Friday, April 2, 2010

எனக்கேயான அப்பா!!

அப்பா...

பொதுவாகவே பெண்குழந்தைகளுக்கு அப்பா என்றாலே அலாதிப் பிரியம் தான். அதுவும் என் போன்ற ஓற்றையாய் பிறந்த
பெண் குழந்தைகளுக்கு கேட்க வேண்டுமா - அப்பா காட்டும் வழிந்தோடும் பிரியமும் கொடுக்கும் செல்லமுமே போதுமே - கொஞ்சம் கூடுதலாய் பிரியம் செலுத்த...

அப்பா -

ஆறடிக்கும் சிறிது அதிகமான உயரமும் ஒல்லியான தேகமும் முன்புறம் லேசான வழுக்கையும், சுருள் முடியும் அடுக்கி வைக்கப்பட்ட பல்வரிசையும் நல்ல நிறமும் கொண்ட அழகர். அவர் பளீரென்ற வெள்ளை கதர் வேட்டி சட்டையில் ஒரு கையில் வேட்டியின் நுனியை பிடித்துக் கொண்டு இறங்கி நடந்தாரென்றால் எதிரில் வருபவர் ஒரு நிமிடமாவது பார்க்காமல் போக முடியாது..இன்றும் அப்பா தெருவில் போகும் அழகினைப் பார்த்து கொண்டே இருக்கலாம் என்று சொல்லும் அதே தெருவில் வசிக்கும் சினேகிதிகளின் அம்மாக்களாவது(?!!) அப்பாக்களாவது சில நேரம் சொல்லும் போது மிகப் பெருமையாய் இருக்கும் எனக்கு..

அப்பா -


நான் பிறந்த நிமிடத்தில் என்னை ஏந்திய போது, தன் தாயே மறுபடி பிறந்திருப்பதாய் நினைத்து மகிழ்ந்த அப்பா...

சில மாதங்களில் அம்மை நோய் கண்டு கண்களெல்லாம் சொருகிப்போய் கவலைக்கிடமான நிலைமையில் மருத்துவமனையில் சேர்த்து, அவசரத்தில் எதுவும் எடுத்து வராததில், குழந்தையைக்(என்னை) கிடத்த தன் வேட்டியில்
பாதியைக் கிழித்து கொடுத்துச் சென்ற அப்பா...

உயிருடன் ஒரு நாலு நாள் தான் தாக்குப்பிடிப்பேன் என்று மருத்துவர்கள் கையை விரித்துவிட்ட நிலையில், எதையோ எடுப்பதற்காக வீட்டுக்குச் சென்று வெறுமையாய் இருந்த தொட்டிலைப் பார்த்து, பக்கத்து வீட்டுக்காரர்கள் வந்து சமாதானப்படுத்தும் அளவிற்கு, வெடித்து கேவிய அப்பா...

பின்னாளில் ஏதும் துடுக்காக நான் எதிர்த்து பேசும் போதெல்லாம் - ”நாய்க்குட்டி, பேச மாட்ட, உன்னையெல்லாம் பொழக்க வச்சி இப்டி வளத்துக் கொண்டுவந்திருக்கம்ல” என்று சிரித்துக் கொள்ளும் அப்பா..

பல்கெட்டுப் போய்விடும் என்று அம்மா சாக்லேட் மட்டும் வாங்கித்தராததினால், சாக்லேட் தவிர வேறு எதுவும் வாங்கித்தராதது மட்டுமில்லாமல், பெரிய சாக்லேட் பாரினை வாங்கிக்கொடுத்து விட்டு“அம்மா வரதுக்குள்ள சீக்கிரமா சாப்டுரு” என்று அவசரப்படுத்தும் அப்பா.....

பள்ளித் தேர்வு முடிவுகள் வருட விடுமுறையில் வீட்டுக்கு வரும் போது, அப்பா வரும் வரை காத்திருந்து அந்த கவரை நீட்டும் போது, கவரைப் பிரித்துக் கூட பார்க்காமல், புன்னகையுடன் கன்னம் கிள்ளி முத்தமிடும் அப்பா...

எனக்கு ஒரு ஏழு வயது இருக்கும் போது, கருத்தரங்கம் ஒன்றிற்காய் தான் வெளியூர் செல்ல நேரிட்ட போது அங்கிருந்து என்ன வேண்டும் என்று என்னைக் கேட்ட போது, அப்போது தான் :பேரி டேல்ஸ் படிக்க ஆரம்பித்திருந்த கிறக்கத்தில் “ஏதாவது புக்ஸ் வாங்கிட்டு வாங்கப்பா” என்று நான் முதல்முறையாய் கேட்டதை எதிர்பாராமல், முகம் கொள்ளா மகிழ்ச்சியுடன் அம்மாவைப் பார்த்து “பார்த்தியா, எம் புள்ள என்ன மாதிரியே” என்று சிலாகித்த அப்பா...

தான் கல்லுரி நாட்களில் மாவட்ட அளவில் பரிசுகள் பெற்றதை எனக்கு அடிக்கடி ஞாபகபடுத்திக் கொண்டு, எனக்கு செஸ் விளையாட்டு சொல்லி கொடுத்து, சில நாட்களில் அடிக்கடி நாங்கள் விளையாட ஆரம்பிக்க, அவரை நான் தோற்கடித்த முதல் விளையாட்டில், தான் தோற்றுவிட்டோம் என்று தெரிந்த அந்த நிமிடத்தில் கண்களில் பெருமிதம் பொங்க, கட்டியணைத்த
அப்பா...


எப்போதும் பள்ளிக்குச் செல்லும் போது நன்றாகத் தூங்கிக் கொண்டிருப்பவரை லேசாய் தட்டி எழுப்பி சொல்லிவிட்டு கிளம்பும் போதெல்லாம் பாதி கண்கள் திறந்து கன்னம் தடவி முத்தமிட்டு வழியனுப்பும் அப்பா...

அப்படிதான் ஒரு நாள் ஏதோ அவசரத்தில் சொல்லாமல் நான் கிளம்பிவிட, திடும்மென இடைவேளையில் பள்ளிக்கு வந்து நின்று, “அப்பாகிட்ட சொல்லாமயே வந்திட்டல” என்ற அப்பா... சும்மா வராமல் வகுப்பில் உள்ள அனைவருக்கும் கொடுக்கும் படியாய் ஒரு சாக்லேட் கவருடன்..அனைவருடனும் அதை பகிர்ந்து கொள்ளும் போது திடீரென எதுக்கு சாக்லேட் என எழுந்த கேள்விகளுக்கு சும்மா தான் என சொன்னாலும் அதன் பின் இருந்த ஒரு பத்து வயது சிறுமிக்கான அந்த
மகிழ்ச்சியையும், பெருமிதத்தையும் வார்த்தைகளில் உணர்த்த முடியுமா எனத் தெரியவில்லை...

ஏம்ப்பா நான் குள்ளமாவே இருக்கேன், உங்கள மாதிரி வந்திருக்கலாம்ல என வருத்தப்படும் போதெல்லாம், அப்பா திடீர்னு தான் வளந்தேன்டா பதினஞ்சு வயசுக்கு மேல, நீயும் அதே மாதிரி வளந்திடுவ பாரு’ன்னு ஆறுதலுக்காய் சொல்லும் அப்பா..

ஒரு காலகட்டங்களில், தோழர்களைப் போல் உட்கார்ந்து அரட்டை அடிக்கும் பொழுதுகளில் நண்பர்களுடனான தன் சாகசங்களையும் தன் காதல் கதைகளையும் சிலாகித்து விவரிக்கும் அப்பா... நான் செத்தா இவங்க எல்லார்க்கும் சொல்லியனுப்பனும்’ன என்று அடிக்கடி ஞாபகப்படுத்திக் கொண்டேயிருக்கும் அப்பா...

‘மெய்பொருள் காண்பது’ எவ்வளவு முக்கியமென உணர்த்திக்கொண்டே இருக்கும் அப்பா.. எனது எவ்வளவோ மூடப்பழக்கங்களைத் தகர்த்தெறிந்த அப்பா...

பெரிதாக வருமானங்களோ, வசதிகளோ இல்லாத நிலையிலும் மன்னரைப் போல, பாரதியைப் போல கனவுகளில் பெரிதாய் வாழ்ந்த அப்பா...
பக்கவாதம் வந்து அவரை மொத்தமாய் உருக்குலைத்து கட்டிப்போட்ட போதும் மனதளவில் நிமிர்ந்து நின்ற அப்பா..தன் தன்னம்பிக்கையையோ, தன்மானத்தையோ ஒரு போதும் தளரவிட்டதில்லை அவர்...

திடீரென உடல் நிலை சிறிது மோசமாகி பக்கத்தில் இருந்த ஒரு சின்ன நர்சிங் ஹோம்’ல் சேர்க்க, அன்றிரவு முழுதும் வைத்திருந்து அடுத்த நாள் காலை ஜீ.எச்’க்கு கொண்டு போக சொல்லிவிட, என்னை பார்க்க வேண்டுமென்று அழைத்து, கையைப் பிடித்துக் கொண்டு ‘நல்லா படிக்கணும்’ன, அம்மாவ ரொம்ப தொந்தரவு செய்யக்கூடாது’ என எனக்கான கடைசி வாக்கியம் பேசிய அப்பா....

ஜீ.எச்’சில் சேர்த்த அன்றிரவு தன் உயிர் போகும் முன், அருகில் இருந்த சித்தப்பாவிடம், ‘புள்ளயப் பாத்துக்கடா’ என்பதையே அனைவருக்குமான கடைசி வாக்கியமாய் விட்டுச் சென்ற அப்பா...

இன்று நானிருக்கும் மனுஷியாய் என்னை செதுக்கிய அப்பா...இப்படி நான் இருப்பதை பார்க்காமலே சென்று விட்ட அப்பா...

அப்பா...அப்பா..அப்பா.....இன்னமும் எழுத எழுத வந்து கொண்டேயிருக்கும் நினைவுகளைத் தந்து சென்ற அப்பா...

எந்நேரத்திலும் எனக்குள் இருந்த அவருக்கான பிரியத்தை - அது அவரால் உணர்ந்துக் கொள்ளப்பட்டது தான் என்றாலும், பெரிதாக வெளிக்காட்ட முடியாமலே தான் போயிருக்கிறது இன்று வரை.....இங்கு நான் நினைவு கூர்ந்த விஷயங்கள் அனைத்தும், பிரியமான அப்பாவைக் கொண்ட அனைவராலும் உணரப்பட்ட, அறியப்பட்ட விஷயங்களாக இருந்திருக்கக்கூடும். எனினும் அப்பாவுக்கான எனது அன்பின் ஒரு வெளிக்காட்டலாகவும் அவரிடம் இருந்து நான் பெற்றுக்கொண்ட அனைத்திற்கும் நெகிழ்ச்சியான ஒரு நன்றியாகவும் அவரின் இந்த 14’ஆம் வருட நினைவு நாளில், இந்த பதிவை சமர்ப்பிக்கிறேன்.

32 comments:

Thekkikattan|தெகா said...

அருமையான நினைவோடை. ஒரு மகளின் விசும்பல்களும், பாசமும் அப்படியே பட்டவர்த்தனமாக வெளிப்படுகிறது. ஒவ்வொரு தகப்பனும் ஆசைப்படும் பெண் குழந்தை!

தோழி said...

deyyyyy, vaarthai varalada :(. romba azhaga eluthirukke. unga appa irunthiruntha padichu padichu poorichu poi irunthirupparu. great

ஆயில்யன் said...

உள்ளார்ந்த அன்பின் வெளிப்பாடு நெகிழ்ச்சியான பதிவாக்கியிருக்கிறது! எண்ணங்களினூடே எட்டிப்பார்க்கும் அப்பா பற்றிய ஆளுமைகள்!

அன்பு,பாசமும் கொண்ட உள்ளங்களுக்கு பிரிவு என்பது கிடையாது! ஆசிர்வதித்துக்கொண்டிருப்பார்கள் ஏதோவொரு இடத்திலிருந்துக்கொண்டு....!

தம்பி... said...

*

முத்துகுமார் கோபாலகிருஷ்ணன் said...

என்ன சொல்வது என்று தெரியவில்லை.. மிக நெகிழ்ச்சியான கணங்களை கொடுத்த பதிவு.. அப்பா என்றொரு மனிதனை ஒரு மகன்/மகள் புரிந்து கொள்ளும் கணம், புரிந்ததை பகிரிந்து கொள்ளும் மனம் - மிக அற்புதமானது.. இந்த பகிர்தலுக்கும், உணர்வுகளுக்கும் நன்றி..

தோழி said...

Photos came out well dear.

Prasanna said...

ippo ungala ninaichu unga appa kandippa santhosapaduvar. Romba santhoshapaduvar. Enakkum vera enna solrathunnu theriyala.. aana romba nalla eluthirukeenga. keep it coming

ஜெரி ஈசானந்தன். said...

Stunning and Speechless.

மலர்நேசன் said...

அழகு......தாயுமாகிய தந்தைக்கு தமிழ் வீச்சம் கொண்ட அழகு தமிழ்மாலை ....

chitravel said...

அருமையான பதிவை தந்தமைக்கு நெகிழும் நன்றி!
தங்கள் தகப்பன் - ஆசான் நல்லாசியோடு என்றென்றும் - வாழ்க வளமுடன்!

kutipaiya said...

தெக்கி - நன்றி,உணர்வுகளை அழகாய் புரிந்துகொண்டமைக்கு.. அவரும் ஒவ்வொரு பெண்குழந்தையும் ஆசைப்படும் தகப்பனாகத் தான் இருந்திருக்கிறார் கடைசி நிமிடம் வரையிலும்..

kutipaiya said...

தோழி - நன்றி.. ஒரு வேளை அவர் இருந்திருந்தால் இப்படி எழுதியிருக்கமாட்டேனோ என்றெல்லாம் கூட யோசிக்க தோன்றுகிறது சில நேரங்களில் :(

kutipaiya said...

ஆயில்யன் - கண்டிப்பாக..அந்த நம்பிக்கை இருக்கிறது..மிக்க நன்றி - மிக ஆறுதலான வார்த்தைகளுக்காக.

kutipaiya said...

தம்பி - “*”க்கு நன்றி...

முத்துகுமார் கோபாலகிருஷ்ணன் - உணர்வுகளுக்கு நன்றி...

பிரசன்னா - நன்றி...

ஜெர்ரி - நன்றி...

மலர்நேசன் - நன்றி..

சித்ரவேல் - வாழ்த்துக்களுக்கு நன்றி...

ரிஷபன் said...

இரவு தினசரி லேட்டாய் திரும்புகிறேன்.. தற்செயலாய் உங்கள் பதிவு.. என் அலுவலக மூட் மாறி அப்படியே உணர்வின் ஆளுமைக்குள்.. அப்பா.. அப்பா.. என்று என்மனதும் தேம்பும் சத்தம்.. அற்புதமாய் எழுதி இருக்கிறீர்கள்.. அடிமனசின் வெளிப்பாடாய்.. நாம் மனசளவில் இன்னமும் குழந்தைகள்தான் என்று அவ்வப்போது நிரூபித்து விடுகிறோம்.. இல்லையா..

kutipaiya said...

ரிஷபன்,

//நாம் மனசளவில் இன்னமும் குழந்தைகள்தான் என்று அவ்வப்போது நிரூபித்து விடுகிறோம்.. இல்லையா..//

நிச்சயமாக..என்றும் நம் பெற்றோரின் முன், நாம் குழந்தைகள் தானே..

உணர்வு பூர்வமான பின்னூட்டத்திற்கு நன்றி...

ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...

ரொம்பவும் நெகிழ்வான பதிவு! படித்து முடித்ததும் ஒரு நொடி கண்களை மூடி அப்படியே உட்கார்ந்திருந்தேன்!!!

Anonymous said...

migavum arumai. en appavin ninaivil karainthu vitaen.

kutipaiya said...

ராமமூர்த்தி,
மிக்க நன்றி.. அனுபவித்து படித்திருக்கீங்க’னு தெரியுது..

அனானி
ரொம்ப நன்றி...

Toto said...

உங்க‌ நினைவுக‌ளை ரொம்ப‌ உண‌ர்வுபூர்வ‌மா ப‌கிர்ந்த‌தை ஒரு சாதார‌ண‌ க‌ட்டுரையா ப‌டிச்சு முடிச்சு ம‌ற‌க்க‌ முடிய‌லைங்க‌. Excellent !

Anonymous said...

வாசித்த போது அழுதே விட்டேன். பதிவுலகில் பிரேக் எடுத்திட்டு இருக்கறேன். ஒரு நாள் என்ன தான் நடக்கிறது என்று பார்ப்போம் என்று எட்டிப்பார்த்தால் இந்த பதிவு கண்ணில் பட்டது. ரொம்ப கஷ்டமாயிடுச்சு. அப்புறம், எங்கப்பா Over qualified? இங்க மட்டும் என்னவாம். எல்லா அப்பாமாரும் over qualified தான். என்ன உங்கள மாதிரி சமத்து பொண்ணுங்க அமைதியா இருக்குறீர்கள். என்னை மாதிரி பிசாசுகள் அப்பாவை வச்சு ஓவர் அலப்பற பண்ணுகிறோம். :)

ஹேமா said...

சொல்ல வார்த்தைகள் வரவில்லை.
அழுதேவிட்டேன்.உங்களுக்குள் என்றும்
உங்களோடு இருப்பார் அப்பா.

Gopi Ramamoorthy said...

போன சனிக்கிழமைதான் அப்பாவுக்கு திதி. 16 ஆம் வருடம். அப்பா இல்லாத வலி ரொம்பவே அதிகம். எனக்கு இப்போ ராத்தூக்கம் போச்சு இந்தப் பதிவால

ராமலக்ஷ்மி said...

நெகிழ்வு.

ஒன்பது வயதிலே அப்பாவை இழந்த அனுபவம் எனக்கும்.

//திடும்மென இடைவேளையில் பள்ளிக்கு வந்து நின்று//

3 ஆம் வகுப்பில் ஹோம் வொர்க் செய்த நோட்டை வீட்டிலேயே மறந்து வைத்து விட்டு வந்து விட, அப்பா வகுப்புக்கு வந்து தந்து சென்றது நினைவுக்கு வருகிறது.

க. தங்கமணி பிரபு said...

என்ன சொல்ல......!படிக்கையில் அழுதேன்.மகனாய் - கற்பனையில் மகளாய் - என்னை மறந்து அழுதேன். மணமார்ந்த பதிவு இது!

radhika said...

Super ra irukku.

Muhammed Iliyaz Khan said...

ரொம்ப லேட்டா என் கண்ணில் பட்ட உங்களுடைய இந்த பதிவு என் உணர்வுகளை அப்படியே பிரதிபலித்த கண்ணாடியாகவே தெரிகிறது எனக்கு .. எனக்கு வேராய் இருந்தவரை நான் விழுதாய் தாங்க நினைத்தபோது காலன் கொண்டு சென்றது காலத்தின் கொடுமை தான்.. உங்களுடைய இந்த பதிவின் ஒவ்வொரு எழுத்தும் எனக்குள் ஏகப்பட்ட இணை நினைவலைகளை எழுப்பி என்னை கலங்கடித்து விட்டது ...

அப்புக்குட்டி said...

அப்பா என்ற மந்திர சொல் நம் (என்) வாழ் வின் பிரிக்க முடியா பந்தம்

Prabhakaran Govindarajan said...

touching one.....

vidhya said...

akka lov u so much...nothing can beat that words..

Annamalai MCA 1997 Batch said...
This comment has been removed by the author.
Haran said...

மனதை நெகிழ வைதது...படித போது என்னயும் அரியமல் என் கன்னில் இரு துலி....

Post a Comment

Related Posts with Thumbnails