Saturday, October 13, 2018

Guess what

இவ்வருட தொடக்கத்தில் (டிசம்பரில் முடிக்க முடியாத காரணத்தால்) சீக்ரட் சான்டா விளையாடிக்கொன்டிருந்தோம். வித்தியாசம் என்னவென்றால், விளையாடுவோர் அனைவரும் வேறு வேறு ஊர்கள், நாடுகளில். Long Distance Relationship போல, ஒரு Long Distance சான்டா. இதற்கென உள்ள ஒரு தளத்தில் அனைவரும் பதிவு செய்தவுடன், நமக்கென ஒதுக்கப்பட்ட சைல்ட் தெரிந்துவிடும். அதன் பின் உங்கள் வேண்டுகோள்கள், தகவல்கள் உங்கள் அடையாளம் அறியாதவாறு பகிர்ந்துகொள்ள முடியும். அதகளமாக சென்றுகொண்டிருந்தது விளையாட்டு. Dubsmash, விடியோ, புகைபடங்கள் என தினமும் கொண்டாட்டம்.. அவ்வாறாக ஒரு நாள் எனக்கொரு வேண்டுகோள் வந்தது. தாய்மை பற்றியான பதிவோ கவிதையோ பேஸ்புக்கில் பகிரவேண்டுமென. நேரமின்மை காரணமாக, ஒரு சின்ன ஸ்டேட்டஸ் ஒன்றை பதிவிட்டேன். ("முகவாயை கைகளால் உயர்த்தி, கண்ணோடு கண் நோக்கி "செல்ல்ல்ல்லக்க்குட்ட்டீஈஈ!!" என அழைக்கிறான் அன்பு மகன். உச்சி முகர்ந்து, கட்டி அணைத்து, கன்னத்திலும் நெற்றியிலும் முத்தமிட்டு, உதட்டிலும் அழுத்தமாக முத்திரை பதிப்பவன் ;) .'தங்கபேபி..','பேபிக்குட்டி மாம்மி..','தங்ககட்டி..' என என்னை கொஞ்சிக்கொண்டிருக்கும் இவன் நான் பெற்று வளர்க்கும் மகன் தானா, அல்லது என்னை தன் அம்மாவென அள்ளிக்கொஞ்சி தாலாட்டி சீராட்டி கொண்டாடிய‌ என் அப்பனா "?)

அடுத்த நாள் அதற்கான பதில் வந்தது. அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பும் பேருந்தில் ஜன்னலோரமாக உட்கார்ந்திருந்தேன். அருமையான பதிவு என்றும் ரசித்ததாகவும் சொல்லிய எனது சான்டா, "உனக்கு அப்பாவின் நினைவு வந்திருக்கும். அவரை கண்டிப்பாக மிஸ் செய்கிறாய் அல்லவா ? ஒரு கற்பனை போன் கால் ஒன்று செய்து ஷேர் செய்யேன், அவரிடம் இப்போது என்ன சொல்வாய் ? Hope it is not too heavy." என கேட்டிருந்தார். படித்துக் கொண்டிருக்கும் போதே தொண்டையை அடைத்தது. ஜன்னலை திறந்து வைத்தேன். காற்றுப்பட்டது கொஞ்சம் ஆறுதலாயிருந்தது. மறுமுறை அதை படித்தேன். கடகட வென கண்ணீர் துளிகள் உருண்டு ஓடிக்கொண்டே இருக்கிறது. பொதுவாக நான் என்னை கொஞ்சம் மனவலிமையான ஆளாக கருதிக்கொள்வதுண்டு. சட்டென அழுகை, அதுவும் பொதுவெளியில் மிகவும் கடினம் தான். இருபது வருடமாகிவிட்டதே, பழகிவிட்டது என நினைத்திருந்தேனே. ஆனால் இன்று, எது என்னை இப்படி அழ வைக்கிறது ?

யோசிக்கிறேன். என்ன பேசுவேன் அப்பாவிடம்? என்னவென்று அவ்வுரையாடலை ஆரம்பிக்க? நல்லா இருக்கீங்களா அப்பா என்றா ? இருபது வருடங்க‌ளின் கதையை, கண்ணீரை, வலியை, வெற்றிகளை, சந்தோஷங்களை, என்னவென்று மொழிபெயர்ப்பேன் ? ஒரு உறுதுணை, ஒரு தூண், கை பிடிக்கும் விரல், சாய்ந்து கொள்ளும் தோள், அழுகை அமர்த்தும் மடி - வேண்டிய பொழுதுகளில் அவை இல்லாமல் இருந்த வெறுமையை எப்படி சொல்வேன்? நினைக்க நினைக்க நிற்காமல் ஒடும் கண்ணீரை மீறி என்ன பேசிவிட முடியும் என்னால் ? இல்லை, இது என்னால் முடியாது. இதை செய்ய என்னால் முடியாது. அப்பா திரும்பி வரப்போவதேயில்லை என்பதானாலேயே என்னால் முடியாது. மன்னித்து விடு சான்டா என பதில் அனுப்பிவிட்டு தொடர்ந்து யோசித்து கொண்டிருந்தேன்.

காயத்தை காலம் ஆற்றிவிட்டதென நினைத்ததை, மனதை அறுப்பதாக அல்லாமால், இயல்பான ஒரு கவலையாக மனதின் அடியில் படிந்துவிட்டதை, ஒரு வார்த்தை, ஒரு கற்பனை, அன்று இருந்தது போலவே அவ்வலியை திருப்பி கொண்டுவர முடியுமா ? இங்கே அழுது கொண்டிருப்பது இப்பொது இருக்கும் நானல்ல, அன்றிருந்த பதினான்கு வயது சிறுமி அல்லவா? ஒரு காயம் என்றும் மறைவதில்லை. உறுத்தாமல் ஓரமாக இருக்க பழகிக்கொண்டிருக்கும். மேலே ஆறியது என நீங்கள் நினைத்தாலும் எத்தனை வருடங்களுக்கு பிறகும் கொஞ்சம் தட்டிப்பார்த்தால், அதே ரத்தமும் சதையுமான காயம்.தான். எக்காயத்தையும் காலம் ஆற்றும் என்பது உண்மை அல்ல. பழக்கப்படுத்தும் என்பதே உண்மை. ஒரு இழப்பின் வலி என்றும் மறைவதேயில்லை

Monday, October 29, 2012

The PITSTOP... [2]


 [1] [2]

பயணங்கள் பற்றிய பழைய நினைவுகளை எல்லாம் ஒட்டிப் பார்த்ததில் முக்கால்வாசிக்கும் மேலாக வாய்ப்பு மறுக்கப்பட்டு ஒரு மூலையில் உம்மணாம்மூஞ்சியோடு ஒரமாக உட்கார்ந்திருப்பதே படத்தின் இன்டர்வெல் வரை ஓடியது. அதற்கு மேல் எனக்கே தாங்காமல் இன்னும் கொஞ்சம் ரீவைண்ட் செய்ததில் ஒரு 5-6 வயது இருக்கும் போது நடந்த ஒன்று நினைவுக்கு வந்தது. அதற்கான அர்த்தங்களை நான் இதுவரை புரிந்து கொள்ள விழைந்ததே இல்லை. இப்போது நினைக்கும் போது நிஜமாகவே விசித்திரமாக இருந்தது. அப்போது என் பள்ளிக்கு மிக அருகில் ஒரு பெரிய பழைய கால தேவாலயம் ஒன்று இருந்தது. அது எங்கள் பள்ளியை விட பெரிதாகவும் செடி கொடிகளுடன் மண் சாலைகளுடன் அங்கங்கே தனித்தனி பிரார்த்தனை கூடங்களும் பாதிரியார்கள் தங்கும் விடுதிகளும் கொண்ட விசாலமான வளாகம். பள்ளியும் வீடும் மிக அருகில் தான். 5 நிமிட நடை. என்னை பள்ளியிலிருந்து அழைத்து செல்ல என்னைப் பார்த்துக்கொள்ளவும் வீட்டு வேலைகளில் உதவவும் வைத்திருந்த சிவகாமி அக்கா தான் வருவார். எப்போதாவது விடுமுறையிலோ பெர்மிஷனிலோ இருக்கும் போது அம்மாவும் உடன் வருவார். அப்போதெல்லாம் நாங்கள் அந்த வளாகத்திற்கு சென்று வருவோம். அது தான் எனக்கு தெரிந்த முதல் அவுட்டிங் ஸ்பாட். வழியும் தெரிந்த என்று சொல்வது தான் இன்னும் பொருத்தம்.

ஒரு நாளில் பள்ளி விட்டு வீட்டுக்கு செல்லும் போது எனக்கு அந்த எண்ணம் உதித்தது. அந்த வளாகத்திற்குத் தனியாக செல்ல வேண்டுமென. பள்ளியில் இருந்து செல்வது தான் எளிது. எனினும் அக்கா தயாராக நிற்பார். என்றாவது பார்த்துக்கொள்ளலாமென தள்ளி வைக்கவெல்லாம் தோன்றவே இல்லை. ஒன்றே செய் பாணியில் அன்றே அதை செயல்படுத்தியாக வேண்டுமென ஒரு வேகம். வீட்டிற்குச் சென்று உடை மாற்றிவிட்டு எப்போதும் போல பக்கத்துவீட்டில் சென்று விளையாடப்போகிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பினேன்.  மிஞ்சிப்போனால் இரண்டடி உயரம். அதற்கு ஒரு பாவாடைச் சட்டை. ஒரு குடுமி. இந்த உருவத்தை வைத்துக் கொண்டு வெறுங்கையுடன் தெருவில் இறங்கி நடந்தேன். வேகவேகமாக நடந்தும் வழி நீண்டு கொண்டேயிருந்தது. ஏதோ ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி, கொஞ்சம் பயம், கொஞ்சம் ஆர்வம் என கலவையான உணர்வு. ஒரு வழியாக இன்னும் சிறிது தூரம் தான் என்னுமிடத்தில் ஏதோ ஒரு உள்ளுணர்வு உறுத்த திரும்பி பார்த்தேன். புன்னகைத்துக் கொண்டே அக்கா என் பின்னேயே வந்து கொண்டிருக்கிறார்.

பின்னே, எங்கப்பன் குதிருக்குள் இல்லை என நான் அங்கே தான் விளையாடிக்கொண்டிருப்பேன் எனவும் என்னைத் தேடவேண்டாமெனவும் திரும்ப திரும்ப உளறியிருக்கிறேன். பின்னாலேயே வந்து என்னைப் பிடித்துவிட்டார். அவர் என்ன கேட்டார் நான் என்ன பதில் சொன்னேன் என்றெல்லாம் நினைவில்லை. ஆனால் அவர் வீட்டில் என்னை மாட்டிவிடவில்லை. ஏனென்றால் அதற்காக அடி வாங்கியதாய் ரெக்கார்டில் இல்லை! உண்மையாகவே இத்தனை வருடங்கள் கழித்து அது நினைவுக்கு வந்ததும் அது குறித்த இப்போதைய எனது பார்வையும் தான் கொஞ்சம் ஆச்சரியமானது தான். அப்போதிருந்த மனநிலை என்னவென்று அறிய முடியவில்லை எனினும் எனக்கு சில கேள்விகள் எழுந்தன. என்னை செலுத்தியது என்ன ? எனக்கென ஒரு அனுபவம், சுதந்திரம் தேவைப்பட்டதா? யாரையும் சார்ந்து நிற்காமல் வேண்டியதை நிறைவேற்றிக்கொள்ளத் தோன்றியதா ? இப்போது என்னிடம் பதில் இல்லை!

சில மாதங்களுக்கு முன்பு ஒரு புத்தகத்தைப் படித்தேன்.  ப்ரான்ஸ்'ல் இருந்து ஜெனிவா ஏரி வரை (தனியாக) நடைபயணம் மேற்கொள்ளும் ஒரு பெண்ணின் பயணக்கட்டுரை. அங்கே பக்காவாக இதற்கான பயண கையேடுகள், வழிகளில் இவ்வாறு பயணிப்பவர்கள் தங்க விடுதிகள் என எல்லா வசதிகளும் கிடைக்கின்றன. படித்தவுடன் அப்படியே கற்பனை சிறகடித்து பறந்தது. அந்த கிராமங்களும் மக்களும் மலைகளும் காடுகளும் அதன் அழகும். ஆகா. என்ன ஒரு அனுபவம் ?  நம்மால் இங்கே என்ன செய்ய முடியும் ? திருப்பதி மலை, திருவண்ணாமலைகளில் நடை பயணிகளுக்கான ஏற்பாடுகள்  உண்டு. அங்கே செல்வதில் பெரிதான ஆர்வமில்லை! எஸ் ரா ஒரு முறை டவுன் பஸ்களிலேயே மாறி மாறி அவர் ஊருக்கு சென்றது போல, மதுரைக்கு நடந்தால் என்ன ? நெடுஞ்சாலைகள் ஆரம்பித்தவுடன் சூழும் வெறுமையும் இருளும் பயமுறுத்தியது. நடைபாதையில் தூங்க முடியுமா ? பாதுகாப்பு ? உணவு? என அடுக்கடுக்காக வழக்கம் போல ஆகாததைப் போட்டு மேலும் குழப்பினேன். இங்கே அதற்கெல்லாம் வழி இல்லை என கடைசியில் எண்ணம் கைவிடப்பட்டது.  குட்டி குட்டி நடைப்பயணங்கள் மேற்கொள்ளலாம் என அதற்கு சமாதானமும் சொல்லிக் கொள்ளப்பட்டது. ஒரு வாரவிடுமுறையில் பரிசோதனை முயற்சியாய் ஒரு மூன்று பேருந்து நிறுத்தங்கள் தாண்டிச் சென்று வந்தேன். நன்றாகத் தான் இருந்தது.

இதை ஒரு வழக்கமான நடவடிக்கையாகவே மேற்கொள்ள வேண்டுமென்ற ஒரு வெறியில், அலுவலகத்திலிருந்து அடுத்த சந்திப்பு வரை( கிட்டத்தட்ட 5.5 கிமி) அடிக்கடி நடப்பது என முடிவானது. இதன் வசதிக்காக, வைத்திருந்த கைப்பை Backpack'காக மாறியது. வாட்டர் பாட்டில், குளூகோஸ் எல்லாம் கூட வைத்துக்கொள்ளலாம் என எண்ணம். முதல் நாளன்று சீக்கிரமே அலுவலகம் வந்து வேலையெல்லாம் வேகவேகமாக முடித்து வெளிச்சத்தோடே கிளம்புவதாகத் திட்டம் .அரைமணி நேர தாமதமாகத் தான் ஆனால் கிளம்ப முடிந்தது. அலுவலகக் கதவைக் கடக்கும் முன்னரே ஒரு குதூகலம் தொற்றிக்கொண்டது எனக்கே ஆச்சரியமாகத் தான் இருந்தது. இதற்கு முன்னால் பள்ளிக்கூட சுற்றுலாப்பயணங்களுக்கு இருந்தது போன்ற ஒரு உற்சாகம். வெளியேறி நடக்க ஆரம்பித்தேன். வெளிச்சம் அவ்வளவாய் மறையவில்லை. சாலைகள் பேருந்திலிருந்து பார்த்தைவிட வித்தியாசமாகவும் விசாலமாகவும் அழகாகவும் இருந்தன.மாலை நேரக்கடைகளுடன் கூடிய சிறு கடைவீதித் தோற்றம் அவ்வளவு புதிதானதாகவும் மகிழ்ச்சிகரமானதாகவும் இருந்தது. பேருந்தில் சில நிமிடங்களில் தாண்டிவிடும் இடம் பார்க்க ஒரு 15 நிமிடத்திற்கு மேல் நடக்க வேண்டியிருந்தது. அதை எல்லாம் தாண்டி நடந்ததும் வீதியும் நானும் விரையும் வாகங்களும் மட்டுமே இருந்தோம்.

தினமும் கடக்கும் சாலை தான் எனினும் சில இடங்களை அதற்கு முன்பு அதைப் போல பார்த்ததாக நினைவே இல்லை. பாதி கடக்கும் முன்பே நன்கு இருட்டிவிட்டது, ஒரு மணி நேரம் தொடர்ச்சியாக நடந்த பின்பு அந்த முக்கிய சந்திப்பை வந்தடைந்தேன். அங்கிருந்து பஸ் பிடித்து வீட்டுக்குச் சென்றேன். அன்றைப் போலவே சீக்கிரம் வந்து சீக்கிரம் கிளம்பி வாரத்தில் இரண்டு நாட்களாவது நடக்க வேண்டுமென முடிவு செய்தேன். இது நடந்து கிட்டத்தட்ட நான்கைந்து மாதங்கள் ஆகிவிட்டன. அதற்கென மாற்றிய பை, செருப்பு இன்றுவரை தொடர்கிறது.  ஆனால் நடப்பது ? ;)

~பயணிக்கலாம்..

Tuesday, September 11, 2012

[மறைந்த தடங்களின் குரல்] ஜனநாயகம் இனி மெல்ல...

2020'ல் இந்தியா வல்லரசாகிவிடும் என இன்னமும் கனவு கண்டுகொண்டிருக்கிறோம். அதே நேரத்தில் தான் பாதுகாப்பு விதிகளை மீறி இயங்கிய பட்டாசுத் தொழிற்சாலை விபத்தில் விவசாயம் பார்க்க முடியாமல், சோற்றுக்கில்லாமல், தாமும் தங்கள் பிள்ளைகளுமாக நாளைக்கு 12 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்து தேய்ந்துகொண்டிருந்த‌ அப்பாவி மக்களை பலிகொடுக்கிறோம். அவர்களது ஒழுங்கீனங்கள் நமக்கு விபத்துக்கு பின் தான் தெரிய வருகின்றன. நல்லது. இனி அடுத்த வருடமோ இரண்டு வருடங்களிலோ நிகழப்போகும் விபத்து வரை நான் அனைத்தையும் கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாகவே தான் நம்புவோம். அதுவும் நல்லது. இது கிடக்கட்டும். தீபாவளி பட்டாசு வாங்குவதற்குள் மறந்துவிட வசதியான விஷயம் தான்.

வரிசையாக குழந்தைகள் விபத்துக்குள்ளானார்கள். வாகனங்களில் பள்ளிகளில் சாலைகளில் ஆழ்துளைக்கிணறுகளில் கழிவுநீர் தொட்டிகளில் என ஒரு சீசன் போல தினம் ஒன்று நிகழ்ந்தது. எங்கே கவனக்குறைவு நிகழ்கிறது என‌ சற்றேனும் சிந்தித்துப்பார்க்காமல் நம் வீட்டு குழந்தைகளையும் பள்ளி ஆட்டொவிலோ வேனிலோ அனுப்பிவிட்டு சிறிது நேரமானால் பதைபதைப்பதுடன் முடிந்தது. அதே பள்ளிகளில் சேர்க்கைக்கு இந்த வருடமும் இரண்டு தெருவிற்கு  வரிசை நீளும். ப்ளாக்கில் டொனேஷன் கொடுத்து யாரையாவது பிடித்து சீட் வாங்கி பிள்ளைகளை சேர்த்துவிட்டு பார்ட்டியிங் நடக்கும். வாகனப் பாதுகாப்புச் சட்டங்கள் பலத்தப்படும். ஆர்.டி.ஓ ஆபீசர்கள் இன்னமும் ரூல்ஸ் பேசி பணம் பிடுங்கி செழிப்பர். நல்லது.

இதோ இந்த வருடத்தில் மட்டும் மூன்று அனல் மின் நிலைய விபத்துகள். எல்லாமே நெருப்பு விபத்துக்கள். நல்லவேளை அனல் மின் நிலையமாகப் போய் அக்கம் பக்கத்து ஊர்காரர்கள் பிழைத்தார்கள். விபத்தி ஏற்பட வாய்ப்பே இல்லாத சூப்பர்மேன் அணு மின் நிலையம் ஏற்பாடு செய்கிறார்களே, அங்கே நிகழ்ந்திருந்தால் ? அவ்வ்வ்! நோ. அதெப்படி விபத்து நடக்கும். தீப்பிடித்து எரிந்தால் கூட அது எரியாது என்று பொங்கியெழுந்து பதில் அளிக்கும் நண்பர்களே. உலகத்தில் பெரும்பாலான அணு உலை விபத்துகள் ஏற்பட்டது மனிதத் தவறுகளால் தான் என்று அறிவீர்கள் தானே! டெல்லியில் எப்படியோ(?!) ஒரு காயலான் கடைக்கு வந்து சேர்ந்து வெகு நாளாக இருந்து அதன் உரிமையாளரை சாகடித்த கதிர்வீச்சுப் பொருளும் இங்கே கல்பாக்கத்தில் இரண்டு தொழிலாளிகள் திருடிக் கொண்டு வந்து நடுவில் பயந்து அதை கூவம் நதியில் வீசி இரண்டு நாட்கள் கூவத்தையே குடைந்த கதைகளும் அங்கே நடக்காமல் இருக்கும் என்று நம்புவோமாக! என்ன, நம்பவில்லையா? வெளியில் சொல்லாமல் இருக்கவும். நீங்களும் தேசத் துரோகியாக சிறை செல்ல நேரலாம். யார் கண்டது?

இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால், பொதுவாகவே நம் அரசு ‘Reactive' modelஐத் தான் கையாண்டுவருகிறது. Proactive என்பது மிக சொற்பம் தான். முதற்சொல்லப்பட்ட மாடலும் ‘இதான் உங்க டக்கா’ ரேஞ்சுக்கு மிக மிக மெதுவானது. சாதாரண ஒரு விஷயத்தை எடுத்துக்கொள்வோம். மிக அதிகமான அளவில் போக்குவரத்து புழங்கும் வகையில் ஐடி கம்பெனிகளுக்கு அனுமதி வழங்கியாகிவிட்டது. அதற்கு ஏற்றவாறு சாலை வசதிகளை எப்போது அமைத்தார்கள் ? இப்போது முக்கிய இடங்களில் பொறுக்க முடியாத அளவு அதிகரித்து வருவதை கட்டுப்படுத்த பாலங்கள் கட்டலாம் என இனிமேல் தான் முடிவெடுப்பார்கள். அதைக் கட்டி முடிக்கும் வரை நமக்கு தான் முழி பிதுங்கும். கம்பெனிகளுக்கான அனுமதி கொடுப்பவருக்கும் போக்குவரத்துத் துறைக்கும் சாலை மேம்பாட்டுத் துறைக்கும் கம்யூனிக்கேஷனே இருக்காது. அப்போது தான் போட்ட சாலையை குடிநீருக்கு ஒரு முறை, கழிவுக்குழாய்க்கு ஒரு முறை, தொலைப்பேசிக்கு ஒரு முறை என எத்தனை தடவை வேண்டுமானாலும் சளைக்காமல் தோண்டுவோம். அதற்குள் ஆட்சி வேறு மாறிவிட்டால் கிழிந்தது. அது தானே நம் வரலாறு, கலாச்சாரம் எல்லாம்? பேரிடர்களில் ஒன்றான போபால் விபத்தும் அதன் வழக்கும் நஷ்ட ஈடும் அக்கழிவுகளை எப்படி அகற்றினார்கள் (அதான் ஒண்ணுமே பண்ணலையே’ன்னு எல்லாம் கேட்கப்படாது. Refer முந்திய பத்தி கடைசி வாக்கியம்) என்றெல்லாம் பார்த்துகொண்டு தானே இருக்கிறோம் ?

ஒன்றுமில்லை. இங்கே கல்பாக்கத்திலேயே ஒரு பெருவிபத்து நடந்தால், 45-50 கிமீ தூர சுற்றளவிற்கு ஒரு மணி நேரத்தில் காலி செய்ய வேண்டியிருக்கும். மனசாட்சியைத் தொட்டு சொல்லுங்கள். அதற்குள் உங்களுக்கு தகவல் தெரிய வைத்து சென்னை ஐடி சாலையில் ஒரு பகுதியையும், ஈ.சி.ஆரில் ஒரு பகுதியையும், அந்த பக்கம் மரக்காணம், இந்த பக்கம் வந்தவாசி வரை மூன்று பக்க சுற்றளவையும் காலி செய்யும் அளவிற்கு அரசு இயந்திரம் வேகமாக செயல்படும் என நம்புகிறீர்கள் ? எல்லாம் பூண்டோடு கைலாசம் தான். அதுவும் குரூரமாக. மெல்ல மெல்ல.வலியிலும் வேதனையிலும் துடிக்க துடிக்க. நீங்கள் மட்டுமில்லை. உங்கள் குடும்பம். உங்கள் குழந்தைகள். இனி வரும் பல தலைமுறைகளுக்கும்.சே. சொல்லவே ரொம்ப கொடூரமாக இருக்கிறது!!!


இதை எழுதிக் கொண்டிருக்கும் வேளையிலேயே தான் அங்கே போராட்ட குழுவினருக்கு எதிராக வன்முறை கையாளப்பட்டிருக்கிறது என்ற செய்தி வருகிறது. அப்பாவி மக்களுக்கு எதிராக ஏதோ பாகிஸ்தான் பார்டரைப் போல ஆயிரக்கணக்கில் குவிக்கப்பட்ட போலீசார். ஒரு வருடமாக அறவழியில் போராடி வருபவர்களுக்கு தடியடியும் கண்ணீர்ப் புகையும். இந்தியா ஒரு ஜனநாயக நாடு எனப் பள்ளிகளில் படித்ததை ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது. எந்த பிரக்ஞையும் இல்லாமல் சாலையில் ஓரம் சிறுநீர் கழிக்கும் குடிமகனுக்கு மட்டுமே ஜனநாயகம் செல்லுபடியாகும் போல! இன்னமும் கூடங்குளம் வந்தால் தான் இந்தியா வல்லராசாகும் என்று யாராவது சொல்லிக்கொண்டு இருந்தீர்களானால், மன்னிக்க வேண்டும் நண்பர்களே. நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய உண்மைகள் இன்னமும் நிறைய இருக்கிறது. கீற்று, dianuke போன்ற தளங்களில் கூடங்குளம் எனத் தேடி அத்தனை விஷயங்களையும் தெளிவாக, திறந்த மனதுடன் படித்துவிட்டு வாருங்கள். அணு உலை விப‌த்து காப்பீடு ச‌ட்ட‌ம் 2010 ஒன்றை இயற்ற உள்ளார்கள் இல்லையா, அதைப் பற்றியும் படித்து விடுங்கள். கல்பாக்கத்தை சுற்றியுள்ள கிராமங்களில் வெகுவாக பெருகிவரும் கொடூர கேன்சர் நோய்கள் குறித்த, ஒரு மருத்துவர் இயக்கிய ஆவணப்படத்தைப் பார்த்துவிட்டு வாருங்கள்.  இது சம்பந்தமாக இங்கே நடக்கும் கூட்டங்களில் ஏதேனும் ஒன்றில் கலந்துகொண்டு அவர்களின் பிரதிநிதிகளின் வாதங்களைக் கேளுங்கள். அதன் பின் நிறைய பேசலாம். 

அப்படியும் மனது கலங்காமல் இருந்தீர்களானால், எவன் செத்தா எனக்கென்ன என்ற மிகச்சராசரி மனிதனின் மனநிலையிலேயே தான் இருக்கிறீர்கள் என அர்த்தம். ஆனால் ஒரு நாள் அது உங்களையும் துரத்தி வரலாம். அப்போது சிக்கன்குனியாவிலிருந்து பாதுகாத்துக்கொள்ள முகமூடி அணிந்தது போல, கதிரியக்கத்திலிருந்து உங்களைப் பாதுகாத்துக்கொள்ள வழியே இல்லை. உங்களுக்கும் உங்கள் தலைமுறைக்கும் சேர்த்து தான் அவர்கள் போராடுகிறார்கள். தங்கள் வாழ்வாதாரத்திற்கும். அவர்களுக்கு ஆதரவு அளிக்கவில்லை எனினும் தேசத்துரோகிகள் எனவும் அந்நியசதிக் கைக்கூலிகள் எனவும் அவமானப்படுத்தாமல் இருப்போம். அவர்களின் நியாயமான கோரிக்கைகள் எதுவும் நம்மை சரிவர வந்தடையவில்லை. அரசும் பொறுப்பற்ற ஊடகங்களும் அரசியல்வாதிகளையும் கண்மூடித்தனமாக நம்பாமல் கொஞ்சம் நாமும் கொஞ்சம் ‘மெய்ப்பொருள்’ காண இனிமேலாவது முயல்வோம். 

வாழ்க ஜனநாயகம்!

Thursday, August 30, 2012

The PITSTOP...



பயணங்கள் குறித்த எனது ஆழ்மன பிம்பங்களை மேலும் மெருகேற்றிச் சென்றது சமீபத்தில் பார்த்த திரைப்படம் ஒன்று. வெகு நாளாகவே எனது பயணங்கள் பற்றி ஏதாவது எழுத வேண்டும் என மேலோட்டமாய் நினைத்திருந்ததை மிக ஆழமாக யோசிக்க வைத்தது. பயணங்களின் மீதான எனது ஆர்வத்தின் ஆதியை தேடி பயணிக்க வைத்தது. ஒரு படைப்பாக அப்படத்தைப் பற்றி பகிர்ந்துகொள்ளலாம் என நினைத்ததை, அதைப் பற்றி மட்டும் பேசாமல், அது தூண்டிய அத்தனை எண்ணவோட்டங்களைப் பகிர்ந்து கொள்ளவும், எனது பயணங்கள் மற்றும் பயணங்கள் சார்ந்த அனைத்தையும் பகிர்ந்து கொள்ள ஒரு வடிகாலாய் இந்த பதிவை/தொடரை ஆரம்பிக்க வைத்தது. ஒரு நல்ல படைப்பின் குணாதிசியம் அது தானே! எவ்வளவு தூரம் இதை தொடர முடியும் என தெரியவில்லை எனினும் உற்சாகத்துடன் ஆரம்பிக்கும் ஒரு பயணத்தின் மனநிலையிலேயே இதையும் தொடங்குகிறேன்.

எல்லோருக்குமான பயணங்களின் முதல் சுழி இவற்றில் ஏதாவதில் இருந்து தான் ஆரம்பித்திருக்கும், சொந்த ஊருக்குச் செல்வது - திருத்தலங்களுக்குச் செல்வது - பள்ளி/குடும்ப சுற்றுலாக்கள் போன்றவை. . குடும்ப சுற்றுலாக்கள் எல்லாம் நமக்கு பழக்கமே இல்லை! பெரும்பாலான பள்ளி சுற்றுலாக்களுக்கு எனக்கு அனுமதி மறுக்கப்பட்டே இருந்து வந்திருக்கிறது அதன் பொருட்டே அவை மிகுந்த வசீகரமுடையதாய் இருந்தன. இடையில் நான் அழுதுபுரண்டு வாங்கிய சில அனுமதிகளில் தான் என் முதலும் முக்கியமுமான பயணங்கள் தொடங்கின. பால்பண்ணையை பார்வையிடச் சென்றதிலிருந்து கோனே அருவி வரை,  வாழ்வின் முக்கிய ஆசீர்வாதங்களில் ஒன்றாக நான் பயணங்களைத் துதிக்கத் தொடங்கினேன். துரதிர்ஷ்டவசமாக சில வருடங்களுக்கு முன்பு வரையிலும் என் பெரும்பாலான பயணங்கள் என்பது சொந்த ஊருக்குச் செல்வது மட்டுமே. அந்த பேருந்து பயணமும் இரவின் குளுமையும் முகத்தில் அறையும் காற்றை உள்ளிழுத்தையும் எங்கள் ஊரைச் சுற்றி சுற்றி வந்ததையும் பயணக்கனவுகளையும் மட்டும் வைத்துக் கொண்டு “ஐ லவ்வ்வ்வ்வ் டு ட்ராவல்” என இண்டர்வியூக்களில் படம் போட்டிருக்கிறேன். (நானும் எவ்வளவு நாளைக்குத்தான் “ரீடிங் புக்ஸ், ஹியரிங் மியூசிக்” என்ற ரெக்கார்டைத் தேய்ப்பது. தூங்குவது தான் என் பொழுதுபோக்கு என்று கூட ஒன்றில் சொன்ன ஞாபகம். இவை எல்லாம் இல்லாமல் நான் என்ன செய்ய ஆசைப்படுவேன் என நானே சிந்தித்ததன்(?!) விளைவு தான் மேற்கூறியது.)

ஆனால் கடந்த சில வருடங்களாக நான் நினைத்திருந்த மாதிரியான பயணங்களை செய்வதற்கு வாய்ப்பமைந்தது. இத்தனை வருடங்களாக நான் மொத்தமாக பயணித்ததில் கடந்த சில வருடங்களில் செய்தது தான் 80-90 சதவிகிதம் இருக்கும்! சொற்பமாக இருந்தாலும் என்னைப் பொறுத்தவரை அவை முக்கியமானவைகளே. பார்த்தது ஊரளவு, பாராதது உலகளவு என்ற உண்மையை உணர்த்தி என் கனவுகளையும் பல அனுபவப்பாடங்களையும் மேலும் வளர்க்கவே அவை உதவியிருக்கின்றன. பயணம் பிடிக்காத மனிதர்களும் இருப்பார்களா? ஒரு வயது கூட நிரம்பாத குழந்தைகள் கூட ’டாட்டா’ செல்வதற்கு காட்டும் உற்சாகத்திற்கு என்ன காரணம் ? எனப் பல கேள்விகளை எழுப்பியிருக்கின்றன. ஒவ்வொரு பயணமும் ஒரு அனுபவம். அவை பயணம் செய்பவனை மேம்படுத்துகின்றன. இயற்கையோடான உறவை புதுப்பிக்கின்றன. ஒரு குழுவாக செல்லும் போது அவர்களின் உறவு பலப்படுத்தப்படுகிறது. சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு நம்மை மாற்றிக்கொள்ள பக்குவப்படுத்துகின்றன. அப்படிக் கிடைத்த பயண வாய்ப்புகளில் சில இடங்களில் நாட்கணக்கில் சோறுதண்ணியில்லாமல் கூட உட்கார்ந்திருக்கலாம் என ஒரு மாதிரி எக்ஸ்ட்ரீமாகக் கூடத் தோன்றியிருக்கிறது.  எதையும் ரொம்ப உணர்வுபூர்வமாக அணுகினால் இப்படியிருக்குமா என என்னென்னவோ யோசித்திருக்கிறேன். இந்த படம் பார்த்ததுக்கு பின்பு எல்லாமாக சேர்ந்து ஏதேதோ நினைவுகள் அலைமோதி அன்றிரவு தூங்கமுடியவில்லை.

அந்த படம் தெ வே. வாழ்வின் சில மிகப் பெரிய அர்த்தங்களை தன் நீண்ட பயணங்களில் தேடும் மகன்.  தன் தொழிலும் கோல்ப் கோர்ட்டுமான மேல்தட்டு வாழ்க்கையிலேயே திருப்தியாயிருக்கும் கண் மருத்துவரான அப்பா. மகனை புரிந்து கொள்ள எடுக்கும் முயற்சிகளில் பெரிதான வெற்றி காணாதிருக்கிறார். ஒரு வாக்குவாதத்தில் இதுதான் தான் தேர்ந்தெடுத்த வாழ்க்கை என சொல்லும் அவருக்கு, "வாழ்க்கை தேர்ந்தெடுப்பதற்காக இல்லை. வாழ்வதற்கு" என சொல்லி முடிக்கிறான் (You don't chose a life. You live one.) துரதிர்ஷ்டவசமாக தான் மேற்கொண்ட ஒரு முக்கிய, கிறிஸ்தவர்களின் புனிதப்பயணங்களில் ஒன்றான சான் டியாகொ(ஸ்பெயின்) செல்வதற்கான வழியில், புயலில் சிக்கி பயணத்தின் ஆரம்பத்திலேயே இறக்கிறான். மகனின் சடலத்தைப் பெற்றுக் கொள்ள அப்பா ஸ்பெயின் வருகிறார். அவன் பொருட்களை ஒவ்வொன்றாக பார்க்கிறார். அவனுடைய பாஸ்போர்ட், ஹெட்லாம்ப், கைத்தடி, பை என பார்க்க பார்க்க அவன் அவரை கேட்ட கேள்விகள் சில நினைவுக்கு வருகின்றன. அது “வாழ்க்கையில் என்ன கண்டிருக்கிறீர்கள் ? உலகத்தை நீங்கள் பார்க்கவேயில்லையே ? இந்தியா, நேபால், இமயமலை, மொராக்கோ, எகிப்து, பப்பூவா கினியா? உங்கள் கூண்டிலிருந்து முதலில் வெளியே வாருங்கள்”. (இதில் பெரும்பாலானவை என்னுடைய ஹிட்லிஸ்டில் இருப்பவை!)

தன் மகனை புரிந்து கொள்வதற்கான கடைசி சந்தர்ப்பமாக அத்தருணத்தில் தன் வேலை வீடு என அனைத்தையும் ஒத்தி வைத்துவிட்டு அந்த பயணத்தை தான் முடிக்கவேண்டுமென நினைத்துக் கிளம்பும் அவரின் பயணம் தான் முழுக்கதையும். தம் வழக்கப்படி அல்லாமல் அவன் உடலை எரித்து, அச்சாம்பலை வழியெங்கும் முக்கிய இடங்களில் தூவுகிறார். சக பயணிகள் எதற்காக வருகிறார்கள், அவர்களுக்கிடையே என்ன மாதிரியான உறவு, முடியும் போது அவர்களின் மனநிலை என மீதிப்படம் ஒரு அழகிய சிறுகதை. அது நடந்தே கடக்கும் ஒரு பாதை. படம் முழுவதும் அதுவும் ஒரு முக்கிய கதாப்பாத்திரம், இல்லை இல்லை கதாநாயகனும் அதுவே! அப்படி ஒரு அழகு, ஏற்கனவே பிரான்ஸ் கிராமங்களைக் குறித்து படித்தது போதாதென்று ஸ்பெயின் கிராமங்களை வேறு இதில் பார்க்கவும், கிளைமாக்சில் அவர்கள் சென்றடையும் அந்த தேவாலயத்தின் பிரமிப்பும் கட்டிடக்கலையின் அழகும் நுணுக்கமும் - படம் முடியும் தறுவாயில் நானும் ஒரு முறை கட்டாயம் அங்கே செல்வேன் என உறுதிசெய்து கொண்டேன். ( இது மாதிரி எத்தனை?!)

படம் பார்த்து முடித்த, அதன் பாதிப்பு முழுதாக அகலாமல் இருந்த ஒரு இரண்டு நாட்களில் பாலோ கொயெலோ’வின் பில்கிரிமேஜ் நாவலைப் படிக்க ஆரம்பித்தேன். சத்தியமான என்னால் நம்பமுடியவில்லை. அதிலும் சான் டியாகொ!!! அப்பயணத்தை முடித்த பின்பு தான் அவர் இந்த நாவலையே எழுதியிருக்கிறார். அவரைப் பற்றி படத்தில் வரும் எழுத்தாளரும் சகபயணியுமான ஒருவர் சொல்லும் படி ஒரு காட்சி இருந்தது. அதை நான் சரியாக கவனிக்கவில்லை. ஆனாலும் அப்படத்தைத் தொடர்ந்து இந்நாவல் - பாலோ நாவல்களில் வருவது போலவே, "இது தற்செயல் இல்லை. நீ சான் டியாகோ போகவேண்டும் என்பது நிச்சயிக்கப்பட்டிருக்கிறது(?!!) இது ஒரு குட் ஓமன்!!!" என என் மனசாட்சி கூவியது. பாலோ...பார்க்கலாம் :)

(மேலும் பயணிக்கலாம்..)

Tuesday, March 13, 2012

[மறைந்த தடங்களின் குரல்] – என் காகிதக்கொக்கு



சடாகோ’வும் ஆயிரம் காகிதக்கொக்குகளும் என்ற அமெரிக்க எழுத்தாளரின் புத்தகம் குழந்தைகள் இலக்கியத்தில் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. ஜப்பானின் புகழ் பெற்ற மிக அரிதான டஞ்சோ கொக்குகள் அதிர்ஷ்டத்தை, ஆயுளை, செல்வத்தைக் கொடுக்கக்கூடியது என்ற நம்பிக்கையையும், அவர்களில் புராதன கலையான ஆரிகேமியையும் அணுவீச்சுக்கு எதிரான குரலையும் ஒரு புள்ளியில் இணைக்கும் அந்த புத்தகத்தின் பின்னால் உள்ள உண்மைக்கதை என்ன தெரியுமா ?

ஹிரொஷிமா நகரில் அனுகுண்டு வீசப்பட்ட போது, ஊரே அழிந்ததில் அதிர்ஷ்டவசமாகவோ துரதிர்ஷ்டவசமாகவோ  பிழைத்த வெகு சிலரில் இரண்டு வயது ஷடாகோ சஷாகியும் ஒருத்தி. ஊருக்கு வெளியே இருந்த மிசாஷா பாலத்தில் அருகில் உள்ள வீட்டில் இருந்த அவள் குடும்பம், உயிர் பிழைத்தாலும் அணுவீச்சின் பலமான தாக்குதலுக்கு ஆளானது.

அவள் வளர வளர அணுவீச்சின் பாதிப்பில் நோயும் அவள் கூடவே வளர்ந்தது. உடல் முழுக்க நீலப்புள்ளிகள் தோன்றத் தொடங்கின. சிறுநீரகம் பாதிப்புக்குள்ளானது. கால்கள் செயலிழக்க ஆரம்பித்தன. உச்சகட்டமாக, அவள் பன்னிரெண்டாவது வயதில் அவள் இரத்தப்புற்று நோயால் பாதிக்கப்பட்டாள். அதற்கும் அணுவீச்சே காரணமாக இருந்தது.

ஒரு வருடம் தான் அவள் பிழைத்திருப்பாள் என மருத்துவர்கள் கெடு விதித்துவிட்ட நிலைமையில் அவள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள். பள்ளிக்கோ விளையாடவோ செல்ல முடியாத ஏக்கத்திலும் நோயின் கோரப்பிடியிலும் அவள் நாளுக்கு நாள் வாடத் தொடங்கினாள்.

அவளை அடிக்கடி வந்து சந்தித்து விளையாடிப் போகும் தோழி ஒருத்தி ஒரு நாள் காகிதக்கொக்கு ஒன்றை செய்துவந்து கொடுத்தாள். காகிதக்கொக்குகள் நீண்ட ஆயுளைக் கொடுக்கக்கூடியது என்றும் ஆயிரம் கொக்குகளை செய்து முடித்துவிட்டால், அவள் கண்டிப்பாக பிழைத்துவிடுவாள் என்றும் கூறினாள். அடுத்தவர்களின் துயரத்தைப் புரிந்து கொள்வதன் அடையாளமாகவே தான் கொக்குகளை உருவாக்குகிறேன் என்று தோழி சொன்னாள்.  இதை சஷாகி மிகத்தீவிரமாக நம்பினாள். அடுத்த நாள் முதல் அவள் காகிதக்கொக்குகளை செய்யத் தொடங்கினாள்.

கிடைத்த காகிதங்களில் எல்லாம் கொக்குகளை செய்து தன் படுக்கையில் தொங்கவிட்டாள். காகிதங்கள் கிடைக்காத போது மருந்து உறைகள், பக்கத்து படுக்கை நோயாளிகளின் மருந்துச்சீட்டு போன்றவற்றை எடுத்துக்கொண்டாள். எப்படியாவது ஆயிரம் கொக்குகளை செய்து விட வேண்டும், வாழ்ந்து விட வேண்டும் என்ற உத்வேகம் அவளிடம் அதிகரித்துக்கொண்டே இருந்தது.
ஆனாலும் நோயின் உக்கிரம் முற்றி, 644 கொக்குகளை செய்து முடித்திருந்த நிலைமையிலேயே சஷாகி இறந்தாள். இந்த செய்தியை அறிந்த பள்ளி மாணவர்கள் அவள் ஆசைப்பட்ட படியே மீதமிருந்த 356 கொக்குகளை செய்து அவளோடு சேர்த்து புதைத்தனர். இச்செய்தி நாடு முழுக்க பரவியது. அன்றிலிருந்து இன்று வரை காகிதக்கொக்குகளை சமாதானத்தின் அடையாளமாக மக்கள் கருதுகிறார்கள். வீட்டினுள் காகிதக் கொக்கு பறந்து கொண்டிருப்பது அமைதி மற்றும் சந்தோஷத்தின் அடையாளமாக  நம்பப்படுகிறது.

ஹிரோஷிமாவில் சஷாகிக்கு ஒரு நினைவிடம் அமைக்கபட்டு ஆண்டுதோறும் பள்ளிமாணவர்கள் ஆயிரக்கணக்கில் ஒன்று சேர்ந்து காகித கொக்குகளை செய்து அங்கே காணிக்கை ஆக்குகிறார்கள். இறந்தவர்கள் காகித கொக்குகளின் குரலை கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்றும் ஒருநம்பிக்கை இதிலிருந்து வளரத் துவங்கியது. ஜப்பானியர்கள் அணுவீச்சின் எதிர்ப்பு அடையாளமாக காகித கொக்குகளை உருவாக்குகிறார்கள். இன்றும் ஆகஸ்ட் 6ம் நாள் நாடெங்கும் காகித கொக்குகள் தயாரிக்கபட்டு பறக்கவிடப்படுகின்றன.

காண் என்றது இயற்கை என்ற எஸ்.ரா வின் புத்தகத்தைப் படிக்கையில் டஞ்சோ கொக்குகள் குறித்த ஒரு கட்டுரையில் சடாகோவைப் பற்றி படிக்க நேர்ந்தது. இப்போது நாம் இருக்கும் சூழ்நிலையில் இக்கதையைப் பகிர்ந்துக்கொள்வது மிக அவசியம் எனப்பட்டது. அணு உலை என்பதும் அணுகுண்டுக்கு நிகரானதே. நம் நாட்டில் அணு உலைகளுக்கு எதிரான போராட்டங்களும் அரசின் கண்ணாமூச்சி ஆட்டங்களும் அதற்கு பின்னாலான மிகப்பெரும் உலக அரசியலும், என் போன்ற சராசரிப் பொதுமக்களின் வழக்கமான புறக்கணிப்பும், அதீத அறிவாளிகளின் பார்வையாக அறிவியல் முன்னேற்றத்தின் மற்றொரு படியாக இது இருக்கும் இந்நொடியில் , என் எதிர்ப்புக்கான முதல் காகிதக்கொக்காக இந்த பதிவை சமர்ப்பிக்கிறேன்.

உலகெங்கிலும் பறக்கவிடப்பட்ட அத்தனைக் காகிதக்கொக்குகளுக்கான நம்பிக்கையும் பிரார்த்தனைகளும் வீணாகிப் போகாமலிருக்க மனமார வேண்டிக்கொள்கிறேன்.

மேலதிகத் தகவல்களுக்கு
https://en.wikipedia.org/wiki/Sadako_Sasaki

Wednesday, February 29, 2012

[மறைந்த தடங்களின் குரல்] - நான் சராசரி

நான் பெரிய சமூக நல விரும்பி இல்லை. அவசியம் இல்லாதவற்றில் மூக்கை நுழைப்பது, பிரச்சனைகளில் தலையிடாமல் இருப்பது போன்றவை எனக்கு சிறு வயதிலிருந்தே போதனை செய்யப்பட்டுள்ளது. நாம் உண்டு நம் வேலையுண்டு என்றிருப்பதே நன்மை பயக்குமென மிகத் தெளிவாக எனக்குள் ப்ரோக்ராம் செய்யப்பட்டுள்ளது. என் சொந்த பிரச்சனைகளை நான் யாரிடமும் விவாதிப்பதில்லை. பொதுப்பிரச்சனைகளை மிக நெருக்கமானவர்களிடம் மட்டும் எப்போதாவது அது குறித்த செய்திகள் பார்த்தால் பேசுவதுண்டு. “இவனுங்க எப்பவுமே இப்படித்தான் சார்! இவங்க எல்லாம் திருந்தவே மாட்டாங்க! இப்படித்தான் சுட்டுத்தள்ளனும்..சவூதி’ல மாதிரி தண்டனை வரணும் இங்கயும்! போன்ற சூடான விவாதங்களைக் கூட பிரயாணத்தில் பக்கத்தில் இருந்து வேடிக்கை மட்டும் தான் பார்ப்பேன். அவர்கள் கருத்து வேண்டி என் பக்கம் பார்த்தால் கூட நான் முகத்தை திருப்பிக்கொள்வேன்.

எனது அதிகபட்ச சமூகப்பொறுப்பினை நான் எனது பிளாக்கிலோ பேஸ்புக்கிலோ பதிவாக அல்லது ஸ்டேட்டஸ் மெஸேஜாக பிரகடனப்படுத்திக் கொள்வேன். அல்லது அன்னா ஹசாரே போன்ற அமைதி/அஹிம்சை போராட்டத்திற்கு எனது ஆதரவை தெரிவித்து மெழுகுவத்தி ஏற்றுவேன். லோக் பால் இஸ் த சர்வரோக நிவாரணி என நம்புவேன். அப்படின்னா என்ன என்று கேட்பவர்களுக்கு விளக்கமளிக்க முடியாமல் திணறுவேன். கடைசியாக சொல்லுவேன் அது வந்தா லஞ்சம் கொடுக்க வேண்டியிருக்காது. நம்ம காசு மிச்சம் என்று.

வாழ்வாதார போராட்டங்கள் எப்போதும் எனக்கு மிகையாக தோன்றும். இனப்படுகொலைகள், போர்க்குற்றங்கள் அண்டை நாட்டில் நடந்து கொண்டிருந்தாலும் அது என்னைப் பெரிதாக பாதிக்காது. என் நாட்டிலேயே சுனாமியோ பூகம்பமோ எது நிகழ்ந்தாலும் எனக்கு நிகழாதவரை ஒரு செய்தியே. குடிநீர் வேண்டி பெண்கள் தெருமுனையில் போராட்டம் என்றால் கூட நான் வேறுவழியில் விலகிப் போய்விடுவேன். போலீஸ், அரசாங்க அதிகாரிகளை சந்திக்க நேர்ந்தால் அடக்கமாக நடந்துகொள்வேன். பின்னால் போய் கேவலமாக திட்டுவேன். அரசாங்க கார் செல்கிறது என மணிக்கணக்காக சாலையில் காக்க வைத்தால் கூட யார் போகிறார்கள் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்கமாட்டேன். எனக்கு வேலை முடிய வேண்டுமென்றால் சபித்துக்கொண்டே லஞ்சம் கொடுக்க தயங்க மாட்டேன். வேலையை விட்டுட்டு யார் அலைவது என அதை நியாயப்படுத்திக் கொள்ளவும் செய்வேன்.

எனது கோபங்களை வெறுப்புகளை கொலைவெறியை, வாஷ்பேசினில் சிக்கிக்கொண்ட பூச்சியையும் கழிவறையில் கரப்பான்பூச்சியையும் தண்ணீர் ஊற்றிக்கொன்றோ, இரவு முழுக்க கத்திக்கொண்டிருக்கும் நாய்க்குட்டிகளை காம்பவுண்டில் இருந்து துரத்தியோ, வயதான பிச்சைக்காரருக்குக் கூட சில்லறை இல்லை என தவிர்த்தோ, பாக்கிங் செய்து வரும் பிளாஸ்டிக் குமிழ்களை உடைத்தோ, பழைய பேப்பர்களை சுக்குநூறாக கிழித்தோ தீர்த்துக்கொள்வேன்.

20 குழந்தைகள் சாப்பிடும் செலவில் நான் ப:பே செல்வேன். கொடுத்த காசுக்கு நாசூக்காக சாப்பிடுகிறேன் பேர்வழி என நாகரிகம் கடைப்பிடிப்பேன். வோட்டுப் போட மாட்டேன். எந்த ஆட்சி வந்தாலும் குறைப்பட்டுக்கொள்வேன். என்னைப் பொறுத்த வரையில் அரசியல் ஒரு சாக்கடை. எனது அடிப்படை உரிமைகள் சில மழுங்க அடிக்கப்படுவது தெரிந்தும் பெரிதாக வருத்தப்பட மாட்டேன். என்கவுண்ட்டர்களுக்கு சப்போர்ட் செய்வேன். பெட்ரோல் விலை ஏறினால் பஸ்ஸில் போவேன். பஸ் டிக்கெட் விலை ஏற்றினால் ஷேர் ஆட்டொ மாறுவேன். திஸ் கண்ட்ரி இஸ் வர்ஸ்ட் ஃபார் லிவிங் என சொல்லுவேன். மனித உயிருக்கு இங்கு மதிப்பே இல்லை என சலித்துக்கொள்வேன். ஆனாலும் ஒரு விபத்தைப் பார்த்துக் கூட என் வாகனம் நின்றிருக்காது. டிராபிக்கை குறை சொல்வேன். ஆனால் சமயம் கிடைக்கும் போது நானும் சிக்னல்கள் மீறுவேன். பின்னால் இருப்பவர்கள் நிற்க விடமாட்டார்கள் என சாக்கு சொல்வேன்.

க்ளோபல் வார்மிங்’ஆ? சூரியன் அழிந்துவிடுமா? பூமி மூழ்கிவிடுமா? அதன் முழு கொடுமைகள் ஆரம்பிக்கும் வரையில் நான் உயிரோடு இருப்பேனா தெரியாதே. என் எத்தனாவது தலைமுறை அப்போது இருக்குமோ? அதற்குள் வேறு கிரகத்தில் வாழ கற்றுக்கொண்டுவிடுவார்கள் என அதை டீலில் விட்டுவிடுவேன். மின்சார தட்டுபாடா ? மின்சாரத்தை சேமிக்க எவ்வித வழிமுறைகளையும் கையாளாமல் மின்வெட்டை குறை சொல்லுவேன். இன்வெர்ட்டர் இன்ஸ்டால் செய்து எனக்கு வேர்க்காமல் பார்த்துக்கொள்வேன். எல்லாவற்றிற்கும் உடனடித்தீர்வு ஒன்றைத் தான் என் மனம் தேடும்.

பறவைகள் வாழும் சதுப்பு நிலங்களில், ஏரிகளில் குப்பை கொட்டுவேன். குப்பை நிரம்பி ஒரு குப்பை மேடான பின்பு அதை நிரப்பி ஒரு ப்ளாட் கட்டப்படும். அதிலும் அன்றைய மார்க்கெட்டின் குறைத்த ரேட்டில் ஒன்றை வாங்கிப்போடுவேன். அழிந்து வரும் பறவைகள், காடுகள், மிருகங்கள் குறித்த எந்த ஒரு பிரக்ஞையும் என்னிடத்தில் இருந்துவிடாது. என் தலைமுறைக்கு சொத்து என்ன விட்டுசெல்கிறேன் என வருத்த‌ப்படும் அளவுக்குக் கூட எம்மாதிரியான உலகத்தை விட்டுச் செல்கிறேன் என யோசிக்கமாட்டேன்.

என்னைக் குற்றம் சொல்லிப் பயனில்லை. என்னை என குடும்பம், சமூகம் வளர்த்திருப்பது இப்படித்தான். கூடங்குளம் பற்றிய ஒரு கவியரங்கத்திற்குப் போகிறேன் என சொன்னதற்கு என் அம்மாவின் குழப்பமான ஒரு பார்வை ஆயிரம் கேள்விகளையும் பயங்களையும் பறைசாற்றும். வர்ரதுக்கு மணி ஆகிடுமா என்பதிலிருந்து யோசிக்கமுடியாத ஒரு புள்ளி வரை அது நீளும். ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு என் பயாலஜிக்கல் கிளாக் வேலை செய்கிறதோ இல்லையோ அலைபேசி அழைக்க ஆரம்பித்துவிடும். பெண்ணாக இருக்கும் ஒரே காரணம் இவ்வகையான வரையறைகளுக்கு அழுத்தமான நியாயங்களைக் கற்பித்துவிடும்.

இப்படிநாளும் பொழுதும் கழிந்து கொண்டிருக்கும் வாழ்க்கையில், சராசரித்தனங்களுக்கு அப்பாற்பட்டு சில கருத்துக்களை பதிந்து வைக்க, பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன். எப்போதும் அதற்காகவே இயங்கி கொண்டிருப்பவர்கள் சொல்வது ஒரு வகையில் புளித்துப்போயிருக்கும் நேரங்களில், சமயத்தில் சராசரிகள் சொல்வது எடுபடக்கூடும். இவனே சொல்கிறானே என்று. அப்படி ஒரு சராசரியின் குரலாக, தொடர்கிறேன்...

Thursday, January 26, 2012

சமீபத்தில் படித்தவை

2011 படித்த வரிசையின் முதல் சில தாண்டி மீதி இங்கே. [1]... [2]..

** கோபல்ல கிராமம் - கி. இராஜ நாராயணன்

தம் மண்ணை விட்டு பெயர்ந்து வரும் இன்னொரு இடத்தை தேர்வு செய்து அதை விளைநிலமாகவும் இருப்பிடமாகவும் மாற்றும் ஒரு பெரிய குடும்பத்தினரின் கதை. அழகு தேவதையான தம் வீட்டுப்பெண்ணை விரும்பும் மன்னனை எதிர்த்து எதுவும் செய்ய முடியாமல் கிளம்பும் அந்த் குடும்பத்தைப் காப்பாற்றும் கடவுளின் செயல்களைச் சொல்லும் 130 வயதான அம்மாள், அவரின் மகன், இன்னுமொரு கதாபாத்திரம் என மூன்று தலைமுறைகளின் வாயிலாக சொல்லப்படும் அவர்களின் வரலாறு. வயதான அம்மாள் சொல்லும் கதைகளில் ஏனோ நம் வீட்டு பாட்டிகளிடம் கதை கேட்கும் உணர்வு.

கதையின் ஆரம்பத்திலேயே நிகழும் ஒரு சம்பவம் - தனியே நடந்து செல்லும் ஒரு பெண் தாகம் தாங்காமல் அருகில் உள்ள ஊருணிக்கு நீரருந்த செல்கிறாள். அவளின் பெரிய பாம்படங்களுக்கு ஆசைப்பட்டு ஒருவன் அவளை தண்ணிக்குள்ளேயே வைத்து அழுத்துகிறான். அவள், அவனிடம் இருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ள அவன் கால் கட்டைவிரலை கடிக்கிறாள். அவன் பிடியை விடாமலிருக்கவே மூச்சு திணறி இறந்து போகிறாள். அவள் பிடி இறுகி, அவன் காலை எடுக்க முடுயாமல் தவிக்கிறான். இதை எங்கோ பார்த்தது போல் இருக்கிறது அல்லவா ? "சாமி..எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும் சாமீ"க்கு இது தான் இன்ஸ்பிரேஷன் போல :) (புத்தகத்தின் முதற்பதிப்பு 1976’ஆம் ஆண்டு வெளிவந்திருக்கிறது)

** The Fountain head - Ayn Rand

அய்ன் ராண்ட் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். சமீபமாக ஜெயமோகன் தளத்தில் கிளப்பப்பட்ட சர்ச்சையும் அதன் பின்னான வாதங்களையும் அவ்வப்போது கவனித்திருந்த நேரத்தில் இந்த புத்தகத்தின் எலக்ட்ரானிக் காபி கிடைத்தது. முதல் நாள் திறந்து 60 பக்கங்கள் முடித்த நிலையில் நேரே ஃப்லிப்கார்ட் சென்று ஆர்டர் செய்து விட்டேன். தன் கொள்கைகளிலிருந்து மாறாத ஒருவன் பாரம்பரிய முறைகளை எதிர்த்து தன் தொழில்/திறமை ஆன கட்டிடக்கலையில் காலூன்றுகிறான். கல்லூரியில் இவன் வாதத்திற்கும் கேள்விகளுக்கும் பதிலளிக்கமுடியாத, அவன் எண்ணங்களின் புதுமையையும் புரட்சியையும் ஏற்கமுடியாத‌ ஆசிரியர்கள் ஒன்று சேர்ந்து அவனை கல்லூரியில் இருந்தி விலக்குகின்றனர். அவ‌னோடு ப‌டித்த‌ ந‌ண்ப‌ன், வெற்றிக‌ர‌மாக‌ ப‌டிப்பை முடித்து வெளிவ‌ருப‌வ‌ன், த‌ன‌க்கு காரியம் ஆக‌ யார் காலையும் பிடிப்ப‌வ‌ன், என்ன‌ த‌ர‌த்திற்கும் துணிப‌வ‌ன் என‌ அவ‌னுடைய‌ க‌தாப்பாத்திர‌த்திற்கும் கதாநாய‌க‌னுக்குமான‌ வாழ்விய‌ல் வித்தியாச‌ங்க‌ளை அனாயாச‌மாக‌ சொல்லிப்போகும் ஒரு நாவ‌ல்.

தனக்கான கொள்கைகளை, தன் திறமையை எங்கும் எதற்காகவும் யாருக்காகவும் விட்டுக்கொடுக்காத அவன் பண்பும், கதாநாயகியின் துணிச்சலான காதல், அவள் திறமையும் திமிரும் என இவ்விரண்டு கதாப்பாத்திரங்களின் மேலும், உருவாக்கிய அய்ன் ராண்டின் மேலும் தனி காதலே வந்துவிட்டது. எங்கேயுமே இது ஒரு 50 வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்டது என்ற உணர்வே எழுவதில்லை. அவ்வளவுக்கு இப்போதும் பொருந்தி போகக்கூடிய கதைப்போக்கு.

** பதினெட்டாம் நூற்றாண்டின் மழை - எஸ். ராமகிருஷ்ணன்

'கதை என்பது ஒரு ரகசியமான புதிர் விளையாட்டு. நாம் அந்த விளையாட்டில் பாதியில் கலந்துகொள்கிறோம். பாதியில் விலகியும் விடுகிறோம். அதற்குள் என்ன நடக்கிறது. ஏதோவொரு சம்பவத்தையோ, நிகழ்வையோ, கதாபாத்திரத்தினையோ பின்தொடர்ந்து செல்கிறோம். சம்பவங்கள், நினைவுகள், சமிக்ஞைகள், உணர்வெழுச்சிகள், அறிந்த அறியாத நிலக்காட்சிகள் தோன்றி மறைகின்றன.'

அருமையாக கட்டமைக்கப்பட்ட, மனிதனின் ஆழ்மனதின் ஆசைகளை, வக்கிரங்களை, வருத்தங்களை சொல்லும் கதைகள். கைக்கண்ணாடியை நண்பனைப் போல் நேசிக்கும் சிறுவன், லேசாக பூனைரோமங்களாலான மீசை முளைத்திருக்கும் சிறுமி, அழகான, தெளிவான முகக்கண்ணாடி ஒன்றை வாங்க ஆசைப்படும் பெண், குடும்பத்தினர் மறந்துவிட்ட பிறந்தநாளைக் தனியாகத் தானே கொண்டாட நினைக்கும் ஒரு நடுத்தர வயது பெண்மணி என நாம் அறியாத கவனிக்க மறந்த பாத்திரங்களின் உணர்வுகள் எஸ் ராவின் வழக்கமான பார்வையில், நடையில் சொல்லப்பட்டிருக்கின்றன.

** கள்ளிக்காட்டு இதிகாசம்

விகடனில் வந்த போதே படித்திருந்தது தான். லேண்ட்மார்க்கில் 3 ஃபார் 2 ஆபரில் ஒன்று தமிழ் எடுக்கலாம் என எடுத்தது. உடனே முடித்துவிடவும் முடிந்தது. நினைவில் நின்ற முக்கியமான காட்சி அந்த பிரசவமும், முடிவுப்ப‌குதியும்.

** மீத‌மிருக்கும் சொற்க‌ள்

1933 முத‌ல் 2004 வ‌ரை - பெண் எழுத்தாள‌ர்க‌ளின் சிறுக‌தைத் தொகுப்பு. தொகுத்த‌வ‌ர் அ. வெண்ணிலா. என்சிபிஎச் வெளியீட்டில்,ஒவ்வொரு எழுத்தாளரைப் பற்றிய சிறுகுறிப்பு, புகைப்படம், அவர்கள் எழுதிய சிறுகதைகள் என்று நிறைய உழைத்திருக்கிறார் தொகுப்பாளர். அந்த‌ந்த‌ கால‌க‌ட்ட‌ங்க‌ளின் ஊடான‌ பெண்ணின் பார்வைக‌ள், எண்ண‌ங்க‌ள், வாழ்க்கை முறைக‌ள், ச‌முதாய‌ப்பார்வை என‌ ஒரு நூற்றாண்டின் ஊடுருவல். த‌ன் அம்மாவைக் குறித்து ச‌ரியாக‌ புரிந்துகொள்ளாம‌ல், ஒரு வ‌கையில் தாயை பிடிக்காம‌ல் கூட‌ வ‌ள‌ர்ந்து வ‌ரும் ம‌க‌ள், த‌ன் அப்பாவையும் பாட்டியையுமே பெருமையாய் நினைத்து திரியும் நிலையில், மெல்ல‌ வ‌ள‌ர‌ வ‌ள‌ர‌ த‌ன் அம்மாவின் உண‌ர்வுக‌ளை புரிந்து கொள்ள ஆர‌ம்பிப்ப‌து என‌ அழ‌கான‌ கோர்வையை கொடுத்திருக்கும் உஷா சுப்பிர‌ம‌ணிய‌ம், சூடாம‌ணி, பாமா போன்ற‌வ‌ர்க‌ள் குறிப்பிட‌த்த‌குந்த‌வ‌ர்க‌ள்.

** The lost Symbol - Dan Brown

இந்த புத்தகத்தை முடித்ததன் மூலம் இவரின் அனைத்து படைப்புக்களையும் படித்தாகிவிட்டது. டாவின்சி கோட் முத‌ல் இது வ‌ரை - எந்த‌ நாவ‌லும் பெரிதாய் ஏமாற்றிவிட‌வில்லை. ப‌டிப்ப‌தில் தொய்வு ஏற்ப‌ட்டிருந்த‌ நாட்க‌ளில் ஒன்றில், Just to Perk up, இதை எடுத்தேன். ஒரு வார‌ இறுதியிலேயே ப‌டித்து முடித்துவிட‌ முடிந்த‌து கிட்ட‌த்த‌ட்ட‌ 600 ப‌க்க‌ங்க‌ளை. துரத்தல்களுக்கு மத்தியில் தப்பித்தல், அதன் மத்தியில் வ‌ழ‌க்க‌மான‌ ஒரு தேட‌ல், புதிர்க‌ள், குறியீடுக‌ள், வ‌ர‌லாறு, ம‌றைக்க‌ப்ப‌ட்ட‌ சில‌ உண்மைக‌ள் என அதே ஃபார்ம‌ட். ஆனாலும் சுவார‌ஸ்ய‌த்திற்கு குறைவில்லை. ஒரு சாம்பிள் - ஜார்ஜ் வாஷிங்ட‌ன் மேச‌ன்க‌ள் என‌ப்ப‌டும் ஒரு சமூக‌த்தை சார்ந்த‌வ‌ர் என‌வும் அவ‌ரிம் ந‌ம்பிக்கைக‌ளின் ப‌டி தான் வாஷிங்டன் ந‌க‌ரின் ப‌ல்வேறு க‌ட்டிட‌ங்க‌ள் வ‌டிவ‌மைக்க‌ப்ப‌ட்ட‌ன‌. அத‌ற்குரிய‌ சில‌ வ‌ழிமுறைக‌ள், ச‌ம்பிர‌தாய‌ங்க‌ள் அனைத்தும் க‌டைப்பிடிக்க‌ப்ப‌ட்ட‌ன. அவ‌ரை கிரேக்க‌க் க‌ட‌வுள் சீய‌ஸைப் போல‌ செய்த‌ சிலை ஒன்று ர‌க‌சிய‌ம். Google George Washington Zeus and check it yourself!

** A Walk in the Woods - Bill Bryson

The last Continent என்ற பிரபல புத்தகத்தை எழுதியவர். மிதமான நகைச்சுவையுடனும், யதார்த்தமான விவரிப்புகளுடனும், நிறைய சுற்றுப்புற சூழல் மற்றும் காடுகள் சார்ந்த தகவல்களுடனும் ஒரு சுவாரஸ்ய நடை இவரது ப்ளஸ். அப்பலாச்சியன் ட்ரெயில் எனப்படும் அமெரிக்காவின் மிக நீண்ட மலைப்பயணத்தை மேற்கொள்ள அவரும் அவர் நண்பரும் எடுக்கும் முயற்சிகளும் அனுபவங்களும் அவர் சந்திக்கும் மனிதர்களும் என விரியும் அவரது இந்த பயணக் கட்டுரையைப்படித்த பின் நானும் ஏன் எனது ட்ரெக்கிங் அனுபவங்களை( செல்வது அனேகமாக ஒரே இடமாக இருப்பினும் ;) ) எழுதக்கூடாது என்ற விபரீத ஆசை உருவாகிவிட்டது :) ஹிஹி :)

**

ஆரம்பித்து முடிக்க அல்லது தொடர‌ முடியாமல் இருப்பவை கொற்கை, ஹோமரின் இலியாத்.

**

Related Posts with Thumbnails