
உலகத்தில் உயிரினங்கள் எத்தனையோ கோடி. ஒவ்வொன்றும் ஒரு வகை ஆனாலும் அத்தனைக்கும் அடித்தளம் காதல். காமத்தின் இறுகியபிடியை மென்மையாய் மாற்றும் மந்திரம். பொங்கி வரும் அன்பின் பிரவாகம். ஹார்மோன்களின் கிளர்ச்சி. அகமோ புறமோ தேவைகளைப் பூர்த்தி செய்யும் வடிகால். தத்தளித்து தவிக்கையில் கிடைக்கும் ஒரு கிளை. இன்னொரு தாய்மடி. அத்தனை உறவுகளின் ஒரே வடிவம். நம்மையே செதுக்கிக்கொள்ள கிடைக்கும் உளி. சிறகடித்து பறக்க ஒரு இறக்கை. ஏறிக்கொண்டே இருக்கும் போதை.
பாலையில் விழும் மழைத்துளி. பல வண்ண வானவில். பாளமாய் வெடித்து இருக்கும் நிலத்தில் துளிர்விடும் விதை. தேவதைக் கதைகளின் கொடுக்கப்படும் வரம்.தாய்மையைப் போல் தூய்மையான, தன்னலமற்ற அன்பு படர்ந்து விரியும் வற்றாத காட்டருவி. இரவின் மழை. தவழும் குழந்தையின் நடை பழகல். மழலைச் சிரிப்பில் வடியும் எச்சில். முதல்முறையாய் கடற்கரையைப் பார்ப்பவனின் குதூகலம். பிரபஞ்சத்தின் பிரம்மாண்டம்.
திருடித் தின்ற அடிக்கரும்பின் இனிப்பாய் நாக்கில் தித்திக்கும் கள்ளத்தனமான இனிப்பாய்த் தான் முதலில் ஆரம்பிக்கிறது காதல். காதலிக்கப்படுபவருக்கே கூடத் தெரியாமல்! காதலிப்பவருக்கே உரிய பிரத்யேக அனுபவம் அது. பலப்பல பரிணாமங்களையும் படிமங்களையும் கொண்டு கண்களைக் கட்டிக்கொண்டு புதிர்பாதையில் விளையாடும் கண்ணாமூச்சி ஆட்டம். அதுவரையில் முன் இருந்தவற்றை எல்லாம் ஒரு ஒரத்தில் தூக்கி எறிந்துவிட்டு அது மட்டுமே விஸ்வரூபம் எடுத்து செய்யும் வன்முறை.
உறவுகளை வேண்டாதவர்களாக்கி நண்பர்களை தேவையானவர்களாக்கி காதலனை/காதலியை தெய்வம்/தேவதை ஆக்கிடும் ஓர் உன்மத்த நிலை. ஒரு புன்னகையில், ஒரு வார்த்தையில், ஒரு தொடுதலில், ஒரு ஆறுதலில், ஒரு கைப்பற்றலில், ஒரு ஊடலில்/கூடலில் இன்னொரு பிறப்பைத் தரும் மெய்ஞ்ஞானம். ஒரு கதவிலேயே சொர்க்கத்தையும் நரகத்தையும் காட்டக்கூடிய ஒரு மாயக்கண்ணாடி. மொட்டு ஒன்று மலர்வதின் ரகசியம்.
திடீரென வாழ்விற்கு வண்ணம் சேர்க்கும் நிறக்குடுவை. சுவை கூட்டிடும் ஒரு அற்புத நிலை. ரசனைகள் சேர்க்கும் அனுபவம். அழகியல். நம்மையும் நம் சுற்றுப்புறத்தையும் இயற்கையையும் இசையையும் கலையையும் கூடுதல் அழகாக காட்டும் வண்ணத்திரை.
என்ன சொல்லி புரியவைப்பது காதல் என்பது என்ன என்று. வார்த்தைகளில் விளக்க முடியாததொரு பிரபஞ்சத்தின் உணர்வு. அதை நகையாடுபவர்களோ புரியாதவர்களோ, அதை கண்டிப்பாய் அனுபவிக்காதவர்களே!
எந்த வகையிலும் குற்றம் சொல்ல முடியாத அடிப்படையான, அத்தகைய தூய்மையான உணர்வை, உறவை இந்த காதலர் தினத்துக்காக மட்டுமே கூறுவதில் உடன்பாடு இல்லையெனினும் இதை ஒரு காரணமாய்க் கொண்டேனும் எழுதுவதில் மகிழ்ச்சியே.
இவ்வளவு சொல்லிய பிறகும் கண்களில் விழுந்த மெல்லிய துரும்பாய் உறுத்தும் காதல் என்ற பெயரில் நம்மைச் சுற்றி நடக்கும் கூத்துக்களும் முட்டாள்தனங்களும்.
தொடர்கிறேன்.