Wednesday, February 29, 2012

[மறைந்த தடங்களின் குரல்] - நான் சராசரி

நான் பெரிய சமூக நல விரும்பி இல்லை. அவசியம் இல்லாதவற்றில் மூக்கை நுழைப்பது, பிரச்சனைகளில் தலையிடாமல் இருப்பது போன்றவை எனக்கு சிறு வயதிலிருந்தே போதனை செய்யப்பட்டுள்ளது. நாம் உண்டு நம் வேலையுண்டு என்றிருப்பதே நன்மை பயக்குமென மிகத் தெளிவாக எனக்குள் ப்ரோக்ராம் செய்யப்பட்டுள்ளது. என் சொந்த பிரச்சனைகளை நான் யாரிடமும் விவாதிப்பதில்லை. பொதுப்பிரச்சனைகளை மிக நெருக்கமானவர்களிடம் மட்டும் எப்போதாவது அது குறித்த செய்திகள் பார்த்தால் பேசுவதுண்டு. “இவனுங்க எப்பவுமே இப்படித்தான் சார்! இவங்க எல்லாம் திருந்தவே மாட்டாங்க! இப்படித்தான் சுட்டுத்தள்ளனும்..சவூதி’ல மாதிரி தண்டனை வரணும் இங்கயும்! போன்ற சூடான விவாதங்களைக் கூட பிரயாணத்தில் பக்கத்தில் இருந்து வேடிக்கை மட்டும் தான் பார்ப்பேன். அவர்கள் கருத்து வேண்டி என் பக்கம் பார்த்தால் கூட நான் முகத்தை திருப்பிக்கொள்வேன்.

எனது அதிகபட்ச சமூகப்பொறுப்பினை நான் எனது பிளாக்கிலோ பேஸ்புக்கிலோ பதிவாக அல்லது ஸ்டேட்டஸ் மெஸேஜாக பிரகடனப்படுத்திக் கொள்வேன். அல்லது அன்னா ஹசாரே போன்ற அமைதி/அஹிம்சை போராட்டத்திற்கு எனது ஆதரவை தெரிவித்து மெழுகுவத்தி ஏற்றுவேன். லோக் பால் இஸ் த சர்வரோக நிவாரணி என நம்புவேன். அப்படின்னா என்ன என்று கேட்பவர்களுக்கு விளக்கமளிக்க முடியாமல் திணறுவேன். கடைசியாக சொல்லுவேன் அது வந்தா லஞ்சம் கொடுக்க வேண்டியிருக்காது. நம்ம காசு மிச்சம் என்று.

வாழ்வாதார போராட்டங்கள் எப்போதும் எனக்கு மிகையாக தோன்றும். இனப்படுகொலைகள், போர்க்குற்றங்கள் அண்டை நாட்டில் நடந்து கொண்டிருந்தாலும் அது என்னைப் பெரிதாக பாதிக்காது. என் நாட்டிலேயே சுனாமியோ பூகம்பமோ எது நிகழ்ந்தாலும் எனக்கு நிகழாதவரை ஒரு செய்தியே. குடிநீர் வேண்டி பெண்கள் தெருமுனையில் போராட்டம் என்றால் கூட நான் வேறுவழியில் விலகிப் போய்விடுவேன். போலீஸ், அரசாங்க அதிகாரிகளை சந்திக்க நேர்ந்தால் அடக்கமாக நடந்துகொள்வேன். பின்னால் போய் கேவலமாக திட்டுவேன். அரசாங்க கார் செல்கிறது என மணிக்கணக்காக சாலையில் காக்க வைத்தால் கூட யார் போகிறார்கள் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்கமாட்டேன். எனக்கு வேலை முடிய வேண்டுமென்றால் சபித்துக்கொண்டே லஞ்சம் கொடுக்க தயங்க மாட்டேன். வேலையை விட்டுட்டு யார் அலைவது என அதை நியாயப்படுத்திக் கொள்ளவும் செய்வேன்.

எனது கோபங்களை வெறுப்புகளை கொலைவெறியை, வாஷ்பேசினில் சிக்கிக்கொண்ட பூச்சியையும் கழிவறையில் கரப்பான்பூச்சியையும் தண்ணீர் ஊற்றிக்கொன்றோ, இரவு முழுக்க கத்திக்கொண்டிருக்கும் நாய்க்குட்டிகளை காம்பவுண்டில் இருந்து துரத்தியோ, வயதான பிச்சைக்காரருக்குக் கூட சில்லறை இல்லை என தவிர்த்தோ, பாக்கிங் செய்து வரும் பிளாஸ்டிக் குமிழ்களை உடைத்தோ, பழைய பேப்பர்களை சுக்குநூறாக கிழித்தோ தீர்த்துக்கொள்வேன்.

20 குழந்தைகள் சாப்பிடும் செலவில் நான் ப:பே செல்வேன். கொடுத்த காசுக்கு நாசூக்காக சாப்பிடுகிறேன் பேர்வழி என நாகரிகம் கடைப்பிடிப்பேன். வோட்டுப் போட மாட்டேன். எந்த ஆட்சி வந்தாலும் குறைப்பட்டுக்கொள்வேன். என்னைப் பொறுத்த வரையில் அரசியல் ஒரு சாக்கடை. எனது அடிப்படை உரிமைகள் சில மழுங்க அடிக்கப்படுவது தெரிந்தும் பெரிதாக வருத்தப்பட மாட்டேன். என்கவுண்ட்டர்களுக்கு சப்போர்ட் செய்வேன். பெட்ரோல் விலை ஏறினால் பஸ்ஸில் போவேன். பஸ் டிக்கெட் விலை ஏற்றினால் ஷேர் ஆட்டொ மாறுவேன். திஸ் கண்ட்ரி இஸ் வர்ஸ்ட் ஃபார் லிவிங் என சொல்லுவேன். மனித உயிருக்கு இங்கு மதிப்பே இல்லை என சலித்துக்கொள்வேன். ஆனாலும் ஒரு விபத்தைப் பார்த்துக் கூட என் வாகனம் நின்றிருக்காது. டிராபிக்கை குறை சொல்வேன். ஆனால் சமயம் கிடைக்கும் போது நானும் சிக்னல்கள் மீறுவேன். பின்னால் இருப்பவர்கள் நிற்க விடமாட்டார்கள் என சாக்கு சொல்வேன்.

க்ளோபல் வார்மிங்’ஆ? சூரியன் அழிந்துவிடுமா? பூமி மூழ்கிவிடுமா? அதன் முழு கொடுமைகள் ஆரம்பிக்கும் வரையில் நான் உயிரோடு இருப்பேனா தெரியாதே. என் எத்தனாவது தலைமுறை அப்போது இருக்குமோ? அதற்குள் வேறு கிரகத்தில் வாழ கற்றுக்கொண்டுவிடுவார்கள் என அதை டீலில் விட்டுவிடுவேன். மின்சார தட்டுபாடா ? மின்சாரத்தை சேமிக்க எவ்வித வழிமுறைகளையும் கையாளாமல் மின்வெட்டை குறை சொல்லுவேன். இன்வெர்ட்டர் இன்ஸ்டால் செய்து எனக்கு வேர்க்காமல் பார்த்துக்கொள்வேன். எல்லாவற்றிற்கும் உடனடித்தீர்வு ஒன்றைத் தான் என் மனம் தேடும்.

பறவைகள் வாழும் சதுப்பு நிலங்களில், ஏரிகளில் குப்பை கொட்டுவேன். குப்பை நிரம்பி ஒரு குப்பை மேடான பின்பு அதை நிரப்பி ஒரு ப்ளாட் கட்டப்படும். அதிலும் அன்றைய மார்க்கெட்டின் குறைத்த ரேட்டில் ஒன்றை வாங்கிப்போடுவேன். அழிந்து வரும் பறவைகள், காடுகள், மிருகங்கள் குறித்த எந்த ஒரு பிரக்ஞையும் என்னிடத்தில் இருந்துவிடாது. என் தலைமுறைக்கு சொத்து என்ன விட்டுசெல்கிறேன் என வருத்த‌ப்படும் அளவுக்குக் கூட எம்மாதிரியான உலகத்தை விட்டுச் செல்கிறேன் என யோசிக்கமாட்டேன்.

என்னைக் குற்றம் சொல்லிப் பயனில்லை. என்னை என குடும்பம், சமூகம் வளர்த்திருப்பது இப்படித்தான். கூடங்குளம் பற்றிய ஒரு கவியரங்கத்திற்குப் போகிறேன் என சொன்னதற்கு என் அம்மாவின் குழப்பமான ஒரு பார்வை ஆயிரம் கேள்விகளையும் பயங்களையும் பறைசாற்றும். வர்ரதுக்கு மணி ஆகிடுமா என்பதிலிருந்து யோசிக்கமுடியாத ஒரு புள்ளி வரை அது நீளும். ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு என் பயாலஜிக்கல் கிளாக் வேலை செய்கிறதோ இல்லையோ அலைபேசி அழைக்க ஆரம்பித்துவிடும். பெண்ணாக இருக்கும் ஒரே காரணம் இவ்வகையான வரையறைகளுக்கு அழுத்தமான நியாயங்களைக் கற்பித்துவிடும்.

இப்படிநாளும் பொழுதும் கழிந்து கொண்டிருக்கும் வாழ்க்கையில், சராசரித்தனங்களுக்கு அப்பாற்பட்டு சில கருத்துக்களை பதிந்து வைக்க, பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன். எப்போதும் அதற்காகவே இயங்கி கொண்டிருப்பவர்கள் சொல்வது ஒரு வகையில் புளித்துப்போயிருக்கும் நேரங்களில், சமயத்தில் சராசரிகள் சொல்வது எடுபடக்கூடும். இவனே சொல்கிறானே என்று. அப்படி ஒரு சராசரியின் குரலாக, தொடர்கிறேன்...

Thursday, January 26, 2012

சமீபத்தில் படித்தவை

2011 படித்த வரிசையின் முதல் சில தாண்டி மீதி இங்கே. [1]... [2]..

** கோபல்ல கிராமம் - கி. இராஜ நாராயணன்

தம் மண்ணை விட்டு பெயர்ந்து வரும் இன்னொரு இடத்தை தேர்வு செய்து அதை விளைநிலமாகவும் இருப்பிடமாகவும் மாற்றும் ஒரு பெரிய குடும்பத்தினரின் கதை. அழகு தேவதையான தம் வீட்டுப்பெண்ணை விரும்பும் மன்னனை எதிர்த்து எதுவும் செய்ய முடியாமல் கிளம்பும் அந்த் குடும்பத்தைப் காப்பாற்றும் கடவுளின் செயல்களைச் சொல்லும் 130 வயதான அம்மாள், அவரின் மகன், இன்னுமொரு கதாபாத்திரம் என மூன்று தலைமுறைகளின் வாயிலாக சொல்லப்படும் அவர்களின் வரலாறு. வயதான அம்மாள் சொல்லும் கதைகளில் ஏனோ நம் வீட்டு பாட்டிகளிடம் கதை கேட்கும் உணர்வு.

கதையின் ஆரம்பத்திலேயே நிகழும் ஒரு சம்பவம் - தனியே நடந்து செல்லும் ஒரு பெண் தாகம் தாங்காமல் அருகில் உள்ள ஊருணிக்கு நீரருந்த செல்கிறாள். அவளின் பெரிய பாம்படங்களுக்கு ஆசைப்பட்டு ஒருவன் அவளை தண்ணிக்குள்ளேயே வைத்து அழுத்துகிறான். அவள், அவனிடம் இருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ள அவன் கால் கட்டைவிரலை கடிக்கிறாள். அவன் பிடியை விடாமலிருக்கவே மூச்சு திணறி இறந்து போகிறாள். அவள் பிடி இறுகி, அவன் காலை எடுக்க முடுயாமல் தவிக்கிறான். இதை எங்கோ பார்த்தது போல் இருக்கிறது அல்லவா ? "சாமி..எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும் சாமீ"க்கு இது தான் இன்ஸ்பிரேஷன் போல :) (புத்தகத்தின் முதற்பதிப்பு 1976’ஆம் ஆண்டு வெளிவந்திருக்கிறது)

** The Fountain head - Ayn Rand

அய்ன் ராண்ட் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். சமீபமாக ஜெயமோகன் தளத்தில் கிளப்பப்பட்ட சர்ச்சையும் அதன் பின்னான வாதங்களையும் அவ்வப்போது கவனித்திருந்த நேரத்தில் இந்த புத்தகத்தின் எலக்ட்ரானிக் காபி கிடைத்தது. முதல் நாள் திறந்து 60 பக்கங்கள் முடித்த நிலையில் நேரே ஃப்லிப்கார்ட் சென்று ஆர்டர் செய்து விட்டேன். தன் கொள்கைகளிலிருந்து மாறாத ஒருவன் பாரம்பரிய முறைகளை எதிர்த்து தன் தொழில்/திறமை ஆன கட்டிடக்கலையில் காலூன்றுகிறான். கல்லூரியில் இவன் வாதத்திற்கும் கேள்விகளுக்கும் பதிலளிக்கமுடியாத, அவன் எண்ணங்களின் புதுமையையும் புரட்சியையும் ஏற்கமுடியாத‌ ஆசிரியர்கள் ஒன்று சேர்ந்து அவனை கல்லூரியில் இருந்தி விலக்குகின்றனர். அவ‌னோடு ப‌டித்த‌ ந‌ண்ப‌ன், வெற்றிக‌ர‌மாக‌ ப‌டிப்பை முடித்து வெளிவ‌ருப‌வ‌ன், த‌ன‌க்கு காரியம் ஆக‌ யார் காலையும் பிடிப்ப‌வ‌ன், என்ன‌ த‌ர‌த்திற்கும் துணிப‌வ‌ன் என‌ அவ‌னுடைய‌ க‌தாப்பாத்திர‌த்திற்கும் கதாநாய‌க‌னுக்குமான‌ வாழ்விய‌ல் வித்தியாச‌ங்க‌ளை அனாயாச‌மாக‌ சொல்லிப்போகும் ஒரு நாவ‌ல்.

தனக்கான கொள்கைகளை, தன் திறமையை எங்கும் எதற்காகவும் யாருக்காகவும் விட்டுக்கொடுக்காத அவன் பண்பும், கதாநாயகியின் துணிச்சலான காதல், அவள் திறமையும் திமிரும் என இவ்விரண்டு கதாப்பாத்திரங்களின் மேலும், உருவாக்கிய அய்ன் ராண்டின் மேலும் தனி காதலே வந்துவிட்டது. எங்கேயுமே இது ஒரு 50 வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்டது என்ற உணர்வே எழுவதில்லை. அவ்வளவுக்கு இப்போதும் பொருந்தி போகக்கூடிய கதைப்போக்கு.

** பதினெட்டாம் நூற்றாண்டின் மழை - எஸ். ராமகிருஷ்ணன்

'கதை என்பது ஒரு ரகசியமான புதிர் விளையாட்டு. நாம் அந்த விளையாட்டில் பாதியில் கலந்துகொள்கிறோம். பாதியில் விலகியும் விடுகிறோம். அதற்குள் என்ன நடக்கிறது. ஏதோவொரு சம்பவத்தையோ, நிகழ்வையோ, கதாபாத்திரத்தினையோ பின்தொடர்ந்து செல்கிறோம். சம்பவங்கள், நினைவுகள், சமிக்ஞைகள், உணர்வெழுச்சிகள், அறிந்த அறியாத நிலக்காட்சிகள் தோன்றி மறைகின்றன.'

அருமையாக கட்டமைக்கப்பட்ட, மனிதனின் ஆழ்மனதின் ஆசைகளை, வக்கிரங்களை, வருத்தங்களை சொல்லும் கதைகள். கைக்கண்ணாடியை நண்பனைப் போல் நேசிக்கும் சிறுவன், லேசாக பூனைரோமங்களாலான மீசை முளைத்திருக்கும் சிறுமி, அழகான, தெளிவான முகக்கண்ணாடி ஒன்றை வாங்க ஆசைப்படும் பெண், குடும்பத்தினர் மறந்துவிட்ட பிறந்தநாளைக் தனியாகத் தானே கொண்டாட நினைக்கும் ஒரு நடுத்தர வயது பெண்மணி என நாம் அறியாத கவனிக்க மறந்த பாத்திரங்களின் உணர்வுகள் எஸ் ராவின் வழக்கமான பார்வையில், நடையில் சொல்லப்பட்டிருக்கின்றன.

** கள்ளிக்காட்டு இதிகாசம்

விகடனில் வந்த போதே படித்திருந்தது தான். லேண்ட்மார்க்கில் 3 ஃபார் 2 ஆபரில் ஒன்று தமிழ் எடுக்கலாம் என எடுத்தது. உடனே முடித்துவிடவும் முடிந்தது. நினைவில் நின்ற முக்கியமான காட்சி அந்த பிரசவமும், முடிவுப்ப‌குதியும்.

** மீத‌மிருக்கும் சொற்க‌ள்

1933 முத‌ல் 2004 வ‌ரை - பெண் எழுத்தாள‌ர்க‌ளின் சிறுக‌தைத் தொகுப்பு. தொகுத்த‌வ‌ர் அ. வெண்ணிலா. என்சிபிஎச் வெளியீட்டில்,ஒவ்வொரு எழுத்தாளரைப் பற்றிய சிறுகுறிப்பு, புகைப்படம், அவர்கள் எழுதிய சிறுகதைகள் என்று நிறைய உழைத்திருக்கிறார் தொகுப்பாளர். அந்த‌ந்த‌ கால‌க‌ட்ட‌ங்க‌ளின் ஊடான‌ பெண்ணின் பார்வைக‌ள், எண்ண‌ங்க‌ள், வாழ்க்கை முறைக‌ள், ச‌முதாய‌ப்பார்வை என‌ ஒரு நூற்றாண்டின் ஊடுருவல். த‌ன் அம்மாவைக் குறித்து ச‌ரியாக‌ புரிந்துகொள்ளாம‌ல், ஒரு வ‌கையில் தாயை பிடிக்காம‌ல் கூட‌ வ‌ள‌ர்ந்து வ‌ரும் ம‌க‌ள், த‌ன் அப்பாவையும் பாட்டியையுமே பெருமையாய் நினைத்து திரியும் நிலையில், மெல்ல‌ வ‌ள‌ர‌ வ‌ள‌ர‌ த‌ன் அம்மாவின் உண‌ர்வுக‌ளை புரிந்து கொள்ள ஆர‌ம்பிப்ப‌து என‌ அழ‌கான‌ கோர்வையை கொடுத்திருக்கும் உஷா சுப்பிர‌ம‌ணிய‌ம், சூடாம‌ணி, பாமா போன்ற‌வ‌ர்க‌ள் குறிப்பிட‌த்த‌குந்த‌வ‌ர்க‌ள்.

** The lost Symbol - Dan Brown

இந்த புத்தகத்தை முடித்ததன் மூலம் இவரின் அனைத்து படைப்புக்களையும் படித்தாகிவிட்டது. டாவின்சி கோட் முத‌ல் இது வ‌ரை - எந்த‌ நாவ‌லும் பெரிதாய் ஏமாற்றிவிட‌வில்லை. ப‌டிப்ப‌தில் தொய்வு ஏற்ப‌ட்டிருந்த‌ நாட்க‌ளில் ஒன்றில், Just to Perk up, இதை எடுத்தேன். ஒரு வார‌ இறுதியிலேயே ப‌டித்து முடித்துவிட‌ முடிந்த‌து கிட்ட‌த்த‌ட்ட‌ 600 ப‌க்க‌ங்க‌ளை. துரத்தல்களுக்கு மத்தியில் தப்பித்தல், அதன் மத்தியில் வ‌ழ‌க்க‌மான‌ ஒரு தேட‌ல், புதிர்க‌ள், குறியீடுக‌ள், வ‌ர‌லாறு, ம‌றைக்க‌ப்ப‌ட்ட‌ சில‌ உண்மைக‌ள் என அதே ஃபார்ம‌ட். ஆனாலும் சுவார‌ஸ்ய‌த்திற்கு குறைவில்லை. ஒரு சாம்பிள் - ஜார்ஜ் வாஷிங்ட‌ன் மேச‌ன்க‌ள் என‌ப்ப‌டும் ஒரு சமூக‌த்தை சார்ந்த‌வ‌ர் என‌வும் அவ‌ரிம் ந‌ம்பிக்கைக‌ளின் ப‌டி தான் வாஷிங்டன் ந‌க‌ரின் ப‌ல்வேறு க‌ட்டிட‌ங்க‌ள் வ‌டிவ‌மைக்க‌ப்ப‌ட்ட‌ன‌. அத‌ற்குரிய‌ சில‌ வ‌ழிமுறைக‌ள், ச‌ம்பிர‌தாய‌ங்க‌ள் அனைத்தும் க‌டைப்பிடிக்க‌ப்ப‌ட்ட‌ன. அவ‌ரை கிரேக்க‌க் க‌ட‌வுள் சீய‌ஸைப் போல‌ செய்த‌ சிலை ஒன்று ர‌க‌சிய‌ம். Google George Washington Zeus and check it yourself!

** A Walk in the Woods - Bill Bryson

The last Continent என்ற பிரபல புத்தகத்தை எழுதியவர். மிதமான நகைச்சுவையுடனும், யதார்த்தமான விவரிப்புகளுடனும், நிறைய சுற்றுப்புற சூழல் மற்றும் காடுகள் சார்ந்த தகவல்களுடனும் ஒரு சுவாரஸ்ய நடை இவரது ப்ளஸ். அப்பலாச்சியன் ட்ரெயில் எனப்படும் அமெரிக்காவின் மிக நீண்ட மலைப்பயணத்தை மேற்கொள்ள அவரும் அவர் நண்பரும் எடுக்கும் முயற்சிகளும் அனுபவங்களும் அவர் சந்திக்கும் மனிதர்களும் என விரியும் அவரது இந்த பயணக் கட்டுரையைப்படித்த பின் நானும் ஏன் எனது ட்ரெக்கிங் அனுபவங்களை( செல்வது அனேகமாக ஒரே இடமாக இருப்பினும் ;) ) எழுதக்கூடாது என்ற விபரீத ஆசை உருவாகிவிட்டது :) ஹிஹி :)

**

ஆரம்பித்து முடிக்க அல்லது தொடர‌ முடியாமல் இருப்பவை கொற்கை, ஹோமரின் இலியாத்.

**

Tuesday, January 10, 2012

தனுஷ்கோடி சொல்லும் பாடம் என்ன?



கடந்த சில ஆண்டுகளாகவே புதுவருடம் எப்போதும் வீட்டில், தூங்கத் தயாரான நிலையில், சன் டிவியில் பட்டாசு வெடிப்பதைப் பார்த்துத் தான் ஆரம்பித்துக் கொண்டிருந்தது! இவ்வருடம் HBO’வில் Inception படம் பார்த்து! ஆனால் இடம் தான் கொஞ்சம் வித்தியாசம். நண்பர்களுடன் முதல் முறையாக இராமேஸ்வரம். இராமேஸ்வரத்தை விட தனுஷ்கோடி ஆர்வம் தான் இப்பயணத்தில் இணைவதில் என்னை செலுத்தியிருக்கக்கூடும்.



தனுஷ்கோடி பார்க்கவேண்டுமென்பது உண்மையிலேயே வெகுநாள் திட்டமாக இருந்தது. வருடத்தின் ஆரம்பத்தில் தேசாந்திரி படித்துக்கொண்டிருந்த போது, அதில் வரும் ஒவ்வொரு இடங்களையுமே ஒரு முறையாவது பார்த்துவிட வேண்டுமென்ற ஒரு வேகம் வந்தது. அதில் முக்கியமானது தனுஷ்கோடி. காரணம், அடிக்கடி சென்று வரும் எங்கள் ஊரிலிருந்து சில மணி நேர தொலைவில் தான் இருந்தது அது. அவ்வளவு அருகில் இருந்துகொண்டும் இவ்வளவு நாட்களாக பார்க்கமுடியாமல் போய்விட்டதே என்ற வருத்தம் மேலோங்க, அடுத்த தடவை ஊருக்கு செல்லும்போது கண்டிப்பாக சென்றுவிட வேண்டும் என நினைத்துக்கொண்டிருந்தேன். ஒரு முறை அம்மாவிடம் அது பற்றி பேசிக்கொண்டிருக்கையில் அவர் சிறுவயதில் ஊருக்கு வந்து தனுஷ்கோடி நிகழ்வைப் பற்றி பாடுவார்கள் எனவும் அது அவ்வளவு சோகம் நிறைந்ததாக இருக்கும் எனவும் குறிப்பிட்டார். அந்த காலத்தில் ஏற்பட்ட பேரழிவுகளில் மிகப்பிரதானமாக இருந்ததும் வாய்மொழியாகவே மக்கள் இது பற்றி அறிந்ததும் பற்றி சொல்லி மேலும் ஆர்வத்தை கிளப்பிவிட்டார். ஏப்ரல் மாதத்தில் ஒரு வார விடுமுறையில் ஊருக்கு போய்விட்டு அப்படியே அங்கே செல்லலாமெனவிருந்ததை வெயில் கருதி கொடைக்கானல் மாற்றவேண்டியதாயிற்று. இந்த தடவையும் இப்படி அப்படி என்று கடைசி நிமிடம் வரை அலைமோதி தான் பயணத்தில் சேரும்படி ஆனது. இராமேஸ்வரத்தில் முந்தைய இரவு இறங்கியதுமே இனம் புரியாத ஒரு உணர்வு தொற்றிகொண்டது. தனுஷ்கோடி என்னை அழைத்திருப்பது இப்போது தான் என நினைத்துக்கொண்டேன்.


தனுஷ்கோடி கடலில் இந்த ஆண்டின் முதல் சூரிய உதயத்தைப் பார்த்துவிடலாம் என அதிகாலையிலேயே சென்றுவிட்டோம். முகுந்தன்சத்திரம் என்ற அந்த ஒரு இடம் வரை தான் வாகனங்கள் செல்ல முடிகிறது. அதன் பின் நீளமான ஒரு மணல் திட்டு தான். இருபுறமும் கடலைப் பார்த்தபடியே நடக்கும் அந்த அனுபவம், ஒரு புறம் மட்டுமே கடல் பார்த்து நடந்த நம் கிழக்கு கடற்கரைச் சாலை அனுபவங்களை முற்றிலும் கேள்விக்குறியாக்கிவிட்டு, விசித்திரமானதொரு காட்சிப்பிழை போல தோற்றம் தருகிறது. அந்த அதிகாலையில் சூரியன் உதிப்பதற்கு முன்பு இருக்கும் ஒரு மெல்லிய சிவப்பு படர்ந்த ஒரு வசீகர ஒளியில் கடல் மின்னுவது அதற்கு இன்னமும் வலு சேர்க்கிறது.

அலைமோதும் கரை ஒருபுறம். அலைகளற்ற தேங்கி நிற்கும் நீர் கடலோடு இணையும் ஆரவாரமற்ற மற்றொரு புறம். நடுவில் கிழக்கில் எங்கள் கவனத்தை செலுத்தியபடியே மெல்ல கால்புதைய நடந்துகொண்டிருக்கும் நாங்கள், இந்த இடம் தான் உள்ளே நிஜமான தனுஷ்கோடி வரை செல்ல வாகனங்கள் கிடைக்கும் இடம். எங்களைத் தாண்டி அப்போதே ஒன்றிரண்டு ஜீப்புகள் சென்றன. தேங்கி நிற்கும் கரையோரமே நீரைக் கிழித்துக் கொண்டு அவ்வாகனங்கள் சென்றதை பார்க்கும் போது உண்மையாகவே வியந்து தான் போனேன். இப்படி ஒரு பயணம் அதற்குள்ளாக இருக்குமென நினைத்துக்கூட பார்த்திருக்கவில்லை. ஆச்சரியம் தீர்வதற்குள்ளாகவே சூரியனும் லேசாக எட்டிப்பார்க்க ஆரம்பித்துவிட்டதால் எல்லோரும் அதைப் படம்பிடிப்பதில் ஆர்வமானோம். குறிப்பிட்ட தூரம் வரை சூரியன் ஏறும் வரையில் அங்கேயே இருந்த பின், வண்டிகள் இருந்த இடத்திற்கு திரும்பினோம். புது வருடத்தில் இராமேஸ்வரம் தீர்த்தமாடவும் இராமலிங்கத்தை தரிசிக்கவும் சில நண்பர்கள் கிளம்ப ஆயத்தமானார்கள். இராமலிங்கர் மன்னிக்க, நாங்கள் மட்டும் தனுஷ்கோடி உள்செல்வதாய் தீர்மானித்தோம். ஜீப்புகள் எல்லாம் அந்நேரத்தில் கிளம்பிவிட்டிருந்தன. எங்களுக்காக ஒரு டெம்போ வேன் காத்திருந்தது. இரு புறமும் பெஞ்ச் செட் செய்து ஒரு பெரிய ஸ்கூல் ரிக்‌ஷா போல காட்சியளித்தது.

காலையில் பார்த்து வியந்திருந்த அதே பாதையில் பயணித்தோம். ஷோர்வாக் கேள்விப்பட்டிருக்கிறேன். இது என்ன ஷோர்டிரைவ்?! ஒரு 5-6 கி.மீ அப்படியே பயணித்து ஒரு காலத்தில் தனுஷ்கோடியின் பிரதான இடத்திற்கு வந்து சேர்ந்தோம். செல்லும் வழியிலேயே முட் செடிகளும், அவை மூடிய வீடுகளும், அரித்துப்போன அந்த சுவர்களும் கடல் பறவைகளும், கழுகுகளும் ஒரு வினோத உலகத்தில் நாம் சென்றுகொண்டிருக்கும் உணர்வைத் தருகின்றன. இறக்கிவிட்ட இடத்தில் நின்ற மூன்று பெரிய தூண்கள் நம்மை வரவேற்கின்றன. அலையோசை ஓயாமல் கேட்டுக்கொண்டே இருக்கிறது. எங்கும் இருப்பதை விட அவை அங்கே இன்னும் சோகமாக, வேகமாக இருப்பதைப் போல் ஒலிக்கின்றன. அந்த காலத்திலேயே அவ்வளவு பெரிய பள்ளிக்கூடம், வங்கி, தபால் நிலையம் ஆகியவற்றைக் கொண்டு விளங்கிய ஒரு பெரிய கட்டிடம் எலும்புக்கூடுகளைப் போல் நிற்கிறது. மூழ்கிப்போன தண்டவாளங்களையும் கூரைக்கான தூண்களையும் கொண்டு ஒரு இரயில் நிலையம் இருக்கிறது. மொத்தத்தையும் விழுங்கிவிட்டு அதே போல் சத்தமிட்டுக்கொண்டிருக்கும் அக்கடலும் எத்தனைப் பேரை தன்னுள் புதைத்துக்கொண்டு அமைதியாய் இருக்கும் கரைமணலும் நமக்கு என்ன சொல்ல காத்திருக்கின்றன? நிலைகொள்ளாத கேள்விகளுடன் மேலும் நடக்க, அந்த தேவாலயம் வருகிறது.

அழிவிலும் அதற்கு ஒரு அழகு இருக்கிறது. அதன் வாசலில் நின்று பார்க்கிறேன். எத்தனை ஆராதனைகளைக் கண்டிருக்கும் இந்த மேடை? எத்தனை மக்களை, எவ்வளவு பிரார்த்தனைகளை, பாவமன்னிப்புகளை பார்த்திருக்கும் ? புயல் வெள்ளத்தின் போது எத்தனை பேர் இங்கே வந்து அடைக்கலம் புகுந்திருப்பார்கள் ? அந்த பிரார்தனைகளும் மணியோசைகளும் அந்த காற்றில் தானே கரைந்திருக்கும் ? இயேசுவோ இராமரோ இயற்கையில் இருந்து ஏன் இந்த மக்களைக் காப்பாற்றவில்லை ? இறுகிய மனதுடன் சிறிது நேரம் அங்கேயே சுற்றிக் கொண்டிருக்கிறோம். இன்னமும் அங்கே சில குடும்பங்கள் வாழ்கின்றன. அங்கேயே கடை வைத்து சுற்றுலாப்பயணிகளை நம்பி வாழும் சிலரும் மீன்பிடிக்கும் சிலரும். அவ்வளவு பெரிய ஒரு அழிவிற்கு பின்னும் எது அவர்களை அங்கேயே இருக்க வைக்கிறது?


ஒரு வருடத்தை இந்த சிதிலங்களிலிருந்து ஆரம்பித்திருக்கிறேன். என்னை செலுத்தியது என்ன ? தனுஷ்கோடி எனக்கு சொல்லவிரும்பும் பாடம் என்ன? கேள்விகளுடன் கிளம்புகிறேன். திரும்பிவரும் வழியில், தண்ணீர் வேண்டுமென அழுத ஒரு குழந்தை ‘அங்க பாத்திய்யா எவ்ளோ தண்ணி’ என தாய் கடலைக் காட்டி சமாதானப்படுத்தியதும் வேடிக்கைப்பார்த்து புன்னகைக்க தொடங்கிய நொடியில் கிடைத்தது விடை. வாழ்க்கை என்பது அந்த நிமிட வரம். வருத்தங்களையோ வெறுப்புகளையோ சுமந்தலைய மிகுந்த பிரயத்தனப்படும் நேரங்களில் தூரத்தில் நமக்கான சில சந்தோஷ நிமிடங்கள் மெல்ல மூழ்கிக்கொண்டிருக்கிறது. வாழும் வரை போராடு என்பதை விட வாழும் வரை கொண்டாடு என்பதே சரி என நினைக்கிறேன். நினைத்ததை, பிடித்ததை செய். நீயாய் இரு. நிறைவாய் இற. With No Regrets!

Thursday, September 22, 2011

காகிதப்பூக்களின் நிறமெழுதும் வாசம்…[1]

நாம் பேசிக்கொள்ள இன்னமும் நிறைய மிச்சம் இருக்கிறது.

பேசி பேசித் தீர்த்த பொழுதுகளின் வாசம் மெல்ல காற்றில் கரைந்துகொண்டிருக்கிறது. அதை தக்க வைக்க என்னாலான‌தை முயன்று தோற்றுக்கொண்டிருக்கிறேன். என்னைச் சுற்றிலும் ஒரு மெளனச்சுவர் மெல்ல எழும்புகிறது. என்னை மீறி இடமற்ற, யாரும் உள்நுழைய முடியாத கூடாய் அது உருவாகிறது. மகிழ்ச்சியாய் அதனுள் சிறைப்பட எத்தனித்து கொண்டிருக்கிறேன். மெளனமும் இருளும் தனிமையும் கொண்டு அதனை நிரப்புகிறேன். மெளனம் அனைத்திற்கும் தீர்வாக இருக்கும் என நம்புகிறேன். அதுவும் தவறு தான் என உடைத்துப் போகிறாய்.

வார்த்தைகளற்ற பெருவெளி ஏதோ ஒன்றில் அறியாமல் நாம் சிக்கிக்கொண்டிருக்கவேண்டும். உன்னை நோக்கி குவிந்த வார்த்தைகள் எங்கேயோ விரைந்து மறைகின்றன. ஆடம்பரமாக்க பட்ட வார்த்தைப்பெருவெளிகளில் பஞ்சத்தில் அடிபட்ட ஏழ்மையின் குடியாக மாறிக்கொண்டிருக்கிறோம். உறியில் மிச்சம் இருக்கும் ஒன்றிரண்டு அரிய சொற்களும் பரிதாபமாக கொள்ளையடிக்கப்பட்டுக்கொண்டு இருக்கிறது. உணர்வுகளையும் வருத்தங்களையும் கோபங்களையும் ஓரிரு சத்தங்களில் வெளிக்காட்டுவதோடு நம் பரிமாற்றங்கள் முடிவடைந்துக்கொண்டிருக்கின்றன.

புன்னகைகளும் உற்சாகங்களும் ஊற்றெனப் பெருக்கெடுத்து ஓடிய காலங்கள் நினைவிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்துகொண்டிருக்கிறது. மெல்ல மெல்ல உயிர்த்தெழுந்த செல்கள் மீண்டும் மரணிக்கத் தொடங்கிவிடுவதைப் போல கூக்குரல் இடுகின்றன. உயிர்ச்சூடளித்து என்னை அடைகாத்த அடர்ந்த கருஞ்சிறகுகளின் இறகுகள் மெல்ல உதிர்ந்துவிடுவதைப் போல ஊசலாடிக்கொண்டிருக்கின்றன. பின்னிப் பிணைந்த பாம்புகளைப் போல் கிடந்த நம் பாதச்சுவடுகளின் பாதை தண்டவாளங்களைப் போல் தனித்தனியாய் நீண்டுகொண்டிருக்கிறது. காதலாய் நிகழும் சந்திப்புகள் சலிப்பிற்குரிய கடமைகளாய் மாறத்தொடங்குகிறது. சிரிப்புக்களை இடம் மாற்றிவிட்டு சலிப்புக்களும் வெறுப்புகளும் கோபங்களும் குடிகொள்ளத் தொடங்கிவிட்டன.

கட்டி எழுப்பப்பட்ட எனது கனவு தேசங்கள் அனைத்தும் கேள்விக்குறிகளாய் மாறுகின்றன. அதன் கூரிய வளைவுகளில் என் கழுத்தைச் சுற்றி கருணையே இல்லாமல் என்னை இழுத்துப் போகின்றன. மிகுந்த அலறல்களின் இடையில் என்னை பள்ளாத்தாக்கின் மேலிருந்து விடுவிக்கின்றன. விழுந்து கொண்டே இருக்கையில் விழிக்கிறேன். விழித்து விழித்து பின் மீண்டும் வீழ்கிறேன்.

தேவதைக்கதைகளில் வரும் ஏழுகடல்கள் ஏழுமலைகள் தாண்டி இருக்கும் அரக்கனின் காவலில் உள்ள கிளியின் உயிரை போன்றதாகிவிட்டது நம் பிரியங்கள். அரியது போல, மிக மிக வேண்டப்பட்டது போல, பல போர்களை தூண்டும் வேட்கை போல, மனிதத்தின் ஆழத்தில் ஒளிந்திருக்கும் மெல்லிய வன்மங்களைப் போல, இடம் மாறினாலும் நிறம் மாறினாலும் அடையாளம் மாறாத அதே பிரியங்கள். எங்கேனும் யாரேனும் பரிசளிக்கும் ஒரு மந்திர வாளோ பறக்கும் மந்திர கம்பளமோ கிடைத்துவிடாதா சிறைப்பட்டிருக்கும் என் பிரியத்துக்குரிய நேசங்களை மீட்க என்ற ஏக்கத்துடன் கூடிய மெல்லிய நம்பிக்கையின் ரேகை ஒன்று ஆயுள் ரேகையை தாண்டிச் செல்கிறது என் உயிர்த்திருத்தலின் நோக்கங்களை எடுத்துக்கூறியபடி.

வேறு வேறு கூடுகள். வேறு வேறு எல்லைகள். தொடுவானங்கள் அவரவர் திசைகளிலும் வெவ்வேறு தூரங்களிலும். எனினும் ஒரே உலகத்தில் தானே சஞ்சரித்துக்கொண்டிருக்கிறது நம் உடல்களும் உயிரும். அதுவும் நமக்கு மட்டுமேயான உலகமாய் மாறிவிடும் என்ற கனவுகளுடன் இப்போது கலைந்து போகிறேன்.

நாம் பேசிக்கொள்ள இன்னமும் நிறைய மிச்சம் இருக்கிறது…

Tuesday, June 14, 2011

சமீபத்தில் படித்தவை

யுவனின் வெளியேற்றம் தான் இந்த வருடத்தில் நான் படித்த முதல் புத்தகம். அதற்கு முன்பே ஒன்றிரண்டை ஆரம்பித்து தொடர முடியாமல் போய் தான் வெளியேற்றத்திற்கு வந்தேன். அதை முடிக்க‌வே மார்ச் ஆகிவிட்ட‌து .

அத‌ன் பின்ன‌ர் ப‌டித்த‌வை இங்கே. இடையில் நீராலான‌து- மனுஷ்ய புத்திரன், , தேசாந்திரி-எஸ்.ரா (இரண்டாம் முறை) இர‌ண்டும் அட‌ங்கும். இவை இர‌ண்டிற்கும் பெரிதாக‌ அறிமுக‌ம் தேவையில்லாத‌ கார‌ண‌த்தினால் கொடுக்க‌வில்லை :)

மஞ்சள் வெயில் - யூமா வாசுகி

யூமாவின் ரத்த உறவு படித்திருக்கிறேன்(இதைப் ப‌ற்றி த‌னியாக‌ எழுத‌வேண்டும் என‌ வெகு நாட்க‌ளாக‌ எண்ண‌ம்) . அவரின் எழுத்தில் விரியும் அந்த வினோத உலகத்தின் மாயை. அவரின் கவிதைகளும் படிக்க ஆரம்பிக்க வேண்டும். மஞ்சல் வெயில் - மிகச்சிறிய ஆனால் மனதை விட்டு அவ்வளவு சீக்கிரம் நீங்காத ஒரு நாவல். ஜீவிதா என்ற அந்த கதாப்பாத்திரத்தின் மீது படிப்பவர் எவருமே காதல் கொள்ளத்தான் வேண்டும். கதாநாயகனின் ஒரு தலைக்காதல், அவளின் எல்லா செயலகளையும் காதலென புரிந்து கொள்ளுதல். கதை மொத்தத்தையுமே காதலிக்கான கடிதமாக, தீராத காதலின் வடிகாலாக, தோல்வியின் உணர்ந்து கொள்ளலாக, காதலை பொழிந்து யூமாவின் மந்திரச்சொற்களால் நிரம்பியிருக்கிறது, கிறங்க வைக்கும் மஞ்சள் வெயில். அவசியம் படிக்க வேண்டிய ஒன்று.

அகல் பதிப்பகம் - ரூ 65 - பக்கங்கள் -134

மறுபக்கம் - பொன்னீலன்

சாகித்ய அகாடமி விருது பெற்ற, மார்க்ஸீய அடையாளம் உள்ள எழுத்தாளர் பொன்னீலன் அவர்களது மறுபக்கம் நாவல், 1982 ஆம் ஆண்டு நடந்த தென்மாவட்ட கலவரமான ‘மண்டைக்காடு கலவரம்’ குறித்தது. கன்னியாகுமரி, தூத்துக்குடி, கேரள எல்லை கிராமங்கள் இடையேயான உறவுகள், மீனவர் மற்றும் மற்ற சாதியினர் இடையேயான உறவு, வேர் விட ஆரம்பித்திருந்த கிறித்துவ மதம், அதை முறியடிக்க ஆர்.எஸ்.ஏஸ்’ன் முயற்சிகள், சிறுதெய்வங்கள், நாட்டுபுற கடவுளர்களையும் திரித்த வடநாட்டு தெய்வங்களின் நுழைதல் எனப் பல்வேறு விஷயங்களைத் தொட்டு செல்கிறது கதைப்போக்கு. தமிழ்நாட்டு வரலாற்றில் ஆர்வம் உடையவர்கள் படிக்க வேண்டிய நாவல். அவ்வப்போது தூவப்பட்டிருக்கும் சில புரட்சிக்கருத்துக்களும் பெண்ணியமும் ரசிக்க வைத்தவை. உண்மை சம்பவங்களின் கோர்வை - நீண்ட விஷயங்களை சொல்வதினாலொ என்னவோ கொஞ்சம் மெதுவாகத் தான் நகர்கிறது. சில நாட்கணக்கில் நாவல்களை முடித்துவிடும் காலத்தில், விஷயங்களை சேகரிக்கவும், நாவலை உருவாக்கவும் வருடக்கணக்கில் உழைத்திருக்கும் ஆசிரியருக்கு தாழ்மையான வணக்கங்கள்.

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் - ரூ. 375 - பக்கங்கள் - 750

The dreamseller - the calling - Augusto Cury

இதுவும் ஒரு மாதிரி alchemist வகை. ஆனால் அதைப் போன்ற ஒரு ஃபேண்டசி தளமாக இல்லாமல் நம் அன்றாட வாழ்க்கையில் நிகழ்வது போல இயல்பான தளம். உலவும் கதாப்பாத்திரங்கள் போல நாம் என்றேனும் சிந்தித்திருப்போம். அவர்களிடம் கேட்கப்படும் கேள்விகள் ஒவ்வொன்றும் நாம் சிந்திப்பதற்காக கேட்கப்படுபவை. இயந்திர மயமாக, உலகத்தனமாகவே ஒடி/ஓட்டிக் கொண்டிருக்கும் வாழ்க்கையில் நம் Priorities என்ன என யோசிக்கவைக்கிறது. தொலைத்த கனவுகளைத் தேடச்சொல்லும் வார்த்தைகள். inspiring and motivating.

Simon & Schuster Co, UK - ரூ 479, பக்கங்கள் - 246

காலம் ஆகி வந்த கதை - இரவி அருணாச்சலம்

நண்பரின் பெட்டியில் இருந்த புத்தகத்தைப் பார்த்து வித்தியாசமான தலைப்பாக இருக்கிறதே என கேட்டு வாங்கிக் கொண்டு வந்து சில மாதங்கள் கழித்துத் தான் படித்திருக்கிறேன். சத்தியமாக அது வரை அது ஈழப்பின்புலம் சார்ந்தது என யோசிக்கக் கூட இல்லை. முழுவதும் அவர்களின் அழகிய தமிழில். மிக அருமையாக, கதை சொல்லியின் பிள்ளைப் பிராயத்தை ஒரு மாதிரி கோர்வையான நிகழ்வுகளால் சொல்லியிருக்கிறது. அதன் மூலம் காட்சியில் விரியும் அந்த அழகான கிராமம், குடும்பம், பாசப்பிணைப்பு, அவர்களின் ஆடு, மாடு , கோழி போன்றவை, கோயில், குலதெய்வம் என அவ்வளவும். இத்தனையும் இப்போது இருக்காதே என்ற வருத்தம் படிக்கும் போதே சூழ்ந்து கொள்கிறதுவெகு சில இடங்களில் மட்டுமே அவர்கள் சந்தித்த பிரச்சனைகள் வருகிறது.. கதையில் திருப்பம் என எதுவும் இல்லை. ஆனால் படிப்பதை நிறுத்த முடியவில்லை. இன்னொரு முறை படித்தால் வேறு பரிமாணம் கிடைக்குமோ என்னவோ. முயற்சி செய்து பார்க்க வேண்டும்.

விடியல் பதிப்பகம் - ரூ 80, பக்கங்கள் - 224

முன் சென்ற காலத்தின் சுவை - செந்தில்குமார்

ஆசிரியரைப் பற்றி பெரிதாக கேள்விப்பட்டிராததால் எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி தான் ஆரம்பித்தேன். கவிதைகள் உருவாக்கிய ஒர் தனி உலகிற்குள் அழைத்துச் செல்லும் வரிகள். உருவங்களுக்கும் உருவின்மைகளுக்கும் இடைவெளியில் நிகழும் சிறுபொழுதுகளை வரிகளாக்குகிறார் என்று சொல்லும் பின்னட்டை வாசகம் தான் எவ்வளவு உண்மை! உருவம் சார்ந்த உருவின்மைகளும் உருவமற்ற உருவங்களும் உருவாக்கும் புதிய கவிதை உலகத்தில் கருணையும் கழிவிரக்கமும் அனுதாபம் கலந்த ஈரமும் நிரம்பியிருக்கிறது.

காலச்சுவடு பதிப்பகம், ரூ 75, பக்கங்கள்- 95.

Friday, April 1, 2011

யுவன் சந்திரசேகரின் ’வெளியேற்றம்’ நாவல்

அந்த ஒரு கணத்தை எல்லாரும் கட்டாயம் கடந்து வந்திருப்போம். எல்லாத்தையும் விட்டுவிட்டுப் போய்விடலாம், எதுவுமே தேவையில்லை என யோசிக்கும் ஒரு கணம். என்ன வாழ்க்கை இது என யோசிக்கும் ஒரு கணம். தனியே பிரயாணித்துக் கொண்டிருக்கையில் இறங்குமிடமே வராமல் அப்படியே பயணம் தொடர்ந்து கொண்டே இருக்காதா என ஏங்கும் ஒரு கணம். பறவையைப் போல எந்தக் கட்டுப்பாடுகளும் கடமையும் இல்லாமல் பறந்து திரிய நினைக்கும் ஒரு கணம். எல்லாவற்றில் இருந்தும் வெளியேறி வெறுமையாய்த் திரிய வேண்டும் என விரும்பும் ஒரு கணம்.

"வெளியேறுதலும் வெளியேற்றப்படுதலுமே மனித அனுபவத்தின் சாரமாக இருக்கின்றன. குடும்பம், நம்பிக்கைகள் மற்றும் தம்மைப் பிடித்திருக்கும் ஏதெனும் ஒன்றிலிருந்து மனிதர்கள் தொடர்ந்து வெளியேற்றப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் சார்ந்திருக்கும் அமைப்புகள்தாம் அந்த வெளியேற்றத்தை நிகழ்த்துகின்றன. அவை சில சமயம் தண்டனையாகவும் சில சமயம் விடுதலையாகவும் உருக்கொள்கின்றன." என்ற பின்னட்டையின் வாசகமும் இப்புத்தகத்தை வாசிக்க வேண்டும் என ஈர்த்ததில் தன் பங்கைச் செய்தது.

மேற்சொன்ன வெளியேற்றங்களுக்கு அப்பாலும் வெளியேறிச்செல்லும் ஒருவரின் கதை இது. அதை, அவரைச்சுற்றிப் படிந்திருக்கும் பல பேரின் கதைகளைக் கொண்டே கட்டமைக்கப்பட்டிருக்கிறது. முதல் பாதி முழுக்க தனித்தனி இழையாக ஒவ்வொருவரின் கதைகள் ஒவ்வொரு அத்தியாயமாக வருகின்றன. பின்பாதியில் அத்தனைக்கும் குறுக்கில் இழைகளைக் கோர்த்து அவை பின்னிப் படரும் புள்ளிகளைப் பார்வைக்கிடுகிறார் யுவன். மெல்ல கட்டவிழ்கிறது ஒரு பெரும் மனிதரின் கதை. அவரைச் சுற்றி அவரைப் பற்றி அறிந்த அவரால் ‘வெளியேற்றப்பட்ட’, அவரின் அற்புதங்களைச் சந்தித்த மனிதர்களின் கதைகளால் நெய்யப்பட்டிருக்கிறது.

பயணங்களில் சந்திக்கும் சுவாரஸ்யமான பக்கத்து இருக்கைக்காரரின் பேச்சு போல மிக இயல்பாய் பயணிக்கிறது ஒவ்வொருவரின் கதையும். தொடர்ந்து வந்த நிறைய கதாபாத்திரங்களினால் எனக்கு ஒரு சில இடங்களில் யாரின் கதை என்னது என பிற்பாதியில் நினைவு கொள்வதற்குத்தான் கொஞ்சம் சிரமமாக இருந்தது. இன்னும் பயிற்சி தேவைப்படுகிறது போலும்.

40வயதைக் கடந்த ஒருவர் ஒரு கல்யாணத்திற்காய் தனியாய் பயணம் செய்கையில் சந்திக்கும் ஒரு நபரின் கதை அவரிடம் ஒரு மாற்றத்தைக் கொண்டுவருகிறது. மிகச் சராசரியாய் ஒரு எல்.ஐ.சி. முகவராய் இருந்து, திருமணம், இரண்டு குழந்தைகள், நாற்பது வயதில் ஒரு சொந்த வீடு என பெரும்பாலான வாழ்க்கையைக் கழித்த அவருக்கு தான் சந்தித்த நபரின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் மிக அதியசமாகவும் ஈர்க்கும்படியாகவும் இருக்கின்றன. அதன் பின்புலத்தில் இருப்பவர்களையும் அவர்களின் அனுபவங்களையும் அத்தனைப்பேரையும் இன்று சேர்க்கும் புள்ளியையும் தேடிச்செல்கிறார். இதுவே நமக்கு இரண்டாவது பாதியில் தான் புலப்படுகிறது.

ஒவ்வொரு கதைகளும் ஒவ்வொரு விதம். எத்தனை வட்டார வழக்குகள், பழக்கங்கள், மொழிகள், இடங்கள்! அவர் கேட்கும் கதையை நாமும் பக்கத்தில் இருந்து கேட்பது போன்ற உணர்வு. பக்கத்து வீட்டு மனிதர்களைப் போன்ற எளிமை, ஒவ்வொரு கதாபாத்திரத்தினிடமும். ஒவ்வொருவருக்கும் அவரவர்க்கான அனுபவங்கள் வேதமூர்த்தி என்ற பெரியவருடனானதே. அவர் இவர்களின் வாழ்வில் ஏற்படுத்திய தெளிவு, காட்டிய வழி, நிகழ்த்திய அற்புதம் என ஒவ்வொன்றும் ஒரு வகை.

ஒரு கதையில் தனக்குப் பெண்சீக்கு வந்ததாய்க் கூறி ஒரு வைத்தியரிடமிருந்து திரும்பி வருகிறான் ஒருவன். இனி வாழ்க்கையே அவ்வளவு தான் என நினைக்கிறான். வரும் பாதையில் தண்டவாளங்களைத் தாண்ட நேருகையில் ரயிலில் பாய்ந்து உயிர் விட்டுவிடலாம் என யோசிக்கிறான். எல்லாவற்றில் இருந்தும் இந்த உடம்புக்கு விடுதலை, உடம்புக்குத் தானே எல்லாம், உயிருக்கு ஏது எனக் கூறும் அந்த சில வரிகளில் மரணத்தின் ஒருவித வசீகரத்தை உணர்வது உண்மை.

மரணத்தின் பின், பிறப்பிற்கு முன்னான உலகம், ஜென்மங்கள், ஜீவசமாதி, பல தத்துவங்கள், அவர் நிகழ்த்தும் அற்புதங்கள் என இவற்றைப் போன்ற விஷயங்களில் பெரிதான நம்பிக்கை இல்லாத என்னைப் போன்ற ஒருவரையும் இயல்பாக சுவாரஸ்யமாகப் படிக்க வைத்ததே இந்நாவலின் வெற்றி எனக்கூறலாம். முக்கியமாக, முன்னுரை இல்லாத இந்த நாவலின் பின்னுரை கூறுவது, கூறப்பட்ட அத்தனை மாயநிகழ்வுகளும் உண்மை என்பதே!!

வெளியேற்ற‌ம் - யுவன் சந்திரசேகர்
உயிர்மை பதிப்பகம்
ஆன்லைனில் வாங்க‌:
http://www.uyirmmai.com/Publications/bookDetails.aspx?bid=256

இந்த பதிவை வெளியிட்ட
உயிர்மை - உயிரோசை'க்கு நன்றி.

Tuesday, March 8, 2011

இன்று மகளிர் தினம்!

எனக்குத் தெரிந்து சில ஆண்டுகளுக்கு முன்பாகத்தான் இங்கே பெண்கள் தினம் என ஒன்று இருப்பது பரவலாகத் தெரிய வந்தது. அதிலிருந்து அன்றைய தினம் அலைபேசி குறுஞ்செய்திகளும் மின்மடல்களும் அழைப்புகளுமான வாழ்த்துக்களுடனே நன்றாகத் தான் செல்கின்றன. பெண்கள் தினத்திற்கென பிரத்யேக விற்பனைகளும் வந்தாயிற்று. ஆடைகளிலிருந்து கணிப்பொறி வரை. தொலைக்காட்சி சிறப்பு நிகழ்ச்சிகள், அலுவலகத்தில் கொண்டாட்டங்கள், போட்டிகள் என அதற்கும் குறைவில்லை.

இதுவும் மேலை நாட்டுக் கலாச்சாரம் என கொடி பிடிப்பவர்களும், ந‌ம் நாட்டில் என‌ பெண்க‌ளுக்கு என்ன‌ ம‌ரியாதைக்குறைவு இருக்கிற‌து ? பிர‌தான‌ ந‌தியில் இருந்து பிர‌த‌ம‌ ம‌ந்திரியை இய‌க்குப‌வ‌ர் வ‌ரை பெண்க‌ள் தானே என‌ வாதிடுபவ‌ர்க‌ளும் இன்ன‌மும் என்ன‌ பெண்க‌ள், பெண்க‌ள் பிர‌ச்ச‌னை என்று பேச இருக்கிற‌து, இப்போது தான் எல்லாத் துறையிலும் வ‌ந்துவிட்டார்க‌ளே என‌ ச‌லித்துக்கொள்வ‌ர்க‌ளும் பெண்க‌ள் குறித்தான‌ பிர‌ச்ச‌னைக‌ளின் அல‌ச‌லை தொலைக்காட்சியில் எப்போதாவது காண‌ நேர்ந்தாலும் உடனே சான‌லை மாற்றிவிடுப‌வ‌ர்க‌ளும் இருந்துகொண்டு தான் இருக்கிறார்க‌ள்.

ஒரு புற‌ம், சென்ற நூற்றாண்டின் கடைசி பத்து இருபது வருடங்களுடன் ஒப்பிட்டாலே, மிக‌ மிக‌ அசாத‌ர‌ண‌மான‌ வ‌ள‌ர்ச்சியை காண‌முடிகிற‌து பெண்க‌ளிட‌ம். இன்னொருபுற‌ம், பெண்க‌ள் மீதான‌ வ‌ன்முறை நிகழ்வுகள் ஒவ்வொரு மூன்று நிமிட‌ங்க‌ளுக்கு ஒருமுறை நிக‌ழ்த்த‌ப்ப‌டுகிற‌து. ஏனிந்த‌ முர‌ண்பாடு. ந‌ட‌ப்ப‌தில் எதை ந‌ம்புவ‌து. எந்த செய்தித்தாளையேனும் எடுத்து வாசித்துப்பார்த்தால் எந்த மூலையிலேனும் பெண்கள் சாதித்த கதை தெரியலாம். பரவலாகத் தெரிவது என்ன என சற்றுப் பொறுமையாக புரட்டிப்பார்த்தால், எத்தனை எத்தனை சிக்கல்கள் பெண்ணாய் இருப்பது என்ற ஒரே காரணத்தினால்.

இன்று ஒரு நீதிமன்ற தீர்ப்பு. கோமாவில் இருக்கும் அறுபது வயதாகும் ஒரு மூதாட்டியை கருணைக்கொலை செய்ய நீதின்றம் மறுப்பு. அதிலென்ன சிக்கல்? நல்ல தீர்ப்பு தானே என யாரும் யோசிக்கும் முன்னரே தொடர்கிறது அவரின் கதை. நர்ஸ்‘ஆக வேலை செய்து வந்த அவர் இருபத்துமூன்று வயதில் ஒரு துப்புரவுத் தொழிலாளியால் பாலியல் வன்முறைக்கு ஆளாகினார்.அவர் எதிர்க்கக்கூடாது என்பதற்காக நாய்களை கட்டும் இரும்புச் சங்கிலியில் அவர் கழுத்தை நெரித்திருக்கிறான். மூளைக்குச் செல்லும் நரம்புகள் பாதிக்கப்பட்டு இத்தனை வருடங்களாக கோமாவில் கழிக்கும் அவரது வாழ்க்கையின் அவலம். கருணைக்கொலை செய்ய விண்ணப்பிக்கும் அளவு சென்றுவிட்ட அவரின் சுற்றுப்புறம். அவர் தொலைத்தது என்ன? இத்தனை வருட வாழ்க்கை. பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படும் பிஞ்சு பெண் குழந்தைகளைப் பற்றி சற்று சிந்தித்துப் பார்த்தால், அவர் வருங்காலம் எத்தனைக் கேள்விக்குறியானது எனப்புரியும். மனரீதியாக அவர்களின் பாதிப்புகள் மட்டுமே அதன்பின் அவர்களின் வாழ்க்கைமுறையை பெரிதும் பாதித்துவிடுகின்றன.

வெளியே தெரிவது மிகச்சில. யாரும் அறியாமல் நிகழ்த்தப்படும் கொடூரங்கள் பலப்பல. யாரும் அறியாமல் சிந்தப்படும் பெண்களின் கண்ணீர்த்துளிகளும் பல கோடி.மேற்கூறிய கடைநிலை வக்கிரங்கள் இல்லாமல், மிகச் சாதரணமாக நடந்துகொண்டிருக்கும் நிகழ்வுகள் பற்றி தனியே சொல்லவேண்டுமா என்ன ? பொது இடங்களில் உரசும் உடல் ரீதியான செயல்களில் இருந்து மிக நுணுக்கமான உணர்வு ரீதியிலான செயல்கள் வரை, ஒன்றா இரண்டா ?

படித்தவர் படிக்காதவர் என்ற பாகுபாடே இல்லாமல் பொருந்தக்கூடிய சில விஷயங்கள் இவை. எத்தனைப் பெண்கள் “இதெல்லாம் தேவையில்லை உனக்கு” என்ற தன் குடும்பத்தின் கருத்துக்காக தங்கள் ஆசையை கனவுகளை நொறுங்கக்கொடுத்து வந்திருக்கிறார்கள். எத்தனைப் பெண்களின் நட்புவட்டங்கள் கணவனுக்குப் பிறகு காணாமலேயே போய்விடுகின்றன. எத்தனை பெண்களின் சின்ன சின்ன ஆசைகள் கூட அநாவசியமாய் அவசியமற்றதாய் ஒதுக்கப்படுகின்றன. பெண்களாய் இருப்பதன் ஒரே காரணத்தினால் இளக்காரமாகப் பார்க்கப்பட்ட தருணங்கள் எத்தனை. அவளை நோக்கி வீசப்படும் கேள்விகள் எத்தனை. துளைக்கும் பார்வைகள் எத்தனை. அத்தனையையும் விட்டுக்கொடுத்து அவர்களையும் புன்னகையுடன் அரவணைத்துச் செல்லும் பெண்கள் எத்தனை பேர்.

நேற்றுப்படித்த அஜயன்பாலாவின் கட்டுரை ஒன்று மிகப்பாதித்தது. ஆடை விஷயங்களில் இன்னமும் கட்டுப்பாடுகளைச் சந்திக்கும் பெண்களின் மனநிலை. அரைகுறையாய் செல்வது சுதந்திரமா என வாதிக்க நான் இங்கே விரும்பவில்லை. இது அதைப் பற்றினதும் இல்லை. மிகச்சாதாரண ஒரு விஷயத்திற்குக்கூட ஒரு வரைமுறைகளின் கீழ் அடக்கியே வைக்கப்பட்டிருக்கும் பெண்ணின் மனநிலையிலிருந்து படித்துப் பாருங்கள் புரியும்.

குளிரூட்டப்பட்ட எல்லா வசதியும் நிறைந்த ஒரு அலுவலகத்தின் கணினியில் இதனை தட்டச்சுவது மிகச்சுலபமானது தான். அத்தனையையும் அனுபவித்து/ அதையே வாழ்க்கையாகக் கொண்டு/ அதிலிருந்து மீண்டு/ குடும்பத்திற்காக உழைத்து/ அதற்கு மேலும் ஒரு நிலையை அடைந்திருக்கும் பெண்கள் அனைவருக்கும் நெகிழ்ச்சியான பெருமிதமான பெண்கள் தின வாழ்த்துகள். இன்னமும் நாம் வாழும் சமுதாயம் பெண்களுக்கு என சில புரிதல்களைக் கொள்ளும் பெண்கள் தினமும் வருங்காலத்தில் வரும் என்ற நம்பிக்கையோடு.

வாழ்த்து தெரிவித்த‌ அனைத்து ந‌ண்ப‌ர்க‌ளுக்கும் ந‌ன்றிக‌ள். உங்க‌ள் வாழ்த்துக‌ளின் பின்னால் உள்ள‌ அன்பும் பெண்கள் மீதான மரியாதையும் வ‌ருங்கால‌த்தை ந‌ம்பிக்கையூட்டுவ‌தாய் ஆக்குகின்றன.

வெளியிட்ட கீற்று.காம்’க்கு நன்றி.

Related Posts with Thumbnails