Thursday, September 22, 2011

காகிதப்பூக்களின் நிறமெழுதும் வாசம்…[1]

நாம் பேசிக்கொள்ள இன்னமும் நிறைய மிச்சம் இருக்கிறது.

பேசி பேசித் தீர்த்த பொழுதுகளின் வாசம் மெல்ல காற்றில் கரைந்துகொண்டிருக்கிறது. அதை தக்க வைக்க என்னாலான‌தை முயன்று தோற்றுக்கொண்டிருக்கிறேன். என்னைச் சுற்றிலும் ஒரு மெளனச்சுவர் மெல்ல எழும்புகிறது. என்னை மீறி இடமற்ற, யாரும் உள்நுழைய முடியாத கூடாய் அது உருவாகிறது. மகிழ்ச்சியாய் அதனுள் சிறைப்பட எத்தனித்து கொண்டிருக்கிறேன். மெளனமும் இருளும் தனிமையும் கொண்டு அதனை நிரப்புகிறேன். மெளனம் அனைத்திற்கும் தீர்வாக இருக்கும் என நம்புகிறேன். அதுவும் தவறு தான் என உடைத்துப் போகிறாய்.

வார்த்தைகளற்ற பெருவெளி ஏதோ ஒன்றில் அறியாமல் நாம் சிக்கிக்கொண்டிருக்கவேண்டும். உன்னை நோக்கி குவிந்த வார்த்தைகள் எங்கேயோ விரைந்து மறைகின்றன. ஆடம்பரமாக்க பட்ட வார்த்தைப்பெருவெளிகளில் பஞ்சத்தில் அடிபட்ட ஏழ்மையின் குடியாக மாறிக்கொண்டிருக்கிறோம். உறியில் மிச்சம் இருக்கும் ஒன்றிரண்டு அரிய சொற்களும் பரிதாபமாக கொள்ளையடிக்கப்பட்டுக்கொண்டு இருக்கிறது. உணர்வுகளையும் வருத்தங்களையும் கோபங்களையும் ஓரிரு சத்தங்களில் வெளிக்காட்டுவதோடு நம் பரிமாற்றங்கள் முடிவடைந்துக்கொண்டிருக்கின்றன.

புன்னகைகளும் உற்சாகங்களும் ஊற்றெனப் பெருக்கெடுத்து ஓடிய காலங்கள் நினைவிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்துகொண்டிருக்கிறது. மெல்ல மெல்ல உயிர்த்தெழுந்த செல்கள் மீண்டும் மரணிக்கத் தொடங்கிவிடுவதைப் போல கூக்குரல் இடுகின்றன. உயிர்ச்சூடளித்து என்னை அடைகாத்த அடர்ந்த கருஞ்சிறகுகளின் இறகுகள் மெல்ல உதிர்ந்துவிடுவதைப் போல ஊசலாடிக்கொண்டிருக்கின்றன. பின்னிப் பிணைந்த பாம்புகளைப் போல் கிடந்த நம் பாதச்சுவடுகளின் பாதை தண்டவாளங்களைப் போல் தனித்தனியாய் நீண்டுகொண்டிருக்கிறது. காதலாய் நிகழும் சந்திப்புகள் சலிப்பிற்குரிய கடமைகளாய் மாறத்தொடங்குகிறது. சிரிப்புக்களை இடம் மாற்றிவிட்டு சலிப்புக்களும் வெறுப்புகளும் கோபங்களும் குடிகொள்ளத் தொடங்கிவிட்டன.

கட்டி எழுப்பப்பட்ட எனது கனவு தேசங்கள் அனைத்தும் கேள்விக்குறிகளாய் மாறுகின்றன. அதன் கூரிய வளைவுகளில் என் கழுத்தைச் சுற்றி கருணையே இல்லாமல் என்னை இழுத்துப் போகின்றன. மிகுந்த அலறல்களின் இடையில் என்னை பள்ளாத்தாக்கின் மேலிருந்து விடுவிக்கின்றன. விழுந்து கொண்டே இருக்கையில் விழிக்கிறேன். விழித்து விழித்து பின் மீண்டும் வீழ்கிறேன்.

தேவதைக்கதைகளில் வரும் ஏழுகடல்கள் ஏழுமலைகள் தாண்டி இருக்கும் அரக்கனின் காவலில் உள்ள கிளியின் உயிரை போன்றதாகிவிட்டது நம் பிரியங்கள். அரியது போல, மிக மிக வேண்டப்பட்டது போல, பல போர்களை தூண்டும் வேட்கை போல, மனிதத்தின் ஆழத்தில் ஒளிந்திருக்கும் மெல்லிய வன்மங்களைப் போல, இடம் மாறினாலும் நிறம் மாறினாலும் அடையாளம் மாறாத அதே பிரியங்கள். எங்கேனும் யாரேனும் பரிசளிக்கும் ஒரு மந்திர வாளோ பறக்கும் மந்திர கம்பளமோ கிடைத்துவிடாதா சிறைப்பட்டிருக்கும் என் பிரியத்துக்குரிய நேசங்களை மீட்க என்ற ஏக்கத்துடன் கூடிய மெல்லிய நம்பிக்கையின் ரேகை ஒன்று ஆயுள் ரேகையை தாண்டிச் செல்கிறது என் உயிர்த்திருத்தலின் நோக்கங்களை எடுத்துக்கூறியபடி.

வேறு வேறு கூடுகள். வேறு வேறு எல்லைகள். தொடுவானங்கள் அவரவர் திசைகளிலும் வெவ்வேறு தூரங்களிலும். எனினும் ஒரே உலகத்தில் தானே சஞ்சரித்துக்கொண்டிருக்கிறது நம் உடல்களும் உயிரும். அதுவும் நமக்கு மட்டுமேயான உலகமாய் மாறிவிடும் என்ற கனவுகளுடன் இப்போது கலைந்து போகிறேன்.

நாம் பேசிக்கொள்ள இன்னமும் நிறைய மிச்சம் இருக்கிறது…

Tuesday, June 14, 2011

சமீபத்தில் படித்தவை

யுவனின் வெளியேற்றம் தான் இந்த வருடத்தில் நான் படித்த முதல் புத்தகம். அதற்கு முன்பே ஒன்றிரண்டை ஆரம்பித்து தொடர முடியாமல் போய் தான் வெளியேற்றத்திற்கு வந்தேன். அதை முடிக்க‌வே மார்ச் ஆகிவிட்ட‌து .

அத‌ன் பின்ன‌ர் ப‌டித்த‌வை இங்கே. இடையில் நீராலான‌து- மனுஷ்ய புத்திரன், , தேசாந்திரி-எஸ்.ரா (இரண்டாம் முறை) இர‌ண்டும் அட‌ங்கும். இவை இர‌ண்டிற்கும் பெரிதாக‌ அறிமுக‌ம் தேவையில்லாத‌ கார‌ண‌த்தினால் கொடுக்க‌வில்லை :)

மஞ்சள் வெயில் - யூமா வாசுகி

யூமாவின் ரத்த உறவு படித்திருக்கிறேன்(இதைப் ப‌ற்றி த‌னியாக‌ எழுத‌வேண்டும் என‌ வெகு நாட்க‌ளாக‌ எண்ண‌ம்) . அவரின் எழுத்தில் விரியும் அந்த வினோத உலகத்தின் மாயை. அவரின் கவிதைகளும் படிக்க ஆரம்பிக்க வேண்டும். மஞ்சல் வெயில் - மிகச்சிறிய ஆனால் மனதை விட்டு அவ்வளவு சீக்கிரம் நீங்காத ஒரு நாவல். ஜீவிதா என்ற அந்த கதாப்பாத்திரத்தின் மீது படிப்பவர் எவருமே காதல் கொள்ளத்தான் வேண்டும். கதாநாயகனின் ஒரு தலைக்காதல், அவளின் எல்லா செயலகளையும் காதலென புரிந்து கொள்ளுதல். கதை மொத்தத்தையுமே காதலிக்கான கடிதமாக, தீராத காதலின் வடிகாலாக, தோல்வியின் உணர்ந்து கொள்ளலாக, காதலை பொழிந்து யூமாவின் மந்திரச்சொற்களால் நிரம்பியிருக்கிறது, கிறங்க வைக்கும் மஞ்சள் வெயில். அவசியம் படிக்க வேண்டிய ஒன்று.

அகல் பதிப்பகம் - ரூ 65 - பக்கங்கள் -134

மறுபக்கம் - பொன்னீலன்

சாகித்ய அகாடமி விருது பெற்ற, மார்க்ஸீய அடையாளம் உள்ள எழுத்தாளர் பொன்னீலன் அவர்களது மறுபக்கம் நாவல், 1982 ஆம் ஆண்டு நடந்த தென்மாவட்ட கலவரமான ‘மண்டைக்காடு கலவரம்’ குறித்தது. கன்னியாகுமரி, தூத்துக்குடி, கேரள எல்லை கிராமங்கள் இடையேயான உறவுகள், மீனவர் மற்றும் மற்ற சாதியினர் இடையேயான உறவு, வேர் விட ஆரம்பித்திருந்த கிறித்துவ மதம், அதை முறியடிக்க ஆர்.எஸ்.ஏஸ்’ன் முயற்சிகள், சிறுதெய்வங்கள், நாட்டுபுற கடவுளர்களையும் திரித்த வடநாட்டு தெய்வங்களின் நுழைதல் எனப் பல்வேறு விஷயங்களைத் தொட்டு செல்கிறது கதைப்போக்கு. தமிழ்நாட்டு வரலாற்றில் ஆர்வம் உடையவர்கள் படிக்க வேண்டிய நாவல். அவ்வப்போது தூவப்பட்டிருக்கும் சில புரட்சிக்கருத்துக்களும் பெண்ணியமும் ரசிக்க வைத்தவை. உண்மை சம்பவங்களின் கோர்வை - நீண்ட விஷயங்களை சொல்வதினாலொ என்னவோ கொஞ்சம் மெதுவாகத் தான் நகர்கிறது. சில நாட்கணக்கில் நாவல்களை முடித்துவிடும் காலத்தில், விஷயங்களை சேகரிக்கவும், நாவலை உருவாக்கவும் வருடக்கணக்கில் உழைத்திருக்கும் ஆசிரியருக்கு தாழ்மையான வணக்கங்கள்.

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் - ரூ. 375 - பக்கங்கள் - 750

The dreamseller - the calling - Augusto Cury

இதுவும் ஒரு மாதிரி alchemist வகை. ஆனால் அதைப் போன்ற ஒரு ஃபேண்டசி தளமாக இல்லாமல் நம் அன்றாட வாழ்க்கையில் நிகழ்வது போல இயல்பான தளம். உலவும் கதாப்பாத்திரங்கள் போல நாம் என்றேனும் சிந்தித்திருப்போம். அவர்களிடம் கேட்கப்படும் கேள்விகள் ஒவ்வொன்றும் நாம் சிந்திப்பதற்காக கேட்கப்படுபவை. இயந்திர மயமாக, உலகத்தனமாகவே ஒடி/ஓட்டிக் கொண்டிருக்கும் வாழ்க்கையில் நம் Priorities என்ன என யோசிக்கவைக்கிறது. தொலைத்த கனவுகளைத் தேடச்சொல்லும் வார்த்தைகள். inspiring and motivating.

Simon & Schuster Co, UK - ரூ 479, பக்கங்கள் - 246

காலம் ஆகி வந்த கதை - இரவி அருணாச்சலம்

நண்பரின் பெட்டியில் இருந்த புத்தகத்தைப் பார்த்து வித்தியாசமான தலைப்பாக இருக்கிறதே என கேட்டு வாங்கிக் கொண்டு வந்து சில மாதங்கள் கழித்துத் தான் படித்திருக்கிறேன். சத்தியமாக அது வரை அது ஈழப்பின்புலம் சார்ந்தது என யோசிக்கக் கூட இல்லை. முழுவதும் அவர்களின் அழகிய தமிழில். மிக அருமையாக, கதை சொல்லியின் பிள்ளைப் பிராயத்தை ஒரு மாதிரி கோர்வையான நிகழ்வுகளால் சொல்லியிருக்கிறது. அதன் மூலம் காட்சியில் விரியும் அந்த அழகான கிராமம், குடும்பம், பாசப்பிணைப்பு, அவர்களின் ஆடு, மாடு , கோழி போன்றவை, கோயில், குலதெய்வம் என அவ்வளவும். இத்தனையும் இப்போது இருக்காதே என்ற வருத்தம் படிக்கும் போதே சூழ்ந்து கொள்கிறதுவெகு சில இடங்களில் மட்டுமே அவர்கள் சந்தித்த பிரச்சனைகள் வருகிறது.. கதையில் திருப்பம் என எதுவும் இல்லை. ஆனால் படிப்பதை நிறுத்த முடியவில்லை. இன்னொரு முறை படித்தால் வேறு பரிமாணம் கிடைக்குமோ என்னவோ. முயற்சி செய்து பார்க்க வேண்டும்.

விடியல் பதிப்பகம் - ரூ 80, பக்கங்கள் - 224

முன் சென்ற காலத்தின் சுவை - செந்தில்குமார்

ஆசிரியரைப் பற்றி பெரிதாக கேள்விப்பட்டிராததால் எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி தான் ஆரம்பித்தேன். கவிதைகள் உருவாக்கிய ஒர் தனி உலகிற்குள் அழைத்துச் செல்லும் வரிகள். உருவங்களுக்கும் உருவின்மைகளுக்கும் இடைவெளியில் நிகழும் சிறுபொழுதுகளை வரிகளாக்குகிறார் என்று சொல்லும் பின்னட்டை வாசகம் தான் எவ்வளவு உண்மை! உருவம் சார்ந்த உருவின்மைகளும் உருவமற்ற உருவங்களும் உருவாக்கும் புதிய கவிதை உலகத்தில் கருணையும் கழிவிரக்கமும் அனுதாபம் கலந்த ஈரமும் நிரம்பியிருக்கிறது.

காலச்சுவடு பதிப்பகம், ரூ 75, பக்கங்கள்- 95.

Friday, April 1, 2011

யுவன் சந்திரசேகரின் ’வெளியேற்றம்’ நாவல்

அந்த ஒரு கணத்தை எல்லாரும் கட்டாயம் கடந்து வந்திருப்போம். எல்லாத்தையும் விட்டுவிட்டுப் போய்விடலாம், எதுவுமே தேவையில்லை என யோசிக்கும் ஒரு கணம். என்ன வாழ்க்கை இது என யோசிக்கும் ஒரு கணம். தனியே பிரயாணித்துக் கொண்டிருக்கையில் இறங்குமிடமே வராமல் அப்படியே பயணம் தொடர்ந்து கொண்டே இருக்காதா என ஏங்கும் ஒரு கணம். பறவையைப் போல எந்தக் கட்டுப்பாடுகளும் கடமையும் இல்லாமல் பறந்து திரிய நினைக்கும் ஒரு கணம். எல்லாவற்றில் இருந்தும் வெளியேறி வெறுமையாய்த் திரிய வேண்டும் என விரும்பும் ஒரு கணம்.

"வெளியேறுதலும் வெளியேற்றப்படுதலுமே மனித அனுபவத்தின் சாரமாக இருக்கின்றன. குடும்பம், நம்பிக்கைகள் மற்றும் தம்மைப் பிடித்திருக்கும் ஏதெனும் ஒன்றிலிருந்து மனிதர்கள் தொடர்ந்து வெளியேற்றப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் சார்ந்திருக்கும் அமைப்புகள்தாம் அந்த வெளியேற்றத்தை நிகழ்த்துகின்றன. அவை சில சமயம் தண்டனையாகவும் சில சமயம் விடுதலையாகவும் உருக்கொள்கின்றன." என்ற பின்னட்டையின் வாசகமும் இப்புத்தகத்தை வாசிக்க வேண்டும் என ஈர்த்ததில் தன் பங்கைச் செய்தது.

மேற்சொன்ன வெளியேற்றங்களுக்கு அப்பாலும் வெளியேறிச்செல்லும் ஒருவரின் கதை இது. அதை, அவரைச்சுற்றிப் படிந்திருக்கும் பல பேரின் கதைகளைக் கொண்டே கட்டமைக்கப்பட்டிருக்கிறது. முதல் பாதி முழுக்க தனித்தனி இழையாக ஒவ்வொருவரின் கதைகள் ஒவ்வொரு அத்தியாயமாக வருகின்றன. பின்பாதியில் அத்தனைக்கும் குறுக்கில் இழைகளைக் கோர்த்து அவை பின்னிப் படரும் புள்ளிகளைப் பார்வைக்கிடுகிறார் யுவன். மெல்ல கட்டவிழ்கிறது ஒரு பெரும் மனிதரின் கதை. அவரைச் சுற்றி அவரைப் பற்றி அறிந்த அவரால் ‘வெளியேற்றப்பட்ட’, அவரின் அற்புதங்களைச் சந்தித்த மனிதர்களின் கதைகளால் நெய்யப்பட்டிருக்கிறது.

பயணங்களில் சந்திக்கும் சுவாரஸ்யமான பக்கத்து இருக்கைக்காரரின் பேச்சு போல மிக இயல்பாய் பயணிக்கிறது ஒவ்வொருவரின் கதையும். தொடர்ந்து வந்த நிறைய கதாபாத்திரங்களினால் எனக்கு ஒரு சில இடங்களில் யாரின் கதை என்னது என பிற்பாதியில் நினைவு கொள்வதற்குத்தான் கொஞ்சம் சிரமமாக இருந்தது. இன்னும் பயிற்சி தேவைப்படுகிறது போலும்.

40வயதைக் கடந்த ஒருவர் ஒரு கல்யாணத்திற்காய் தனியாய் பயணம் செய்கையில் சந்திக்கும் ஒரு நபரின் கதை அவரிடம் ஒரு மாற்றத்தைக் கொண்டுவருகிறது. மிகச் சராசரியாய் ஒரு எல்.ஐ.சி. முகவராய் இருந்து, திருமணம், இரண்டு குழந்தைகள், நாற்பது வயதில் ஒரு சொந்த வீடு என பெரும்பாலான வாழ்க்கையைக் கழித்த அவருக்கு தான் சந்தித்த நபரின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் மிக அதியசமாகவும் ஈர்க்கும்படியாகவும் இருக்கின்றன. அதன் பின்புலத்தில் இருப்பவர்களையும் அவர்களின் அனுபவங்களையும் அத்தனைப்பேரையும் இன்று சேர்க்கும் புள்ளியையும் தேடிச்செல்கிறார். இதுவே நமக்கு இரண்டாவது பாதியில் தான் புலப்படுகிறது.

ஒவ்வொரு கதைகளும் ஒவ்வொரு விதம். எத்தனை வட்டார வழக்குகள், பழக்கங்கள், மொழிகள், இடங்கள்! அவர் கேட்கும் கதையை நாமும் பக்கத்தில் இருந்து கேட்பது போன்ற உணர்வு. பக்கத்து வீட்டு மனிதர்களைப் போன்ற எளிமை, ஒவ்வொரு கதாபாத்திரத்தினிடமும். ஒவ்வொருவருக்கும் அவரவர்க்கான அனுபவங்கள் வேதமூர்த்தி என்ற பெரியவருடனானதே. அவர் இவர்களின் வாழ்வில் ஏற்படுத்திய தெளிவு, காட்டிய வழி, நிகழ்த்திய அற்புதம் என ஒவ்வொன்றும் ஒரு வகை.

ஒரு கதையில் தனக்குப் பெண்சீக்கு வந்ததாய்க் கூறி ஒரு வைத்தியரிடமிருந்து திரும்பி வருகிறான் ஒருவன். இனி வாழ்க்கையே அவ்வளவு தான் என நினைக்கிறான். வரும் பாதையில் தண்டவாளங்களைத் தாண்ட நேருகையில் ரயிலில் பாய்ந்து உயிர் விட்டுவிடலாம் என யோசிக்கிறான். எல்லாவற்றில் இருந்தும் இந்த உடம்புக்கு விடுதலை, உடம்புக்குத் தானே எல்லாம், உயிருக்கு ஏது எனக் கூறும் அந்த சில வரிகளில் மரணத்தின் ஒருவித வசீகரத்தை உணர்வது உண்மை.

மரணத்தின் பின், பிறப்பிற்கு முன்னான உலகம், ஜென்மங்கள், ஜீவசமாதி, பல தத்துவங்கள், அவர் நிகழ்த்தும் அற்புதங்கள் என இவற்றைப் போன்ற விஷயங்களில் பெரிதான நம்பிக்கை இல்லாத என்னைப் போன்ற ஒருவரையும் இயல்பாக சுவாரஸ்யமாகப் படிக்க வைத்ததே இந்நாவலின் வெற்றி எனக்கூறலாம். முக்கியமாக, முன்னுரை இல்லாத இந்த நாவலின் பின்னுரை கூறுவது, கூறப்பட்ட அத்தனை மாயநிகழ்வுகளும் உண்மை என்பதே!!

வெளியேற்ற‌ம் - யுவன் சந்திரசேகர்
உயிர்மை பதிப்பகம்
ஆன்லைனில் வாங்க‌:
http://www.uyirmmai.com/Publications/bookDetails.aspx?bid=256

இந்த பதிவை வெளியிட்ட
உயிர்மை - உயிரோசை'க்கு நன்றி.

Tuesday, March 8, 2011

இன்று மகளிர் தினம்!

எனக்குத் தெரிந்து சில ஆண்டுகளுக்கு முன்பாகத்தான் இங்கே பெண்கள் தினம் என ஒன்று இருப்பது பரவலாகத் தெரிய வந்தது. அதிலிருந்து அன்றைய தினம் அலைபேசி குறுஞ்செய்திகளும் மின்மடல்களும் அழைப்புகளுமான வாழ்த்துக்களுடனே நன்றாகத் தான் செல்கின்றன. பெண்கள் தினத்திற்கென பிரத்யேக விற்பனைகளும் வந்தாயிற்று. ஆடைகளிலிருந்து கணிப்பொறி வரை. தொலைக்காட்சி சிறப்பு நிகழ்ச்சிகள், அலுவலகத்தில் கொண்டாட்டங்கள், போட்டிகள் என அதற்கும் குறைவில்லை.

இதுவும் மேலை நாட்டுக் கலாச்சாரம் என கொடி பிடிப்பவர்களும், ந‌ம் நாட்டில் என‌ பெண்க‌ளுக்கு என்ன‌ ம‌ரியாதைக்குறைவு இருக்கிற‌து ? பிர‌தான‌ ந‌தியில் இருந்து பிர‌த‌ம‌ ம‌ந்திரியை இய‌க்குப‌வ‌ர் வ‌ரை பெண்க‌ள் தானே என‌ வாதிடுபவ‌ர்க‌ளும் இன்ன‌மும் என்ன‌ பெண்க‌ள், பெண்க‌ள் பிர‌ச்ச‌னை என்று பேச இருக்கிற‌து, இப்போது தான் எல்லாத் துறையிலும் வ‌ந்துவிட்டார்க‌ளே என‌ ச‌லித்துக்கொள்வ‌ர்க‌ளும் பெண்க‌ள் குறித்தான‌ பிர‌ச்ச‌னைக‌ளின் அல‌ச‌லை தொலைக்காட்சியில் எப்போதாவது காண‌ நேர்ந்தாலும் உடனே சான‌லை மாற்றிவிடுப‌வ‌ர்க‌ளும் இருந்துகொண்டு தான் இருக்கிறார்க‌ள்.

ஒரு புற‌ம், சென்ற நூற்றாண்டின் கடைசி பத்து இருபது வருடங்களுடன் ஒப்பிட்டாலே, மிக‌ மிக‌ அசாத‌ர‌ண‌மான‌ வ‌ள‌ர்ச்சியை காண‌முடிகிற‌து பெண்க‌ளிட‌ம். இன்னொருபுற‌ம், பெண்க‌ள் மீதான‌ வ‌ன்முறை நிகழ்வுகள் ஒவ்வொரு மூன்று நிமிட‌ங்க‌ளுக்கு ஒருமுறை நிக‌ழ்த்த‌ப்ப‌டுகிற‌து. ஏனிந்த‌ முர‌ண்பாடு. ந‌ட‌ப்ப‌தில் எதை ந‌ம்புவ‌து. எந்த செய்தித்தாளையேனும் எடுத்து வாசித்துப்பார்த்தால் எந்த மூலையிலேனும் பெண்கள் சாதித்த கதை தெரியலாம். பரவலாகத் தெரிவது என்ன என சற்றுப் பொறுமையாக புரட்டிப்பார்த்தால், எத்தனை எத்தனை சிக்கல்கள் பெண்ணாய் இருப்பது என்ற ஒரே காரணத்தினால்.

இன்று ஒரு நீதிமன்ற தீர்ப்பு. கோமாவில் இருக்கும் அறுபது வயதாகும் ஒரு மூதாட்டியை கருணைக்கொலை செய்ய நீதின்றம் மறுப்பு. அதிலென்ன சிக்கல்? நல்ல தீர்ப்பு தானே என யாரும் யோசிக்கும் முன்னரே தொடர்கிறது அவரின் கதை. நர்ஸ்‘ஆக வேலை செய்து வந்த அவர் இருபத்துமூன்று வயதில் ஒரு துப்புரவுத் தொழிலாளியால் பாலியல் வன்முறைக்கு ஆளாகினார்.அவர் எதிர்க்கக்கூடாது என்பதற்காக நாய்களை கட்டும் இரும்புச் சங்கிலியில் அவர் கழுத்தை நெரித்திருக்கிறான். மூளைக்குச் செல்லும் நரம்புகள் பாதிக்கப்பட்டு இத்தனை வருடங்களாக கோமாவில் கழிக்கும் அவரது வாழ்க்கையின் அவலம். கருணைக்கொலை செய்ய விண்ணப்பிக்கும் அளவு சென்றுவிட்ட அவரின் சுற்றுப்புறம். அவர் தொலைத்தது என்ன? இத்தனை வருட வாழ்க்கை. பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படும் பிஞ்சு பெண் குழந்தைகளைப் பற்றி சற்று சிந்தித்துப் பார்த்தால், அவர் வருங்காலம் எத்தனைக் கேள்விக்குறியானது எனப்புரியும். மனரீதியாக அவர்களின் பாதிப்புகள் மட்டுமே அதன்பின் அவர்களின் வாழ்க்கைமுறையை பெரிதும் பாதித்துவிடுகின்றன.

வெளியே தெரிவது மிகச்சில. யாரும் அறியாமல் நிகழ்த்தப்படும் கொடூரங்கள் பலப்பல. யாரும் அறியாமல் சிந்தப்படும் பெண்களின் கண்ணீர்த்துளிகளும் பல கோடி.மேற்கூறிய கடைநிலை வக்கிரங்கள் இல்லாமல், மிகச் சாதரணமாக நடந்துகொண்டிருக்கும் நிகழ்வுகள் பற்றி தனியே சொல்லவேண்டுமா என்ன ? பொது இடங்களில் உரசும் உடல் ரீதியான செயல்களில் இருந்து மிக நுணுக்கமான உணர்வு ரீதியிலான செயல்கள் வரை, ஒன்றா இரண்டா ?

படித்தவர் படிக்காதவர் என்ற பாகுபாடே இல்லாமல் பொருந்தக்கூடிய சில விஷயங்கள் இவை. எத்தனைப் பெண்கள் “இதெல்லாம் தேவையில்லை உனக்கு” என்ற தன் குடும்பத்தின் கருத்துக்காக தங்கள் ஆசையை கனவுகளை நொறுங்கக்கொடுத்து வந்திருக்கிறார்கள். எத்தனைப் பெண்களின் நட்புவட்டங்கள் கணவனுக்குப் பிறகு காணாமலேயே போய்விடுகின்றன. எத்தனை பெண்களின் சின்ன சின்ன ஆசைகள் கூட அநாவசியமாய் அவசியமற்றதாய் ஒதுக்கப்படுகின்றன. பெண்களாய் இருப்பதன் ஒரே காரணத்தினால் இளக்காரமாகப் பார்க்கப்பட்ட தருணங்கள் எத்தனை. அவளை நோக்கி வீசப்படும் கேள்விகள் எத்தனை. துளைக்கும் பார்வைகள் எத்தனை. அத்தனையையும் விட்டுக்கொடுத்து அவர்களையும் புன்னகையுடன் அரவணைத்துச் செல்லும் பெண்கள் எத்தனை பேர்.

நேற்றுப்படித்த அஜயன்பாலாவின் கட்டுரை ஒன்று மிகப்பாதித்தது. ஆடை விஷயங்களில் இன்னமும் கட்டுப்பாடுகளைச் சந்திக்கும் பெண்களின் மனநிலை. அரைகுறையாய் செல்வது சுதந்திரமா என வாதிக்க நான் இங்கே விரும்பவில்லை. இது அதைப் பற்றினதும் இல்லை. மிகச்சாதாரண ஒரு விஷயத்திற்குக்கூட ஒரு வரைமுறைகளின் கீழ் அடக்கியே வைக்கப்பட்டிருக்கும் பெண்ணின் மனநிலையிலிருந்து படித்துப் பாருங்கள் புரியும்.

குளிரூட்டப்பட்ட எல்லா வசதியும் நிறைந்த ஒரு அலுவலகத்தின் கணினியில் இதனை தட்டச்சுவது மிகச்சுலபமானது தான். அத்தனையையும் அனுபவித்து/ அதையே வாழ்க்கையாகக் கொண்டு/ அதிலிருந்து மீண்டு/ குடும்பத்திற்காக உழைத்து/ அதற்கு மேலும் ஒரு நிலையை அடைந்திருக்கும் பெண்கள் அனைவருக்கும் நெகிழ்ச்சியான பெருமிதமான பெண்கள் தின வாழ்த்துகள். இன்னமும் நாம் வாழும் சமுதாயம் பெண்களுக்கு என சில புரிதல்களைக் கொள்ளும் பெண்கள் தினமும் வருங்காலத்தில் வரும் என்ற நம்பிக்கையோடு.

வாழ்த்து தெரிவித்த‌ அனைத்து ந‌ண்ப‌ர்க‌ளுக்கும் ந‌ன்றிக‌ள். உங்க‌ள் வாழ்த்துக‌ளின் பின்னால் உள்ள‌ அன்பும் பெண்கள் மீதான மரியாதையும் வ‌ருங்கால‌த்தை ந‌ம்பிக்கையூட்டுவ‌தாய் ஆக்குகின்றன.

வெளியிட்ட கீற்று.காம்’க்கு நன்றி.

Saturday, February 12, 2011

காதல் மட்டும் புரிவதில்லை !!! [காதலர் தினப் பதிவு] பகுதி 1


உலகத்தில் உயிரினங்கள் எத்தனையோ கோடி. ஒவ்வொன்றும் ஒரு வகை ஆனாலும் அத்த‌னைக்கும் அடித்தளம் காத‌ல். காம‌த்தின் இறுகிய‌பிடியை மென்மையாய் மாற்றும் ம‌ந்திர‌ம். பொங்கி வரும் அன்பின் பிரவாகம். ஹார்மோன்களின் கிளர்ச்சி. அகமோ புறமோ தேவைகளைப் பூர்த்தி செய்யும் வடிகால். தத்தளித்து தவிக்கையில் கிடைக்கும் ஒரு கிளை. இன்னொரு தாய்ம‌டி. அத்த‌னை உற‌வுக‌ளின் ஒரே வ‌டிவ‌ம். நம்மையே செதுக்கிக்கொள்ள‌ கிடைக்கும் உளி. சிற‌க‌டித்து ப‌ற‌க்க‌ ஒரு இற‌க்கை. ஏறிக்கொண்டே இருக்கும் போதை.

பாலையில் விழும் ம‌ழைத்துளி. பல வண்ண வானவில். பாளமாய் வெடித்து இருக்கும் நில‌த்தில் துளிர்விடும் விதை. தேவ‌தைக் க‌தைக‌ளின் கொடுக்கப்படும் வ‌ர‌ம்.தாய்மையைப் போல் தூய்மையான, தன்னலமற்ற அன்பு படர்ந்து விரியும் வற்றாத காட்டருவி. இரவின் மழை. தவழும் குழந்தையின் நடை பழகல். மழலைச் சிரிப்பில் வடியும் எச்சில். முதல்முறையாய் கடற்கரையைப் பார்ப்பவனின் குதூகலம். பிரபஞ்சத்தின் பிரம்மாண்டம்.

திருடித் தின்ற‌ அடிக்க‌ரும்பின் இனிப்பாய் நாக்கில் தித்திக்கும் க‌ள்ள‌த்த‌ன‌மான‌ இனிப்பாய்த் தான் முத‌லில் ஆர‌ம்பிக்கிற‌து காத‌ல். காத‌லிக்க‌ப்படுபவருக்கே கூட‌த் தெரியாம‌ல்! காத‌லிப்ப‌வ‌ருக்கே உரிய பிரத்யேக அனுப‌வ‌ம் அது. ப‌ல‌ப்ப‌ல‌ ப‌ரிணாம‌ங்க‌ளையும் ப‌டிம‌ங்க‌ளையும் கொண்டு க‌ண்க‌ளைக் க‌ட்டிக்கொண்டு புதிர்பாதையில் விளையாடும் க‌ண்ணாமூச்சி ஆட்ட‌ம். அதுவரையில் முன் இருந்தவற்றை எல்லாம் ஒரு ஒரத்தில் தூக்கி எறிந்துவிட்டு அது மட்டுமே விஸ்வரூபம் எடுத்து செய்யும் வன்முறை.

உற‌வுக‌ளை வேண்டாத‌வ‌ர்க‌ளாக்கி ந‌ண்ப‌ர்க‌ளை தேவையான‌வ‌ர்க‌ளாக்கி காத‌ல‌னை/காத‌லியை தெய்வ‌ம்/தேவ‌தை ஆக்கிடும் ஓர் உன்ம‌த்த‌ நிலை. ஒரு புன்னகையில், ஒரு வார்த்தையில், ஒரு தொடுத‌லில், ஒரு ஆறுத‌லில், ஒரு கைப்பற்றலில், ஒரு ஊட‌லில்/கூட‌லில் இன்னொரு பிற‌ப்பைத் த‌ரும் மெய்ஞ்ஞான‌ம். ஒரு க‌த‌விலேயே சொர்க்க‌த்தையும் ந‌ர‌க‌த்தையும் காட்ட‌க்கூடிய‌ ஒரு மாய‌க்க‌ண்ணாடி. மொட்டு ஒன்று ம‌ல‌ர்வ‌தின் ரக‌சிய‌ம்.

திடீரென‌ வாழ்விற்கு வ‌ண்ணம் சேர்க்கும் நிற‌க்குடுவை. சுவை கூட்டிடும் ஒரு அற்புத‌ நிலை. ர‌ச‌னைக‌ள் சேர்க்கும் அனுப‌வ‌ம். அழ‌கிய‌ல். ந‌ம்மையும் ந‌ம் சுற்றுப்புற‌த்தையும் இய‌ற்கையையும் இசையையும் க‌லையையும் கூடுத‌ல் அழ‌காக‌ காட்டும் வ‌ண்ண‌த்திரை.

என்ன சொல்லி புரியவைப்பது காதல் என்பது என்ன என்று. வார்த்தைகளில் விளக்க முடியாததொரு பிரபஞ்சத்தின் உணர்வு. அதை நகையாடுபவர்களோ புரியாதவர்களோ, அதை கண்டிப்பாய் அனுபவிக்காதவர்களே!

எந்த‌ வ‌கையிலும் குற்ற‌ம் சொல்ல முடியாத‌ அடிப்ப‌டையான‌, அத்த‌கைய தூய்மையான உணர்வை, உற‌வை இந்த‌ காதல‌ர் தின‌த்துக்காக‌ ம‌ட்டுமே கூறுவதில் உட‌ன்பாடு இல்லையெனினும் இதை ஒரு கார‌ண‌மாய்க் கொண்டேனும் எழுதுவதில் ம‌கிழ்ச்சியே.

இவ்வ‌ள‌வு சொல்லிய‌ பிற‌கும் க‌ண்க‌ளில் விழுந்த‌ மெல்லிய‌ துரும்பாய் உறுத்தும் காதல் என்ற‌ பெய‌ரில் நம்மைச் சுற்றி ந‌‌ட‌க்கும் கூத்துக்க‌ளும் முட்டாள்த‌ன‌ங்க‌ளும்.

தொட‌ர்கிறேன்.

Wednesday, January 5, 2011

பாஸ்! நீங்க ஒரு வில்லேஜ் விஞ்ஞானி பாஸ்! [காரெக்டர்ஸ்]

இவர் தாங்க நம்ம இளம் வில்லேஜ் விஞ்ஞானி. கிராமத்துல பொறந்து வளர்ற, 8-12 வயசுக்குள்ள உள்ள ஒரு சின்னப்பையன். படிக்கிறதக்கூட மனப்பாடம் பண்ணாம புரிஞ்சுகிட்டு தனக்கு தெரியுற மாதிரி கொடுக்கிற புள்ள. ஒரு ஆராய்ச்சியாளர் ஆகணும்’கிறது தான் அவர் கனவு ( அது என்ன ஆச்சு’ன்னு கடைசியில பாக்கலாம்) கண்ணுலயே அவ்வளவு கனவையும் கேள்விகளையும் ஆர்வத்தையும் தேக்கி வச்சுருந்த அந்த வயசுல அவர் பண்ணினத எல்லாம் நினைச்சா ஆச்சரியமா இருக்கு.
இப்படித்தான் ஒரு தடவ, வீட்டுக்கு பின்னாடி தண்ணி தேங்கி இருந்திருக்கு. அதுல இருந்து கொசுவா கிளம்பிருக்கு. இதப் பாத்த நம்ம இ.வி.வி. யோசிச்சு இருக்காரு. எப்புடி கொசு வருது’ன்னு. சரி தண்ணி இருக்கதால அது மேல வந்திருது. அத சாகடிக்கணும்’னா என்ன பண்ணலான்னு தீவிரமா யோசிச்சதில மண்ணெண்ணெய் தெளிச்சு விடலான்’ற முடிவுக்கு வந்தாரு. அத சும்மா தெளிச்சா நாம எப்புடி விஞ்ஞானி? மறுபடியும் யோசிச்சதுல அண்ணன் செண்ட் பாட்டில் ஞாபகம் வந்திச்சி.அய்ய்! அதுல மண்ணெண்ணெய்ய ஊத்தி சும்மா புஸ்ஸு புஸ்ஸுனு அடிச்சா? செண்ட் பாட்டில உடனெ எடு. மேல மூடிய கழட்டு. மூளை அப்படியே கட்டளைகள் கொடுத்திட்டே இருக்கு. மண்ணெண்னையா ஊத்தியாச்சு. அடிச்சி பாத்தா வரல!! இப்ப என்ன பண்றது..என்னவா இருக்கும்’னு யோசிச்சதுல உள்ள அழுத்தம் பத்தலைன்னு கண்டுக்கிட்டாரு.

அழுத்தத்திற்கு என்ன பண்ணாலான்னு பாத்தா, சைக்கிள்கடைக்கார மாமா இருக்காரே. அவர்கிட்ட இருந்து காத்தடிக்கிற பம்ப்ப வாங்கிட்டு வந்து காத்தடிச்சா சரியாயிடும்’னு முடிவு பண்ணி, செண்ட் பாட்டில்’ல அழுத்துற மூடிய திறந்து உள்ள இருக்க அந்த சின்ன குழாய்’ல காத்தடிக்க முயற்சி பண்ணினாரு. அடிக்க முடியல. எப்புடி கனெக்‌ஷன் கொடுக்கிறது? வால்ட்யூப் வைச்சு அடிச்ச உடனே, பாட்டில அழுத்தம் வந்திருச்சு. ஆனா பம்பில அழுத்தம் அதிகமாகி, வால்வு உள்ளாற போயி, மண்ணெண்ணெய் உள்ள போயி க்ரீஸ் எல்லாம் எடுத்திருச்சு. அதுக்கப்புறம் காத்தே அடிக்க முடியல. பம்பு தான் புஸ்ஸு புஸ்ஸு’னுது. அமைதியா போயி அத இருந்த இடத்தில வச்சிட்டு எஸ்கேப்பு ஆகி வந்திட்டாரு.

அவங்க ஊரில, ஆஸ்பத்திரி’யில இருந்து உபயோகப்படுத்தின சலைன் பாட்டில், அந்த ட்யூப், ஊசி, சிரிஞ்ச், மருந்து பாட்டில் எல்லாம் ஒரு இடத்தில போட்டுருப்பாங்க. அந்த சலைன் பாட்டில் மேல அவருக்கு அவ்வளவு காதல். அத எடுத்திட்டு வந்து, அந்த வட்டத்தை திருகினா எப்படி தண்ணி வேகத்தை கூட்டவும் குறைக்கவும் முடியுது’ன்னு பாத்துக்கிட்டேயிருப்பாரு. அத வச்சு என்ன பண்ணலான்னு யோசிச்சு அவர் கண்டுபுடிச்சது தான் சொட்டு நீர் பாசன முறை. தான் வளர்த்த செடிக்கு பக்கத்துல இருந்து தண்ணி ஊத்த முடியலயே’ன்ற வருத்தத்த தீர்த்துக்கிறதுக்காக, இந்த சலைன் பாட்டில செடிக்கு மேல தொங்கவிட்டு, தண்ணிய சொட்டு சொட்டா இறங்கற மாதிரி பண்ணி விட்டுட்டாரு, பள்ளிகூடத்திலேர்ந்து திரும்பி வர வரைக்கும் தண்ணி கிடைச்சுட்டே இருக்கணுமாம் செடிக்கு!

இவருக்கு வாங்கிக்கொடுத்த வாட்ச்சும் கடிகாரங்களும் பட்ட பாடு இருக்கே! ஒரு குருவி வெளிய வந்து கத்துமே அந்த கடிகாரம் வாங்கி மாட்டிருந்தாங்க பள்ளிகூடத்துல. அது எப்புடி வெளியே வந்து கத்துது’ன்ன்மு அவரு மண்டைகுள்ள பிறாண்டிக்கிட்டே இருந்திச்சு. இரண்டு மூணு தடவை ஏறி பாக்க முயற்சி செஞ்சப்ப எல்லாம் ஏறும் போதே பிடிபட்டதுனால அந்த கடிகாரம் தப்பிச்சிது. அந்த தாகத்த அவரு தன் கடிகாரங்கள் கிட்டயே தீர்த்துக்க ஆரம்பிச்சாரு. கால்குலேட்டர் வாட்ச்’அ அக்கு வேறா ஆணி வேறா கழட்டி பொட்டலம் கட்டி வச்சிருந்திருக்காப்ல. என்னடா இப்படி பண்ணி வச்சிருக்க’ன்னு கேட்டா, அதுல எப்புடி அலாரம் அடிக்குது’னு செக் பண்ணேன்’னு பதில் வந்திருக்கு. இன்னொரு வாட்ச்சு’ல இருந்த ஸ்க்ரூ எல்லாம் இவரு ஆர்வம் தாங்காம கொஞ்ச கொஞ்சமா லூசா ஆகி கழண்டே விழுந்திருக்கு. அத சரி பண்ண ஸ்க்ரூ’வுக்கு பதிலா ஒரு கம்பிய உள்ள செருகி கட்டிட்டு ரொம்ப நாளா அட்சஸ் பண்ணிட்டு இருந்தாரு

இவரும் இவர் கும்பலும் சும்ம சுத்திட்டு இருந்த் நேரத்தில ஒரு தடவை ஓணான் மாதிரி கொஞ்சம் பெருச்சா ஒண்ணை பாத்து, அத சுருக்கு கயிறு போட்டு எப்டியோ புடிச்சு பள்ளிகூடத்துக்கு எடுத்திட்டு வந்திருக்காங்க. அத சயின்ஸ் வாத்தியார்க்கிட்ட காமிக்கவும், ‘அட, இது உடும்புடா’ன்னு ஆச்சரியப்பட்டு, இத பாடம் பண்ணி வைக்கலாம்’, நம்ம லேப்’லயே. குளோரோபார்ம் குடுத்து மயங்கவைச்சு, 10% ஃபார்மால்டிஹைட் ஊத்தி அதுக்கேத்த மாதிரி பாட்டில்ல போட்டு மூடி வைச்சுடுங்க டா’ன்னு தெரியாத்தனமா பாடம் பண்றத சொல்லிகொடுத்திட்டு போயிட்டாரு, அதுக்கப்புறம் லேப் நிரம்பி வழியுற அளவுக்கு ஓணான், வெட்டுக்கிளி, பச்சோந்தி’ன்னு சிக்குறத எல்லாம் பாடம் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. ஒரு ஹார்லிக்ஸ் பாட்டில் மிஞ்சல வீட்ல.

இந்த தண்ணித்தொட்டி’ல ஒரு குழாய போட்டு உறிஞ்சி விட்டா இன்னொரு பாத்திரத்துல எடுக்கிறத (பள்ளிக்கூடத்தில Siphon விதி சொல்லிகொடுக்கிறதுக்கு முன்னாடியே) கண்டுபுடிச்சது’ல இருந்து இந்த ஆராய்ச்சிக்கும் ஒரு அளவே இல்லாம இருந்தது. பாத்ரூம்’க்கு மேல ஒரு அண்டா’வ வச்சு அதுல தண்ணிய ஏறி ஏறி ஊத்தி, குளிக்க குளிக்க ஆட்டோமேட்டிக்’கா தண்ணி நிரம்ப வழி பாத்திருக்காரு. தண்ணிய மேல ஏறி ஊத்தி கம்பெனிக்கு கட்டுபடியாகல’ன்றதுனால நேர கிணத்துலயே நீளமான குழாய விட்டு உறியோ உறி’ன்னு உறிஞ்சிருக்காரு. முடியாம மூச்சு திணறுனதுனால அந்த முயற்சி தோல்வியடைஞ்சுது.

ஒரு நாள் டீச்சர் இங்க் ரிமூவர் பாட்டிலக் கொடுத்து சிலதை அழிச்சு தர சொல்லியிருக்காரு அவரு நோட்ல. அப்ப அதெல்லாம் வாங்கறதுக்கு ரொம்ப அதிகப்படியான விஷயம். நம்ம இங்க் ரப்பர்’ல எச்சியத்தொட்டு வரட்டு வரட்டு’னு அழிச்சு பேப்பரையே கிழிச்சிட்டு இருந்த் காலம். ஆசையா அழிச்சிட்டு இருந்தப்ப தான் அந்த வாசனை அவரை ஏதோ பண்ணிச்சு. ரொம்ப பரிச்சயப்பட்ட வாசனையா இருக்கே’னு ரொம்ப யோசிச்சு, அட, நம்ம ப்ளீச்சிங் பவுடர்’னு பல்பு எரிஞ்சுது. வீட்டுக்குப் போன உடனே ப்ளிச்சிங் பவுடர தேடி எடுத்து கொஞ்சமா தண்ணியில கரைச்சு நோட்டில தொட்டு அழிச்சா, அட, போகுது!! இதான் நம்ம இங்க் ரிமூவரா!! அத கிடைச்ச மருந்து பாட்டில்’ல எல்லாம் அடைச்சு, சாக்பீஸ் டப்பா’ல வச்சு எல்லா க்ளாஸ்’லயும் விக்க ஆரம்பிச்சிட்டாரு. இதுக்கு டெமோ பீஸ் வேற! அழிச்சு அழிச்சு இவர் கையே பொத்து போகுற நிலைமை வந்தத பார்த்திட்டு எல்லாருக்கும் தொட்டு அழிக்க இலவசமா பஞ்சும் கொடுத்தாரு. இந்த விஞ்ஞானிக்குள்ள ஒரு தொழிலதிபரும் இருந்திருக்காரு பாருங்களேன்!

இவ்வளவு ஆர்வக்கோளாறா திரிஞ்ச புள்ள இப்ப என்ன பண்ணுது’ன்னு கேட்டீங்கன்னா, சாப்ட்வேர் இஞ்சினியர் ஆகி ராவும் பகலுமா பொட்டியத் தட்டிகிட்டு இருக்காரு. கண்ணுல தூக்க கலக்கமும் மண்டை’ல குழப்பபுமா.

பி.கு : பொருத்த‌மான‌ ஓவிய‌ங்க‌ள் செய்து கொடுத்த‌ தோழி அனிதா மற்றும் ஏற்பாடு செய்த‌ ந‌ண்ப‌ருக்கும் நேச‌ங்க‌ளும் ந‌ன்றிக‌ளும்

Related Posts with Thumbnails