எத்தனைப் பேருக்கு தெரிந்திருக்கும் இந்த தமிழர்களை ? இவர்களுக்காக ஏன் ஒரு நினைவுக்குறிப்பு கூட இல்லை ? ஏன் இவர்களின் வரலாறு மறக்கப்பட்டது ? இவர்களைப் பற்றி எழுத ஏன் இவ்வளவு காலம் ஒருவருக்கு கூட மனம் வரவில்லை ? முன்னுரை மற்றும் ஆசிரியரின் உரையைப் படிக்கும் போதே தோன்றிய கேள்விகள் தான் இவை.
இரண்டாம் உலகப்போர் சமயத்தில் ஜப்பான், அப்போதைய நிலைமையை சாதகமாக்கி தன் எல்லைகளை விரிவாக்கும் முயற்சியில் இறங்கியது. மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, மற்றும் பர்மாவும் அதன் பிடியில் விழுந்தது. அப்போது தான் நேதாஜி காங்கிரஸை விட்டு விலகி இங்கிலாந்துக்கு எதிரான நாடுகளின் உதவியை நாடினார். அவரது இந்திய தேசிய இராணுவம் சிங்கப்பூரில் இருந்து இயங்கிக் கொண்டிருந்தது. அதில் பணியாற்றிவர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள் என்று கூறப்படுகிறது. அப்போது ஜப்பானுடன் உறவு வைத்துக் கொண்டார் நேதாஜி. இந்தக் காரணத்தை முன்னிட்டு இந்தியாவைக் கைப்பற்றும் திட்டத்தில் இறங்கியது ஜப்பான்.
இந்தியாவை கைப்பற்ற பெரும் எண்ணிக்கையிலான படைகள் தேவை. அவற்றை ஜப்பானிலிருந்து கடல் வழியாக கப்பல் மூலமாக கொண்டு வருவது சிரமம் என்பதால் தரைவழி பாதையை தேர்ந்தெடுத்து, சயாம் (தாய்லாந்து) முதல் பர்மா வரை ஒரு ரயில் பாதை ஒன்றை இட முடிவு செய்தது. அதன் ஐந்தாவது படை அணி மேற்பார்வையிட, 16 மாதங்களுக்குள் அந்த இரயில் பாதையை நிர்மாணித்து முடிக்க வேண்டுமென கட்டளையிட்டது.
அதற்கு ஏராளமான ஆள்பலம் தேவைப்பட்டது. தொழில் நுட்ப வேலைகளுக்கு, தங்களிடம் போர்க்கைதிகளாய் இருந்த ஆங்கிலேய மற்றும் ஆஸ்திரேலிய படைவீரர்களை பயன்படுத்திக் கொண்டனர். சுரங்கம் வெட்டுதல், மண் அள்ளுதல் போன்ற வேலைகளுக்கு அடிமட்டத் தொழிலாளிகள் நிறைய பேர் தேவைப்பட்டனர். இதற்காக பெருமளவில் ஆசியதொழிலாளர்கள் கொண்டு செல்லப்பட்டனர். சயாமியர், மலாய் இனத்தவர்கள் தவிர, ஒரு இலட்சத்திற்கும் மேலான தமிழர்களும் அவர்களிடம் சிக்கினர் என மதிப்பிடப்படுகிறது. ரப்பர் தோட்டத்தில் வேலை செய்த, தனியார் நிறுவனங்களில் பணி புரிந்த, தோட்டங்களையும் வயல்களையும் கவனித்துக்கொண்டிருந்த, ஏன் சாலைகளில் சென்று கொண்டிருந்தவர்களைக்கூட விடவில்லை ஜப்பானின் கங்காணியர்கள். ஏமாற்றி, வலியுறுத்தி என எப்படி பணியவைக்க வேண்டுமோ அப்படி.
போரினால் கடும் பஞ்சம் வேறு. உணவுக்காக தவித்த, உயிருக்கு பயந்த, குடும்பத்தைக் காப்பாற்ற, தன் பிள்ளைகளை அழைத்துச்செல்லாமல் தடுக்க என ஒவ்வொருவருக்கும் அடிபணிந்து போக ஒவ்வொரு காரணம். ஒரு இலட்சம் தமிழர்களில் போர் முடிந்தவுடன் திரும்பியவர்கள் பத்தாயிரத்தை கூட தாண்ட மாட்டார்கள் என குத்துமதிப்பான புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இதில் பணியாற்றிய ஆஸ்திரேலிய படைவீரர்கள் சிலர் தங்கள் அனுபவங்களை நூல்களாகக் கொண்டு வந்துள்ளனர். ஆங்கிலேயர்களோ “The Bridge on the River Kwai" என்ற திரைப்படத்தின் மூலம் தங்கள் அனுபவத்தை நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே உலகத்திற்கு சொல்லி விட்டனர். அவர்களின் வலிகள் ஆவணப்படுத்தப்பட்டுவிட்டன. நம் பாடு தான் திண்டாட்டம். வெகு சில நூல்களே அதைப் பதிவு செய்திருந்தன. எப்போதோ நடந்த நிகழ்வுகளைப் பதிவு செய்ய எண்ணி 1993’ஆம் ஆண்டு சண்முகம் எழுதியது தான் ”சயாம் மரண ரயில் - சொல்லப்படாத மெளன மொழிகளின் கண்ணீர்”. இதை தமிழோசை பதிப்பகம் 2007 ஆம் ஆண்டு மறுவெளியீடு செய்திருக்கிறது. இந்த புத்தகத்தைப் படித்துவிட்டு தான் இதைப் பதிவு செய்ய வேண்டுமென ஒர் உந்துதல் ஏற்பட்டது. உண்மையைச் சொன்னால் இதற்கு முன், இதில் குறிபிடப்பட்டுள்ள ஒரு விவரமும் நான் கேள்விப்பட்டதுகூட கிடையாது.
ஜப்பானிடம் சிக்கிய இந்த தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமை, யூதர்களுக்கு நாஜி இழைத்த கொடுமைகளுக்கு இணையானது என இந்நூலின் பதிப்புரையில் சொல்லப்பட்டிருக்கிறது, படிக்க படிக்க அது எவ்வளவு உண்மை என உணரமுடிகிறது. அந்த களத்தில் பஞ்சத்தினால் தன் குடும்பத்திற்கு பாரமாக இருக்க விரும்பாமலும், தன் தந்தையை கண்டுபிடித்துவிடலாம் எனற நோக்கத்திலும் தானே சென்று இணையும் மாயா என்ற ஒரு இளைஞன் சுற்றியே கதையை சுழல விட்டு, தான் சொல்ல வந்த உண்மைகளை கதையெங்கும் தெளித்திருக்கிறார் ஆசிரியர். அதனூடே ஒரு மெல்லிய காதல் கதையையும் சேர்த்து ஒரு சுவாரஸ்யம் சேர்க்க முனைந்திருக்கிறார் ( நமக்கு தான் எல்லாவற்றிலும் தேவைப்படுமே!!)..
மரவள்ளிகிழங்கும், கருவாடும், சூப்பும் ஆகியவையே பெரும்பாலும் அவர்களின் உணவு. உடம்பு முடியாவிட்டாலோ, விஷப்பூச்சிகளோ பாம்போ கடித்துவிட்டாலோ, அவர்களுக்காக யாரும் நிற்பதில்லை. ஆங்காங்கே விழுந்து அப்படியே இறக்க வேண்டியது தான். முகாம்களில் சீக்கானால், மருத்துவமனை அழைத்து செல்கிறோம் என்ற பெயரில், ஒதுக்குபுறமான ஒரு கொட்டகையில் போய் விட்டுவிடுவார்கள். கும்பல் கும்பலாய் வயிற்றுபோக்கும் காய்ச்சலுமாய் இறப்பை நோக்கி செல்ல வேண்டியது தான். அழுகி நாறி இருந்தாலும், தங்களுக்கு வசதிப்பட்ட என்றாவது ஒரு நாளில் மொத்தமாய் குப்பை அள்ளுவது போல தள்ளுவண்டியில் ஏற்றி வந்து ஒரே பெரிய குழியாய் வெட்டி மொத்தமாய் போட்டு புதைத்துவிடுவார்களாம். எண்ணிக்கை மிக அதிகமாக இருந்தால் அந்த கொட்டகையோடு கொளுத்திவிடவும் செய்வார்கள் போல. குற்றுயிரும்
குலையுயிருமாய் கிடப்பவர்களுக்கும் மொத்தமாய் மோட்சம். மறுபடியும் ஒர் கொட்டகை முளைக்கும். இதில் எல்லாம் தவறி பிழைத்தவர்கள் அவ்வப்போது போர்விமானங்கள் போட்ட குண்டுகளில் மடிந்தார்கள். எந்தப் பக்கம் திரும்பினாலும் அவர்களுக்கு மரணம் காத்திருந்தது.
ஆங்காங்கே ஒவ்வொரு பாத்திரத்தின் உணர்வுகள், குடும்பத்தை பற்றிய கவலைகள், தாங்களும் உயிரோடு அங்கிருந்து பிழைப்போமா என கேள்விகள்,, மாயாவின் காதல் கதை, அவனுடன், உடன் பிறந்தவனைபோல உறவாடும் வேலுவின் நட்பு, முடிவை ஒட்டி அவன் மரணம் என உணர்வுப்பூர்வமாய் பயணிக்கிறது கதை. இரண்டு பெரிய குன்றுகளை வெட்டி சாய்த்து, இரும்புப் பாதை அமைக்க உதவிய நம் மக்கள், ஆற்றுப் பாலத்திற்கும் மலைக்கும் நடுவில், தூண்கள் கட்ட முடியாமல், ராட்சத சங்கிலிகளால் பிணைக்கப்பட்ட தொங்கும் பாலத்திலும் தண்டவாளத்தில் உயிரைப் பிடித்துக் கொண்டு பயணிப்பதைப் படிக்கும் போது, லேசாய் பயம் பற்றிக் கொள்கிறது. அங்கேயும் சந்தடி சாக்கில்
சின்ன சின்ன பலசரக்குகளை வாங்கி முகாம்களின் உள்ளேயே வியாபாரம் பண்ணிய நமது மக்களின் திறமையை நினைத்து பெருமைப்படுவதா வேதனைப்படுவதா எனப் புரியவில்லை.
இத்தனை வேதனைகளிலிருந்தும் மீண்டு வீடு திரும்பியவர்களில் சிலர், தங்கள் குடும்பம் சிதைந்ததைக் கண்டு, மறுபடியும் சயாமுக்கே சென்றிருக்கின்றனர் என்பதும் மிகுந்த வேதனைக்குரியது. சான்றுகளுக்கும் மேல்விவரங்களுக்கும் கூகிள் செய்ததில், சமீபமாக இன்னொரு புத்தகமும், அதன் வரலாறை அப்படியே சொல்ல வந்திருப்பது தெரிய வந்தது. அதற்கான தகவல்களும் சுட்டிகளும் முடிவில்.
இந்த பதிவின் மூலமாக உலகத்தமிழர்கள் அத்தனை பேரின் சார்பாகவும், இந்த களத்தில் உயிர்துறந்த அப்பாவித் தமிழர்களுக்கும் பிற நாட்டவர்க்கும் அஞ்சலி செலுத்த விரும்புகிறேன். மேலும் புலம் பெயர்ந்து தங்கள் முகம் தொலைத்து முகவரி இழந்து தவிக்கும் அத்தனை தமிழருக்கும் இப்பதிவினை அர்ப்பணிக்கிறேன்.
இப்புத்தகத்தின் விவரம் :
சயாம் மரண ரயில் - சொல்லப்படாத மெளன மொழிகளின் கண்ணீர்
ஆசிரியர் : சண்முகம்
தமிழோசை பதிப்பகம்,
21/8, கிருஷ்ணா நகர், மணியகாரம்பாளையம் சாலை, கணபதி, கோயமுத்தூர்-641 012.
தொலை பேசி - 9486586388, விலை ரூ 150.
இதே பதிப்பகத்தின் சமீபத்திய இன்னுமொரு நூல் -
சயாம்-பர்மா மரண ரயில்பாதை மறக்கப்பட்ட வரலாற்றின் உயிர்ப்பு - சீ.அருண்; பக்.224; ரூ.130
மேல்விவர சுட்டிகள் :
http://en.wikipedia.org/wiki/Burma_Railway
http://www.far-eastern-heroes.org.uk/Reg_Rainer_Returns/html/death_railway.htm
http://www.cofepow.org.uk/pages/asia_thailand1.html
21 comments:
புதிய தகவல்...
migavum mukkiyamaana pathivu.
nandrigal
-Balaji paari
http://chozanaadan.blogspot.com/2006/07/15.html
Nandri Poongundran.. thodarnthu vaanga!
Balaji - nandri..
anony - pathen unga chuti.. hmmm paka vendiya idangalayum indha noolil irundhu koduthirkinga, magizhchiya irundhadhu!
YOU Have Done a Great Job.
குட்டிப்’பையா,
இதுவரையிலும் கேள்விப்படாத ஒரு உண்மைச் சம்பவத்தையொட்டிய புத்தக அறிமுகத்திற்கு நன்றி! ஏன் இது போன்ற புத்தகங்களை நாடறிந்த புத்தக எழுத்து வியாபாரிகள் இதுவரையிலும் குறிப்பிட்டு எழுதியது கிடையாது என்று இந்த நாளில் இந்த பதிவை படித்ததும் கண்டு வியக்கிறேன்.
எப்படியிருப்பின்னும், இந்த புத்தக அறிமுகம் அனைவரையும் படிக்கத் தூண்டும் விதத்தில் அமைந்துள்ளது. நன்று! சீக்கிரமே வாங்கிடணும். சொந்தப் பிரதி ஒன்றை :)
தெகா , நீங்கள் படிக்காகதை அடுத்தவர்களின் குற்றமாக சொல்லாதீர்கள் =
http://www.jeyamohan.in/?p=3547
http://www.jeyamohan.in/?p=3547
http://www.jeyamohan.in/?p=2760
அய்யா/அம்மா அனானி - நேரடியாக இந்த பொஸ்தகம் குறித்து பெருமளவில் எழுதி குவித்துக் கொண்டிருக்கும் இலக்கிய வட்டங்கள் சுட்டிக்காட்டி எழுதியிருக்கிறதா? நீங்கள் கொடுத்த இணைப்பு பதிவுகளில் எங்கும் இந்த புத்தகம் சார்ந்து பேசப் படவில்லையே...
நன்றி ஜெரி :)
தெக்கி - நன்றி நன்றி ! வெகு சில பதிவுகள் தேடினால் கிடைக்கின்றன...
அனானி - நன்றி - பார்த்தேன். எனக்கும் இந்த புத்தகத்தை ஒட்டி அங்கே எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. என்ன பார்க்க வேண்டும் என நினைக்கிறீர்கள் என தெளிவாக சொன்னால் நலம்.
வருகைக்கு நன்றி!
அரிய பதிவிற்கு நன்றிகள்!!
சில வருடங்களுக்கு முன் 'The Bridge on the River Kwai' பார்த்த போது கூட எனக்குத் தமிழர்கள் இந்த அளவிற்குப் பாதிக்கப்பட்டது தெரியாது. இந்த கொடுமைகளுக்குக் காரணாமான ஜப்பானியர்கள் அணு குண்டு வீச்சினால் பாதிக்கப்பட்டதைத் தெரிந்திருந்த அளவில் நூறில் ஒரு பங்குக்குக் கூட தமிழர்களுக்குத் தங்கள் வரலாறு தெரியாதது கொடுமை!!
அறிய வேண்டிய வரலாற்றுத் தகவல். பாராட்டுக்கள் !
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பாலா!
//இந்த கொடுமைகளுக்குக் காரணாமான ஜப்பானியர்கள் அணு குண்டு வீச்சினால் பாதிக்கப்பட்டதைத் தெரிந்திருந்த அளவில் நூறில் ஒரு பங்குக்குக் கூட தமிழர்களுக்குத் தங்கள் வரலாறு தெரியாதது கொடுமை!!//
வருத்தமான உண்மை!!!
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தமிழ்வினை!!
அன்பின் சீதா....
இப்படி ஒரு அதிசயத்தை உங்கள் வலைத்தளத்தில் நிகழ்த்தி காட்டுவீர்கள் எனநான்நினைக்கவில்லை,நான் இந்தசெய்தியைஇப்போதுதான்கேள்விப்படுகிறேன்.பெரும்பாலோருக்கும் அப்படித்தான் என்றும் நினைக்கிறேன்,அதனால் தான் அதிசயம் என்று சொன்னேன்,மேலும்ஒருகாரணமும்இருக்கிறது,நீங்கள் பெரும்பாலும் கவிதைகளையும்...இன்னபிற பொதுவான விசயங்களையும் தான் எழுதி வந்தீர்கள்,திடுமென புதிய திசையை நோக்கி அடி எடுத்து வைத்திருப்பது நல்லதொரு வரவேற்ப்பை நிச்சயம் தரும்.....தொடர்ந்து இதே போல் பயணியுங்கள்,நான் இந்த செய்தியை பார்த்தவுடனே என் face book-ல் போட்டுவிட்டேன்..நீங்கள் கொடுத்த அனைத்து இணைப்பையும் போய் பார்த்து அதிசயித்தேன்..ஆம்...உண்மையாக இது நீங்கள் தலைப்பு வைத்தது போல "மறக்கப்பட்ட வரலாறு தான்."......மேலும் இது போல பல அதிசயங்களை நீங்கள் நிகழ்த்த வேண்டும் என வாழ்த்துகிறேன்...
அன்புடன்:ஜெரி..
@ ஜெரி
மகிழ்ச்சி. வாழ்த்துக்களுக்கும் உங்கள் பகிர்வுக்கும் மகிழ்ச்சிக்கும் அன்பான நன்றிகள் பல!
GOOD WORK..புத்தகத்தை படித்துவிட்டு என் தளத்திலும் எழுத முயல்கிறேன்.
உபயோகமான பகிர்வு..
@ திரு - கண்டிப்பா செய்ங்க! நன்றி..
@ கொற்றவை - வாங்க..முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
குட்டி...அருமையான பதிவு.மனம் கசிகிறது.தமிழனின் விதி !
தமிழர்கள்
வாழ்ந்த வரலாறாக இருந்தாலும்
வீர வரலாறாக இருந்தாலும்
செத்த வரலாறாக இருந்தாலும்
இதுவரை முழுமையாக தொகுக்கப்படவில்லை...
இந்நிலையில் தங்கள் பதிவில் குறிப்பிட்டுள்ள செய்தியும் தகவல்களும் புதியதாகவும் அதிர்ச்சியளிக்கக்கூடியதாகவும் உள்ளது...
நன்றி ஹேமா! விதி :( :(
பிரபாகரன் - நன்றி முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்
Post a Comment