Saturday, October 13, 2018

Guess what

இவ்வருட தொடக்கத்தில் (டிசம்பரில் முடிக்க முடியாத காரணத்தால்) சீக்ரட் சான்டா விளையாடிக்கொன்டிருந்தோம். வித்தியாசம் என்னவென்றால், விளையாடுவோர் அனைவரும் வேறு வேறு ஊர்கள், நாடுகளில். Long Distance Relationship போல, ஒரு Long Distance சான்டா. இதற்கென உள்ள ஒரு தளத்தில் அனைவரும் பதிவு செய்தவுடன், நமக்கென ஒதுக்கப்பட்ட சைல்ட் தெரிந்துவிடும். அதன் பின் உங்கள் வேண்டுகோள்கள், தகவல்கள் உங்கள் அடையாளம் அறியாதவாறு பகிர்ந்துகொள்ள முடியும். அதகளமாக சென்றுகொண்டிருந்தது விளையாட்டு. Dubsmash, விடியோ, புகைபடங்கள் என தினமும் கொண்டாட்டம்.. அவ்வாறாக ஒரு நாள் எனக்கொரு வேண்டுகோள் வந்தது. தாய்மை பற்றியான பதிவோ கவிதையோ பேஸ்புக்கில் பகிரவேண்டுமென. நேரமின்மை காரணமாக, ஒரு சின்ன ஸ்டேட்டஸ் ஒன்றை பதிவிட்டேன். ("முகவாயை கைகளால் உயர்த்தி, கண்ணோடு கண் நோக்கி "செல்ல்ல்ல்லக்க்குட்ட்டீஈஈ!!" என அழைக்கிறான் அன்பு மகன். உச்சி முகர்ந்து, கட்டி அணைத்து, கன்னத்திலும் நெற்றியிலும் முத்தமிட்டு, உதட்டிலும் அழுத்தமாக முத்திரை பதிப்பவன் ;) .'தங்கபேபி..','பேபிக்குட்டி மாம்மி..','தங்ககட்டி..' என என்னை கொஞ்சிக்கொண்டிருக்கும் இவன் நான் பெற்று வளர்க்கும் மகன் தானா, அல்லது என்னை தன் அம்மாவென அள்ளிக்கொஞ்சி தாலாட்டி சீராட்டி கொண்டாடிய‌ என் அப்பனா "?)

அடுத்த நாள் அதற்கான பதில் வந்தது. அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பும் பேருந்தில் ஜன்னலோரமாக உட்கார்ந்திருந்தேன். அருமையான பதிவு என்றும் ரசித்ததாகவும் சொல்லிய எனது சான்டா, "உனக்கு அப்பாவின் நினைவு வந்திருக்கும். அவரை கண்டிப்பாக மிஸ் செய்கிறாய் அல்லவா ? ஒரு கற்பனை போன் கால் ஒன்று செய்து ஷேர் செய்யேன், அவரிடம் இப்போது என்ன சொல்வாய் ? Hope it is not too heavy." என கேட்டிருந்தார். படித்துக் கொண்டிருக்கும் போதே தொண்டையை அடைத்தது. ஜன்னலை திறந்து வைத்தேன். காற்றுப்பட்டது கொஞ்சம் ஆறுதலாயிருந்தது. மறுமுறை அதை படித்தேன். கடகட வென கண்ணீர் துளிகள் உருண்டு ஓடிக்கொண்டே இருக்கிறது. பொதுவாக நான் என்னை கொஞ்சம் மனவலிமையான ஆளாக கருதிக்கொள்வதுண்டு. சட்டென அழுகை, அதுவும் பொதுவெளியில் மிகவும் கடினம் தான். இருபது வருடமாகிவிட்டதே, பழகிவிட்டது என நினைத்திருந்தேனே. ஆனால் இன்று, எது என்னை இப்படி அழ வைக்கிறது ?

யோசிக்கிறேன். என்ன பேசுவேன் அப்பாவிடம்? என்னவென்று அவ்வுரையாடலை ஆரம்பிக்க? நல்லா இருக்கீங்களா அப்பா என்றா ? இருபது வருடங்க‌ளின் கதையை, கண்ணீரை, வலியை, வெற்றிகளை, சந்தோஷங்களை, என்னவென்று மொழிபெயர்ப்பேன் ? ஒரு உறுதுணை, ஒரு தூண், கை பிடிக்கும் விரல், சாய்ந்து கொள்ளும் தோள், அழுகை அமர்த்தும் மடி - வேண்டிய பொழுதுகளில் அவை இல்லாமல் இருந்த வெறுமையை எப்படி சொல்வேன்? நினைக்க நினைக்க நிற்காமல் ஒடும் கண்ணீரை மீறி என்ன பேசிவிட முடியும் என்னால் ? இல்லை, இது என்னால் முடியாது. இதை செய்ய என்னால் முடியாது. அப்பா திரும்பி வரப்போவதேயில்லை என்பதானாலேயே என்னால் முடியாது. மன்னித்து விடு சான்டா என பதில் அனுப்பிவிட்டு தொடர்ந்து யோசித்து கொண்டிருந்தேன்.

காயத்தை காலம் ஆற்றிவிட்டதென நினைத்ததை, மனதை அறுப்பதாக அல்லாமால், இயல்பான ஒரு கவலையாக மனதின் அடியில் படிந்துவிட்டதை, ஒரு வார்த்தை, ஒரு கற்பனை, அன்று இருந்தது போலவே அவ்வலியை திருப்பி கொண்டுவர முடியுமா ? இங்கே அழுது கொண்டிருப்பது இப்பொது இருக்கும் நானல்ல, அன்றிருந்த பதினான்கு வயது சிறுமி அல்லவா? ஒரு காயம் என்றும் மறைவதில்லை. உறுத்தாமல் ஓரமாக இருக்க பழகிக்கொண்டிருக்கும். மேலே ஆறியது என நீங்கள் நினைத்தாலும் எத்தனை வருடங்களுக்கு பிறகும் கொஞ்சம் தட்டிப்பார்த்தால், அதே ரத்தமும் சதையுமான காயம்.தான். எக்காயத்தையும் காலம் ஆற்றும் என்பது உண்மை அல்ல. பழக்கப்படுத்தும் என்பதே உண்மை. ஒரு இழப்பின் வலி என்றும் மறைவதேயில்லை

Related Posts with Thumbnails