Showing posts with label நினைவுகள். Show all posts
Showing posts with label நினைவுகள். Show all posts

Monday, October 29, 2012

The PITSTOP... [2]


 [1] [2]

பயணங்கள் பற்றிய பழைய நினைவுகளை எல்லாம் ஒட்டிப் பார்த்ததில் முக்கால்வாசிக்கும் மேலாக வாய்ப்பு மறுக்கப்பட்டு ஒரு மூலையில் உம்மணாம்மூஞ்சியோடு ஒரமாக உட்கார்ந்திருப்பதே படத்தின் இன்டர்வெல் வரை ஓடியது. அதற்கு மேல் எனக்கே தாங்காமல் இன்னும் கொஞ்சம் ரீவைண்ட் செய்ததில் ஒரு 5-6 வயது இருக்கும் போது நடந்த ஒன்று நினைவுக்கு வந்தது. அதற்கான அர்த்தங்களை நான் இதுவரை புரிந்து கொள்ள விழைந்ததே இல்லை. இப்போது நினைக்கும் போது நிஜமாகவே விசித்திரமாக இருந்தது. அப்போது என் பள்ளிக்கு மிக அருகில் ஒரு பெரிய பழைய கால தேவாலயம் ஒன்று இருந்தது. அது எங்கள் பள்ளியை விட பெரிதாகவும் செடி கொடிகளுடன் மண் சாலைகளுடன் அங்கங்கே தனித்தனி பிரார்த்தனை கூடங்களும் பாதிரியார்கள் தங்கும் விடுதிகளும் கொண்ட விசாலமான வளாகம். பள்ளியும் வீடும் மிக அருகில் தான். 5 நிமிட நடை. என்னை பள்ளியிலிருந்து அழைத்து செல்ல என்னைப் பார்த்துக்கொள்ளவும் வீட்டு வேலைகளில் உதவவும் வைத்திருந்த சிவகாமி அக்கா தான் வருவார். எப்போதாவது விடுமுறையிலோ பெர்மிஷனிலோ இருக்கும் போது அம்மாவும் உடன் வருவார். அப்போதெல்லாம் நாங்கள் அந்த வளாகத்திற்கு சென்று வருவோம். அது தான் எனக்கு தெரிந்த முதல் அவுட்டிங் ஸ்பாட். வழியும் தெரிந்த என்று சொல்வது தான் இன்னும் பொருத்தம்.

ஒரு நாளில் பள்ளி விட்டு வீட்டுக்கு செல்லும் போது எனக்கு அந்த எண்ணம் உதித்தது. அந்த வளாகத்திற்குத் தனியாக செல்ல வேண்டுமென. பள்ளியில் இருந்து செல்வது தான் எளிது. எனினும் அக்கா தயாராக நிற்பார். என்றாவது பார்த்துக்கொள்ளலாமென தள்ளி வைக்கவெல்லாம் தோன்றவே இல்லை. ஒன்றே செய் பாணியில் அன்றே அதை செயல்படுத்தியாக வேண்டுமென ஒரு வேகம். வீட்டிற்குச் சென்று உடை மாற்றிவிட்டு எப்போதும் போல பக்கத்துவீட்டில் சென்று விளையாடப்போகிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பினேன்.  மிஞ்சிப்போனால் இரண்டடி உயரம். அதற்கு ஒரு பாவாடைச் சட்டை. ஒரு குடுமி. இந்த உருவத்தை வைத்துக் கொண்டு வெறுங்கையுடன் தெருவில் இறங்கி நடந்தேன். வேகவேகமாக நடந்தும் வழி நீண்டு கொண்டேயிருந்தது. ஏதோ ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி, கொஞ்சம் பயம், கொஞ்சம் ஆர்வம் என கலவையான உணர்வு. ஒரு வழியாக இன்னும் சிறிது தூரம் தான் என்னுமிடத்தில் ஏதோ ஒரு உள்ளுணர்வு உறுத்த திரும்பி பார்த்தேன். புன்னகைத்துக் கொண்டே அக்கா என் பின்னேயே வந்து கொண்டிருக்கிறார்.

பின்னே, எங்கப்பன் குதிருக்குள் இல்லை என நான் அங்கே தான் விளையாடிக்கொண்டிருப்பேன் எனவும் என்னைத் தேடவேண்டாமெனவும் திரும்ப திரும்ப உளறியிருக்கிறேன். பின்னாலேயே வந்து என்னைப் பிடித்துவிட்டார். அவர் என்ன கேட்டார் நான் என்ன பதில் சொன்னேன் என்றெல்லாம் நினைவில்லை. ஆனால் அவர் வீட்டில் என்னை மாட்டிவிடவில்லை. ஏனென்றால் அதற்காக அடி வாங்கியதாய் ரெக்கார்டில் இல்லை! உண்மையாகவே இத்தனை வருடங்கள் கழித்து அது நினைவுக்கு வந்ததும் அது குறித்த இப்போதைய எனது பார்வையும் தான் கொஞ்சம் ஆச்சரியமானது தான். அப்போதிருந்த மனநிலை என்னவென்று அறிய முடியவில்லை எனினும் எனக்கு சில கேள்விகள் எழுந்தன. என்னை செலுத்தியது என்ன ? எனக்கென ஒரு அனுபவம், சுதந்திரம் தேவைப்பட்டதா? யாரையும் சார்ந்து நிற்காமல் வேண்டியதை நிறைவேற்றிக்கொள்ளத் தோன்றியதா ? இப்போது என்னிடம் பதில் இல்லை!

சில மாதங்களுக்கு முன்பு ஒரு புத்தகத்தைப் படித்தேன்.  ப்ரான்ஸ்'ல் இருந்து ஜெனிவா ஏரி வரை (தனியாக) நடைபயணம் மேற்கொள்ளும் ஒரு பெண்ணின் பயணக்கட்டுரை. அங்கே பக்காவாக இதற்கான பயண கையேடுகள், வழிகளில் இவ்வாறு பயணிப்பவர்கள் தங்க விடுதிகள் என எல்லா வசதிகளும் கிடைக்கின்றன. படித்தவுடன் அப்படியே கற்பனை சிறகடித்து பறந்தது. அந்த கிராமங்களும் மக்களும் மலைகளும் காடுகளும் அதன் அழகும். ஆகா. என்ன ஒரு அனுபவம் ?  நம்மால் இங்கே என்ன செய்ய முடியும் ? திருப்பதி மலை, திருவண்ணாமலைகளில் நடை பயணிகளுக்கான ஏற்பாடுகள்  உண்டு. அங்கே செல்வதில் பெரிதான ஆர்வமில்லை! எஸ் ரா ஒரு முறை டவுன் பஸ்களிலேயே மாறி மாறி அவர் ஊருக்கு சென்றது போல, மதுரைக்கு நடந்தால் என்ன ? நெடுஞ்சாலைகள் ஆரம்பித்தவுடன் சூழும் வெறுமையும் இருளும் பயமுறுத்தியது. நடைபாதையில் தூங்க முடியுமா ? பாதுகாப்பு ? உணவு? என அடுக்கடுக்காக வழக்கம் போல ஆகாததைப் போட்டு மேலும் குழப்பினேன். இங்கே அதற்கெல்லாம் வழி இல்லை என கடைசியில் எண்ணம் கைவிடப்பட்டது.  குட்டி குட்டி நடைப்பயணங்கள் மேற்கொள்ளலாம் என அதற்கு சமாதானமும் சொல்லிக் கொள்ளப்பட்டது. ஒரு வாரவிடுமுறையில் பரிசோதனை முயற்சியாய் ஒரு மூன்று பேருந்து நிறுத்தங்கள் தாண்டிச் சென்று வந்தேன். நன்றாகத் தான் இருந்தது.

இதை ஒரு வழக்கமான நடவடிக்கையாகவே மேற்கொள்ள வேண்டுமென்ற ஒரு வெறியில், அலுவலகத்திலிருந்து அடுத்த சந்திப்பு வரை( கிட்டத்தட்ட 5.5 கிமி) அடிக்கடி நடப்பது என முடிவானது. இதன் வசதிக்காக, வைத்திருந்த கைப்பை Backpack'காக மாறியது. வாட்டர் பாட்டில், குளூகோஸ் எல்லாம் கூட வைத்துக்கொள்ளலாம் என எண்ணம். முதல் நாளன்று சீக்கிரமே அலுவலகம் வந்து வேலையெல்லாம் வேகவேகமாக முடித்து வெளிச்சத்தோடே கிளம்புவதாகத் திட்டம் .அரைமணி நேர தாமதமாகத் தான் ஆனால் கிளம்ப முடிந்தது. அலுவலகக் கதவைக் கடக்கும் முன்னரே ஒரு குதூகலம் தொற்றிக்கொண்டது எனக்கே ஆச்சரியமாகத் தான் இருந்தது. இதற்கு முன்னால் பள்ளிக்கூட சுற்றுலாப்பயணங்களுக்கு இருந்தது போன்ற ஒரு உற்சாகம். வெளியேறி நடக்க ஆரம்பித்தேன். வெளிச்சம் அவ்வளவாய் மறையவில்லை. சாலைகள் பேருந்திலிருந்து பார்த்தைவிட வித்தியாசமாகவும் விசாலமாகவும் அழகாகவும் இருந்தன.மாலை நேரக்கடைகளுடன் கூடிய சிறு கடைவீதித் தோற்றம் அவ்வளவு புதிதானதாகவும் மகிழ்ச்சிகரமானதாகவும் இருந்தது. பேருந்தில் சில நிமிடங்களில் தாண்டிவிடும் இடம் பார்க்க ஒரு 15 நிமிடத்திற்கு மேல் நடக்க வேண்டியிருந்தது. அதை எல்லாம் தாண்டி நடந்ததும் வீதியும் நானும் விரையும் வாகங்களும் மட்டுமே இருந்தோம்.

தினமும் கடக்கும் சாலை தான் எனினும் சில இடங்களை அதற்கு முன்பு அதைப் போல பார்த்ததாக நினைவே இல்லை. பாதி கடக்கும் முன்பே நன்கு இருட்டிவிட்டது, ஒரு மணி நேரம் தொடர்ச்சியாக நடந்த பின்பு அந்த முக்கிய சந்திப்பை வந்தடைந்தேன். அங்கிருந்து பஸ் பிடித்து வீட்டுக்குச் சென்றேன். அன்றைப் போலவே சீக்கிரம் வந்து சீக்கிரம் கிளம்பி வாரத்தில் இரண்டு நாட்களாவது நடக்க வேண்டுமென முடிவு செய்தேன். இது நடந்து கிட்டத்தட்ட நான்கைந்து மாதங்கள் ஆகிவிட்டன. அதற்கென மாற்றிய பை, செருப்பு இன்றுவரை தொடர்கிறது.  ஆனால் நடப்பது ? ;)

~பயணிக்கலாம்..

Thursday, August 30, 2012

The PITSTOP...



பயணங்கள் குறித்த எனது ஆழ்மன பிம்பங்களை மேலும் மெருகேற்றிச் சென்றது சமீபத்தில் பார்த்த திரைப்படம் ஒன்று. வெகு நாளாகவே எனது பயணங்கள் பற்றி ஏதாவது எழுத வேண்டும் என மேலோட்டமாய் நினைத்திருந்ததை மிக ஆழமாக யோசிக்க வைத்தது. பயணங்களின் மீதான எனது ஆர்வத்தின் ஆதியை தேடி பயணிக்க வைத்தது. ஒரு படைப்பாக அப்படத்தைப் பற்றி பகிர்ந்துகொள்ளலாம் என நினைத்ததை, அதைப் பற்றி மட்டும் பேசாமல், அது தூண்டிய அத்தனை எண்ணவோட்டங்களைப் பகிர்ந்து கொள்ளவும், எனது பயணங்கள் மற்றும் பயணங்கள் சார்ந்த அனைத்தையும் பகிர்ந்து கொள்ள ஒரு வடிகாலாய் இந்த பதிவை/தொடரை ஆரம்பிக்க வைத்தது. ஒரு நல்ல படைப்பின் குணாதிசியம் அது தானே! எவ்வளவு தூரம் இதை தொடர முடியும் என தெரியவில்லை எனினும் உற்சாகத்துடன் ஆரம்பிக்கும் ஒரு பயணத்தின் மனநிலையிலேயே இதையும் தொடங்குகிறேன்.

எல்லோருக்குமான பயணங்களின் முதல் சுழி இவற்றில் ஏதாவதில் இருந்து தான் ஆரம்பித்திருக்கும், சொந்த ஊருக்குச் செல்வது - திருத்தலங்களுக்குச் செல்வது - பள்ளி/குடும்ப சுற்றுலாக்கள் போன்றவை. . குடும்ப சுற்றுலாக்கள் எல்லாம் நமக்கு பழக்கமே இல்லை! பெரும்பாலான பள்ளி சுற்றுலாக்களுக்கு எனக்கு அனுமதி மறுக்கப்பட்டே இருந்து வந்திருக்கிறது அதன் பொருட்டே அவை மிகுந்த வசீகரமுடையதாய் இருந்தன. இடையில் நான் அழுதுபுரண்டு வாங்கிய சில அனுமதிகளில் தான் என் முதலும் முக்கியமுமான பயணங்கள் தொடங்கின. பால்பண்ணையை பார்வையிடச் சென்றதிலிருந்து கோனே அருவி வரை,  வாழ்வின் முக்கிய ஆசீர்வாதங்களில் ஒன்றாக நான் பயணங்களைத் துதிக்கத் தொடங்கினேன். துரதிர்ஷ்டவசமாக சில வருடங்களுக்கு முன்பு வரையிலும் என் பெரும்பாலான பயணங்கள் என்பது சொந்த ஊருக்குச் செல்வது மட்டுமே. அந்த பேருந்து பயணமும் இரவின் குளுமையும் முகத்தில் அறையும் காற்றை உள்ளிழுத்தையும் எங்கள் ஊரைச் சுற்றி சுற்றி வந்ததையும் பயணக்கனவுகளையும் மட்டும் வைத்துக் கொண்டு “ஐ லவ்வ்வ்வ்வ் டு ட்ராவல்” என இண்டர்வியூக்களில் படம் போட்டிருக்கிறேன். (நானும் எவ்வளவு நாளைக்குத்தான் “ரீடிங் புக்ஸ், ஹியரிங் மியூசிக்” என்ற ரெக்கார்டைத் தேய்ப்பது. தூங்குவது தான் என் பொழுதுபோக்கு என்று கூட ஒன்றில் சொன்ன ஞாபகம். இவை எல்லாம் இல்லாமல் நான் என்ன செய்ய ஆசைப்படுவேன் என நானே சிந்தித்ததன்(?!) விளைவு தான் மேற்கூறியது.)

ஆனால் கடந்த சில வருடங்களாக நான் நினைத்திருந்த மாதிரியான பயணங்களை செய்வதற்கு வாய்ப்பமைந்தது. இத்தனை வருடங்களாக நான் மொத்தமாக பயணித்ததில் கடந்த சில வருடங்களில் செய்தது தான் 80-90 சதவிகிதம் இருக்கும்! சொற்பமாக இருந்தாலும் என்னைப் பொறுத்தவரை அவை முக்கியமானவைகளே. பார்த்தது ஊரளவு, பாராதது உலகளவு என்ற உண்மையை உணர்த்தி என் கனவுகளையும் பல அனுபவப்பாடங்களையும் மேலும் வளர்க்கவே அவை உதவியிருக்கின்றன. பயணம் பிடிக்காத மனிதர்களும் இருப்பார்களா? ஒரு வயது கூட நிரம்பாத குழந்தைகள் கூட ’டாட்டா’ செல்வதற்கு காட்டும் உற்சாகத்திற்கு என்ன காரணம் ? எனப் பல கேள்விகளை எழுப்பியிருக்கின்றன. ஒவ்வொரு பயணமும் ஒரு அனுபவம். அவை பயணம் செய்பவனை மேம்படுத்துகின்றன. இயற்கையோடான உறவை புதுப்பிக்கின்றன. ஒரு குழுவாக செல்லும் போது அவர்களின் உறவு பலப்படுத்தப்படுகிறது. சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு நம்மை மாற்றிக்கொள்ள பக்குவப்படுத்துகின்றன. அப்படிக் கிடைத்த பயண வாய்ப்புகளில் சில இடங்களில் நாட்கணக்கில் சோறுதண்ணியில்லாமல் கூட உட்கார்ந்திருக்கலாம் என ஒரு மாதிரி எக்ஸ்ட்ரீமாகக் கூடத் தோன்றியிருக்கிறது.  எதையும் ரொம்ப உணர்வுபூர்வமாக அணுகினால் இப்படியிருக்குமா என என்னென்னவோ யோசித்திருக்கிறேன். இந்த படம் பார்த்ததுக்கு பின்பு எல்லாமாக சேர்ந்து ஏதேதோ நினைவுகள் அலைமோதி அன்றிரவு தூங்கமுடியவில்லை.

அந்த படம் தெ வே. வாழ்வின் சில மிகப் பெரிய அர்த்தங்களை தன் நீண்ட பயணங்களில் தேடும் மகன்.  தன் தொழிலும் கோல்ப் கோர்ட்டுமான மேல்தட்டு வாழ்க்கையிலேயே திருப்தியாயிருக்கும் கண் மருத்துவரான அப்பா. மகனை புரிந்து கொள்ள எடுக்கும் முயற்சிகளில் பெரிதான வெற்றி காணாதிருக்கிறார். ஒரு வாக்குவாதத்தில் இதுதான் தான் தேர்ந்தெடுத்த வாழ்க்கை என சொல்லும் அவருக்கு, "வாழ்க்கை தேர்ந்தெடுப்பதற்காக இல்லை. வாழ்வதற்கு" என சொல்லி முடிக்கிறான் (You don't chose a life. You live one.) துரதிர்ஷ்டவசமாக தான் மேற்கொண்ட ஒரு முக்கிய, கிறிஸ்தவர்களின் புனிதப்பயணங்களில் ஒன்றான சான் டியாகொ(ஸ்பெயின்) செல்வதற்கான வழியில், புயலில் சிக்கி பயணத்தின் ஆரம்பத்திலேயே இறக்கிறான். மகனின் சடலத்தைப் பெற்றுக் கொள்ள அப்பா ஸ்பெயின் வருகிறார். அவன் பொருட்களை ஒவ்வொன்றாக பார்க்கிறார். அவனுடைய பாஸ்போர்ட், ஹெட்லாம்ப், கைத்தடி, பை என பார்க்க பார்க்க அவன் அவரை கேட்ட கேள்விகள் சில நினைவுக்கு வருகின்றன. அது “வாழ்க்கையில் என்ன கண்டிருக்கிறீர்கள் ? உலகத்தை நீங்கள் பார்க்கவேயில்லையே ? இந்தியா, நேபால், இமயமலை, மொராக்கோ, எகிப்து, பப்பூவா கினியா? உங்கள் கூண்டிலிருந்து முதலில் வெளியே வாருங்கள்”. (இதில் பெரும்பாலானவை என்னுடைய ஹிட்லிஸ்டில் இருப்பவை!)

தன் மகனை புரிந்து கொள்வதற்கான கடைசி சந்தர்ப்பமாக அத்தருணத்தில் தன் வேலை வீடு என அனைத்தையும் ஒத்தி வைத்துவிட்டு அந்த பயணத்தை தான் முடிக்கவேண்டுமென நினைத்துக் கிளம்பும் அவரின் பயணம் தான் முழுக்கதையும். தம் வழக்கப்படி அல்லாமல் அவன் உடலை எரித்து, அச்சாம்பலை வழியெங்கும் முக்கிய இடங்களில் தூவுகிறார். சக பயணிகள் எதற்காக வருகிறார்கள், அவர்களுக்கிடையே என்ன மாதிரியான உறவு, முடியும் போது அவர்களின் மனநிலை என மீதிப்படம் ஒரு அழகிய சிறுகதை. அது நடந்தே கடக்கும் ஒரு பாதை. படம் முழுவதும் அதுவும் ஒரு முக்கிய கதாப்பாத்திரம், இல்லை இல்லை கதாநாயகனும் அதுவே! அப்படி ஒரு அழகு, ஏற்கனவே பிரான்ஸ் கிராமங்களைக் குறித்து படித்தது போதாதென்று ஸ்பெயின் கிராமங்களை வேறு இதில் பார்க்கவும், கிளைமாக்சில் அவர்கள் சென்றடையும் அந்த தேவாலயத்தின் பிரமிப்பும் கட்டிடக்கலையின் அழகும் நுணுக்கமும் - படம் முடியும் தறுவாயில் நானும் ஒரு முறை கட்டாயம் அங்கே செல்வேன் என உறுதிசெய்து கொண்டேன். ( இது மாதிரி எத்தனை?!)

படம் பார்த்து முடித்த, அதன் பாதிப்பு முழுதாக அகலாமல் இருந்த ஒரு இரண்டு நாட்களில் பாலோ கொயெலோ’வின் பில்கிரிமேஜ் நாவலைப் படிக்க ஆரம்பித்தேன். சத்தியமான என்னால் நம்பமுடியவில்லை. அதிலும் சான் டியாகொ!!! அப்பயணத்தை முடித்த பின்பு தான் அவர் இந்த நாவலையே எழுதியிருக்கிறார். அவரைப் பற்றி படத்தில் வரும் எழுத்தாளரும் சகபயணியுமான ஒருவர் சொல்லும் படி ஒரு காட்சி இருந்தது. அதை நான் சரியாக கவனிக்கவில்லை. ஆனாலும் அப்படத்தைத் தொடர்ந்து இந்நாவல் - பாலோ நாவல்களில் வருவது போலவே, "இது தற்செயல் இல்லை. நீ சான் டியாகோ போகவேண்டும் என்பது நிச்சயிக்கப்பட்டிருக்கிறது(?!!) இது ஒரு குட் ஓமன்!!!" என என் மனசாட்சி கூவியது. பாலோ...பார்க்கலாம் :)

(மேலும் பயணிக்கலாம்..)

Sunday, November 21, 2010

ஆப்பி பர்த்டே !!!

இன்றும் ஒரு நெருங்கிய நண்பரின் பிறந்தநாளை மறந்துவிட்டேன். வழக்கமானது தான். நாட்களை நினைவில் வைத்துக்கொள்வதில் மிக பலவீனமாகத் தான் இருந்துகொண்டிருக்கிறேன். ஒன்றும் சொல்வதற்கு இல்லை. பிறந்த நாள் வாழ்த்துக்கள் அனுப்பியோ சொல்லியோ நான் ஆச்சரியப்படுத்தியிருக்கலாம். இப்படி மறந்துவிட்டு அசடு வழிகிறேனே என்று என் மேலேயே கோபமாக வந்தது. என் பிறந்த நாள் அன்று கண்டிப்பாய் வாழ்த்து சொல்வார்களென்று நினைத்திருந்த சிலர் இதே போல் அடியோடு மறந்த போது எழுந்த லேசான ஏமாற்றமும் நினைவுக்கு வந்தது.


ஒரு காலத்தில் பிறந்த நாள் வருவதற்காய் வருடம் முழுதும் காத்திருந்த நினைவுகள் மெல்ல விரிந்தது. தீபாவளிக்கு ஒன்றும் பிறந்த நாளுக்கு ஒன்றுமாய் இரண்டு புதுத்துணிகள் கிடைக்கும் வருடத்திற்கு. மிக முக்கியமான நாட்களில் ஒன்று. அது இல்லாமல் புதுத்துணிக்கேற்ப பாசிகளும் வளையல்களும் கூட, எப்போதாவது செருப்பு போன்ற விஷயங்களும் சேர்ந்துகொள்ளும். பத்து பதினைந்து நாட்களுக்கு முன்பே பரபரப்பு தொற்றிக்கொள்ளும். கிடைக்கும் எல்லாவற்றையும் வாங்கியாக வேண்டுமே. என்ன வாங்குவது எப்படி வாங்குவது என்ற சிந்தனையிலேயே தூக்கம் கூட சரியாக வராது. எப்படியும் எல்லாம் நான் தேர்ந்தெடுப்பதும் கிடையாது, சமயத்தில் அப்பாவே வாங்கி வந்து விடுவார். அதற்கே இந்த நிலை!

மார்கழி மாதத்தில் வரும் பிறந்தநாள். நினைத்தாலே அதிகாலை குளிரும் தெருக்கோடியில் ஒலிக்கும் கோயில் பாடல்களும் மெல்ல வருடிச்செல்லும். இருள் விலகாத அதிகாலையில் அம்மா எழுப்பும் போதே வாழ்த்துடன் ஆரம்பிக்கும். இதமான வெந்நீரில் தலைக்குக் குளித்து, புதுத்துணியின் வாசம் நெஞ்சம் நிறைய உள்ளிழுத்து அணிந்து, மற்ற புதுசுகளையும் சூடி ஈரப்பின்னல் போட்டு அப்பாவைப் போய் எழுப்பி ‘ஹேப்பி பர்த்டே’ சொல்ல வேண்டும். ஆமாம். அப்பாவுக்கும் எனக்கும் ஒரே நாளில் தான் பிறந்தநாள். அவரிடமிருந்து பதில் வாழ்த்தும் முத்தமும் பெற்ற பின் பெருமிதமும் உற்சாகமும் பீறிட்டு கிளம்ப பள்ளி செல்ல வேண்டியது தான். வகுப்பாசிரியர் வரும் வரை காத்திருக்கமுடியாமல் காத்திருந்து. வந்தவுடன் எழுந்து ஒடி, கையோடு எடுத்து சென்றிருக்கும் சாக்லேட் டப்பாவினை நீட்டி அவரிடமும் வாழ்த்துகள் வாங்கிய பின் முக்கியமான தருணத்துக்குள் அடியெடுத்து வைக்க வேண்டியிருக்கும்.

எல்லாருக்கும் முன் நிற்க வைத்து ‘ஹேப்பி பர்த்டே டு யூ’ பாடுவார்கள். கூச்சமும் சிரிப்பும் சந்தோஷமுமாய் முதல் வரிசையில் தொடங்கி அனைவருக்குமாய் சாக்லேட் விநியோகம் ஆரம்பிக்கும். சிலர் கைகொடுப்பார்கள். சிலர் வாய் வார்த்தையில். சிலர் நன்றியுடன் முடித்து கொள்வர். வெகு சிலர் அதுவும் இல்லாமல் தன் பங்கை மட்டும் எடுத்துகொள்வதும் நடக்கும். இந்த சாக்லேட் விஷயமும் ஒன்றும் சாதரணமானதில்லை. அது தான் அன்று நம் அந்தஸ்த்தின் அடையாளம்! காட்பரீஸ்’இல் இருந்து புளிப்பு மிட்டாய் வரையிலான ரேஞ்சில் நாம் எங்கே இருக்கிறோம் என்பதும் முன்பே தீர்மானிக்க படவேண்டிய ஒன்று. ஒரு மாதிரி நியூட்ரின்‘ஆசை’ யில் வந்து முடியும் நம் தீர்மானம்.(புளிப்பு மிட்டாய்க்கு கொஞ்சம் மேல் :)) அதை சாப்பிட்டபின் சுற்றியிருக்கும் காகிதத்தை ரப்பர் போல இரண்டு பேர் இழுத்து விளையாடலாம். அதையும் ஒரு காரணமாகக் கொண்டு அதையே முடிவு செய்ய மனதை தேற்றிக்கொண்டிருக்கிறேன்.

மாலையில், அப்பா ஏதாவது கேக் வாங்கி வந்திருப்பார். எங்களுக்கே எங்களுக்காய் ஒரு எக்ஸ்க்ளூசிவ் ஆனால் மிக எளிய ஒரு கொண்டாட்டம். பின்னர் அக்கம்பக்கத்தினர், உறவினர் என்று ஒரு சுற்று நடக்கும். பெரியவர்கள் இருந்தால் காலில் விழுவதில் நம் பணிவுக்கு அளவே இல்லாமல் இருக்கும். கிடைத்ததை வசூல்(!) செய்துகொண்டு கொஞ்ச நாள் குஷியாக ஓடும். இவை இல்லாமல், அன்று பள்ளியிலும் வீட்டிலும் தனி சலுகை கிடைக்கும். எதற்கும் திட்டோ அடியோ விழாது. ஏன் வருடத்திற்கு ஒரு முறை தான் வருகிறது என வருத்தமும் அடுத்த பிறந்தநாளிற்கான காத்திருப்புமாய் தான் அன்றைய நாள் முடியும்.

எனது ஐந்தாவது பிறந்தநாளுக்கு ஒரு வாரம் முன் அமைந்தது, அப்பாவின் முதல் சிங்கப்பூர் பயணம். மனதே இல்லாமல் கிளம்பிய அப்பா அங்கே இறங்கியவுடன் அம்மாவுக்கு எழுதிய கடிதம் இன்னமும் இருக்கிறது. புதுத்துணி, சாக்லேட் பற்றி கூட அதில் எழுதியிருப்பார்.! அப்பா அன்று இல்லாத குறை எனக்கு தெரியக்கூடாது என்பதற்காய் நண்பர்கள் சிலர் வந்து கேக் வெட்ட சொல்லி கொண்டாடியது இன்னமும் நினைவு கூரும் நிகழ்வு.. இன்று அவர் இல்லாமல் எத்தனையோ பிறந்தநாட்கள் கழிந்துவிட்டன. எப்படியும் என்னை வந்தடையும் ஒவ்வொரு வாழ்த்திலும் அப்பாவின் புன்னகை நினைவில் நிழலாடுவதை நினைத்துப் பார்க்கிறேன்.

அந்த வயதில் தன் பிறந்தநாளே தெரியாது என சொன்ன சிலரை ஆச்சரியத்தோடு பார்த்திருக்கிறேன். அதெப்படி பிறந்தநாளே தெரியாமல், பிறகெப்படி கொண்டாடுவீர்கள் என்ற எனது கேள்விக்கு நமக்கென்ன கொண்டாடவேண்டியிருக்கு என அவர்களின் அந்த சலிப்பு புரிவதற்கு பல வருடங்கள் வேண்டியிருக்கிறது. வர வர பிறந்தநாள் வந்தாலே ஒரு வயது ஏறிவிடுகிறது ,இன்னும் என்னவெல்லாம் பண்ணவேண்டியிருக்கிறது என்றெல்லாம் தான் யோசிக்கத் தோன்றுகிறது. எனக்கு இன்னிக்கு ’ஆப்பி பர்த்டே’ என்று வாயெல்லாம் பல்லுடன், புதுத்துணியும் வரும் பொடிசுகளைப் பார்த்தால் பொறாமையாக இருக்கிறது.

இந்த பிறந்தநாளை மறந்த விஷயத்திற்கு வருவோம். எத்தனைப் பேரின் பிறந்தநாளை நினைவு வைத்திருக்கிறேன் என கணக்கெடுத்தால் என் டெபாசிட் காலி. இன்னமும் என் பிறந்தநாளன்று தவறாமல் வாழ்த்தும் மிக நெருங்கிய சிலரின் பிறந்தநாளே தெரியாமல் இருக்கிறேன் என்பது அதைவிடவும் வெட்கக்கேடு. இந்த அவமானத்தோடே இது வரை நான் வாழ்த்தாமல் போன அத்தனை பேருக்கும் என் வாழ்த்துக்களையும் நேசங்களையும் பரிமாறிக்கொள்கிறேன். என்னை திருத்திகொள்ள முழுமுயற்சி எடுப்பேன் என்றும் இதன் மூலம் உறுதியளிக்கிறேன்!!! :) :) :)

Friday, April 2, 2010

எனக்கேயான அப்பா!!

அப்பா...

பொதுவாகவே பெண்குழந்தைகளுக்கு அப்பா என்றாலே அலாதிப் பிரியம் தான். அதுவும் என் போன்ற ஓற்றையாய் பிறந்த
பெண் குழந்தைகளுக்கு கேட்க வேண்டுமா - அப்பா காட்டும் வழிந்தோடும் பிரியமும் கொடுக்கும் செல்லமுமே போதுமே - கொஞ்சம் கூடுதலாய் பிரியம் செலுத்த...

அப்பா -

ஆறடிக்கும் சிறிது அதிகமான உயரமும் ஒல்லியான தேகமும் முன்புறம் லேசான வழுக்கையும், சுருள் முடியும் அடுக்கி வைக்கப்பட்ட பல்வரிசையும் நல்ல நிறமும் கொண்ட அழகர். அவர் பளீரென்ற வெள்ளை கதர் வேட்டி சட்டையில் ஒரு கையில் வேட்டியின் நுனியை பிடித்துக் கொண்டு இறங்கி நடந்தாரென்றால் எதிரில் வருபவர் ஒரு நிமிடமாவது பார்க்காமல் போக முடியாது..இன்றும் அப்பா தெருவில் போகும் அழகினைப் பார்த்து கொண்டே இருக்கலாம் என்று சொல்லும் அதே தெருவில் வசிக்கும் சினேகிதிகளின் அம்மாக்களாவது(?!!) அப்பாக்களாவது சில நேரம் சொல்லும் போது மிகப் பெருமையாய் இருக்கும் எனக்கு..

அப்பா -


நான் பிறந்த நிமிடத்தில் என்னை ஏந்திய போது, தன் தாயே மறுபடி பிறந்திருப்பதாய் நினைத்து மகிழ்ந்த அப்பா...

சில மாதங்களில் அம்மை நோய் கண்டு கண்களெல்லாம் சொருகிப்போய் கவலைக்கிடமான நிலைமையில் மருத்துவமனையில் சேர்த்து, அவசரத்தில் எதுவும் எடுத்து வராததில், குழந்தையைக்(என்னை) கிடத்த தன் வேட்டியில்
பாதியைக் கிழித்து கொடுத்துச் சென்ற அப்பா...

உயிருடன் ஒரு நாலு நாள் தான் தாக்குப்பிடிப்பேன் என்று மருத்துவர்கள் கையை விரித்துவிட்ட நிலையில், எதையோ எடுப்பதற்காக வீட்டுக்குச் சென்று வெறுமையாய் இருந்த தொட்டிலைப் பார்த்து, பக்கத்து வீட்டுக்காரர்கள் வந்து சமாதானப்படுத்தும் அளவிற்கு, வெடித்து கேவிய அப்பா...

பின்னாளில் ஏதும் துடுக்காக நான் எதிர்த்து பேசும் போதெல்லாம் - ”நாய்க்குட்டி, பேச மாட்ட, உன்னையெல்லாம் பொழக்க வச்சி இப்டி வளத்துக் கொண்டுவந்திருக்கம்ல” என்று சிரித்துக் கொள்ளும் அப்பா..

பல்கெட்டுப் போய்விடும் என்று அம்மா சாக்லேட் மட்டும் வாங்கித்தராததினால், சாக்லேட் தவிர வேறு எதுவும் வாங்கித்தராதது மட்டுமில்லாமல், பெரிய சாக்லேட் பாரினை வாங்கிக்கொடுத்து விட்டு“அம்மா வரதுக்குள்ள சீக்கிரமா சாப்டுரு” என்று அவசரப்படுத்தும் அப்பா.....

பள்ளித் தேர்வு முடிவுகள் வருட விடுமுறையில் வீட்டுக்கு வரும் போது, அப்பா வரும் வரை காத்திருந்து அந்த கவரை நீட்டும் போது, கவரைப் பிரித்துக் கூட பார்க்காமல், புன்னகையுடன் கன்னம் கிள்ளி முத்தமிடும் அப்பா...

எனக்கு ஒரு ஏழு வயது இருக்கும் போது, கருத்தரங்கம் ஒன்றிற்காய் தான் வெளியூர் செல்ல நேரிட்ட போது அங்கிருந்து என்ன வேண்டும் என்று என்னைக் கேட்ட போது, அப்போது தான் :பேரி டேல்ஸ் படிக்க ஆரம்பித்திருந்த கிறக்கத்தில் “ஏதாவது புக்ஸ் வாங்கிட்டு வாங்கப்பா” என்று நான் முதல்முறையாய் கேட்டதை எதிர்பாராமல், முகம் கொள்ளா மகிழ்ச்சியுடன் அம்மாவைப் பார்த்து “பார்த்தியா, எம் புள்ள என்ன மாதிரியே” என்று சிலாகித்த அப்பா...

தான் கல்லுரி நாட்களில் மாவட்ட அளவில் பரிசுகள் பெற்றதை எனக்கு அடிக்கடி ஞாபகபடுத்திக் கொண்டு, எனக்கு செஸ் விளையாட்டு சொல்லி கொடுத்து, சில நாட்களில் அடிக்கடி நாங்கள் விளையாட ஆரம்பிக்க, அவரை நான் தோற்கடித்த முதல் விளையாட்டில், தான் தோற்றுவிட்டோம் என்று தெரிந்த அந்த நிமிடத்தில் கண்களில் பெருமிதம் பொங்க, கட்டியணைத்த
அப்பா...


எப்போதும் பள்ளிக்குச் செல்லும் போது நன்றாகத் தூங்கிக் கொண்டிருப்பவரை லேசாய் தட்டி எழுப்பி சொல்லிவிட்டு கிளம்பும் போதெல்லாம் பாதி கண்கள் திறந்து கன்னம் தடவி முத்தமிட்டு வழியனுப்பும் அப்பா...

அப்படிதான் ஒரு நாள் ஏதோ அவசரத்தில் சொல்லாமல் நான் கிளம்பிவிட, திடும்மென இடைவேளையில் பள்ளிக்கு வந்து நின்று, “அப்பாகிட்ட சொல்லாமயே வந்திட்டல” என்ற அப்பா... சும்மா வராமல் வகுப்பில் உள்ள அனைவருக்கும் கொடுக்கும் படியாய் ஒரு சாக்லேட் கவருடன்..அனைவருடனும் அதை பகிர்ந்து கொள்ளும் போது திடீரென எதுக்கு சாக்லேட் என எழுந்த கேள்விகளுக்கு சும்மா தான் என சொன்னாலும் அதன் பின் இருந்த ஒரு பத்து வயது சிறுமிக்கான அந்த
மகிழ்ச்சியையும், பெருமிதத்தையும் வார்த்தைகளில் உணர்த்த முடியுமா எனத் தெரியவில்லை...

ஏம்ப்பா நான் குள்ளமாவே இருக்கேன், உங்கள மாதிரி வந்திருக்கலாம்ல என வருத்தப்படும் போதெல்லாம், அப்பா திடீர்னு தான் வளந்தேன்டா பதினஞ்சு வயசுக்கு மேல, நீயும் அதே மாதிரி வளந்திடுவ பாரு’ன்னு ஆறுதலுக்காய் சொல்லும் அப்பா..

ஒரு காலகட்டங்களில், தோழர்களைப் போல் உட்கார்ந்து அரட்டை அடிக்கும் பொழுதுகளில் நண்பர்களுடனான தன் சாகசங்களையும் தன் காதல் கதைகளையும் சிலாகித்து விவரிக்கும் அப்பா... நான் செத்தா இவங்க எல்லார்க்கும் சொல்லியனுப்பனும்’ன என்று அடிக்கடி ஞாபகப்படுத்திக் கொண்டேயிருக்கும் அப்பா...

‘மெய்பொருள் காண்பது’ எவ்வளவு முக்கியமென உணர்த்திக்கொண்டே இருக்கும் அப்பா.. எனது எவ்வளவோ மூடப்பழக்கங்களைத் தகர்த்தெறிந்த அப்பா...

பெரிதாக வருமானங்களோ, வசதிகளோ இல்லாத நிலையிலும் மன்னரைப் போல, பாரதியைப் போல கனவுகளில் பெரிதாய் வாழ்ந்த அப்பா...
பக்கவாதம் வந்து அவரை மொத்தமாய் உருக்குலைத்து கட்டிப்போட்ட போதும் மனதளவில் நிமிர்ந்து நின்ற அப்பா..தன் தன்னம்பிக்கையையோ, தன்மானத்தையோ ஒரு போதும் தளரவிட்டதில்லை அவர்...

திடீரென உடல் நிலை சிறிது மோசமாகி பக்கத்தில் இருந்த ஒரு சின்ன நர்சிங் ஹோம்’ல் சேர்க்க, அன்றிரவு முழுதும் வைத்திருந்து அடுத்த நாள் காலை ஜீ.எச்’க்கு கொண்டு போக சொல்லிவிட, என்னை பார்க்க வேண்டுமென்று அழைத்து, கையைப் பிடித்துக் கொண்டு ‘நல்லா படிக்கணும்’ன, அம்மாவ ரொம்ப தொந்தரவு செய்யக்கூடாது’ என எனக்கான கடைசி வாக்கியம் பேசிய அப்பா....

ஜீ.எச்’சில் சேர்த்த அன்றிரவு தன் உயிர் போகும் முன், அருகில் இருந்த சித்தப்பாவிடம், ‘புள்ளயப் பாத்துக்கடா’ என்பதையே அனைவருக்குமான கடைசி வாக்கியமாய் விட்டுச் சென்ற அப்பா...

இன்று நானிருக்கும் மனுஷியாய் என்னை செதுக்கிய அப்பா...இப்படி நான் இருப்பதை பார்க்காமலே சென்று விட்ட அப்பா...

அப்பா...அப்பா..அப்பா.....இன்னமும் எழுத எழுத வந்து கொண்டேயிருக்கும் நினைவுகளைத் தந்து சென்ற அப்பா...

எந்நேரத்திலும் எனக்குள் இருந்த அவருக்கான பிரியத்தை - அது அவரால் உணர்ந்துக் கொள்ளப்பட்டது தான் என்றாலும், பெரிதாக வெளிக்காட்ட முடியாமலே தான் போயிருக்கிறது இன்று வரை.....இங்கு நான் நினைவு கூர்ந்த விஷயங்கள் அனைத்தும், பிரியமான அப்பாவைக் கொண்ட அனைவராலும் உணரப்பட்ட, அறியப்பட்ட விஷயங்களாக இருந்திருக்கக்கூடும். எனினும் அப்பாவுக்கான எனது அன்பின் ஒரு வெளிக்காட்டலாகவும் அவரிடம் இருந்து நான் பெற்றுக்கொண்ட அனைத்திற்கும் நெகிழ்ச்சியான ஒரு நன்றியாகவும் அவரின் இந்த 14’ஆம் வருட நினைவு நாளில், இந்த பதிவை சமர்ப்பிக்கிறேன்.
Related Posts with Thumbnails