Thursday, November 25, 2010

பெண்களுக்கு இழைக்கப்படும் வன்முறை ஒழிப்பிற்கான நாள் - என் பார்வையில்!

Nov 25 - சர்வதேச அளவிலான, பெண்களுக்கு இழைக்கப்படும் வன்முறை ஒழிப்பிற்கான நாள் இன்று.

இது நிச்சயமாக பெண்ணியம் பேசும் பதிவு அல்ல. மனிதம் பேசும், பெண்ணை சக மனுஷியாய் மதிக்க, உலக அளவில் பெண்களுக்கு இழைக்கப்படும் வன்முறை ஒழிப்பிற்கான நாள் குறித்த எனது கருத்துக்களையும் பதிய விரும்புகிறேன். அவ்வளவே.


எதற்காக இப்படி ஒரு நாள் தேவைபட்டது, அதுவும் உலகம் முழுதான ஒரு பொதுப்பிரச்சனையாக இது காணப்பட்டதன் காரணங்கள் என்ன ? இந்த நாட்டைப் பார் என எங்கேயும் உதாரணம் காட்டமுடியாத நிலை ஏன்?

உலகெங்கும் நான்கில் ஒரு பெண் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறாள் என்கிறது புள்ளிவிவரம். இது குறித்தான உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையும் UNICEF’ன் அறிக்கையும் அவ்வளவு சீக்கிரம் படித்து முடிக்க முடியாது. அப்படி என்ன தான் வன்முறை இழைக்கப்படுகிறது என்று பார்த்தால் நம்ம ஊரில் பஸ்ஸில் இடிப்பதிலிருந்து காதலிக்கமறுத்ததால் ஆசிட் ஊற்றுவது வரையான ஈவ் டீஸிங் நடவடிக்கைகள் மட்டுமல்ல. ஒரு பெண்ணின் வாழ்க்கை முழுவதுமே வன்முறையின் மெல்லிய சுவடுகளாவது படர்ந்திருக்கிறது என திட்டவட்டமாக, பல நாடுகளில் மேற்கொண்ட ஆராய்ச்சிகளின் முடிவாக சொல்லப்படுகிறது.

பொதுவாக இத்தகைய வன்முறைகளை நான்கு வகையாக பிரிக்கலாம்.

1. உடலியல் வன்முறை 2. பாலியல் வன்முறை 2. உளவியல் வன்முறை 4. பொருளாதார ரீதியிலான வன்முறை

எவ்வகையிலான வன்முறைகளை எந்தெந்த பருவங்களில் அவள் சந்திக்க நேரிடுகிறது என்று நான் பதிவை நீளமாக்க விரும்பவில்லை. விரும்பவர்கள் கூகிளில் தேடவும் அல்லது தனிமடல் இடவும், விரிவான அந்த அறிக்கைகளை பகிர்ந்து கொள்கிறேன்.

எனக்குள் எழுந்த சில கேள்விகளுடன் இந்த பதிவை முடித்துக் கொள்கிறேன். பெரும்பாலும் எளிய மற்றும் மத்திய வர்க்க குடும்பங்களுக்காகவே எழுப்பப்பட்டது போலிருக்கிறது, எனினும் -

1. எத்தனை கிராமங்களில் இன்னமும் பெண் சிசுக் கருக்கலைப்பு/பெண் சிசுக்கொலை நடைபெறுகிறது? குப்பைத் தொட்டிகளில் கிடைக்கப்பெறும் குழந்தைகளில் பெரும்பாலும் பெண் குழந்தைகளாகவே இருப்பதன் காரணம் என்ன ?

2. எத்தனை குடும்பங்களில் பெண்களை அடிப்பதை சாதாரணமாக எடுத்துக்கொள்கிறோம்? எத்தனை ஆண்கள் கோபத்தில் அவள் அத்தனை முயற்சி எடுத்து சமைத்த உணவுத்தட்டுகளை எறிகின்றனர்? பின் அதை சுத்தம் செய்ய முனைகின்றனர் ?

3. இன்னமும் பல மிடில் கிளாஸ் மற்றும் அதற்கு கீழான குடும்பங்களில் ‘பெண்’ என்ற ஒரு காரணத்திற்காகவே பல விஷயங்கள் மறுக்கப்படுவது உண்மையா?

4. மிகப்பிரச்சனையான மணவாழ்க்கையில் இருந்துகொண்டு அதிலிருந்து வெளியே வரத்துடிக்கும் பெண்ணிற்கு, அவளின் உடல்/மன உளைச்சல்கள், பிரச்சனை என்னவென ஆராயாமலே ’கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்’ என்பதையே கொஞ்சம் மாற்றி ‘கொஞ்சம் விட்டுக்கொடுத்துப் போம்மா’ என்பதையே அறிவுரையாக சொல்லும் சமூகம், சமூக அந்தஸ்து இன்னமும் இருக்கிறதா ?

5. எத்தனை ஆண்கள் மனைவியின் விருப்பம் இருப்பின் மட்டுமே கலவுகின்றனர் ?

6. எத்தனை பெண் குழந்தைகள் பாலியல் ரீதியாக தொல்லைக்கு உள்ளாக்கப்படுகின்றனர்? அதில் எவ்வளவு நமக்கு தெரிய வருகிறது ?

7. விதவைகளையும் விவாகரத்து ஆனவர்களையும் என்ன மாதிரியான மரியாதையில்/தரத்தில் இந்த சமூகத்தில் வைத்திருக்கிறோம்?

8. பெண்களையும் சக மனுசியாய் நினைக்க ஆண்களுக்கு குழந்தையிலிருந்தே கற்பிக்கிறோமா ?

9. அவள் 'Weaker Sex'ஆக இருக்கும் ஒரே காரணத்தினால் அவளை துன்புறுத்த தைரியம் வருகிறதா ? வீட்டுக்குள் தன் மனைவியை அடிக்கும், தங்கையை அடக்கும் ஒரு ஆண், ஒரு லோக்கல் தாதாவிடமோ அல்லது ஏதேனும் அநியாயத்தைத் தட்டிக் கேட்கத் துணிவார்களா ?

10. எத்தனை ஆண்கள் போலீசாகவும் IAS, IPS போன்ற அதிகாரம் நிறைந்த பெண்கள் தங்கள் மனைவியாக வேண்டும் என்று விரும்புகிறார்கள் ? தங்களை விட அறிவிலும் அழகிலும் அந்தஸ்த்திலும் அதிகாரத்திலும் மேம்பட்ட ஒரு பெண்ணை மனைவியாக ஏற்றுக்கொண்டு எந்தவித தாழ்வுமனப்பான்மையோ ஈகோ’வோ இல்லாமல் வாழமுடிந்திருக்கிறதா ?

11. என்ன வேண்டுமானலும் செய்துவிட்டு, கோபத்தில் செய்துவிட்டேன் எனவோ, அவளும் அப்படி செய்திருக்கக்கூடாது எனவோ தங்கள் செயலுக்கு வருந்தாமலோ உணராமலோ நியாயம் கற்பிப்போர் எத்தனைப் பேர் ?

12. இதையெல்லாம் பற்றி பேசினாலே உண்மையில் அதற்குள்ளிருக்கும் வலிகளையும் வேதனைகளையும் அறியாமல்/ அறியும் விருப்பமும் இல்லாமல்/ அறிந்தும் அறியாதது போலவும் ‘வேற வேலையே இல்ல இவங்களுக்கு’ என்று அலுத்துக்கொண்டு போகிறவர் எத்தனைப் பேர்?

நாங்கள் வளர்ந்துவிட்டோம், இதெல்லாம் அந்த காலம் என்று சொல்கிறீர்களா? உங்களை மதிக்கிறேன். ஆனாலும், IT முன்னேற்றம், கல்பனா சாவ்லா, கிரண் பேடி இவர்கள் எல்லாம் காட்டும் உலகத்தினை விடவும், நமக்கென வீட்டுக்குள் ஒரு தனி உலகம் இருக்கிறது. தனி சமுகம் இருக்கிறது. இன்னமும் IT'யோ கல்பனா சாவ்லா’வோ தெரியாத கிராமங்கள் இருக்கின்றன. நான் பெரும்பான்மை’யை முன்வைத்துப் பேசுகிறேன். சிறுபான்மையாக’வாவது இவை எல்லாம் நடப்பதில் மகிழ்ச்சியடைய வேண்டுமா எனவும் புரியவில்லை. தீர்வுக்கான கருத்துக்கள் இருந்தால் பகிருங்கள்.

டிஸ்கி : இதுக்கு மேலயும், என்னது பெண்களாவது வன்முறையாவது! எந்த காலத்துல இருக்கீங்க நீங்க. IT எவ்வளவோ டெவலப் ஆகியிருக்கு, பெண்கள் என்ன வேலையெல்லாம் செய்ய ஆரம்பிச்சிட்டாங்க. ஆட்டோ ஒட்டுறது’ல இருந்து விண்கலம் வரைக்கும், 33% சதவிகிதம் இட ஒதுக்கீடு கொடுத்திருக்கோம். இன்னும் என்ன சும்மா பெண்ணியம் பேசிக்கிட்டு’ அப்படி’ன்னு நீங்க கேட்கலாம். தப்பில்லை. அப்படி கேட்டீங்க’ன்னா ஒண்ணு பாவம் உங்களுக்கு விவரம் பத்தலையா இருக்கும், அப்பாவியா இருப்பீங்க. இல்லை’ன்னா நான் புடிச்ச முயலுக்கு மூணு கால்’ன்னு விதண்டாவாதம் பேசுற கோஷ்டி. அதுவும் இல்லையா முளச்சு மூனு இல விடல, நீ எல்லாம் என்ன பேச வந்திட்ட, பழம் தின்னு கொட்ட போட்ட நாங்க சொல்றத கேட்டுக்க, புரியுதா’ன்னு ரொம்ப பழக்கமான பாரம்பரிய அடக்குமுறை. அட அதுவும் இல்லையா பரவலா பேச(சாட)ப்படுற ஆணாதிக்க சாயல் இருக்கக்கூடிய சாத்தியக்கூறுகளும் இருக்கு’னு சொன்னா கோபப்படுவீங்க. அப்படியெல்லாம் இல்ல இதுவரைக்கும் எந்த பொண்ணையும் நான் தரக்குறைவா பாத்ததில்ல நடத்தினதில்லை, பொண்டாட்டியா இருந்தாலும் கைநீட்டி அடிச்சதில்லை. அவ விருப்பமில்லாம தொட்டதில்லை’னு சொல்லுங்க. தெய்வம் நீங்க. இது கண்டிப்பா உங்களுக்கு இல்லை .




30 comments:

Prasanna said...

//எத்தனை குடும்பங்களில் பெண்களை அடிப்பதை சாதாரணமாக எடுத்துக்கொள்கிறோம்? எத்தனை ஆண்கள் கோபத்தில் அவள் அத்தனை முயற்சி எடுத்து சமைத்த உணவுத்தட்டுகளை எறிகின்றனர்? பின் அதை சுத்தம் செய்ய முனைகின்றனர் ?//
முக்கியமான கேள்வி. ஒரு ஆணுக்கு தட்டை தூக்கி அடித்து விட்டு செல்வது சாதரணமான விஷயம் மட்டுமல்ல. அது அவனது ஈகோ வையும் வளர்த்து விடும் ஒரு விஷயம்.. இப்பொழுது மனைவிமார் மட்டுமல்லாமல் தாயும் இதை எதிர்த்து நடக்க துவங்கினால்
அவர்களுக்கு சரி வருமோ என்னவோ?

// எத்தனை பெண் குழந்தைகள் பாலியல் ரீதியாக தொல்லைக்கு உள்ளாக்கப்படுகின்றனர்? அதில் எவ்வளவு நமக்கு தெரிய வருகிறது ?//
கண்ணுக்கு தெரிந்து என் தோழிகளுக்கே இது நடந்திருக்கிறது. ஏன் தடுக்கவில்லை எனக் கேட்டால் அப்பொழுது நானும் சிறுவன் தான். அப்படி தொடர்ந்து தொல்லைக்கு உள்ளாக்கப்பட்ட தோழி ஒருவரை சமீபத்தில் சந்தித்த போது, தன்னால் அதிலிருந்து மீள முடியவில்லை
எனவும், திருமணம் செய்ய பயப்படுவதாகவும் சொன்னார். எவ்வளவு கொடுமை.

சீதா.. இதெல்லாம் எந்த ஒரு சூழ்நிலையிலும் செய்யவில்லை என நான் சொல்லவில்லை. ஆனால், சில உணர்ச்சிகளின் வெளிப்பாடு கூட இல்லை என்றால் வாழ்வின் சுவை குன்றிவிடும். முன்ன எல்லாம், வாத்தியார் அடிச்சா எச்சி தொட்டு துடைசுட்டு போய்ட்டே இருப்போம்.
இப்ப பசங்க தற்கொலை பண்றாங்க.. முன்ன தம்பி அடிச்சா அக்கா பக்கத்து வீட்டுல சொல்லி சிரிப்பாங்க.. இப்போ பேஸ்புக்ல, ஆணாதிக்கம்னு ஸ்டேட்டஸ் அப்டேட் பண்றாங்க.

பெண்கள் ஆண்களுக்கு எதிரா செய்யும் உளவியல் வன்முறைக பத்தி எழுதுவேன். அப்போ திரும்ப வரேன்... ஆனா ஒண்ணு, உங்க கேள்விக்கு எல்லாம் தலை தான் குனிய முடியும், பதில் சொல்ல முடியாது.

Thekkikattan|தெகா said...

குட்டிப்’பையா,

உணர்ந்து உள்வாங்கப்பட்ட நிகழ்வுகளைக் கொண்டு ‘சர்வதேச பெண்கள் வன்கொடுமை ஒழிப்பு தினத்’திற்கென வழங்கப்பட்ட பொருத்தமான பதிவு. நீங்கள் சுட்டிக்காட்டியா பெரும்பாலான நிகழ்வுச் சூழல்களில் பிரக்ஞையற்றே taken it grantedஆக இருபாலருமே வாழ்ந்து முடித்து விடுகிறார்கள்.

அனைவரும் படித்துணர வேண்டிய கட்டுரை. நன்றி!

♪ ♫ லாவண்யா தமிழ்வாணன் ™♫♪ said...

ஆண்கள் மட்டும் அல்ல , இன்றைய சூழலில் , நிறைய பெண்களும் , மற்றொரு பெண்ணை சக மனுஷியாக பார்க்க மறுகிறார்கள்.எப்பொழுது ஒரு தாய் தன் மகனையும் மகளையும் சமமாக நடத்துகிறளோ அப்பொழுது இந்த சுழல் மாறும்

மங்கை said...

//இது நிச்சயமாக பெண்ணியம் பேசும் பதிவு அல்ல. மனிதம் பேசும்///

இதான் இதான்..அசத்தல்

இன்னும் தொடர்ந்து படிக்கனும்பா...முதல் வரி படிச்ச உடனே சொல்லனும்னு தோனிச்சு....மற்றது படிச்சுட்டு வரேன்

மங்கை said...

வன்முறையற்ற வாழ்வு என்பது ஆணுக்கோ, பெண்ணுக்கோ, சிறுவர்களுக்கோ உரிமை என்பதை மனதில் கொண்டு இருப்பவர்கள் கம்மி தான்... அதைப்பற்றி பேசினால் பெண்ணியவாதி என்ற குற்றச்சாட்டும் முத்திரையும்... டொமஸ்டிக் வயல்ன்ஸ் என்பது எல்லா மட்டத்திலும், எல்லா ஊரிலும் நடைபெற்றுக் கொண்டுதானிருக்கிறது ..அதை வெளியே சொல்லும் அளவிற்கு பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தைரியமோ.. கணவனை விட்டுக்கொடுத்து நடவடிக்கை எடுக்க மனமோ இல்லை என்பது வருத்தமான விஷ்யம்...ம்ம்ம்ம்ம்..

நகர்ப்புற வாழ்க்கையிலும் சரி, கிராம வாழ்க்கையிலும் சரி வன்முறைகளினால் அதிகம் பாதிக்கப்படுவர் இன்னும் பெண்களே... இதில் கொடுமையான விஷ்யம்... அவர்கள் ஒடுக்கப்பட்டு.. அவர்களின் உரிமையை இழந்து வாழ்ந்து வருகிறார்கள் என்ற விழிப்புணர்வு கூட இல்லாமல் இருக்கிறார்கள்... அலுவலகத்தில்... வீதியில்..வீட்டில்...கடைகன்னியில்.. ஏன் பதிவுலகில் கூட ஏதாவது ஒரு ரீதியில் பெண்மையை கேலிக்கு உள்ளாக்கும் அநாகரீகம் நடந்து கொண்டுதானிருக்கிறது....

படிப்பறிவற்ற, அல்லது வறுமையில் உழலும் பெண்களுக்கே பெரும்பாலான வன்முறைகள் நடக்கின்றன என்பது எந்த விதத்திலும் உண்மையில்லை... உண்மை என்னவென்றால்... அந்த குற்றங்கள் தான் வெளியே வருகிறது...மிடில் கிளாஸ் அல்லது அப்பர் மிடில் கிளாஸ் பெண்கள் வெளியே சொல்வதில்லை...

மற்றோரு கொடுமை...உளவியல் மருத்துவரிடம் போனால் கூட பெண்களுக்கு அறிவுரை கூறுபவர்கள் தான் அதிகம்.. சுற்றி பெண்களுக்கு தான் ரூல்ஸ்.. வெங்காயம் எல்லாம்...

இது எல்லாம் சொன்னா..வந்துடாங்கப்ப.. வரிஞ்சு கட்டீட்டுனு பேச்சு....மனசு கனத்துதான் போகிறது
ம்ம்ம்ம்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பத்து நிமிசம் முன்னாடி தாங்க ரொம்பநாள் கழிச்சி ஒரு ப்ரண்ட் கிட்ட பேசிட்டு வந்தேன்.. குழந்தையிலிருந்தே பால் வேறுபாட்டையும் அதனால் ஒன்று உயர்ந்தது ஒன்று தாழ்ந்தது இல்லைன்னு நாம கண்டிப்பா சொல்லிக்கொடுக்கனும்ன்னு நாங்க பேசிக்கிட்டிருந்தோம். நாம அப்படி வளர்க்கலைன்னாலும் மற்றவர்கள் எப்படியும் புகட்டிவிட்டாலும் நாம அதை அழிச்சி அழிச்சி புது எழுத்தை எழுதிக்கிட்டிருக்கனும் அவங்க மூளையில்ன்னு பேசிட்டிருந்தோம். ..

நல்ல கேள்விகள்.குட்டி..

Thekkikattan|தெகா said...

வீட்டுக்குள் தன் மனைவியை அடிக்கும், தங்கையை அடக்கும் ஒரு ஆண், ஒரு லோக்கல் தாதாவிடமோ அல்லது ஏதேனும் அநியாயத்தைத் தட்டிக் கேட்கத் துணிவார்களா ?//

:))) அப்புறம் யாரு ஒத்தடம் கொடுக்கிறதாம். ஆமா, வெளியில இருக்கிற ஸ்றெஸ் எடுக்கத்தான் வீட்டுக்குள்ளர வந்து வீம்படிக்கிறதுன்னு இவ்வளவு கரீக்கீட்டா சொல்லுதியளே அது எப்படி - ஹிஹிஹி!!

மங்கை said...

///என்ன வேண்டுமானலும் செய்துவிட்டு, கோபத்தில் செய்துவிட்டேன் எனவோ, அவளும் அப்படி செய்திருக்கக்கூடாது எனவோ தங்கள் செயலுக்கு வருந்தாமலோ உணராமலோ நியாயம் கற்பிப்போர் எத்தனைப் பேர் ?//

ம்ம்ம்....

குட்டிப்பையா|Kutipaiya said...

பிரசன்னா - நன்றி!

//கண்ணுக்கு தெரிந்து என் தோழிகளுக்கே இது நடந்திருக்கிறது. ஏன் தடுக்கவில்லை எனக் கேட்டால் அப்பொழுது நானும் சிறுவன் தான். அப்படி தொடர்ந்து தொல்லைக்கு உள்ளாக்கப்பட்ட தோழி ஒருவரை சமீபத்தில் சந்தித்த போது, தன்னால் அதிலிருந்து மீள முடியவில்லை
எனவும், திருமணம் செய்ய பயப்படுவதாகவும் சொன்னார். எவ்வளவு கொடுமை.//

பாலியல் கொடுமைகள் சில இப்படி உளவியல் ரீதியிலான பிரச்சனைகளைக் கூடுதலாகல் கொடுக்கிறது ! மிகக் கொடுமையானது தான் அந்த தோழியின் மனநிலை :(

//சீதா.. இதெல்லாம் எந்த ஒரு சூழ்நிலையிலும் செய்யவில்லை என நான் சொல்லவில்லை. ஆனால், சில உணர்ச்சிகளின் வெளிப்பாடு கூட இல்லை என்றால் வாழ்வின் சுவை குன்றிவிடும். முன்ன எல்லாம், வாத்தியார் அடிச்சா எச்சி தொட்டு துடைசுட்டு போய்ட்டே இருப்போம்.
இப்ப பசங்க தற்கொலை பண்றாங்க.. முன்ன தம்பி அடிச்சா அக்கா பக்கத்து வீட்டுல சொல்லி சிரிப்பாங்க.. இப்போ பேஸ்புக்ல, ஆணாதிக்கம்னு ஸ்டேட்டஸ் அப்டேட் பண்றாங்க.//

என்ன சொல்ல வர்ரிங்க பிரசன்னா....இதெல்லாமெ உணர்ச்சிகளின் வெளிப்பாடு’ன்னு அவ்ளோ சாதாரணமா எடுத்துக்கலாமா...

பசங்க தற்கொலை பண்ணிகிறது இதோட ஒப்பிடுறது - இதையெல்லாம் மிகைப்படுத்தி சொல்கிறாற்ப்போல! கண்டிப்பா அப்படி இல்ல!
தலைமுறை மாறுது. மக்கள் மனங்கள் மாறுது. பல தலைமுறையா’வும் பெரிதாக மாற்றங்கள் காணாத/ கண்டது போல வேடம் பூண்ட ஒரே விஷயம் இது தான் !!

\\/பெண்கள் ஆண்களுக்கு எதிரா செய்யும் உளவியல் வன்முறைக பத்தி எழுதுவேன். அப்போ திரும்ப வரேன்...//

கண்டிப்பா எழுதுங்க! அப்படியும் விஷயங்கள் நடக்குது தான் ! I agree! நம்ம எப்பவுமே நியாயத்தின் பக்கம்! இங்க நான் பேசியிருப்பது சமூகத்தின் பெரும்பான்மை பிரச்சனை மட்டுமே!

//ஆனா ஒண்ணு, உங்க கேள்விக்கு எல்லாம் தலை தான் குனிய முடியும், பதில் சொல்ல முடியாது. //


இது தான் வருத்தத்திற்கு உரிய விஷயமே!! :( :(

குட்டிப்பையா|Kutipaiya said...

தெக்கி

//பெரும்பாலான நிகழ்வுச் சூழல்களில் பிரக்ஞையற்றே taken it grantedஆக இருபாலருமே வாழ்ந்து முடித்து விடுகிறார்கள்.//

taken it granted - நூத்துல ஒரு வார்த்தை! மிக உண்மை!!

Anonymous said...

உணர்ச்சிகளோட வெளிப்பாடு தான். ஆனா அதை சாதாரணமா எடுத்துக்க முடியாது. எதை கொடுமைனு வரையறுக்குறது? நான் உங்க கருத்துக்களோட முரண்படலை. ஆனா, சில விஷயங்கள் கை மீறி நடக்க வாய்ப்பிருக்குனு தான் சொல்ல வந்தேன். அது நினைப்பா வந்தாக் கூட அது தப்பு தான். ஆனா, I dont think anybody can help it.

குட்டிப்பையா|Kutipaiya said...

//ஆண்கள் மட்டும் அல்ல , இன்றைய சூழலில் , நிறைய பெண்களும் , மற்றொரு பெண்ணை சக மனுஷியாக பார்க்க மறுகிறார்கள்.எப்பொழுது ஒரு தாய் தன் மகனையும் மகளையும் சமமாக நடத்துகிறளோ அப்பொழுது இந்த சூழல் மாறும்//


உண்மை லாவண்யா!! அப்படி மதிக்கப்பழகும் ஒரு தலைமுறையை உருவாக்குவது தான் ஒரு தீர்வோ?

மங்கை said...

/உணர்ச்சிகளோட வெளிப்பாடு தான். ஆனா அதை சாதாரணமா எடுத்துக்க முடியாது. எதை கொடுமைனு வரையறுக்குறது? நான் உங்க கருத்துக்களோட முரண்படலை. ஆனா, சில விஷயங்கள் கை மீறி நடக்க வாய்ப்பிருக்குனு தான் சொல்ல வந்தேன். அது நினைப்பா வந்தாக் கூட அது தப்பு தான். ஆனா, I dont think anybody can help it. ///

என்ன சொல்ல வரீங்க...

குட்டிப்பையா|Kutipaiya said...

//மங்கை - வாங்க.. நன்றி முதல் வருகைக்கும் கருத்துக்கும் :)
மிக உண்மை மங்கை. வெளியே வராத எவ்வளவு பிரச்சனைகளைத் தாண்டி வர்றோம். சர்வ சாதாரணமா நடக்குற ஒரு வன்முறையை தாண்டி போக முடிஞ்சிருச்சு நம்மளால. ஊடகங்கள பார்த்து வர்ற அதில வர்ற அநியாயத்த செய்றவன’ இவன எல்லாம் தூக்குல போட்டு கொல்லணும்’னு அடுத்த வேலய பாக்க போறதோட நம்ம ஆவேசங்கள் முடிவடைஞ்சுருது.

அதுக்கு மேல பேசினா, நீங்க சொல்ற ‘பெண்ணியக்’ குடை பிடிக்கிறோம்’னு ஏதோ சாக்கடைய தாண்டிப் போற மாதிரி மூக்க மூடீட்டு போற ரேஞ்சுல பேசுறாங்க! வயித்தெரிச்சல்ல வந்தது தான் அந்த டிஸ்கி’யே!!

sivakumar said...

நன்று!

//வயித்தெரிச்சல்ல வந்தது தான் அந்த டிஸ்கி’யே// நீங்க எந்த தலைப்பின் கீழே எழுதினாலும் அதை முத்திரை குத்த முடியும், ஒரு கருத்தை மறுக்கவும், தவிர்க்கவும் முத்திரைகள் பலவிதம் உண்டு. அதப்பத்தியெல்லாம் கவலைப்படாம சொல்ல வந்ததை எழுதுங்க. பின்னூட்டத்தில் பார்த்துக்கொள்ளலாம்.

குட்டிப்பையா|Kutipaiya said...

//நகர்ப்புற வாழ்க்கையிலும் சரி, கிராம வாழ்க்கையிலும் சரி வன்முறைகளினால் அதிகம் பாதிக்கப்படுவர் இன்னும் பெண்களே... இதில் கொடுமையான விஷ்யம்... அவர்கள் ஒடுக்கப்பட்டு.. அவர்களின் உரிமையை இழந்து வாழ்ந்து வருகிறார்கள் என்ற விழிப்புணர்வு கூட இல்லாமல் இருக்கிறார்கள்... .//

:( உண்மை மங்கை. அந்த மாதிரி ஒரு நிலைமைக்கு தள்ளப்படுறோம்’ன்றதும் உண்மையா ?

//அலுவலகத்தில்... வீதியில்..வீட்டில்...கடைகன்னியில்.. ஏன் பதிவுலகில் கூட ஏதாவது ஒரு ரீதியில் பெண்மையை கேலிக்கு உள்ளாக்கும் அநாகரீகம் நடந்து கொண்டுதானிருக்கிறது...//

பஸ்ஸில போகிற ஒரு கொடுமை போதும் மங்கை எடுத்துகாட்டுக்கு நம்ம ஊருல! இதை எங்க அலுவலக வலைப்பதிவுல போட்டிருந்தேன். முதல் பின்னூட்டமே ஒரு பெண்ணினுடையது தான். ’இது கூட ‘அலுவலக வன்முறை’ன்னு இன்னும் ஒரு வகையை சேர்த்துக்கோங்க’ன்னு! ஒரு வேலைப்பொறுப்பை கொடுக்கும் போது கூட பெண்ணாக இருப்பதாலேயே இப்படி வேறுபாடு. என்ன சொல்றது !

குட்டிப்பையா|Kutipaiya said...

//பத்து நிமிசம் முன்னாடி தாங்க ரொம்பநாள் கழிச்சி ஒரு ப்ரண்ட் கிட்ட பேசிட்டு வந்தேன்.. குழந்தையிலிருந்தே பால் வேறுபாட்டையும் அதனால் ஒன்று உயர்ந்தது ஒன்று தாழ்ந்தது இல்லைன்னு நாம கண்டிப்பா சொல்லிக்கொடுக்கனும்ன்னு நாங்க பேசிக்கிட்டிருந்தோம். ..//

முத்து - மிக உண்மை . இப்படி ஒரு தலைமுறையை உருவாக்குவதில் தான் இதற்கான தீர்வே இருக்கிறது போலும்.!!

//நாம அப்படி வளர்க்கலைன்னாலும் மற்றவர்கள் எப்படியும் புகட்டிவிட்டாலும் நாம அதை அழிச்சி அழிச்சி புது எழுத்தை எழுதிக்கிட்டிருக்கனும் அவங்க மூளையில்ன்னு பேசிட்டிருந்தோம்//

கண்டிப்பா!!!

ரிஷபன் said...

இவை யாவும் உண்மை என்று தலை கவிழத்தான் முடிகிறது.. கேள்விகளுக்குப் பதில் தேட வைத்திருக்கிறது பதிவு.

குட்டிப்பையா|Kutipaiya said...

///உணர்ச்சிகளோட வெளிப்பாடு தான். ஆனா அதை சாதாரணமா எடுத்துக்க முடியாது. எதை கொடுமைனு வரையறுக்குறது? நான் உங்க கருத்துக்களோட முரண்படலை. ஆனா, சில விஷயங்கள் கை மீறி நடக்க வாய்ப்பிருக்குனு தான் சொல்ல வந்தேன். அது நினைப்பா வந்தாக் கூட அது தப்பு தான். ஆனா, I dont think anybody can help it. ///

என்ன சொல்ல வரீங்க... //

குட்டிப்பையா|Kutipaiya said...

@தமிழ்வினை -

////வயித்தெரிச்சல்ல வந்தது தான் அந்த டிஸ்கி’யே// நீங்க எந்த தலைப்பின் கீழே எழுதினாலும் அதை முத்திரை குத்த முடியும், ஒரு கருத்தை மறுக்கவும், தவிர்க்கவும் முத்திரைகள் பலவிதம் உண்டு. அதப்பத்தியெல்லாம் கவலைப்படாம சொல்ல வந்ததை எழுதுங்க. பின்னூட்டத்தில் பார்த்துக்கொள்ளலாம். //

உண்மை உண்மை..ஊக்கமான வார்த்தகளுக்கு மிக நன்றி.

குட்டிப்பையா|Kutipaiya said...

//இவை யாவும் உண்மை என்று தலை கவிழத்தான் முடிகிறது.. கேள்விகளுக்குப் பதில் தேட
வைத்திருக்கிறது பதிவு. //

ரிஷபன் - ஹ்ம்ம்ம்...சோகம் தான். தேடுங்க. எல்லாருமே அதை தானே செய்றோம் இங்க ! நன்றி!

Jerry Eshananda said...

டிஸ்கி யை ப்படிக்க பஸ்கி எடுக்க விடலாமா? கொஞ்சம் பெரிய size font -ல் போட்டிருக்கலாம்,டிஸ்கி கருத்துகளை பதிவிலேயே சேர்த்திருக்கலாமே..ஆழ்ந்து சிந்திக்க வைத்த பதிவு.

குட்டிப்பையா|Kutipaiya said...

தெக்கி - :)

/வீட்டுக்குள் தன் மனைவியை அடிக்கும், தங்கையை அடக்கும் ஒரு ஆண், ஒரு லோக்கல் தாதாவிடமோ அல்லது ஏதேனும் அநியாயத்தைத் தட்டிக் கேட்கத் துணிவார்களா ?//

:))) அப்புறம் யாரு ஒத்தடம் கொடுக்கிறதாம். ஆமா, வெளியில இருக்கிற ஸ்றெஸ் எடுக்கத்தான் வீட்டுக்குள்ளர வந்து வீம்படிக்கிறதுன்னு இவ்வளவு கரீக்கீட்டா சொல்லுதியளே அது எப்படி - ஹிஹிஹி!! //

ஹிஹி’ன்னு வழியறதா பாத்தா எல்லாருமே அப்படித்தானோ!!!

குட்டிப்பையா|Kutipaiya said...

ஜெரி - நன்றி!

//டிஸ்கி யை ப்படிக்க பஸ்கி எடுக்க விடலாமா? கொஞ்சம் பெரிய size font -ல் போட்டிருக்கலாம்,டிஸ்கி கருத்துகளை பதிவிலேயே சேர்த்திருக்கலாமே//

பண்ணியிருக்கலாம் தான் :) பதிவோட சாரம்சத்தை குறைச்சுடக்கூடாதே’ன்னு தான் தனியா :)

ஹேமா said...

ரொம்ப.....வே பிந்திட்டேன் குட்டி.முகத்தில அறையிறமாதிரி நல்லதொரு பதிவு.அந்த டிஸ்கியே போதும்.ஜெரிகிட்ட கேழுங்க.ஒருநாள் என்கிட்ட நல்லா வாங்கிக் கட்டிக்கிட்டார் !

Jerry Eshananda said...

ஹேமா...இப்போ..சமையல் அறையில என் மனைவிக்கு அப்பப்போ..உதவி செய்யுறேன்...போதுமா...?

குட்டிப்பையா|Kutipaiya said...

ஹேமா :) லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வர்றீங்களே :) :) நன்றீ :)

அந்த கதைய கேக்கணுமே :)

ஜெரி -

தாட்’ஸ் த ஸ்பிரிட் :) நன்றி.

498ஏ அப்பாவி said...

//உலகெங்கும் நான்கில் ஒரு பெண் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறாள் என்கிறது புள்ளிவிவரம்//

ஆம் உண்​மைதான்.... ​பொய்வரதட்ச​ணை வழக்கில் வயதான தாயர்கள், கர்பிணி ச​கோதரிகள் ஆகி​யோ​ரை ​கைது ​செய்து சி​றையில் அ​டைப்பதும் நம் நாட்டில் தினமும் சர்வசாதரணமாக ந​டை​பெறுகின்றது..இது​போல் பாதிக்கப்படும் ​பெண்களுக்கு நீதி​சொல்ல ஒரு நாதியுமில்​லை நம்நாட்டில்..

குட்டிப்பையா|Kutipaiya said...
This comment has been removed by the author.
amma said...


பெண்களுக்கு இழைக்கப்படும் வன்முறை ஒழிப்பிற்கான நாள் - என் பார்வையில்!
பெண்கள் ஆண்களுக்கு மிக மிக சமமானவர்கள் என என்ன வேண்டும் .....மனதளவிலும் உடல் வலிமையிலும் பிறகென்ன வன்முறைகளை தடுப்பதற்கு வேண்டும்

Post a Comment

Related Posts with Thumbnails