Sunday, November 21, 2010

ஆப்பி பர்த்டே !!!

இன்றும் ஒரு நெருங்கிய நண்பரின் பிறந்தநாளை மறந்துவிட்டேன். வழக்கமானது தான். நாட்களை நினைவில் வைத்துக்கொள்வதில் மிக பலவீனமாகத் தான் இருந்துகொண்டிருக்கிறேன். ஒன்றும் சொல்வதற்கு இல்லை. பிறந்த நாள் வாழ்த்துக்கள் அனுப்பியோ சொல்லியோ நான் ஆச்சரியப்படுத்தியிருக்கலாம். இப்படி மறந்துவிட்டு அசடு வழிகிறேனே என்று என் மேலேயே கோபமாக வந்தது. என் பிறந்த நாள் அன்று கண்டிப்பாய் வாழ்த்து சொல்வார்களென்று நினைத்திருந்த சிலர் இதே போல் அடியோடு மறந்த போது எழுந்த லேசான ஏமாற்றமும் நினைவுக்கு வந்தது.


ஒரு காலத்தில் பிறந்த நாள் வருவதற்காய் வருடம் முழுதும் காத்திருந்த நினைவுகள் மெல்ல விரிந்தது. தீபாவளிக்கு ஒன்றும் பிறந்த நாளுக்கு ஒன்றுமாய் இரண்டு புதுத்துணிகள் கிடைக்கும் வருடத்திற்கு. மிக முக்கியமான நாட்களில் ஒன்று. அது இல்லாமல் புதுத்துணிக்கேற்ப பாசிகளும் வளையல்களும் கூட, எப்போதாவது செருப்பு போன்ற விஷயங்களும் சேர்ந்துகொள்ளும். பத்து பதினைந்து நாட்களுக்கு முன்பே பரபரப்பு தொற்றிக்கொள்ளும். கிடைக்கும் எல்லாவற்றையும் வாங்கியாக வேண்டுமே. என்ன வாங்குவது எப்படி வாங்குவது என்ற சிந்தனையிலேயே தூக்கம் கூட சரியாக வராது. எப்படியும் எல்லாம் நான் தேர்ந்தெடுப்பதும் கிடையாது, சமயத்தில் அப்பாவே வாங்கி வந்து விடுவார். அதற்கே இந்த நிலை!

மார்கழி மாதத்தில் வரும் பிறந்தநாள். நினைத்தாலே அதிகாலை குளிரும் தெருக்கோடியில் ஒலிக்கும் கோயில் பாடல்களும் மெல்ல வருடிச்செல்லும். இருள் விலகாத அதிகாலையில் அம்மா எழுப்பும் போதே வாழ்த்துடன் ஆரம்பிக்கும். இதமான வெந்நீரில் தலைக்குக் குளித்து, புதுத்துணியின் வாசம் நெஞ்சம் நிறைய உள்ளிழுத்து அணிந்து, மற்ற புதுசுகளையும் சூடி ஈரப்பின்னல் போட்டு அப்பாவைப் போய் எழுப்பி ‘ஹேப்பி பர்த்டே’ சொல்ல வேண்டும். ஆமாம். அப்பாவுக்கும் எனக்கும் ஒரே நாளில் தான் பிறந்தநாள். அவரிடமிருந்து பதில் வாழ்த்தும் முத்தமும் பெற்ற பின் பெருமிதமும் உற்சாகமும் பீறிட்டு கிளம்ப பள்ளி செல்ல வேண்டியது தான். வகுப்பாசிரியர் வரும் வரை காத்திருக்கமுடியாமல் காத்திருந்து. வந்தவுடன் எழுந்து ஒடி, கையோடு எடுத்து சென்றிருக்கும் சாக்லேட் டப்பாவினை நீட்டி அவரிடமும் வாழ்த்துகள் வாங்கிய பின் முக்கியமான தருணத்துக்குள் அடியெடுத்து வைக்க வேண்டியிருக்கும்.

எல்லாருக்கும் முன் நிற்க வைத்து ‘ஹேப்பி பர்த்டே டு யூ’ பாடுவார்கள். கூச்சமும் சிரிப்பும் சந்தோஷமுமாய் முதல் வரிசையில் தொடங்கி அனைவருக்குமாய் சாக்லேட் விநியோகம் ஆரம்பிக்கும். சிலர் கைகொடுப்பார்கள். சிலர் வாய் வார்த்தையில். சிலர் நன்றியுடன் முடித்து கொள்வர். வெகு சிலர் அதுவும் இல்லாமல் தன் பங்கை மட்டும் எடுத்துகொள்வதும் நடக்கும். இந்த சாக்லேட் விஷயமும் ஒன்றும் சாதரணமானதில்லை. அது தான் அன்று நம் அந்தஸ்த்தின் அடையாளம்! காட்பரீஸ்’இல் இருந்து புளிப்பு மிட்டாய் வரையிலான ரேஞ்சில் நாம் எங்கே இருக்கிறோம் என்பதும் முன்பே தீர்மானிக்க படவேண்டிய ஒன்று. ஒரு மாதிரி நியூட்ரின்‘ஆசை’ யில் வந்து முடியும் நம் தீர்மானம்.(புளிப்பு மிட்டாய்க்கு கொஞ்சம் மேல் :)) அதை சாப்பிட்டபின் சுற்றியிருக்கும் காகிதத்தை ரப்பர் போல இரண்டு பேர் இழுத்து விளையாடலாம். அதையும் ஒரு காரணமாகக் கொண்டு அதையே முடிவு செய்ய மனதை தேற்றிக்கொண்டிருக்கிறேன்.

மாலையில், அப்பா ஏதாவது கேக் வாங்கி வந்திருப்பார். எங்களுக்கே எங்களுக்காய் ஒரு எக்ஸ்க்ளூசிவ் ஆனால் மிக எளிய ஒரு கொண்டாட்டம். பின்னர் அக்கம்பக்கத்தினர், உறவினர் என்று ஒரு சுற்று நடக்கும். பெரியவர்கள் இருந்தால் காலில் விழுவதில் நம் பணிவுக்கு அளவே இல்லாமல் இருக்கும். கிடைத்ததை வசூல்(!) செய்துகொண்டு கொஞ்ச நாள் குஷியாக ஓடும். இவை இல்லாமல், அன்று பள்ளியிலும் வீட்டிலும் தனி சலுகை கிடைக்கும். எதற்கும் திட்டோ அடியோ விழாது. ஏன் வருடத்திற்கு ஒரு முறை தான் வருகிறது என வருத்தமும் அடுத்த பிறந்தநாளிற்கான காத்திருப்புமாய் தான் அன்றைய நாள் முடியும்.

எனது ஐந்தாவது பிறந்தநாளுக்கு ஒரு வாரம் முன் அமைந்தது, அப்பாவின் முதல் சிங்கப்பூர் பயணம். மனதே இல்லாமல் கிளம்பிய அப்பா அங்கே இறங்கியவுடன் அம்மாவுக்கு எழுதிய கடிதம் இன்னமும் இருக்கிறது. புதுத்துணி, சாக்லேட் பற்றி கூட அதில் எழுதியிருப்பார்.! அப்பா அன்று இல்லாத குறை எனக்கு தெரியக்கூடாது என்பதற்காய் நண்பர்கள் சிலர் வந்து கேக் வெட்ட சொல்லி கொண்டாடியது இன்னமும் நினைவு கூரும் நிகழ்வு.. இன்று அவர் இல்லாமல் எத்தனையோ பிறந்தநாட்கள் கழிந்துவிட்டன. எப்படியும் என்னை வந்தடையும் ஒவ்வொரு வாழ்த்திலும் அப்பாவின் புன்னகை நினைவில் நிழலாடுவதை நினைத்துப் பார்க்கிறேன்.

அந்த வயதில் தன் பிறந்தநாளே தெரியாது என சொன்ன சிலரை ஆச்சரியத்தோடு பார்த்திருக்கிறேன். அதெப்படி பிறந்தநாளே தெரியாமல், பிறகெப்படி கொண்டாடுவீர்கள் என்ற எனது கேள்விக்கு நமக்கென்ன கொண்டாடவேண்டியிருக்கு என அவர்களின் அந்த சலிப்பு புரிவதற்கு பல வருடங்கள் வேண்டியிருக்கிறது. வர வர பிறந்தநாள் வந்தாலே ஒரு வயது ஏறிவிடுகிறது ,இன்னும் என்னவெல்லாம் பண்ணவேண்டியிருக்கிறது என்றெல்லாம் தான் யோசிக்கத் தோன்றுகிறது. எனக்கு இன்னிக்கு ’ஆப்பி பர்த்டே’ என்று வாயெல்லாம் பல்லுடன், புதுத்துணியும் வரும் பொடிசுகளைப் பார்த்தால் பொறாமையாக இருக்கிறது.

இந்த பிறந்தநாளை மறந்த விஷயத்திற்கு வருவோம். எத்தனைப் பேரின் பிறந்தநாளை நினைவு வைத்திருக்கிறேன் என கணக்கெடுத்தால் என் டெபாசிட் காலி. இன்னமும் என் பிறந்தநாளன்று தவறாமல் வாழ்த்தும் மிக நெருங்கிய சிலரின் பிறந்தநாளே தெரியாமல் இருக்கிறேன் என்பது அதைவிடவும் வெட்கக்கேடு. இந்த அவமானத்தோடே இது வரை நான் வாழ்த்தாமல் போன அத்தனை பேருக்கும் என் வாழ்த்துக்களையும் நேசங்களையும் பரிமாறிக்கொள்கிறேன். என்னை திருத்திகொள்ள முழுமுயற்சி எடுப்பேன் என்றும் இதன் மூலம் உறுதியளிக்கிறேன்!!! :) :) :)

7 comments:

R. Gopi said...

You know what?

இது Stephen Leacock என்பவர் எழுதிய The Lost dollar சிறுகதை மாதிரி இருக்கிறது. அதில் Leacock இன் நண்பர் Leacock கிற்குக் கொஞ்சம் டாலர் தர வேண்டி இருக்கும். Leacock எல்லா விதத்திலும் அதை நண்பருக்கு ஞாபகமுட்ட முயற்சி செய்வார். நண்பரோ மறந்து விடுவார். ஒரு நாள் Leacock கிற்கு ஞானோதயம் வரும். தாமும் இது போல நிறைய பேருக்குக் கொடுக்க வேண்டி இருக்கும் என்று. அன்றில் இருந்து எல்லோருக்கும் கடனைத் திருப்பித் தந்து விடுவது என்ற முடிவுக்கு வருவார்.

Leacock ரேஞ்சுக்கு இருக்கு பதிவு. இதைத்தான் greatmen think alike அப்படின்னு சொல்வாங்களோ!

பிறந்த நாள் நினைவுகள் சூப்பர். புது டிரஸ், சாக்லேட் விநியோகம் அப்படியே கண்ணில் கொண்டு வந்து நிறுத்தி விட்டீர்கள்.

அப்பா சூப்பர். நீங்கள் மனம் வாடக் கூடாது என்பதற்காக ஊரில் இல்லாதபோதும் நண்பர்களை விட்டுக் கேக் செய்ய ஏற்பாடு செய்யச் சொன்னது. எனக்கு அப்பா ஞாபகம் வருகிறது.

பின்னூட்டமே ரொம்பப் பெரிசாப் போயிடுச்சு

http://www.math.rutgers.edu/~sujith/mld.html

Thekkikattan|தெகா said...

யாருங்கோ அது... :). இதுக்கெல்லாம் இம்பூட்டு ஃபீலின் விட்டா கொம்பெனிக்கு கட்டுபடியாகதே! எங்களுக்கெல்லாம் ஞாபகமறதிதான் ஞாகபத்திலேயே இருக்குது.

எப்படியோ இதை வைச்சு அழகான ஒரு நினைவலைகளை மீட்டெடுத்தாச்சு. அப்பாவோட ஒரு நடை போன மாதிரி...

//அதெப்படி பிறந்தநாளே தெரியாமல், பிறகெப்படி கொண்டாடுவீர்கள் என்ற எனது கேள்விக்கு நமக்கென்ன கொண்டாடவேண்டியிருக்கு என அவர்களின் அந்த சலிப்பு புரிவதற்கு பல வருடங்கள் வேண்டியிருக்கிறது.//

அது தனக்கு தனக்கின்னு குழந்தை குட்டிங்கன்னு பெத்துகிட்டு நொந்து, நூடுல்ஸ் ஆகி என்னாத்தை பொறந்த நாளு கொண்டாடி வாழ்ந்தோம்னு வந்திடும் போலிருக்கு, அது மாதிரியான சலிப்பிற்கு... அப்படியா?

Liked the post!

குட்டிப்பையா|Kutipaiya said...

கோபி - நன்றி :) The lost dollar பள்ளி நாட்கள்’ல துணைப்பாடத்தில படிச்ச நினைவு! அது கூட கம்பேர் பண்ணீட்டிங்களே - புல்லரிக்குது போங்க :) :)

அப்பா - ஹ்ம்ம்... அது இந்த பதிவுல சேர்த்திருக்க வேண்டிய ஒண்ணு. அங்க வேற மாதிரி போனதால இங்க :)

http://kutipaiya.blogspot.com/2010/04/blog-post.html

படிச்சிருப்பீங்க தானே! பெரிய பின்னூட்டத்திற்கு பெரிய நன்றி :)

குட்டிப்பையா|Kutipaiya said...

தெக்கி - வாங்க! நீங்க சொல்ற context vera :) அதுவும் உண்மை தான் :) :)

நான் என்ன சொல்ல வந்தேன்னா, ஊர்ல சில மக்களை பாத்திருக்கேன்..வயசே ஒரு மாதிரி தோராயமா தான் சொல்லுவாங்க.. அந்த மாதிரி மக்களைத் தான் இங்க குறிப்பிட்டேன்.

நீங்க சொல்ற சலிப்பு அப்ப என்ன, இப்பவே வந்திருச்சு :) :) என்னத்த பிறந்தநாள் கொண்டாடி என்னத்த பண்றது’னு :) :)

ரிஷபன் said...

நேற்று இரவு நண்பரிடம் வாங்கிக் கட்டிக் கொண்டேன்.. அவர் பிறந்த நாளை மறந்ததால். எனக்கும் இதில் ஞாபகமறதி அதிகம். ஆனால் என் சிநேகிதர்கள் மிகச் சரியாய் என் பிறந்த நாள் வாழ்த்து சொல்லும்போது கூச்சம் வருகிறது. 2011 காலண்டரில் முன்னதாகவே குறிப்பிட்டு வைத்து வாழ்த்த வேண்டும் என்று பிளான்!

குட்டிப்பையா|Kutipaiya said...

ரிஷபன் - ப்ளான் எல்லாம் சரியா இம்பிளிமெண்ட் பண்ண வாழ்த்துக்கள் :) :)

முயற்சி பண்ணுவோம்!

ஹேமா said...

எல்லார்கிட்டயும் இருக்கா இந்தப் பிரச்சனை.
அப்போ நான் பரவால்லப்பா !

Post a Comment

Related Posts with Thumbnails