யுவனின் வெளியேற்றம் தான் இந்த வருடத்தில் நான் படித்த முதல் புத்தகம். அதற்கு முன்பே ஒன்றிரண்டை ஆரம்பித்து தொடர முடியாமல் போய் தான் வெளியேற்றத்திற்கு வந்தேன். அதை முடிக்கவே மார்ச் ஆகிவிட்டது .
அதன் பின்னர் படித்தவை இங்கே. இடையில் நீராலானது- மனுஷ்ய புத்திரன், , தேசாந்திரி-எஸ்.ரா (இரண்டாம் முறை) இரண்டும் அடங்கும். இவை இரண்டிற்கும் பெரிதாக அறிமுகம் தேவையில்லாத காரணத்தினால் கொடுக்கவில்லை
மஞ்சள் வெயில் - யூமா வாசுகி
யூமாவின் ரத்த உறவு படித்திருக்கிறேன்(இதைப் பற்றி தனியாக எழுதவேண்டும் என வெகு நாட்களாக எண்ணம்) . அவரின் எழுத்தில் விரியும் அந்த வினோத உலகத்தின் மாயை. அவரின் கவிதைகளும் படிக்க ஆரம்பிக்க வேண்டும். மஞ்சல் வெயில் - மிகச்சிறிய ஆனால் மனதை விட்டு அவ்வளவு சீக்கிரம் நீங்காத ஒரு நாவல். ஜீவிதா என்ற அந்த கதாப்பாத்திரத்தின் மீது படிப்பவர் எவருமே காதல் கொள்ளத்தான் வேண்டும். கதாநாயகனின் ஒரு தலைக்காதல், அவளின் எல்லா செயலகளையும் காதலென புரிந்து கொள்ளுதல். கதை மொத்தத்தையுமே காதலிக்கான கடிதமாக, தீராத காதலின் வடிகாலாக, தோல்வியின் உணர்ந்து கொள்ளலாக, காதலை பொழிந்து யூமாவின் மந்திரச்சொற்களால் நிரம்பியிருக்கிறது, கிறங்க வைக்கும் மஞ்சள் வெயில். அவசியம் படிக்க வேண்டிய ஒன்று.
அகல் பதிப்பகம் - ரூ 65 - பக்கங்கள் -134
மறுபக்கம் - பொன்னீலன்
சாகித்ய அகாடமி விருது பெற்ற, மார்க்ஸீய அடையாளம் உள்ள எழுத்தாளர் பொன்னீலன் அவர்களது மறுபக்கம் நாவல், 1982 ஆம் ஆண்டு நடந்த தென்மாவட்ட கலவரமான ‘மண்டைக்காடு கலவரம்’ குறித்தது. கன்னியாகுமரி, தூத்துக்குடி, கேரள எல்லை கிராமங்கள் இடையேயான உறவுகள், மீனவர் மற்றும் மற்ற சாதியினர் இடையேயான உறவு, வேர் விட ஆரம்பித்திருந்த கிறித்துவ மதம், அதை முறியடிக்க ஆர்.எஸ்.ஏஸ்’ன் முயற்சிகள், சிறுதெய்வங்கள், நாட்டுபுற கடவுளர்களையும் திரித்த வடநாட்டு தெய்வங்களின் நுழைதல் எனப் பல்வேறு விஷயங்களைத் தொட்டு செல்கிறது கதைப்போக்கு. தமிழ்நாட்டு வரலாற்றில் ஆர்வம் உடையவர்கள் படிக்க வேண்டிய நாவல். அவ்வப்போது தூவப்பட்டிருக்கும் சில புரட்சிக்கருத்துக்களும் பெண்ணியமும் ரசிக்க வைத்தவை. உண்மை சம்பவங்களின் கோர்வை - நீண்ட விஷயங்களை சொல்வதினாலொ என்னவோ கொஞ்சம் மெதுவாகத் தான் நகர்கிறது. சில நாட்கணக்கில் நாவல்களை முடித்துவிடும் காலத்தில், விஷயங்களை சேகரிக்கவும், நாவலை உருவாக்கவும் வருடக்கணக்கில் உழைத்திருக்கும் ஆசிரியருக்கு தாழ்மையான வணக்கங்கள்.
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் - ரூ. 375 - பக்கங்கள் - 750
The dreamseller - the calling - Augusto Cury
இதுவும் ஒரு மாதிரி alchemist வகை. ஆனால் அதைப் போன்ற ஒரு ஃபேண்டசி தளமாக இல்லாமல் நம் அன்றாட வாழ்க்கையில் நிகழ்வது போல இயல்பான தளம். உலவும் கதாப்பாத்திரங்கள் போல நாம் என்றேனும் சிந்தித்திருப்போம். அவர்களிடம் கேட்கப்படும் கேள்விகள் ஒவ்வொன்றும் நாம் சிந்திப்பதற்காக கேட்கப்படுபவை. இயந்திர மயமாக, உலகத்தனமாகவே ஒடி/ஓட்டிக் கொண்டிருக்கும் வாழ்க்கையில் நம் Priorities என்ன என யோசிக்கவைக்கிறது. தொலைத்த கனவுகளைத் தேடச்சொல்லும் வார்த்தைகள். inspiring and motivating.
Simon & Schuster Co, UK - ரூ 479, பக்கங்கள் - 246
காலம் ஆகி வந்த கதை - இரவி அருணாச்சலம்
நண்பரின் பெட்டியில் இருந்த புத்தகத்தைப் பார்த்து வித்தியாசமான தலைப்பாக இருக்கிறதே என கேட்டு வாங்கிக் கொண்டு வந்து சில மாதங்கள் கழித்துத் தான் படித்திருக்கிறேன். சத்தியமாக அது வரை அது ஈழப்பின்புலம் சார்ந்தது என யோசிக்கக் கூட இல்லை. முழுவதும் அவர்களின் அழகிய தமிழில். மிக அருமையாக, கதை சொல்லியின் பிள்ளைப் பிராயத்தை ஒரு மாதிரி கோர்வையான நிகழ்வுகளால் சொல்லியிருக்கிறது. அதன் மூலம் காட்சியில் விரியும் அந்த அழகான கிராமம், குடும்பம், பாசப்பிணைப்பு, அவர்களின் ஆடு, மாடு , கோழி போன்றவை, கோயில், குலதெய்வம் என அவ்வளவும். இத்தனையும் இப்போது இருக்காதே என்ற வருத்தம் படிக்கும் போதே சூழ்ந்து கொள்கிறதுவெகு சில இடங்களில் மட்டுமே அவர்கள் சந்தித்த பிரச்சனைகள் வருகிறது.. கதையில் திருப்பம் என எதுவும் இல்லை. ஆனால் படிப்பதை நிறுத்த முடியவில்லை. இன்னொரு முறை படித்தால் வேறு பரிமாணம் கிடைக்குமோ என்னவோ. முயற்சி செய்து பார்க்க வேண்டும்.
விடியல் பதிப்பகம் - ரூ 80, பக்கங்கள் - 224
முன் சென்ற காலத்தின் சுவை - செந்தில்குமார்
ஆசிரியரைப் பற்றி பெரிதாக கேள்விப்பட்டிராததால் எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி தான் ஆரம்பித்தேன். கவிதைகள் உருவாக்கிய ஒர் தனி உலகிற்குள் அழைத்துச் செல்லும் வரிகள். உருவங்களுக்கும் உருவின்மைகளுக்கும் இடைவெளியில் நிகழும் சிறுபொழுதுகளை வரிகளாக்குகிறார் என்று சொல்லும் பின்னட்டை வாசகம் தான் எவ்வளவு உண்மை! உருவம் சார்ந்த உருவின்மைகளும் உருவமற்ற உருவங்களும் உருவாக்கும் புதிய கவிதை உலகத்தில் கருணையும் கழிவிரக்கமும் அனுதாபம் கலந்த ஈரமும் நிரம்பியிருக்கிறது.
காலச்சுவடு பதிப்பகம், ரூ 75, பக்கங்கள்- 95.