Thursday, November 25, 2010

பெண்களுக்கு இழைக்கப்படும் வன்முறை ஒழிப்பிற்கான நாள் - என் பார்வையில்!

Nov 25 - சர்வதேச அளவிலான, பெண்களுக்கு இழைக்கப்படும் வன்முறை ஒழிப்பிற்கான நாள் இன்று.

இது நிச்சயமாக பெண்ணியம் பேசும் பதிவு அல்ல. மனிதம் பேசும், பெண்ணை சக மனுஷியாய் மதிக்க, உலக அளவில் பெண்களுக்கு இழைக்கப்படும் வன்முறை ஒழிப்பிற்கான நாள் குறித்த எனது கருத்துக்களையும் பதிய விரும்புகிறேன். அவ்வளவே.


எதற்காக இப்படி ஒரு நாள் தேவைபட்டது, அதுவும் உலகம் முழுதான ஒரு பொதுப்பிரச்சனையாக இது காணப்பட்டதன் காரணங்கள் என்ன ? இந்த நாட்டைப் பார் என எங்கேயும் உதாரணம் காட்டமுடியாத நிலை ஏன்?

உலகெங்கும் நான்கில் ஒரு பெண் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறாள் என்கிறது புள்ளிவிவரம். இது குறித்தான உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையும் UNICEF’ன் அறிக்கையும் அவ்வளவு சீக்கிரம் படித்து முடிக்க முடியாது. அப்படி என்ன தான் வன்முறை இழைக்கப்படுகிறது என்று பார்த்தால் நம்ம ஊரில் பஸ்ஸில் இடிப்பதிலிருந்து காதலிக்கமறுத்ததால் ஆசிட் ஊற்றுவது வரையான ஈவ் டீஸிங் நடவடிக்கைகள் மட்டுமல்ல. ஒரு பெண்ணின் வாழ்க்கை முழுவதுமே வன்முறையின் மெல்லிய சுவடுகளாவது படர்ந்திருக்கிறது என திட்டவட்டமாக, பல நாடுகளில் மேற்கொண்ட ஆராய்ச்சிகளின் முடிவாக சொல்லப்படுகிறது.

பொதுவாக இத்தகைய வன்முறைகளை நான்கு வகையாக பிரிக்கலாம்.

1. உடலியல் வன்முறை 2. பாலியல் வன்முறை 2. உளவியல் வன்முறை 4. பொருளாதார ரீதியிலான வன்முறை

எவ்வகையிலான வன்முறைகளை எந்தெந்த பருவங்களில் அவள் சந்திக்க நேரிடுகிறது என்று நான் பதிவை நீளமாக்க விரும்பவில்லை. விரும்பவர்கள் கூகிளில் தேடவும் அல்லது தனிமடல் இடவும், விரிவான அந்த அறிக்கைகளை பகிர்ந்து கொள்கிறேன்.

எனக்குள் எழுந்த சில கேள்விகளுடன் இந்த பதிவை முடித்துக் கொள்கிறேன். பெரும்பாலும் எளிய மற்றும் மத்திய வர்க்க குடும்பங்களுக்காகவே எழுப்பப்பட்டது போலிருக்கிறது, எனினும் -

1. எத்தனை கிராமங்களில் இன்னமும் பெண் சிசுக் கருக்கலைப்பு/பெண் சிசுக்கொலை நடைபெறுகிறது? குப்பைத் தொட்டிகளில் கிடைக்கப்பெறும் குழந்தைகளில் பெரும்பாலும் பெண் குழந்தைகளாகவே இருப்பதன் காரணம் என்ன ?

2. எத்தனை குடும்பங்களில் பெண்களை அடிப்பதை சாதாரணமாக எடுத்துக்கொள்கிறோம்? எத்தனை ஆண்கள் கோபத்தில் அவள் அத்தனை முயற்சி எடுத்து சமைத்த உணவுத்தட்டுகளை எறிகின்றனர்? பின் அதை சுத்தம் செய்ய முனைகின்றனர் ?

3. இன்னமும் பல மிடில் கிளாஸ் மற்றும் அதற்கு கீழான குடும்பங்களில் ‘பெண்’ என்ற ஒரு காரணத்திற்காகவே பல விஷயங்கள் மறுக்கப்படுவது உண்மையா?

4. மிகப்பிரச்சனையான மணவாழ்க்கையில் இருந்துகொண்டு அதிலிருந்து வெளியே வரத்துடிக்கும் பெண்ணிற்கு, அவளின் உடல்/மன உளைச்சல்கள், பிரச்சனை என்னவென ஆராயாமலே ’கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்’ என்பதையே கொஞ்சம் மாற்றி ‘கொஞ்சம் விட்டுக்கொடுத்துப் போம்மா’ என்பதையே அறிவுரையாக சொல்லும் சமூகம், சமூக அந்தஸ்து இன்னமும் இருக்கிறதா ?

5. எத்தனை ஆண்கள் மனைவியின் விருப்பம் இருப்பின் மட்டுமே கலவுகின்றனர் ?

6. எத்தனை பெண் குழந்தைகள் பாலியல் ரீதியாக தொல்லைக்கு உள்ளாக்கப்படுகின்றனர்? அதில் எவ்வளவு நமக்கு தெரிய வருகிறது ?

7. விதவைகளையும் விவாகரத்து ஆனவர்களையும் என்ன மாதிரியான மரியாதையில்/தரத்தில் இந்த சமூகத்தில் வைத்திருக்கிறோம்?

8. பெண்களையும் சக மனுசியாய் நினைக்க ஆண்களுக்கு குழந்தையிலிருந்தே கற்பிக்கிறோமா ?

9. அவள் 'Weaker Sex'ஆக இருக்கும் ஒரே காரணத்தினால் அவளை துன்புறுத்த தைரியம் வருகிறதா ? வீட்டுக்குள் தன் மனைவியை அடிக்கும், தங்கையை அடக்கும் ஒரு ஆண், ஒரு லோக்கல் தாதாவிடமோ அல்லது ஏதேனும் அநியாயத்தைத் தட்டிக் கேட்கத் துணிவார்களா ?

10. எத்தனை ஆண்கள் போலீசாகவும் IAS, IPS போன்ற அதிகாரம் நிறைந்த பெண்கள் தங்கள் மனைவியாக வேண்டும் என்று விரும்புகிறார்கள் ? தங்களை விட அறிவிலும் அழகிலும் அந்தஸ்த்திலும் அதிகாரத்திலும் மேம்பட்ட ஒரு பெண்ணை மனைவியாக ஏற்றுக்கொண்டு எந்தவித தாழ்வுமனப்பான்மையோ ஈகோ’வோ இல்லாமல் வாழமுடிந்திருக்கிறதா ?

11. என்ன வேண்டுமானலும் செய்துவிட்டு, கோபத்தில் செய்துவிட்டேன் எனவோ, அவளும் அப்படி செய்திருக்கக்கூடாது எனவோ தங்கள் செயலுக்கு வருந்தாமலோ உணராமலோ நியாயம் கற்பிப்போர் எத்தனைப் பேர் ?

12. இதையெல்லாம் பற்றி பேசினாலே உண்மையில் அதற்குள்ளிருக்கும் வலிகளையும் வேதனைகளையும் அறியாமல்/ அறியும் விருப்பமும் இல்லாமல்/ அறிந்தும் அறியாதது போலவும் ‘வேற வேலையே இல்ல இவங்களுக்கு’ என்று அலுத்துக்கொண்டு போகிறவர் எத்தனைப் பேர்?

நாங்கள் வளர்ந்துவிட்டோம், இதெல்லாம் அந்த காலம் என்று சொல்கிறீர்களா? உங்களை மதிக்கிறேன். ஆனாலும், IT முன்னேற்றம், கல்பனா சாவ்லா, கிரண் பேடி இவர்கள் எல்லாம் காட்டும் உலகத்தினை விடவும், நமக்கென வீட்டுக்குள் ஒரு தனி உலகம் இருக்கிறது. தனி சமுகம் இருக்கிறது. இன்னமும் IT'யோ கல்பனா சாவ்லா’வோ தெரியாத கிராமங்கள் இருக்கின்றன. நான் பெரும்பான்மை’யை முன்வைத்துப் பேசுகிறேன். சிறுபான்மையாக’வாவது இவை எல்லாம் நடப்பதில் மகிழ்ச்சியடைய வேண்டுமா எனவும் புரியவில்லை. தீர்வுக்கான கருத்துக்கள் இருந்தால் பகிருங்கள்.

டிஸ்கி : இதுக்கு மேலயும், என்னது பெண்களாவது வன்முறையாவது! எந்த காலத்துல இருக்கீங்க நீங்க. IT எவ்வளவோ டெவலப் ஆகியிருக்கு, பெண்கள் என்ன வேலையெல்லாம் செய்ய ஆரம்பிச்சிட்டாங்க. ஆட்டோ ஒட்டுறது’ல இருந்து விண்கலம் வரைக்கும், 33% சதவிகிதம் இட ஒதுக்கீடு கொடுத்திருக்கோம். இன்னும் என்ன சும்மா பெண்ணியம் பேசிக்கிட்டு’ அப்படி’ன்னு நீங்க கேட்கலாம். தப்பில்லை. அப்படி கேட்டீங்க’ன்னா ஒண்ணு பாவம் உங்களுக்கு விவரம் பத்தலையா இருக்கும், அப்பாவியா இருப்பீங்க. இல்லை’ன்னா நான் புடிச்ச முயலுக்கு மூணு கால்’ன்னு விதண்டாவாதம் பேசுற கோஷ்டி. அதுவும் இல்லையா முளச்சு மூனு இல விடல, நீ எல்லாம் என்ன பேச வந்திட்ட, பழம் தின்னு கொட்ட போட்ட நாங்க சொல்றத கேட்டுக்க, புரியுதா’ன்னு ரொம்ப பழக்கமான பாரம்பரிய அடக்குமுறை. அட அதுவும் இல்லையா பரவலா பேச(சாட)ப்படுற ஆணாதிக்க சாயல் இருக்கக்கூடிய சாத்தியக்கூறுகளும் இருக்கு’னு சொன்னா கோபப்படுவீங்க. அப்படியெல்லாம் இல்ல இதுவரைக்கும் எந்த பொண்ணையும் நான் தரக்குறைவா பாத்ததில்ல நடத்தினதில்லை, பொண்டாட்டியா இருந்தாலும் கைநீட்டி அடிச்சதில்லை. அவ விருப்பமில்லாம தொட்டதில்லை’னு சொல்லுங்க. தெய்வம் நீங்க. இது கண்டிப்பா உங்களுக்கு இல்லை .
Sunday, November 21, 2010

ஆப்பி பர்த்டே !!!

இன்றும் ஒரு நெருங்கிய நண்பரின் பிறந்தநாளை மறந்துவிட்டேன். வழக்கமானது தான். நாட்களை நினைவில் வைத்துக்கொள்வதில் மிக பலவீனமாகத் தான் இருந்துகொண்டிருக்கிறேன். ஒன்றும் சொல்வதற்கு இல்லை. பிறந்த நாள் வாழ்த்துக்கள் அனுப்பியோ சொல்லியோ நான் ஆச்சரியப்படுத்தியிருக்கலாம். இப்படி மறந்துவிட்டு அசடு வழிகிறேனே என்று என் மேலேயே கோபமாக வந்தது. என் பிறந்த நாள் அன்று கண்டிப்பாய் வாழ்த்து சொல்வார்களென்று நினைத்திருந்த சிலர் இதே போல் அடியோடு மறந்த போது எழுந்த லேசான ஏமாற்றமும் நினைவுக்கு வந்தது.


ஒரு காலத்தில் பிறந்த நாள் வருவதற்காய் வருடம் முழுதும் காத்திருந்த நினைவுகள் மெல்ல விரிந்தது. தீபாவளிக்கு ஒன்றும் பிறந்த நாளுக்கு ஒன்றுமாய் இரண்டு புதுத்துணிகள் கிடைக்கும் வருடத்திற்கு. மிக முக்கியமான நாட்களில் ஒன்று. அது இல்லாமல் புதுத்துணிக்கேற்ப பாசிகளும் வளையல்களும் கூட, எப்போதாவது செருப்பு போன்ற விஷயங்களும் சேர்ந்துகொள்ளும். பத்து பதினைந்து நாட்களுக்கு முன்பே பரபரப்பு தொற்றிக்கொள்ளும். கிடைக்கும் எல்லாவற்றையும் வாங்கியாக வேண்டுமே. என்ன வாங்குவது எப்படி வாங்குவது என்ற சிந்தனையிலேயே தூக்கம் கூட சரியாக வராது. எப்படியும் எல்லாம் நான் தேர்ந்தெடுப்பதும் கிடையாது, சமயத்தில் அப்பாவே வாங்கி வந்து விடுவார். அதற்கே இந்த நிலை!

மார்கழி மாதத்தில் வரும் பிறந்தநாள். நினைத்தாலே அதிகாலை குளிரும் தெருக்கோடியில் ஒலிக்கும் கோயில் பாடல்களும் மெல்ல வருடிச்செல்லும். இருள் விலகாத அதிகாலையில் அம்மா எழுப்பும் போதே வாழ்த்துடன் ஆரம்பிக்கும். இதமான வெந்நீரில் தலைக்குக் குளித்து, புதுத்துணியின் வாசம் நெஞ்சம் நிறைய உள்ளிழுத்து அணிந்து, மற்ற புதுசுகளையும் சூடி ஈரப்பின்னல் போட்டு அப்பாவைப் போய் எழுப்பி ‘ஹேப்பி பர்த்டே’ சொல்ல வேண்டும். ஆமாம். அப்பாவுக்கும் எனக்கும் ஒரே நாளில் தான் பிறந்தநாள். அவரிடமிருந்து பதில் வாழ்த்தும் முத்தமும் பெற்ற பின் பெருமிதமும் உற்சாகமும் பீறிட்டு கிளம்ப பள்ளி செல்ல வேண்டியது தான். வகுப்பாசிரியர் வரும் வரை காத்திருக்கமுடியாமல் காத்திருந்து. வந்தவுடன் எழுந்து ஒடி, கையோடு எடுத்து சென்றிருக்கும் சாக்லேட் டப்பாவினை நீட்டி அவரிடமும் வாழ்த்துகள் வாங்கிய பின் முக்கியமான தருணத்துக்குள் அடியெடுத்து வைக்க வேண்டியிருக்கும்.

எல்லாருக்கும் முன் நிற்க வைத்து ‘ஹேப்பி பர்த்டே டு யூ’ பாடுவார்கள். கூச்சமும் சிரிப்பும் சந்தோஷமுமாய் முதல் வரிசையில் தொடங்கி அனைவருக்குமாய் சாக்லேட் விநியோகம் ஆரம்பிக்கும். சிலர் கைகொடுப்பார்கள். சிலர் வாய் வார்த்தையில். சிலர் நன்றியுடன் முடித்து கொள்வர். வெகு சிலர் அதுவும் இல்லாமல் தன் பங்கை மட்டும் எடுத்துகொள்வதும் நடக்கும். இந்த சாக்லேட் விஷயமும் ஒன்றும் சாதரணமானதில்லை. அது தான் அன்று நம் அந்தஸ்த்தின் அடையாளம்! காட்பரீஸ்’இல் இருந்து புளிப்பு மிட்டாய் வரையிலான ரேஞ்சில் நாம் எங்கே இருக்கிறோம் என்பதும் முன்பே தீர்மானிக்க படவேண்டிய ஒன்று. ஒரு மாதிரி நியூட்ரின்‘ஆசை’ யில் வந்து முடியும் நம் தீர்மானம்.(புளிப்பு மிட்டாய்க்கு கொஞ்சம் மேல் :)) அதை சாப்பிட்டபின் சுற்றியிருக்கும் காகிதத்தை ரப்பர் போல இரண்டு பேர் இழுத்து விளையாடலாம். அதையும் ஒரு காரணமாகக் கொண்டு அதையே முடிவு செய்ய மனதை தேற்றிக்கொண்டிருக்கிறேன்.

மாலையில், அப்பா ஏதாவது கேக் வாங்கி வந்திருப்பார். எங்களுக்கே எங்களுக்காய் ஒரு எக்ஸ்க்ளூசிவ் ஆனால் மிக எளிய ஒரு கொண்டாட்டம். பின்னர் அக்கம்பக்கத்தினர், உறவினர் என்று ஒரு சுற்று நடக்கும். பெரியவர்கள் இருந்தால் காலில் விழுவதில் நம் பணிவுக்கு அளவே இல்லாமல் இருக்கும். கிடைத்ததை வசூல்(!) செய்துகொண்டு கொஞ்ச நாள் குஷியாக ஓடும். இவை இல்லாமல், அன்று பள்ளியிலும் வீட்டிலும் தனி சலுகை கிடைக்கும். எதற்கும் திட்டோ அடியோ விழாது. ஏன் வருடத்திற்கு ஒரு முறை தான் வருகிறது என வருத்தமும் அடுத்த பிறந்தநாளிற்கான காத்திருப்புமாய் தான் அன்றைய நாள் முடியும்.

எனது ஐந்தாவது பிறந்தநாளுக்கு ஒரு வாரம் முன் அமைந்தது, அப்பாவின் முதல் சிங்கப்பூர் பயணம். மனதே இல்லாமல் கிளம்பிய அப்பா அங்கே இறங்கியவுடன் அம்மாவுக்கு எழுதிய கடிதம் இன்னமும் இருக்கிறது. புதுத்துணி, சாக்லேட் பற்றி கூட அதில் எழுதியிருப்பார்.! அப்பா அன்று இல்லாத குறை எனக்கு தெரியக்கூடாது என்பதற்காய் நண்பர்கள் சிலர் வந்து கேக் வெட்ட சொல்லி கொண்டாடியது இன்னமும் நினைவு கூரும் நிகழ்வு.. இன்று அவர் இல்லாமல் எத்தனையோ பிறந்தநாட்கள் கழிந்துவிட்டன. எப்படியும் என்னை வந்தடையும் ஒவ்வொரு வாழ்த்திலும் அப்பாவின் புன்னகை நினைவில் நிழலாடுவதை நினைத்துப் பார்க்கிறேன்.

அந்த வயதில் தன் பிறந்தநாளே தெரியாது என சொன்ன சிலரை ஆச்சரியத்தோடு பார்த்திருக்கிறேன். அதெப்படி பிறந்தநாளே தெரியாமல், பிறகெப்படி கொண்டாடுவீர்கள் என்ற எனது கேள்விக்கு நமக்கென்ன கொண்டாடவேண்டியிருக்கு என அவர்களின் அந்த சலிப்பு புரிவதற்கு பல வருடங்கள் வேண்டியிருக்கிறது. வர வர பிறந்தநாள் வந்தாலே ஒரு வயது ஏறிவிடுகிறது ,இன்னும் என்னவெல்லாம் பண்ணவேண்டியிருக்கிறது என்றெல்லாம் தான் யோசிக்கத் தோன்றுகிறது. எனக்கு இன்னிக்கு ’ஆப்பி பர்த்டே’ என்று வாயெல்லாம் பல்லுடன், புதுத்துணியும் வரும் பொடிசுகளைப் பார்த்தால் பொறாமையாக இருக்கிறது.

இந்த பிறந்தநாளை மறந்த விஷயத்திற்கு வருவோம். எத்தனைப் பேரின் பிறந்தநாளை நினைவு வைத்திருக்கிறேன் என கணக்கெடுத்தால் என் டெபாசிட் காலி. இன்னமும் என் பிறந்தநாளன்று தவறாமல் வாழ்த்தும் மிக நெருங்கிய சிலரின் பிறந்தநாளே தெரியாமல் இருக்கிறேன் என்பது அதைவிடவும் வெட்கக்கேடு. இந்த அவமானத்தோடே இது வரை நான் வாழ்த்தாமல் போன அத்தனை பேருக்கும் என் வாழ்த்துக்களையும் நேசங்களையும் பரிமாறிக்கொள்கிறேன். என்னை திருத்திகொள்ள முழுமுயற்சி எடுப்பேன் என்றும் இதன் மூலம் உறுதியளிக்கிறேன்!!! :) :) :)

Related Posts with Thumbnails