சடாகோ’வும் ஆயிரம் காகிதக்கொக்குகளும் என்ற அமெரிக்க எழுத்தாளரின் புத்தகம் குழந்தைகள் இலக்கியத்தில் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. ஜப்பானின் புகழ் பெற்ற மிக அரிதான டஞ்சோ கொக்குகள் அதிர்ஷ்டத்தை, ஆயுளை, செல்வத்தைக் கொடுக்கக்கூடியது என்ற நம்பிக்கையையும், அவர்களில் புராதன கலையான ஆரிகேமியையும் அணுவீச்சுக்கு எதிரான குரலையும் ஒரு புள்ளியில் இணைக்கும் அந்த புத்தகத்தின் பின்னால் உள்ள உண்மைக்கதை என்ன தெரியுமா ?
ஹிரொஷிமா நகரில் அனுகுண்டு வீசப்பட்ட போது, ஊரே அழிந்ததில் அதிர்ஷ்டவசமாகவோ துரதிர்ஷ்டவசமாகவோ பிழைத்த வெகு சிலரில் இரண்டு வயது ஷடாகோ சஷாகியும் ஒருத்தி. ஊருக்கு வெளியே இருந்த மிசாஷா பாலத்தில் அருகில் உள்ள வீட்டில் இருந்த அவள் குடும்பம், உயிர் பிழைத்தாலும் அணுவீச்சின் பலமான தாக்குதலுக்கு ஆளானது.
அவள் வளர வளர அணுவீச்சின் பாதிப்பில் நோயும் அவள் கூடவே வளர்ந்தது. உடல் முழுக்க நீலப்புள்ளிகள் தோன்றத் தொடங்கின. சிறுநீரகம் பாதிப்புக்குள்ளானது. கால்கள் செயலிழக்க ஆரம்பித்தன. உச்சகட்டமாக, அவள் பன்னிரெண்டாவது வயதில் அவள் இரத்தப்புற்று நோயால் பாதிக்கப்பட்டாள். அதற்கும் அணுவீச்சே காரணமாக இருந்தது.
ஒரு வருடம் தான் அவள் பிழைத்திருப்பாள் என மருத்துவர்கள் கெடு விதித்துவிட்ட நிலைமையில் அவள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள். பள்ளிக்கோ விளையாடவோ செல்ல முடியாத ஏக்கத்திலும் நோயின் கோரப்பிடியிலும் அவள் நாளுக்கு நாள் வாடத் தொடங்கினாள்.
அவளை அடிக்கடி வந்து சந்தித்து விளையாடிப் போகும் தோழி ஒருத்தி ஒரு நாள் காகிதக்கொக்கு ஒன்றை செய்துவந்து கொடுத்தாள். காகிதக்கொக்குகள் நீண்ட ஆயுளைக் கொடுக்கக்கூடியது என்றும் ஆயிரம் கொக்குகளை செய்து முடித்துவிட்டால், அவள் கண்டிப்பாக பிழைத்துவிடுவாள் என்றும் கூறினாள். அடுத்தவர்களின் துயரத்தைப் புரிந்து கொள்வதன் அடையாளமாகவே தான் கொக்குகளை உருவாக்குகிறேன் என்று தோழி சொன்னாள். இதை சஷாகி மிகத்தீவிரமாக நம்பினாள். அடுத்த நாள் முதல் அவள் காகிதக்கொக்குகளை செய்யத் தொடங்கினாள்.
கிடைத்த காகிதங்களில் எல்லாம் கொக்குகளை செய்து தன் படுக்கையில் தொங்கவிட்டாள். காகிதங்கள் கிடைக்காத போது மருந்து உறைகள், பக்கத்து படுக்கை நோயாளிகளின் மருந்துச்சீட்டு போன்றவற்றை எடுத்துக்கொண்டாள். எப்படியாவது ஆயிரம் கொக்குகளை செய்து விட வேண்டும், வாழ்ந்து விட வேண்டும் என்ற உத்வேகம் அவளிடம் அதிகரித்துக்கொண்டே இருந்தது.
ஆனாலும் நோயின் உக்கிரம் முற்றி, 644 கொக்குகளை செய்து முடித்திருந்த நிலைமையிலேயே சஷாகி இறந்தாள். இந்த செய்தியை அறிந்த பள்ளி மாணவர்கள் அவள் ஆசைப்பட்ட படியே மீதமிருந்த 356 கொக்குகளை செய்து அவளோடு சேர்த்து புதைத்தனர். இச்செய்தி நாடு முழுக்க பரவியது. அன்றிலிருந்து இன்று வரை காகிதக்கொக்குகளை சமாதானத்தின் அடையாளமாக மக்கள் கருதுகிறார்கள். வீட்டினுள் காகிதக் கொக்கு பறந்து கொண்டிருப்பது அமைதி மற்றும் சந்தோஷத்தின் அடையாளமாக நம்பப்படுகிறது.
ஹிரோஷிமாவில் சஷாகிக்கு ஒரு நினைவிடம் அமைக்கபட்டு ஆண்டுதோறும் பள்ளிமாணவர்கள் ஆயிரக்கணக்கில் ஒன்று சேர்ந்து காகித கொக்குகளை செய்து அங்கே காணிக்கை ஆக்குகிறார்கள். இறந்தவர்கள் காகித கொக்குகளின் குரலை கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்றும் ஒருநம்பிக்கை இதிலிருந்து வளரத் துவங்கியது. ஜப்பானியர்கள் அணுவீச்சின் எதிர்ப்பு அடையாளமாக காகித கொக்குகளை உருவாக்குகிறார்கள். இன்றும் ஆகஸ்ட் 6ம் நாள் நாடெங்கும் காகித கொக்குகள் தயாரிக்கபட்டு பறக்கவிடப்படுகின்றன.
காண் என்றது இயற்கை என்ற எஸ்.ரா வின் புத்தகத்தைப் படிக்கையில் டஞ்சோ கொக்குகள் குறித்த ஒரு கட்டுரையில் சடாகோவைப் பற்றி படிக்க நேர்ந்தது. இப்போது நாம் இருக்கும் சூழ்நிலையில் இக்கதையைப் பகிர்ந்துக்கொள்வது மிக அவசியம் எனப்பட்டது. அணு உலை என்பதும் அணுகுண்டுக்கு நிகரானதே. நம் நாட்டில் அணு உலைகளுக்கு எதிரான போராட்டங்களும் அரசின் கண்ணாமூச்சி ஆட்டங்களும் அதற்கு பின்னாலான மிகப்பெரும் உலக அரசியலும், என் போன்ற சராசரிப் பொதுமக்களின் வழக்கமான புறக்கணிப்பும், அதீத அறிவாளிகளின் பார்வையாக அறிவியல் முன்னேற்றத்தின் மற்றொரு படியாக இது இருக்கும் இந்நொடியில் , என் எதிர்ப்புக்கான முதல் காகிதக்கொக்காக இந்த பதிவை சமர்ப்பிக்கிறேன்.
உலகெங்கிலும் பறக்கவிடப்பட்ட அத்தனைக் காகிதக்கொக்குகளுக்கான நம்பிக்கையும் பிரார்த்தனைகளும் வீணாகிப் போகாமலிருக்க மனமார வேண்டிக்கொள்கிறேன்.
மேலதிகத் தகவல்களுக்கு
https://en.wikipedia.org/wiki/Sadako_Sasaki
https://en.wikipedia.org/wiki/Sadako_Sasaki