பேன் எனவும் என்னைத் தேடவேண்டாமெனவும் திரும்ப திரும்ப உளறியிருக்கிறேன். பின்னாலேயே வந்து என்னைப் பிடித்துவிட்டார். அவர் என்ன கேட்டார் நான் என்ன பதில் சொன்னேன் என்றெல்லாம் நினைவில்லை. ஆனால் அவர் வீட்டில் என்னை மாட்டிவிடவில்லை. ஏனென்றால் அதற்காக அடி வாங்கியதாய் ரெக்கார்டில் இல்லை! உண்மையாகவே இத்தனை வருடங்கள் கழித்து அது நினைவுக்கு வந்ததும் அது குறித்த இப்போதைய எனது பார்வையும் தான் கொஞ்சம் ஆச்சரியமானது தான். அப்போதிருந்த மனநிலை என்னவென்று அறிய முடியவில்லை எனினும் எனக்கு சில கேள்விகள் எழுந்தன. என்னை செலுத்தியது என்ன ? எனக்கென ஒரு அனுபவம், சுதந்திரம் தேவைப்பட்டதா? யாரையும் சார்ந்து நிற்காமல் வேண்டியதை நிறைவேற்றிக்கொள்ளத் தோன்றியதா ? இப்போது என்னிடம் பதில் இல்லை!

சில மாதங்களுக்கு முன்பு ஒரு புத்தகத்தைப் படித்தேன்.  ப்ரான்ஸ்'ல் இருந்து ஜெனிவா ஏரி வரை (தனியாக) நடைபயணம் மேற்கொள்ளும் ஒரு பெண்ணின் பயணக்கட்டுரை. அங்கே பக்காவாக இதற்கான பயண கையேடுகள், வழிகளில் இவ்வாறு பயணிப்பவர்கள் தங்க விடுதிகள் என எல்லா வசதிகளும் கிடைக்கின்றன. படித்தவுடன் அப்படியே கற்பனை சிறகடித்து பறந்தது. அந்த கிராமங்களும் மக்களும் மலைகளும் காடுகளும் அதன் அழகும். ஆகா. என்ன ஒரு அனுபவம் ?  நம்மால் இங்கே என்ன செய்ய முடியும் ? திருப்பதி மலை, திருவண்ணாமலைகளில் நடை பயணிகளுக்கான ஏற்பாடுகள்  உண்டு. அங்கே செல்வதில் பெரிதான ஆர்வமில்லை! எஸ் ரா ஒரு முறை டவுன் பஸ்களிலேயே மாறி மாறி அவர் ஊருக்கு சென்றது போல, மதுரைக்கு நடந்தால் என்ன ? நெடுஞ்சாலைகள் ஆரம்பித்தவுடன் சூழும் வெறுமையும் இருளும் பயமுறுத்தியது. நடைபாதையில் தூங்க முடியுமா ? பாதுகாப்பு ? உணவு? என அடுக்கடுக்காக வழக்கம் போல ஆகாததைப் போட்டு மேலும் குழப்பினேன். இங்கே அதற்கெல்லாம் வழி இல்லை என கடைசியில் எண்ணம் கைவிடப்பட்டது.  குட்டி குட்டி நடைப்பயணங்கள் மேற்கொள்ளலாம் என அதற்கு சமாதானமும் சொல்லிக் கொள்ளப்பட்டது. ஒரு வாரவிடுமுறையில் பரிசோதனை முயற்சியாய் ஒரு மூன்று பேருந்து நிறுத்தங்கள் தாண்டிச் சென்று வந்தேன். நன்றாகத் தான் இருந்தது.

இதை ஒரு வழக்கமான நடவடிக்கையாகவே மேற்கொள்ள வேண்டுமென்ற ஒரு வெறியில், அலுவலகத்திலிருந்து அடுத்த சந்திப்பு வரை( கிட்டத்தட்ட 5.5 கிமி) அடிக்கடி நடப்பது என முடிவானது. இதன் வசதிக்காக, வைத்திருந்த கைப்பை Backpack'காக மாறியது. வாட்டர் பாட்டில், குளூகோஸ் எல்லாம் கூட வைத்துக்கொள்ளலாம் என எண்ணம். முதல் நாளன்று சீக்கிரமே அலுவலகம் வந்து வேலையெல்லாம் வேகவேகமாக முடித்து வெளிச்சத்தோடே கிளம்புவதாகத் திட்டம் .அரைமணி நேர தாமதமாகத் தான் ஆனால் கிளம்ப முடிந்தது. அலுவலகக் கதவைக் கடக்கும் முன்னரே ஒரு குதூகலம் தொற்றிக்கொண்டது எனக்கே ஆச்சரியமாகத் தான் இருந்தது. இதற்கு முன்னால் பள்ளிக்கூட சுற்றுலாப்பயணங்களுக்கு இருந்தது போன்ற ஒரு உற்சாகம். வெளியேறி நடக்க ஆரம்பித்தேன். வெளிச்சம் அவ்வளவாய் மறையவில்லை. சாலைகள் பேருந்திலிருந்து பார்த்தைவிட வித்தியாசமாகவும் விசாலமாகவும் அழகாகவும் இருந்தன.மாலை நேரக்கடைகளுடன் கூடிய சிறு கடைவீதித் தோற்றம் அவ்வளவு புதிதானதாகவும் மகிழ்ச்சிகரமானதாகவும் இருந்தது. பேருந்தில் சில நிமிடங்களில் தாண்டிவிடும் இடம் பார்க்க ஒரு 15 நிமிடத்திற்கு மேல் நடக்க வேண்டியிருந்தது. அதை எல்லாம் தாண்டி நடந்ததும் வீதியும் நானும் விரையும் வாகங்களும் மட்டுமே இருந்தோம்.

தினமும் கடக்கும் சாலை தான் எனினும் சில இடங்களை அதற்கு முன்பு அதைப் போல பார்த்ததாக நினைவே இல்லை. பாதி கடக்கும் முன்பே நன்கு இருட்டிவிட்டது, ஒரு மணி நேரம் தொடர்ச்சியாக நடந்த பின்பு அந்த முக்கிய சந்திப்பை வந்தடைந்தேன். அங்கிருந்து பஸ் பிடித்து வீட்டுக்குச் சென்றேன். அன்றைப் போலவே சீக்கிரம் வந்து சீக்கிரம் கிளம்பி வாரத்தில் இரண்டு நாட்களாவது நடக்க வேண்டுமென முடிவு செய்தேன். இது நடந்து கிட்டத்தட்ட நான்கைந்து மாதங்கள் ஆகிவிட்டன. அதற்கென மாற்றிய பை, செருப்பு இன்றுவரை தொடர்கிறது.  ஆனால் நடப்பது ? ;)

~பயணிக்கலாம்..
Related Posts with Thumbnails