Thursday, August 30, 2012

The PITSTOP...பயணங்கள் குறித்த எனது ஆழ்மன பிம்பங்களை மேலும் மெருகேற்றிச் சென்றது சமீபத்தில் பார்த்த திரைப்படம் ஒன்று. வெகு நாளாகவே எனது பயணங்கள் பற்றி ஏதாவது எழுத வேண்டும் என மேலோட்டமாய் நினைத்திருந்ததை மிக ஆழமாக யோசிக்க வைத்தது. பயணங்களின் மீதான எனது ஆர்வத்தின் ஆதியை தேடி பயணிக்க வைத்தது. ஒரு படைப்பாக அப்படத்தைப் பற்றி பகிர்ந்துகொள்ளலாம் என நினைத்ததை, அதைப் பற்றி மட்டும் பேசாமல், அது தூண்டிய அத்தனை எண்ணவோட்டங்களைப் பகிர்ந்து கொள்ளவும், எனது பயணங்கள் மற்றும் பயணங்கள் சார்ந்த அனைத்தையும் பகிர்ந்து கொள்ள ஒரு வடிகாலாய் இந்த பதிவை/தொடரை ஆரம்பிக்க வைத்தது. ஒரு நல்ல படைப்பின் குணாதிசியம் அது தானே! எவ்வளவு தூரம் இதை தொடர முடியும் என தெரியவில்லை எனினும் உற்சாகத்துடன் ஆரம்பிக்கும் ஒரு பயணத்தின் மனநிலையிலேயே இதையும் தொடங்குகிறேன்.

எல்லோருக்குமான பயணங்களின் முதல் சுழி இவற்றில் ஏதாவதில் இருந்து தான் ஆரம்பித்திருக்கும், சொந்த ஊருக்குச் செல்வது - திருத்தலங்களுக்குச் செல்வது - பள்ளி/குடும்ப சுற்றுலாக்கள் போன்றவை. . குடும்ப சுற்றுலாக்கள் எல்லாம் நமக்கு பழக்கமே இல்லை! பெரும்பாலான பள்ளி சுற்றுலாக்களுக்கு எனக்கு அனுமதி மறுக்கப்பட்டே இருந்து வந்திருக்கிறது அதன் பொருட்டே அவை மிகுந்த வசீகரமுடையதாய் இருந்தன. இடையில் நான் அழுதுபுரண்டு வாங்கிய சில அனுமதிகளில் தான் என் முதலும் முக்கியமுமான பயணங்கள் தொடங்கின. பால்பண்ணையை பார்வையிடச் சென்றதிலிருந்து கோனே அருவி வரை,  வாழ்வின் முக்கிய ஆசீர்வாதங்களில் ஒன்றாக நான் பயணங்களைத் துதிக்கத் தொடங்கினேன். துரதிர்ஷ்டவசமாக சில வருடங்களுக்கு முன்பு வரையிலும் என் பெரும்பாலான பயணங்கள் என்பது சொந்த ஊருக்குச் செல்வது மட்டுமே. அந்த பேருந்து பயணமும் இரவின் குளுமையும் முகத்தில் அறையும் காற்றை உள்ளிழுத்தையும் எங்கள் ஊரைச் சுற்றி சுற்றி வந்ததையும் பயணக்கனவுகளையும் மட்டும் வைத்துக் கொண்டு “ஐ லவ்வ்வ்வ்வ் டு ட்ராவல்” என இண்டர்வியூக்களில் படம் போட்டிருக்கிறேன். (நானும் எவ்வளவு நாளைக்குத்தான் “ரீடிங் புக்ஸ், ஹியரிங் மியூசிக்” என்ற ரெக்கார்டைத் தேய்ப்பது. தூங்குவது தான் என் பொழுதுபோக்கு என்று கூட ஒன்றில் சொன்ன ஞாபகம். இவை எல்லாம் இல்லாமல் நான் என்ன செய்ய ஆசைப்படுவேன் என நானே சிந்தித்ததன்(?!) விளைவு தான் மேற்கூறியது.)

ஆனால் கடந்த சில வருடங்களாக நான் நினைத்திருந்த மாதிரியான பயணங்களை செய்வதற்கு வாய்ப்பமைந்தது. இத்தனை வருடங்களாக நான் மொத்தமாக பயணித்ததில் கடந்த சில வருடங்களில் செய்தது தான் 80-90 சதவிகிதம் இருக்கும்! சொற்பமாக இருந்தாலும் என்னைப் பொறுத்தவரை அவை முக்கியமானவைகளே. பார்த்தது ஊரளவு, பாராதது உலகளவு என்ற உண்மையை உணர்த்தி என் கனவுகளையும் பல அனுபவப்பாடங்களையும் மேலும் வளர்க்கவே அவை உதவியிருக்கின்றன. பயணம் பிடிக்காத மனிதர்களும் இருப்பார்களா? ஒரு வயது கூட நிரம்பாத குழந்தைகள் கூட ’டாட்டா’ செல்வதற்கு காட்டும் உற்சாகத்திற்கு என்ன காரணம் ? எனப் பல கேள்விகளை எழுப்பியிருக்கின்றன. ஒவ்வொரு பயணமும் ஒரு அனுபவம். அவை பயணம் செய்பவனை மேம்படுத்துகின்றன. இயற்கையோடான உறவை புதுப்பிக்கின்றன. ஒரு குழுவாக செல்லும் போது அவர்களின் உறவு பலப்படுத்தப்படுகிறது. சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு நம்மை மாற்றிக்கொள்ள பக்குவப்படுத்துகின்றன. அப்படிக் கிடைத்த பயண வாய்ப்புகளில் சில இடங்களில் நாட்கணக்கில் சோறுதண்ணியில்லாமல் கூட உட்கார்ந்திருக்கலாம் என ஒரு மாதிரி எக்ஸ்ட்ரீமாகக் கூடத் தோன்றியிருக்கிறது.  எதையும் ரொம்ப உணர்வுபூர்வமாக அணுகினால் இப்படியிருக்குமா என என்னென்னவோ யோசித்திருக்கிறேன். இந்த படம் பார்த்ததுக்கு பின்பு எல்லாமாக சேர்ந்து ஏதேதோ நினைவுகள் அலைமோதி அன்றிரவு தூங்கமுடியவில்லை.

அந்த படம் தெ வே. வாழ்வின் சில மிகப் பெரிய அர்த்தங்களை தன் நீண்ட பயணங்களில் தேடும் மகன்.  தன் தொழிலும் கோல்ப் கோர்ட்டுமான மேல்தட்டு வாழ்க்கையிலேயே திருப்தியாயிருக்கும் கண் மருத்துவரான அப்பா. மகனை புரிந்து கொள்ள எடுக்கும் முயற்சிகளில் பெரிதான வெற்றி காணாதிருக்கிறார். ஒரு வாக்குவாதத்தில் இதுதான் தான் தேர்ந்தெடுத்த வாழ்க்கை என சொல்லும் அவருக்கு, "வாழ்க்கை தேர்ந்தெடுப்பதற்காக இல்லை. வாழ்வதற்கு" என சொல்லி முடிக்கிறான் (You don't chose a life. You live one.) துரதிர்ஷ்டவசமாக தான் மேற்கொண்ட ஒரு முக்கிய, கிறிஸ்தவர்களின் புனிதப்பயணங்களில் ஒன்றான சான் டியாகொ(ஸ்பெயின்) செல்வதற்கான வழியில், புயலில் சிக்கி பயணத்தின் ஆரம்பத்திலேயே இறக்கிறான். மகனின் சடலத்தைப் பெற்றுக் கொள்ள அப்பா ஸ்பெயின் வருகிறார். அவன் பொருட்களை ஒவ்வொன்றாக பார்க்கிறார். அவனுடைய பாஸ்போர்ட், ஹெட்லாம்ப், கைத்தடி, பை என பார்க்க பார்க்க அவன் அவரை கேட்ட கேள்விகள் சில நினைவுக்கு வருகின்றன. அது “வாழ்க்கையில் என்ன கண்டிருக்கிறீர்கள் ? உலகத்தை நீங்கள் பார்க்கவேயில்லையே ? இந்தியா, நேபால், இமயமலை, மொராக்கோ, எகிப்து, பப்பூவா கினியா? உங்கள் கூண்டிலிருந்து முதலில் வெளியே வாருங்கள்”. (இதில் பெரும்பாலானவை என்னுடைய ஹிட்லிஸ்டில் இருப்பவை!)

தன் மகனை புரிந்து கொள்வதற்கான கடைசி சந்தர்ப்பமாக அத்தருணத்தில் தன் வேலை வீடு என அனைத்தையும் ஒத்தி வைத்துவிட்டு அந்த பயணத்தை தான் முடிக்கவேண்டுமென நினைத்துக் கிளம்பும் அவரின் பயணம் தான் முழுக்கதையும். தம் வழக்கப்படி அல்லாமல் அவன் உடலை எரித்து, அச்சாம்பலை வழியெங்கும் முக்கிய இடங்களில் தூவுகிறார். சக பயணிகள் எதற்காக வருகிறார்கள், அவர்களுக்கிடையே என்ன மாதிரியான உறவு, முடியும் போது அவர்களின் மனநிலை என மீதிப்படம் ஒரு அழகிய சிறுகதை. அது நடந்தே கடக்கும் ஒரு பாதை. படம் முழுவதும் அதுவும் ஒரு முக்கிய கதாப்பாத்திரம், இல்லை இல்லை கதாநாயகனும் அதுவே! அப்படி ஒரு அழகு, ஏற்கனவே பிரான்ஸ் கிராமங்களைக் குறித்து படித்தது போதாதென்று ஸ்பெயின் கிராமங்களை வேறு இதில் பார்க்கவும், கிளைமாக்சில் அவர்கள் சென்றடையும் அந்த தேவாலயத்தின் பிரமிப்பும் கட்டிடக்கலையின் அழகும் நுணுக்கமும் - படம் முடியும் தறுவாயில் நானும் ஒரு முறை கட்டாயம் அங்கே செல்வேன் என உறுதிசெய்து கொண்டேன். ( இது மாதிரி எத்தனை?!)

படம் பார்த்து முடித்த, அதன் பாதிப்பு முழுதாக அகலாமல் இருந்த ஒரு இரண்டு நாட்களில் பாலோ கொயெலோ’வின் பில்கிரிமேஜ் நாவலைப் படிக்க ஆரம்பித்தேன். சத்தியமான என்னால் நம்பமுடியவில்லை. அதிலும் சான் டியாகொ!!! அப்பயணத்தை முடித்த பின்பு தான் அவர் இந்த நாவலையே எழுதியிருக்கிறார். அவரைப் பற்றி படத்தில் வரும் எழுத்தாளரும் சகபயணியுமான ஒருவர் சொல்லும் படி ஒரு காட்சி இருந்தது. அதை நான் சரியாக கவனிக்கவில்லை. ஆனாலும் அப்படத்தைத் தொடர்ந்து இந்நாவல் - பாலோ நாவல்களில் வருவது போலவே, "இது தற்செயல் இல்லை. நீ சான் டியாகோ போகவேண்டும் என்பது நிச்சயிக்கப்பட்டிருக்கிறது(?!!) இது ஒரு குட் ஓமன்!!!" என என் மனசாட்சி கூவியது. பாலோ...பார்க்கலாம் :)

(மேலும் பயணிக்கலாம்..)

Related Posts with Thumbnails